தமிழ் மக்களை என் இதயத்தில் வைத்திருப்பேன்




கொலம்பியாவைச் சேர்ந்த இறையியலாளரும், லத்தீன் அமெரிக்காவின் மனித உரிமைகள் பிரச்சாரகரும், இத்தாலியில் உள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் உபதலைவரும், அதன் ஒரு அலகான இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தின் நீதிபதிகளில் ஒருவருமான Fr. Javier Moreno Giraldo அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருடனான சந்திப்பொன்று தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஒருங்கிணைப்பில் கடந்த19.05.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு யாழ் டேவிற் வீ தியிலுள்ள கலைக்கோட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

குறிப்பாக கடந்த சித்திரை 21 இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு பின்னரான சூழலும், கடந்த10 ஆண்டுகளில் தமிழ் மக்களின் அரசியல் வெளி எவ்வாறுள்ளது என்பது பற்றியும் அங்கு வந்திருந்த அரசியல் செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரிடம் Fr. Javier Moreno Giraldoகேட்டு அறிந்து கொண்டார்.

இவர் இத்தாலியில் உள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இலங்கை தொடர்பிலான இரு அமர்வுகளிலும் நீதவானாக பங்கெடுத்தவர். அத்துடன் சிறுபான்மை இனங்களின் நலனுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருபவராகவும் விளங்குகின்றார். சந்திப்பின் போது பல்வேறு தரப்புக்களிடம் இருந்து ஒலித்த குரல்களின் முக்கிய பதிவுகள் கீழே:

வன்னியில் இருக்கின்ற சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் CSD பண்ணைகளில் 3500 பேரளவில் வேலை செய்கின்றார்கள். பெரும்பாலானோர் முன்னாள் போராளிகளாகவும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். பண்ணைகளில் வேலைக்கு சேருபவர்கள் கடுமையான இராணுவ மயமாக்கலுக்குள் உள்ளபடியால் முதல் 21 நாள் கட்டாயம் பயிற்சிமுகாமுக்கு செல்ல வேண்டி இருந்தது. இப்போது 45 நாள் பயிற்சி, கிட்டத்தட்ட இராணுவப் பயிற்சி போல் இடம்பெறுகிறது.    காலையில் தினமும் அணிவகுப்பு, மொட்டை வழிக்க வேண்டும் என்கிற நிபந்தனைகள் உள்ளன. அண்மையில் கூட கர்ப்பிணிப் பெண்ணொருவரை கட்டாயப்படுத்தி பயிற்சி முகாமுக்கு அனுப்பியதாக புகார் வந்திருந்தது.

இதையும் தவிர இராணுவத்தினர் அங்கு வேலை செய்பவர்களுக்கு ஆளையாள் மாறி கையொப்பம் வைத்து கடன் கொடுத்திருக்கிறார்கள்.  இதனால் அவர்கள் ஒரு நிரந்தர பொறிக்குள் மாட்டுப்பட்டு உள்ளார்கள். ஏனெனில் கடன் கட்டி முடிக்காமல் அவர்கள் நினைத்தாலும் வேலையால் நிற்க முடியாது.  இராணுவத்தை ஒத்த சீருடையினை வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.  இப்போது வாரத்தில் 2 தரம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், மனிதஉரிமை மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக கண்காணிப்புக்குள் தான் உள்ளார்கள்.   அங்குள்ள பொதுமக்களுக்கு கூட யார் புலனாய்வாளர் என்று கண்டுபிடிக்க முடியாதவாறு அங்கு நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இம்முறை முள்ளிவாய்க்காலில் மக்கள் குறைவாக பங்கெடுத்ததற்கு காரணம் இராணுவத்தின் அதிகரித்த சோதனைச் சாவடிகள் மட்டுமல்ல. ஏற்கனவே போனவர்களுக்கு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளும் தான் காரணம். 


ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் வெளியாகின்ற செய்திகளை பார்க்கும் போது இது குறித்து அரசு, இராணுவத்துக்கு முன்னரே  தெளிவாக தெரிந்திருந்தது. 2009 இல் போரை முடிவுக்கு கொண்டுவரும் போது தவறவிடப் பட்ட சில விடயங்களை, போராட்டத்தின் தொடர்ச்சியான சில விடயங்களை முடக்குவதற்காகவே  இந்த ஈஸ்டர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என்கிற  ஐயம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. அரசாங்கம் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலாக தான் இது கருதப்பட வேண்டும்.

சர்வதேசத்தின் கவனம் ஐநாவில் இலங்கை அரசுக்கு காலக்கெடுவை விதித்து கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலை உள்ளது. பொறுப்புக்கூறலை உரிய முறையில் நிறைவேற்ற முடியாமல் இலங்கை அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கின்றது. அதனை திசை திருப்ப வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு உள்ளது. அரசாங்கம் ஸ்திரத்தன்மை இல்லாமலும் உள்ளது. மீளவும் வன்முறையொன்றை கையிலெடுத்தால் மட்டுமே முக்கிய பிரச்சினைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு வன்முறையும் அதன் பின்னரான நிலைமைகளும் பேசுபொருளாகும்.

அதன் மூலம் சர்வதேசத்துக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்கிற போர்வையில் எந்தச் சட்டத்தைக் கொண்டு வரலாம்.பயங்கரவாத தடை சட்டம் தேவையில்லை என ஐநாவும் சொல்லிக் கொண்டு வருகின்றது. இதனால் ஒன்றில் அதனை தக்க வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடின் அதனையும் விட கூடுதல் அதிகாரங்களுடன் ஒரு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்கின்ற தேவை அரசுக்கு உள்ளது.  குண்டுத்தாக்குதலின் தொடர்ச்சியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் இப்போது அவசரகால சட்டமும் நடைமுறையில் வைக்கப்பட்டு உள்ளன.   இதனால்த் தான் இந்தக் குண்டுத்தாக்குதலை அரசாங்கமே பின்னுக்கு நின்று நிகழ்த்தியிருக்கலாம் என்கிற சந்தேகம் உள்ளது.

குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்காமல் விடுவது அல்லது தண்டனையிலிருந்து தப்பிக்க விடுவது தான் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை செய்தவர்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. ஏனெனில் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னரும் தண்டனை கிடைக்கவில்லை.  தாங்கள் என்ன வன்முறை செய்தாலும், அதற்குரிய சாட்சியங்கள் இருந்தாலும்  தங்களுக்கு எந்த தண்டனையும்  கிடைக்காது என்கிற நிலை தான் உள்ளது. இம்முறை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் தெளிவான CCTV பதிவுகளும் உண்டு. எந்த நடவடிக்கையும் இல்லை. என்ன செய்தாலும் அரசாங்கம் பாதுகாக்கும் என்கிற நிலை தான். தாக்குதல்கள் நடக்கப் போகின்றது என தெரிந்தும் அரசும், இராணுவமும் கைகட்டி வேடிக்கை பார்த்ததன் நோக்கம், அதன் பின்னரான அவர்கள் அடையக்கூடிய நோக்கங்கள் பல.

நாங்கள் சர்வதேச விசாரணை தான் வேண்டும். கலப்பு விசாரணையோ, உள்நாட்டு விசாரணையோ வேண்டாம் என்று கேட்பதன் அடிப்படையும் இது தான். சர்வதேச அரங்கில் தமிழ்த் தரப்பு இலங்கையில் நடந்தது இனப்படுகொலை எனச் சொல்ல போராடிக் கொண்டிருக்கும் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு தீர்மானத்திலும்  'தமிழர்களுக்கெதிரான' என்ற சொற்பிரயோகம்  வரவில்லை. எல்லா இடங்களிலும் 'சிறுபான்மையினருக்கு எதிரான’, ‘மதக்குழுக்களுக்கு எதிரான' என்ற சொற்பிரயோகங்கள் தான் வருகின்றன.  எம் அரசியல் செயல்பாட்டாளர்கள் சிலர்  ’தமிழர்' என்று போடச் சொல்லவும் அப்படித்  தேவையில்லை என்று சொல்கிற நிலைமை தான் இருந்தது.  ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பின்னரான வன்முறையையும் இலங்கை அரசாங்கம் மதக்குழுக்களுக்கு எதிரான சிறுபான்மையினருக்கு எதிரான என்று தான் கொண்டுவரப் பார்க்கின்றது. குண்டுவெடிப்புக்கு பின்னரான நிலைமையை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து மனிதாபிமான ரீதியில் நாங்கள் நோக்க வேண்டிய விடயங்கள் உள்ளன என்பது உண்மை. அது மிகப்பிரியதொரு அவலம். எங்களுக்கு அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், எங்களுடைய பிரச்சினையின் அடிநாதம் இதில் அடிபட்டுப் போகின்றது. எம் மக்களின் மனநிலையும் அதுதானே. புதுசாக ஒரு பிரச்சினை வந்தால் அதைப்பற்றி மட்டும் கதைப்பது. அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றி இப்போது கதைப்பார் இல்லை. கடந்த 30 வருடத்துக்கும் மேலான எங்கள் போராட்டம் வீணானது போன்ற தோற்றப்பாடு அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரும் பொழுது, கொழும்பில் இருந்து வவுனியா வரை இருந்த பாதுகாப்பு நடைமுறைகளும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை இருந்த பாதுகாப்பு நடைமுறைகளும் வேறு. வவுனியா வரும் வரை அன்று ஊரடங்கு அமுலில் இருந்தபடியால் 10 நிமிடத்துக்கு ஒரு முறை பாதுகாப்பு தரப்பினர் வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். ஆனால், வாகனத்தில் இருந்து இறங்க வேண்டி வரவில்லை. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை உள்ள இராணுவச் சோதனைச் சாவடிகளில் இறங்கி ஏற வேண்டி இருந்தது. போர் முடிந்து 10 ஆண்டுகளில் நல்லிணக்கம், நல்லாட்சி எல்லாம் வந்த பிறகும் இந்தத் தீவில் இரண்டு அரசுகள் உள்ளன. வடக்குக்கு ஒரு நீதி தெற்குக்கு ஒரு நீதி என்பதில் அரசாங்கம் தெளிவாகவுள்ளது.அரசாங்கங்கள் மாறினாலும் அரசுகள் மாறுவதில்லை என்கின்ற வரலாற்றுப் படிப்பினையை மீளவும் எங்களுக்கு இது கற்றுத் தந்திருக்கின்றது.

தமிழர்களை அழிக்க வேண்டுமென    சொல்லப்பட்ட அரசியலமைப்பில் பௌத்த நாட்டுக்கு முன்னுரிமை என சொல்லி இருக்கிறார்கள். பௌத்த விழாக்களை அரச விழாக்களாக காட்டச் சொல்லி பதாகைகள் எல்லாம் அரச வேலை செய்யும் நபர்களிடம் கொடுத்திருந்தார்கள். 18 ஆம் திகதி  முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு தினம். அவர்களின் வெசாக் தினமும் அன்றுதான். அவர்கள் அலங்காரங்களைக் கட்டத் தயாராகும் போது, இராணுவ புலனாய்வாளர்கள் என கூறிக்கொண்டு வந்தவர்கள் நீங்கள் என்ன கட்டுகின்றீர்கள் வெசாக் தானா அல்லது முள்ளிவாய்க்கால் நினைவுப் பதாகையா எனக் கேட்டுள்ளனர். 

கண்காணிப்பு என்பது பச்சைச் சீருடையில் மட்டும் இல்லை. கடுமையான இராணுவ மயமாக்கல் என்பது போர் முடிந்த பின்னரும் வடக்கு, கிழக்கு பகுதியில் அதிகரித்த நிலையில் தான் உள்ளது. ஈஸ்டர் குண்டுவெடிப்புக்களுக்கு பின் மட்டும் அதிகரிக்கவில்லை. 2015 இல் நாங்கள் முள்ளிவாய்க்காலுக்கு நினைவு தினத்தை அனுட்டிக்கச் செல்லும் போது இராணுவம் மறிக்கவில்லை. ஆனால் பவள் கவசவாகனத்தை கொண்டுவந்து முன்னுக்கு நிப்பாட்டி இருந்தவை. இவ்வாறு பயத்துடனான மனநிலை பொதுமக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று எப்படி உலகளாவிய பயங்கரவாதம் வந்தது? அமெரிக்கா தான் ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ வளர்த்தது. முதலாளித்துவ நுகர்வு வாதத்தை வைத்துக் கொண்டு, நாடுகளைப் போர் சூழலுக்குள் தள்ளும் அமெரிக்கா போன்ற நாடுகளைத் தள்ளி வைத்துக் கொண்டு நாங்கள் முன்னுக்கு வரவேண்டும். அதே நேரம் முஸ்லிம் அடிப்படைவாதத்தையும் எதிர்க்க வேண்டும். இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இதே பின்னணி தான் வரலாற்று ரீதியாக உள்ளது. இப்பொழுது எல்லாரும் சேர்ந்து வாழ வேண்டும். பாதிக்கப்படடவர்களுடன் சேர்ந்திருக்க வேண்டும். உடனிருப்பு அவசியமானது என்று சொல்கின்றோம். இன்று சிவில் சமூக அமைப்புக்கள் எல்லாவற்றையும் மேலாக நின்று கட்சி அரசியல்  நடனம் ஆடுகின்றது.

இலங்கையில் இன அழிப்பு என்பது 1930 களில் இருந்து இடம்பெற்று வருகின்றது. அதனை இலங்கை அரசு திட்டமிட்டு செய்து வருகின்றது. போர் தொடங்கின உடன் அவர்களுக்கு ஒன்று தெரிந்தது. இதன்மூலம் தமிழ் மக்களை ஒடுக்க முடியாது. இதனால் போரைப் பாவித்து கொன்றார்கள். சண்டை இனவழிப்பில் முடிந்த போது கூட அவர்களுக்கு தெரிந்தது, முழுமையாக தமிழர்களைக் கொல்ல முடியாது என. முஸ்லிம்களோ, மலையக தமிழர்களோ சிங்கள மேலாண்மையை ஏற்றுக்கொண்டது போல் தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதும் அவர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தது. 2010 க்கு பிறகு அவர்கள் தொடர்ச்சியாக இனவழிப்பையும் செய்து கொண்டு உளவியல் ரீதியானதொரு அழிப்பையும் செய்து வருகிறார்கள். குறிப்பாக எங்கள் இளைய தலைமுறையினரிடம் சிங்கள மேலாண்மையை ஏற்றுக் கொள்வதற்கு நிறைய பயிற்சி வகுப்புக்கள், பாடசாலை ரீதியிலான சமூக, கலாச்சார இணைவுகள் போன்ற பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகளை நடாத்தி வருகிறார்கள்.  சிங்கள மேலாண்மையை ஏற்றுக் கொள்ள வைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இலங்கை முழுவதும் ஒரு நாடு. நாங்கள் ஒன்றாக இருப்போமென அவர்கள் சொல்கின்றார்கள். ஆனால், அங்கே வெளிப்படையாக சொல்லாதது, இலங்கை முழுக்க தங்கள் நாடு; நீங்களும் ஒன்றாக வாழலாம் என்பதே.

இப்போது தமிழர்கள் இதுவரை செய்த போராட்டங்கள் பிழை என்றும் அதற்கு வெட்கப்படுவதாகவும் சொல்லும் புதிய பரம்பரை ஒன்று எம்மத்தியில் உருவாகி வருகின்றது. என்று அமெரிக்கா புரட்டாதி 11உலக வர்த்தகமைய தாக்குதல்களை   வைத்து உலகத்தையே ஒடுக்க வெளிக்கிட்டார்களோ, அன்றே இலங்கை அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் போராட்டத்தில் வெற்றியடைய ஆதரவு கிடைத்தது. அவ்வாறே சித்திரை 21உம் இலங்கை அரசுக்கு நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கின்றது. தமிழர் தாயகத்தில் இராணுவ பிரசன்னத்தை முற்றாக எதிர்த்துக் கொண்டிருந்தோம். இன்றைக்கு எங்களுக்காக அவர்கள் வெயிலுக்குள்ள சோதனைச் சாவடிகளில் காவல் நிற்கிறார்கள் என்று நாங்களே சொல்லுகின்ற நிலைக்கு வந்துள்ளோம். எங்களுடைய சகோதரிகள், அம்மாக்களை கற்பழித்துக் கொன்ற, குண்டு வீசிக் கொன்ற அதே இராணுவத்தைக் கொண்டு எங்கள் பெண்கள் பாடசாலைகளில் கூட அவர்களின் உடமைகளை சோதிப்பதற்கு நாங்களே கொண்டு வந்து விட்டுளோம். இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் போனால் இதெல்லாம் எங்களுக்கு சாதாரணமாகி விடும். எல்லா இன அழிப்போடு சேர்த்து இப்படியான உளவியல் ரீதியிலான இன அழிப்பிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்று கொழும்பு கர்தினால் சொன்னதை சிங்கள கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், தமிழ் கிறிஸ்தவர்களும் தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. 70வருடமாக தொடரும் இன அழிப்பில் உளவியல் யுத்தத்தை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. ஈஸ்ட்டர் தாக்குதல்அதற்கு இன்னும் வலுச்சேர்த்திருக்கிறது. தமிழர்களை அழிப்பதற்காக இலங்கை அரசாங்கம் எந்தவித வெட்கமுமில்லாமல் யாருக்கும் சேவகம் செய்யவும், யாருக்கும் அடிமையாகவும், முழந்தாழிடவும்  தயாராக இருக்கிறது. அதனால்த் தான் சீனா, மற்றும் மேற்குக்கு பின்னாலும் போகவும் தயாராக இருக்கினம். தமிழர்களை ஒழிப்பதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உதவுவார்களாக இருந்தால் அவர்களுடனும் கூட்டுச் சேரக் கூடிய சிங்களப் பேரினவாதம் தான் இலங்கையில் உள்ளது. தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வரை சிங்களவர்கள் மத்தியில் இருக்கும் மன நிலையை மாற்ற முடியாது.

இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்க அவர்களை ஒடுக்கி ஒரு கரையில் விட்டு விட்டு இனி தமிழர்களோ அவர்களின் எதிர்காலமோ தங்களை ஒரு இனமாக யோசிக்கேலாத அளவுக்கு ஒதுக்கி உள்ளார்கள். இப்போது சிங்களவருக்கு சவாலான சிறுபான்மை இனம் முஸ்லிம்கள். அவர்களுக்கும் அதே வேலையை தான் இவர்கள் செய்கின்றார்கள். புலிகளைக் காட்டி தமிழ் மக்களை ஒடுக்கினார்கள். அதேபோல் ஐ.எஸ் ஐக் காட்டி முஸ்லிம்களை ஒடுக்குகின்றார்கள். இதனை சமயங்களுக்கு எதிரான வன்முறை எனப் பார்க்க முடியாது. இலங்கையில் மூன்று இனங்கள். தமிழர்களை ஒதுக்கியாச்சு, இனி முஸ்லிம்களையும் ஒதுக்கினால் சரி என்கிற நினைப்பில் சிங்கள ஆளும் வர்க்கம் தெளிவாக செயற்படுகின்றது. கொழும்பு கர்தினால் மால்கம் ரஞ்சித்தும் இதனை தெளிவாக விளங்கப்படுத்தி விட்டுள்ளார். இலங்கை பௌத்த சிங்கள நாடு. இலங்கையில் இருக்கின்ற எல்லா இனத்தவரும், மதத்தவரும் பௌத்தத்தை தான் ஒரு மேல்வரிச் சட்டமாக பின்பற்ற வேண்டும் என்று. இலங்கையின் உயர்பீடமொன்றின் பேராயரைக் கொண்டு இந்தக் கருத்தை சொல்லுவிப்பதில் வெற்றியடைந்திருக்கிறது இலங்கை அரசு. 

முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்களை தனித்தனி அடையாளமாக பார்ப்பதில்லை. உலக முஸ்லிம்களின் ஒரு பகுதியாக தான் பார்க்கின்றார்கள். உலக முஸ்லிம்களின் இருப்புக்கு ஐரோப்பிய, அமெரிக்க சக்திகள் எதிராக இருக்கின்றன. அந்த அச்சுறுத்தல்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அதனை அகற்றுவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள். இலங்கையை பொறுத்தவரையில் இந்தோ - பசுபிக் மூலோபாய திட்டத்தின் மூலம் இந்திய, அமெரிக்க, மேற்குலக சக்திகள் தங்கள் செல்வாக்கு வளையத்தினுள் இலங்கையை  கொண்டுவர முயற்சிக்கின்றனர். அதனை அகற்றுவதற்காக தான் இந்தக் குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம். உள்ளூர் காரணிகளும் இருக்கின்றன. திகன போன்ற இடங்களில் முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதும் காரணமாக இருக்கலாம். ஒரு சர்வேதேச தேவையும், உள்ளூர் தேவையும் இணைந்து மேற்படி குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கலாம். 2015 க்கு பிறகு பெயர் அளவில் ஒரு ஜனநாயக வெளி இருந்தாலும் தமிழ் மக்களை இனவழிப்புக்கு உள்ளாகும் செயற்பாட்டை அவர்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றார்கள். இனப்பிரச்சினை என்பதே தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பது அழிக்கப்படுவது தான். அந்தத் தேசத்தைத் தாங்கும் தூண்களாக இருக்கின்ற நிலத்தை, மொழியை, பொருளாதாரத்தை, மக்கள் கூட்டத்தை அழிப்பது தான் உண்மையில் இனப்பிரச்சினை. இன்று காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, காணி விடுவிப்பு என எதுவுமே தீர்க்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றது. இன்று வீடுகளில் அரசியல் புத்தகங்கள் வைத்திருப்பதற்கே அச்சப்பட வேண்டிய சூழல் உள்ளது. இவற்றை வைத்திருப்பவர்களை அவசர காலச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யும் நிலையும் உள்ளது.  இதனால் தான் இன்று தமிழ் மக்களுக்கு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்று தேவைப்படுகின்றது.
     
எல்லாக் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்ட பின் கொலம்பிய இறையியலாளர் Fr. Javier Moreno Giraldo கருத்து தெரிவிக்கையில், இறுதியாக அண்மையில் இடம்பெற்ற ஈஸ்ட்டர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு உரிமைகள் எதனையும் வழங்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கரிசனையாக செயற்படுகின்றது. இங்கு இருப்பது எந்தவிதமான சமயப் பிரச்சினைகளும் இல்லை. தமிழ்மக்களுக்கு உரிமைகளை கொடுக்காமல் விடுவதில் தான் அரசாங்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகிறது.

வத்திக்கானூடாக இது ஒரு சமய பிரச்சினை அல்ல என்கிற விழ்ப்புணர்வை ஏற்படுத்தலாம். தான் முள்ளிவாய்க்கால் சென்று முன்னாள் போராளிகளை சந்தித்த போது அவர்கள், தமிழ் மக்கள் தொடர்பில் சாதாரண சிங்கள மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சொன்னதாக கூறினார். இங்கு கேட்ட விடயங்களை தொகுப்பாக்கி வத்திக்கானுக்கு பாப்பரசரிடம் சமர்ப்பிப்பதாகவும். வரும் மாதங்களில் நடைபெறவுள்ள கருத்தரங்குகள், மாநாடுகளிலும் இவை பற்றி பேசப் போவதாகவும் குறிப்பிட்டார். எதிர்காலத்திலும் தமிழ் மக்களை தன் இதயத்தில் வைத்திருப்பேன் எனவும் அவர் கூறினார்.

அமுது 
நிமிர்வு வைகாசி 2019 இதழ் 




No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.