உள்ளூர் உற்பத்தியில் சாதிக்கும் பிரணவசக்தி தொழில் நிறுவனம்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் வலிகாமம் மேற்கில் உள்ள வழக்கம்பரை, தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் என்கிற முகவரியில் பிரணவசக்தி தொழில் நிறுவனம் இயங்கி வருகிறது. இதனை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றார் திருவாதவூரர் திருக்குமரன்.இவர் இந்த நிறுவனத்தைத் தனது குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டே இயக்கி வருகிறார். இவரது மனைவி ஜெயக்குமாரி வலதுகரமாக இருந்து தொழிலை கவனித்து வருகின்றார். யாழ்மாவட்ட சிறுதொழில் முயற்சியாளர் சங்கத்திலும் தலைவராக இருந்து சக முயற்சியாளர்களின் முன்னேற்றத்துக்கும் அயராது உழைத்துள்ளார் திருக்குமரன்.
சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி மாணவரான இவர், உயர்கல்வியை முடித்து யாழ்ப்பாணம் பல்கலையின் நுண்கலைப்பீடத்துக்கு தெரிவாகி அதில் வயலினை பிரதான பாடமாக கொண்டு 2007 இல் பட்டம் பெற்றுள்ளார்.அரசாங்க வேலையில் நாட்டமில்லாத காரணத்தினால் சொந்தமாக தொழில் முயற்சியில் இறங்கி தொழிலதிபர் ஆகவேண்டும் இலக்குடன் அதற்கான தாயார்ப்படுத்தலில் இறங்கியிருக்கிறார்.
அவர் சொன்னவை:
படிக்கும் காலத்தில் யாழ்ப்பாணம் தொழிற்பயிற்சி கல்லூரியில் படித்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருத்தும் வேலையைக் கற்றேன். அதனைத்தொடர்ந்து இலத்திரனியல் இசைக்கருவிகளை திருத்தும் வேலையைச் செய்தேன். தொடர்ந்து இலத்திரனியல் சுருதிப் பெட்டியை நானே வடிவமைத்து உருவாக்கினேன். இத்தற்காக 2007 இல் ஜனாதிபதி விருதும் கிடைத்தது. 2009 யுத்தம் முடிவடைந்த பிற்பாடு எமது கலை கலாச்சார சமூகம் பாரிய மாறுதல்களுக்கு உட்பட்டது. அந்த மாற்றங்களுடன் எங்களது இசைத்துறை வீழ்ச்சியை கண்டது.
அப்பொழுதுதான் வாழ்வாதாரத்துக்காகவாவது புதிய தொழில்த்துறையை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. மனித இனம் இப்பூமிப்பந்தில் இருக்கும் வரை உணவுத்துறை என்பது எந்த சூழலிலும்வீழ்ச்சியடையாத துறையாக இருக்கும் என்கிற அடிப்படையில் இயற்கை உணவோடு சம்பந்தப்பட்ட தொழிற் துறையை தெரிவு செய்தேன்.
2009 இல் இருந்து பிரதான தொழிலாக பிரணவசக்தி நிறுவனத்தை நடாத்தி வருகிறேன். முதலில் வடக உற்பத்தியை மேற்கொண்டேன். இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள TCT எனப்படுகின்ற தியாகி அறக்கொடை நிறுவனத்தின் பல்பொருள் அங்காடி வடக விற்பனையை திறம்பட செய்து தந்தது. அதில் விற்பனை சூடு பிடித்தது. அங்கிருந்து வேறும் பல கடை உரிமையாளர்கள் பொருள்களை கேட்டு வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினார்கள். பின்னர் வெளிநாடுகளில் இருந்து வரும் பலர் நேரடியாக வடகத்தை வாங்கினர். பின்னர் அவர்களே அங்குள்ள பல்பொருள் அங்காடிகளுக்கும் தொகையாக வாங்குகின்றனர்.
கடந்த வருடம் மட்டும் 900 கிலோவுக்கு அதிகமான வடகங்களை கனடாவுக்கு கொள்கலனில் அனுப்பியிருந்தேன். ஏழு வகையான வடகங்களையும், 10 வகையான தேநீர் வகைகளையும், நான்கு வகையான மா வகைகளையும் செய்து வருகிறேன். பிரத்தியேக கேட்பனவுகளுக்கேற்ப பால் சார்ந்த பொருட்களான பன்னீர், சுவையூட்டிய தயிர் (யோக்கட்)என்பனவற்றை செய்து கொடுக்கின்றேன்.
வடகத்துக்கு மூலப்பொருட்களாக வேப்பம்பூ, வாழைப்பூ, சிறுகுறிஞ்சா, பாவற்காய், சின்ன வெங்காயம், எள்ளு, உளுந்து, சரக்கு மசாலா வகைகள், கறிமுருங்கையிலை, ஆவாரம்பூ போன்றவை உள்ளன.சமகலவை வடகம் எனப்படுவது மூலிகைகளும், ஆரோக்கிய பொருள்களும் சம அளவில் சேர்க்கப்பட்டது.மற்றைய வடகங்களில் உதாரணமாக வேப்பம்பூ வடகம் எனில் அதில் வேப்பம்பூவின் அளவு அதிகம்;சிறுகுறிஞ்சா வடகம் எனில் அதில் சிறுகுறிஞ்சாவின் அளவு அதிகமிருக்கும். ஆனால், எல்லா வடகங்களுக்கும் ஏனைய பொருள்களும் சேர்க்கப்பட்டிருக்கும்.
தேநீர் வகைகளில் சிறுகுறிஞ்சாத்தேநீர், ஆவாரம் பூத் தேநீர், கறிமுருங்கையிலைத் தேநீர், கற்றாழைத் தேநீர் என்றனவற்றையும், மல்லிக்கோப்பி, நாவல்கொட்டைக் கோப்பி, என்பவற்றையும் உற்பத்தி செய்து வருகிறேன்.கருஞ்சீரகம், சிறுகுறிஞ்சா, நாவல்கொட்டை, ஆவாரம்பூ, கறிமுருங்கையிலை ஆகியவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதாக அறியப்படுகின்றது. அவற்றைச் சேர்த்து நீரிழிவு கொல்லித் தேநீரையும் உற்பத்தி செய்து வருகிறேன்.
கைகால் உட்பட மூட்டு பிரச்சினைகளுக்கு முடக்கொத்தான் சேர்க்கப்பட்ட ரசப்பொடியையும், உடல் இளைப்பதற்கு கொள்ளு சேர்க்கப்பட்ட ரசப்பொடியையும் தயாரித்து வருகின்றேன். துவரம்பருப்பு, கச்சான், உளுத்தம் பருப்பு, சிவப்பு பச்சை அரிசி, சாமை, கருமுருங்கையிலை, வல்லாரை, பொன்னாங்காணி, சிறுகுறிஞ்சா, ஆவாரம்பூ போன்ற பல பருப்பு, தானிய, இலை வகைகளை பக்குவமாக உலர்த்தி அதனை பொடியாக்கி பின் கஞ்சியாக்க கூடிய வகையில் இலைக்கஞ்சி மாவையும் தயாரித்து வருகிறேன்.
வாழைப்பூ இனிப்பு, ஆவாரம்பூ இனிப்பு போன்ற இனிப்பு வகைகளை தயாரிக்கும் முயற்சியிலும் உள்ளேன்.வடகத்தை ஆரம்பத்தில் கையால் செய்து பின்னர் சாதாரண இயந்திரத்தின் மூலம் செய்து வந்தேன். இப்பொழுது, மழை போன்ற பாதகமான காலநிலை அமைந்தால் கூட ஒரே தரத்தில் 50 கிலோ வடகம் போடக் கூடிய வகையில் இயந்திரம் நம்மிடம் உள்ளது.
இலங்கையின் பல்வேறு இடங்களில் கண்காட்சிகளில் பங்கேற்று இயற்கையோடு வாழ்வியல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்ததவும் திருக்குமரன் முயற்சி செய்து வருகிறார்.இவர் தனது நிறுவனத்தில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை சமூகத்தை நல்வழிப்படுத்தும் அறம்சார்ந்த நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் விளக்கவுரை போன்ற பல அரிய நூல்களை மறுபதிப்புச் செய்து மாணவர்களிடம் சேர்ப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளார்.
யாழ் மாவட்ட சிறுதொழில் முயற்சி பிரிவின் தலைவராக இருந்த போது பெற்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு என்று சங்கங்கள் உருவாக்கப்பட்டும் எந்த ஒரு பலமான சங்கமாக இதுவரை வளரவில்லை. “எங்களுக்கென்று பிரச்சினை வந்தால் கதைப்பதற்கு ஆட்கள் இல்லை. சங்கத்துக்குள்ளும் இரு பிரிவாக இருந்து நல்ல விடயங்களை குழப்புவதற்கும் ஆட்கள் இருக்கின்றார்கள். இதனால் சங்கத்தை பலமான அமைப்பாக கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.” என்று திருக்குமரன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் ஒரு தொழிலை தொடங்குவதற்கு முதலீடு தேவை. சரியான திட்டத்துடன் வங்கிகளை அணுகினாலும், அங்கு முயற்சியாளர்கள் அலைக்கழிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இங்கு ஆயுள்வேத மூலிகை மருந்துகளை தயார் செய்தால் அதற்கு பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்துகின்றார்கள். ஆனால், இங்கிருந்து மூலிகைகளை எடுத்து மருந்துகள் கொழும்பில் தயாரிக்கப்பட்டு இங்கு வருகின்றன. தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும். உணவுசார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு சுகாதார பரிசோதகர்கள் பெரும் பிரச்சினையாக உள்ளார்கள். உணவு தயாரிக்கும் இடத்தின் நிலப்பகுதி தண்ணீர் தேங்கி நிற்காதவாறு வழிந்தோடக் கூடிய நிலையில் இருக்க வேண்டும். ஆனால், பொது சுகாதார பரிசோதகர்கள் கட்டாயம் நிலத்துக்கு மாபிள் பதிக்க வேண்டுமென சொல்கிறார்கள். ஆனால், இதற்கு தீர்வுகாண கூட்டங்களை ஏற்படுத்தி கதைக்கும் போது மாபிள் பதிக்க சொல்லி சட்டத்தில் சொல்லவில்லை என்கிறார்கள்.
பொதுச் சுகாதார பரிசோதகர்களும் - தொழில் முயற்சியாளர்களும் சுமூகமாக பேசி தீர்வு காணக் கூடிய சூழல் ஒரு சில இடங்களில் தான் உள்ளது. உணவுற்பத்தி விடயங்களில் தயாராகும் உணவு சுகாதாரமானதாகவும், கிருமித்தொற்றுக்களின்றியும் இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இங்கே தேவையற்ற கெடுபிடிகளே அதிகம். சின்னப் பிரச்சினைக்கும் வந்து இப்போது பார் உன்னை நீதிமன்றுக்கு கொண்டு செல்கிறேன் என மிரட்டும் சூழ்நிலையும் உள்ளது. இந்நிலைமை எங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் மட்டும் தான் உள்ளது.
வியாபார நிறுவனங்களை பதிவு செய்வதில் பிரதேச சபைக்கும் பிரதேச செயலகத்துக்கு இடையிலுள்ள முரண்பாடு இன்னுமொரு தலையிடி. பிரதேச சபைக்கு போனால் சொல்வார்கள் செயலகத்தில் முதலில் பதிவு செய் என, செயலகத்துக்கு போனால் சொல்வார்கள் சபையில் முதலில் பதிவு செய் என, மாறி மாறி கூறுவார்கள். இந்த இடத்திலேயே முயற்சியாளர்கள் பலர் அடுத்த படிக்கு நகராமல் முடங்கி விடுகிறார்கள். மாவட்ட செயலகத்தில் கூட இந்த விடயம் குறித்து கேட்ட போது தெளிவில்லாத நிலை தான் இருந்தது என்று கூறினார்.
தொடர்பு கொள்ள: 0775905985
துருவன்
நிமிர்வு வைகாசி 2019 இதழ்
Post a Comment