அன்பே சிவம் நிறுவனத்தின் ஈழத்து சமூகப் பணிகள்




தமிழர் நலன் சார்ந்து இயங்கும்  நிறுவனங்கள், அமைப்புக்கள் பற்றியும் அவை என்னென்ன பணிகளை ஆற்றி வருகின்றன என்பது பற்றியும் எல்லோரும் அறிந்து கொள்வது அவசியமாகும். எல்லா அமைப்புக்கள், நிறுவனங்கள் பின்னாலும் தனி மனிதர்கள், மற்றும் குழுக்களின் அர்ப்பணிப்பும் விடா முயற்சியும் உள்ளன. அந்த வகையில் எம் மக்களின் மத்தியில் வேலை செய்யும் அமைப்புக்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகும். இம்முறை அன்பே சிவம் அமைப்பு குறித்து பார்ப்போம். 

ஈழத்து தமிழ் மக்கள்  இன்று ஒரளவு பொருளாதாரத்தோடு வாழ்வதற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவுகளும், சமூக அமைப்புக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் சுவிஸ் சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் 25 ஆண்டுகளிற்கு மேலாக பரந்துபட்ட அமைப்பாக சைவத்துக்கும் தமிழுக்கும் மனிதாபிமானத்துக்குமான பணிகளை அதன் உப அமைப்புக்கள் மூலம் ஆற்றி வருகின்றது. ஈழத்தில் யுத்தம் முடிந்த பின் தமிழ் மக்களின் தேவையை அறிந்து அன்பே சிவம் என்னும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு நீண்ட காலம் அன்புக்கரம் கொடுத்து வருகிறது.

இவ் அமைப்பின் செயற்பாடுகளாக கல்வி, வாழ்வாதாரம், மனிதாபிமானம், நிவாரணப் பணிகள், வரப்புயர மர நடுகைத்திட்டம், தமிழர் கலாசார நிகழ்வுகள், சிவபுர வளாகம் போன்றவை உள்ளன. யுத்தம் முடிந்த பின் தமிழ் மக்கள் உயிர் இழப்புக்கள், பொருளாதார ரீதியான நெருக்கடிகள், உடல் அவயங்ளின் இழப்பு, காணாமல் ஆக்கப்படுதல் என தமிழ் மக்கள் பல துயரங்களை சந்தித்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு யாருமற்ற ஏதிலிகளாக வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் எம் தாயக மக்களுக்கு அன்புக்கரம் கொடுக்க வேண்டுமென்ற நோக்கோடு “மண்சுமந்த மேனியர்”  என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ் அமைப்பானது 21.03.2010 இல் மணற்காடு இடைத்தங்கல் முகாமில் தற்காலிகமாக வசித்துக் கொண்டிருந்த மக்களிற்கு உணவு, சத்துணவு, கல்வி போன்றவற்றிற்கான உதவித்திட்டத்தின் ஊடாக தனது பணியை ஆரம்பித்தது.இன்று, தாயகத்தின் பல பகுதியிலும் உதவி செய்வது மட்டுமல்லாமல் மலையகப் பகுதிகள் என நாட்டின் பல பகுதிகளிலும் பல பணிகளை செய்து வருகிறது.

மண்சுமந்த மேனியர் அமைப்பானது ஆரம்ப காலத்தில் ஜேர்மன் நாட்டின் நேசக்கரம் எனும் அமைப்போடு இணைந்து செயற்பட்டது. குறுகிய காலத்தின் பின்னர்28.08.2010 இல் திக்கம் கலாசார மண்டபத்தில் உத்தியோக பூர்வமாக தனி அமைப்பாக அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் போரால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களிற்கு பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட்டன. இவ் உதவித் திட்டங்களில் மாணவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவுகள், துவிச்சக்கர வண்டிகள், வறிய குடும்பங்களுக்கான மாதாந்த உதவித் தொகை, ஆசிரியர்களுக்கான மாதாந்த உதவித்தொகை என்பன உள்ளடங்கின. சமயப் பெரியார்கள், கல்விமான்கள், பெரியோர்கள் எனப் பலர் இந்நிகழ்வில்கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு நடந்த காலப்பகுதியானது தாயகப் பகுதி மக்கள் சுதந்திரமாக நடமாடவோ, ஒன்று சேரவோ முடியாத ஒரு காலப்பகுதியாகும். புலம் பெயர்வாழ் உறவுகள் எம்மை திரும்பி பார்த்து உதவுகிறார்கள் என மக்களுக்கு ஒரு புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் இந்நிகழ்வுஏற்படுத்தியது.

அத்துடன் சுவிஸ் தமிழ் கல்விச்சோலை நூற்றுக்கணக்கான மாணவர்களிற்கான மாதாந்த கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவையும், சுவிஸ் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கம் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு தொகை, சுயதொழில் முயற்சிகள், வாழ்வாதார உதவிகள், துவிச்சக்கர வண்டிகள், கற்றல் உபகரணங்கள் என்பவற்றை வழங்கி வந்தன. இவ்விரு அமைப்புகளும் மண்சுமந்த மேனியர் அமைப்போடு இணைந்து மனிதநேயப் பணிகளை செய்து வந்தன. தொடர்ந்தும் எம் மக்களிற்கான தேவைகளை வழங்கும் நோக்கோடு 2011 இலிருந்து இவ்வமைப்புக்கள்அன்பே சிவம் என்னும் பெயரோடு பணிகளை செய்து வருகின்றன.

கல்வி

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேசங்களில் கல்வியாலும் வறுமையாலும் பின் தங்கிய இடங்களை இனம் கண்டு அவ் இடங்களில் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிப்புக்காக மாதாந்த உதவிக் கொடுப்பனவுகள், மாலைநேர கல்வி நிலையங்கள், கணனி பயிற்சி நிலையங்கள், மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள், காலணிகள், ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு, கல்வி நிலையங்களுக்கு கொட்டகைகள், தளபாடங்கள், முன்பள்ளிகளுக்கு கட்டிடங்கள் என பல்வேறு வகையான செயற்பாட்டை அன்பே சிவம் அமைப்பு செய்து வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க விடயமாக பார்வையற்றோருக்கான கணனி நிலையம் ஒன்றை கிளிநொச்சி பிரதேசத்தில் உருவாக்கி அதனூடாக பார்வையற்றோருக்கான தொழில் வாய்ப்பினையும் கற்றல் செயற்பாட்டையும் ஏற்படுத்தி கொடுத்தது.

வன்னிப்பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட காலத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பாடசாலை செயற்பட தொடங்கிய காலத்தில் கிளி/முருகானந்தா கல்லூரியில் வரதன் தலைமையில் கணனிக் கூடம் அமைக்கப்பட்டு கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் அரச ஊழியர்கள் என பலர் கட்டடங்களாக கல்வி கற்று சான்றிதழ்களையும் பெற்று நல்ல நிலைக்கு அவர்கள் செல்ல இவ் அமைப்பு வழிகாட்டியது.

வாழ்வாதாரம்

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக கிளி/முருகானந்தா கல்லூரியில் இன்னொரு அங்கமாக தையல் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு பல யுவதிகளுக்கு பயிற்சிகளை கொடுத்து சுயமாக தொழிலில் ஈடுபட வழியமைத்தது இந்நிறுவனம். அத்தோடு தொடர்ந்தும் அக்கரைப்பற்று வவுணதீவு பிரதேசங்களிலும் யுவதிகளுக்கு தையல் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அன்றாட வாழ்வாதாரத்திற்கு மிகவும் வறுமைப்படும் மக்களை இனம் கண்டு அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் விதமாக பல சுயதொழில் முயற்சிகளுக்கான நிதிக் கொடுப்பனவுகள், தையல் இயந்திரங்கள், கால் நடைகளான ஆடுகள், மாடுகள், மற்றும் கோழிகள் என்பவற்றை வழங்கி சுயமாக தொழில் செய்து வாழ்வாதாரத்தை விருத்தி செய்ய  உதவிபுரிகிறது.

மனிதாபிமானம்

அன்பே சிவம் அமைப்பானது சிறுவர் இல்லம், முதியோர் இல்லம், பாடசாலை, முன்பள்ளிகள், கல்வி நிலையங்கள் என்பவற்றுக்கு, உணவு, உடைகள் வழங்கி வருவதோடு பணத்தொகைகளையும் வழங்கி மாணவர்கள் நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வழியமைத்து கொடுக்கிறது.

நிவாரணப் பணிகள்

இவ் அமைப்பு கற்றல் செயற்பாட்டுக்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமல்லாமல் தாயகத்திலும் மலையகத்திலும் இயற்கை அனர்த்தம் ஏற்படும் போது உடனடியாக அந்தந்த பிரதேசங்களில் நேரடியாக அன்பே சிவம் தொண்டர்கள் மூலம் உலர் உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், உடைகள் என்பவற்றை இனம், மதம், மொழி பாராமல் மனித நேயத்தோடு வழங்கி வருகிறது.

வரப்புயர மரநடுகைத் திட்டம்

தாயகப்பகுதிகளில் யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்ற காரணங்களால் ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டன. இதை கருத்தில் கொண்டு கிராமங்கள், பாடசாலைகள், வீதியோரங்கள் என அனைத்து இடங்களிலும் மர நடுகை செய்வதோடு இலவசமாக மக்களிற்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறது. இதற்கென தமிழர்களின் புனித மாதமாக போற்றப்படும் கார்த்திகை மாதத்தில் “வரப்புயர” மர நடுகை திட்டத்தை ஆரம்பித்தது. இன்று நாட்டில் அதிகரித்த வெப்பநிலை சூழல் ரீதியான மாறுபாடுகளை சமாளிக்க பயன் தரு மரங்கள் அவசியம். அதனால் இவ்வரப்புயர திட்டம் எமது தாயகத்தின் சூழல்ப் பாதுகாப்புக்கு சிறந்த சேவையாற்றி வருகிறது.

சிவபுர வளாகம்

அன்பே சிவம் அமைப்பின் முக்கிய செயற்பாடாக சிவபுர வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இவ் வளாகமானது நிரந்தரமானதும் நீடித்து நின்று மக்களிற்கு பயன்தர கூடிய வேலைத்திட்டம் ஆகும். இவ் வளாகத்தில் முதியோர் இல்லம், வணக்க ஸ்தலம், தொழிற்பயிற்சி நிலையங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், விவசாய பண்ணைகள் என்பன அமைக்கப்படவுள்ளன. இது முதியவர்கள் பயன்பெறும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

பானு
நிமிர்வு வைகாசி 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.