எழுவர் விடுதலை பெறட்டும்! - தோழர் தியாகு-




தமிழர் எழுவர் விடுதலை மீண்டும் ஒருமுறை கருத்துப்போராட்டத்திற்கு கருப்பொருளாகியுள்ளது. எல்லாச்சிக்கல்களும் தீர்ந்து பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபட்பயஸ் ஆகிய எழுவருக்கும் இருபத்தெட்டாண்டு காலசிறையடைப்பின் பின் இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்படும் நாள் நெருங்கிவிட்டது.

ஆனால் இப்பொழுதும் தமிழர் எழுவரின் விடுதலையை விரும்பாதவர்கள் இருக்கின்றார்கள். இருந்துவிட்டு போகட்டும். அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதிலும் தவறில்லை. அது அவர்களுக்கு உள்ள கருத்துரிமை. ஆனால் தமிழர் எழுவரின் விடுதலைக்கு வாய்ப்பே இல்லை என்று வம்படியாக அழிச்சாட்டியம் செய்யும் போது நாம் வாழாதிருக்க முடியாது. எழுவர் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். அவர்கள் வீசுவதற்கு பந்து இல்லாததால் கல்லெடுத்து அடிக்கின்றார்கள் என்பதே உண்மை. இப்பொழுது ஆளுனர் முடிவு செய்ய வேண்டும். ஆளுனர் என்றால் தனிப்பட்ட புரோகிதர் அல்ல. தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை அவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மீள்பார்வை செய்யும்படி அவர் ஒரு முறை திருப்பி அனுப்பலாம். அமைச்சரவை தன் முடிவில் உறுதியாக இருந்தால் அவருக்கு வேறு வழியில்லை. இதுதான் சட்டப்படியான நிலவரம். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 அதற்கு பொறி விளக்கம் அளித்துள்ள பற்பல உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் இதில் தெளிவாக உள்ளன.

நடுவர் புலனாய்வுக்கழகம் (சி.பி.ஐ) புலனாய்வு செய்த வழக்கை இந்திய அரசின் இசைவு பெறாமல் விடுதலை செய்ய முடியாது என்று வாதுரை ஒன்று முன்வைக்கப்படுகிறது. இதற்கு ஆதரவாக 2015ஆம் ஆண்டு மார்கழியில் இந்திய உச்சநீதிமன்றத்தில் முழு ஆயம் அளித்த தீர்ப்பு எடுத்துக்காட்டப்படுகிறது. இந்த தீர்ப்பு சரியோ தவறோ குற்றநடைமுறைச்சட்டத்தின் பிரிவு 435 ற்கு இப்படியொரு விளக்கம் தந்திருப்பது உண்மை. ஆனால் அரசமைப்புச்சட்டத்தின் படி உறுப்பு 161ற்கு இப்படிப்பட்ட  கற்றுத்தலை இல்லை என்பதும் இதே தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது அமைச்சரவை எடுத்துள்ள முடிவும் ஆளுனர் எடுக்க வேண்டிய முடிவும் அரசமைப்பின் பிரிவு 161இன் படி தானே தவிர குற்றநடைமுறைச்சட்டத்தின்படி அல்ல. இந்த இரு சட்டங்களுக்கும் முரண்பாடு இருக்குமானால் இரண்டில்  எது சரி என்று கேட்டுப்பார்க்கலாம். குற்றநடைமுறைச்சட்டம் அதாவது மன்றச்சட்டம் நாடாளுமன்றம் இயற்றிய சட்டம் அரசமைப்புச்சட்டம் என்பது அடிப்படைச்சட்டம் இந்த இருசட்டங்களில் எது எதைக்கட்டுப்படுத்தும் என்பதைக் கூறாமலே விளங்கும்.


 உச்சநீதிமன்றம் 1981 ஆம் ஆண்டு  மாரூரான் வழக்கில் தெட்டத்தெளிவாக்கிவிட்டது. 1989 ஆம் ஆண்டு கலைஞர் முதல்வரானபோது நான் அவருக்கு அளித்த விண்ணப்பத்தை ஏற்று பத்தாண்டுகளில் 490 வாழ்நாள் சிறையாளர்களை அதாவது ஆயுட்கைதிகளை விடுதலை செய்தார்.1992 அல்லது 1993 இல் அப்போதைய சட்ட அமைச்சர் ஜே.எஸ்.கிருஸ்ணசாமி அவர்களுக்கு நான் மாரூரான் தீர்ப்பு அடிப்படையில் சட்டக்குறிப்பு எழுதிக்கொடுத்தேன். அதை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏற்றுக்கொண்டு அரசமைப்பின் உறுப்பு 161 பயன்படுத்தி தன் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்நாள் சிறையாளர்களை 12 ஆண்டு கழித்து ஆண் கைதிகளையும் பத்தாண்டு கழித்த பெண் கைதிகளையும் விடுதலை செய்தார். தொடர்ந்து மூன்றாண்டு காலம் இப்படியே செய்தார். அப்போது குற்றநடைமுறைச்சட்டம் 433 A  பிரிவின்படி பதின்னான்கு ஆண்டுகள் கழிக்காமல் இவர்களை விடுதலை செய்திருக்க முடியாது.

 மீண்டும் கலைஞர் முதல்வராக இருந்த பொழுது அண்ணா பிறந்தநாளை முன்னிட்டும் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டும் ஒருமுறை பத்தாண்டும் ஒருமுறை ஏழு ஆண்டும் கழித்த வாழ்நாள் சிறையாளர்களை விடுதலை செய்த பொழுது அதை வரவேற்று நக்கீரனில் எழுதினேன். அதே போன்று ராஜீவ் வழக்கு சிறையாளர்களுக்கும் இஸ்லாமிய சிறையாளர்களுக்கும் விடுதலையிலிருந்து விலக்கழித்ததை குறை கூறி எழுதினேன்.  என் நக்கீரன் கட்டுரை அடிப்படையில் கலைஞர் முரசொலியில் உடன்பிறப்புக்கள் எழுதிய மடல் 'தியாகுவின் உள்ளம் தீயோர்க்கு அமையுமா' என்பது. ஆகவே குற்றநடைமுறை சட்டம் 435 ஆம் பிரிவையும் அதற்கு உச்சநீதிமன்றம் அளித்த விளக்கத்தையும் காட்டி அரசமைப்புச்சட்டம் 161 ஆம் உறுப்பின்படி ஆளுனரின் பெயரில் மாநில அரசுக்குரிய அதிகாரத்தை மறுக்க இயலாது.

இவர்கள் வில்லன்கள், பயங்கரவாதிகள், செத்தவர் முன்நாள் பிரதமர், இவர்களின் விடுதலை தவறான முட்காட்டு முன்னுதாரணமாகிவிடும். இது சர்வதேச அதிர்வலைகளை உண்டாக்கும் என்பன போன்ற பூச்சாண்டி வாதங்களை பல முறை உச்சநீதிமன்றத்திலே முன்வைத்தனர்.  அவற்ற் உச்சநீதிமன்றம் புறந்தள்ளிவிட்டது. உரைப்பவர்  எப்போதும் உரைத்துக்கொண்டே இருக்கட்டும். கவலைப்படாதீர்கள் தமிழர்களே. தமிழர் எழுவர் விடுதலைக்கு ஆணையிடுவதே தவிர ஆளுனர் புரோகித்துக்கு வேறு வேலையில்லை. புரோகித மனம் இதை ஒப்பாது என்றால் விலகிக்கொள்ளட்டும். ஏழு தமிழர்களுக்கும் அவர்களின் விடுதலைக்காக காத்திருக்கும் நமக்கும் இளவேனில் வெகுவிரைவில். தமிழர் விடுதலை; போர் முழக்கம் சமூகநீதி.

நிமிர்வு வைகாசி 2019 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.