முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது
எங்கும் அமைதி - மயான அமைதி நிலவுகிறது. அந்த அமைதியைக் மெலிதாய் கிழிக்கிறது ஒரு பிஞ்சுக் குரல்... மனதைப் பிழியும் குரல்...!

அந்தக் குரல் ஒலிக்கத் தொடங்கும் முன் - ஒரு சில நிமிடங்களுக்கு முன் - பரந்து விரிந்து கிடந்த சுடுமணலில் தங்கள் உடல் பரத்தி உறவுகளுக்காக அழுது புலம்பினார்கள் முள்ளிவாய்க்கால் திடலில் கூடியிருந்த மக்கள்.

இதேபோல அதற்கும் சற்று முன்னர்தான் அந்தச் சிறுமி நினைவேந்தலுக்காகக் கூடி நின்ற அனைவரையும் கனத்துப் போகச் செய்திருந்தாள். பத்தே வயது நிரம்பிய ராகினி என்ற அந்தச் சிறுமிக்கும் - முள்ளிவாய்க்காலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

ராகினி... -
போருக்கும் அவளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம்... அவள் போருக்குள்ளேயே பிறந்தவள் - அகதியாகவே பிறந்தவள் - தன் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்தபோது இராணுவம் ஏவிய ஷெல்லுக்குத் தாயைப் பறிகொடுத்தவள். தன் தாயின் இறப்பைக்கூட அறியமுடியாத அந்தப் பச்சிளம் பாலகி தாயிடம் பசியாற முனைந்திருந்தாள். அந்தப் பேரவலப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்து ஒரு தசாப்தம் நிறைவுற்றுள்ளது.

இந்நிலையில்தான், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பிரதான சுடரை ஏற்றினாள் - போரின் குழந்தையாகப் பிறந்த ராகினி. அந்தக் காட்சி அங்கு கூடியிருந்த - இராஜதந்திரிகள், உள்நாட்டு -வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், அரசியல்பிரபலங்களை மட்டுமல்ல உறவுகளை நினைத்து துன்பங்களைச் சுமந்து கொண்டிருந்த மக்களையும் நிலைகுலையச் செய்தது.

ஒற்றைக் கரத்தில் ஏந்திய நெருப்பை தீபத்தில் ஏற்றுவதற்கு ஆதாரமாக முழங்கையுடன் துண்டித்துப்போன இடது கரத்தை இணைத்த அந்தக் கணம் அங்கிருந்த அனைவர் மனதிலும் உறைந்துபோனது. சோகமே உருவான அந்தப் பிஞ்சுமுகம் அங்கிருந்த அனைவரையும் பாதித்தது. அந்தக் காட்சியின் மூலம் போரின் வலியின் அடையாளமாகிப் போயிருக்கிறாள் ராகினி.

ராகினி போர் வலியின் அடையாளம் மட்டுமல்ல, போர் முடிந்து ஒரு தசாப்தம் நிறைவடைந்தும் இன்னமும் கிடைக்காத - மறுக்கப்பட்ட நீதியின் அடையாளம் - முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது சர்வதேசத்திடம் அபயம் கேட்ட - கைவிடப்பட்ட மக்களின் முகம். துன்பத்தின் மேல் துன்பத்தை - அவலங்களின் மேல் அவலங்களை சந்தித்த மக்களின் பிரதிநிதி.

ராகினி ஒற்றைக் கையுடன் தீபமேற்றும் அந்த புகைப்படம் மூலம் போர் முடிந்தும் நீளும் தமிழ் மக்களின் அவல நிலை வெளிப்பட்டுள்ளது. இவ்வாறான சர்வதேச கவனம் ஒரு தசாப்தத்தின் பின்னர்தான் சாத்தியப்பட்டுள்ளது. இந்தச் சாத்தியத்துக்கு மனிதப் பேரவல நினைவேந்தலை முள்ளிவாய்க்காலில் கடைப்பிடிக்கப்பட்ட நாளிலிருந்து அரசியலே கோலோச்சியிருந்தது. ஆனால், இம்முறை நினைவேந்தல் ஏற்பாடுகள் மக்கள் மயப்பட்டிருந்தது. இதனால் தான், இவ்வாறான சர்வதேச கவனங்களும் சாத்தியமாகின.

வழக்கமான நினைவேந்தல்களில் அரசியல்வாதிகளில் சிலருக்குக் கிடைக்கும் தனி மரியாதைகள் நிறுத்தப்பட்டது. அதேவேளை, அனைத்து அரசியல்வாதிகளும் தனிமனித - கட்சி வேறுபாடுகளின்றி சமமாக நடத்தப்பட்டனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மக்கள் மயப்படுதலின் அவசியத்தையும் - அனைத்து அரசியல் சக்திகளையும் ஒரே இடத்தில் ஒன்றிணைப்பதிலும் மக்கள் தலைமைக்குக் கிடைத்த வெற்றியும்கூட.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒரு புறத்தில் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டாலும் கடந்த காலங்களில் கண்டுகொள்ளாமிலிருந்த அரசும் இராணுவமும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதில் - அல்லது அதை ஒரு வெற்றிகரமான நினைவேந்தலாக நடத்தவிடாமல் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது.

அடிப்படை வாத சக்திகளால் ஏப்ரல் 21 ஆம் நாள் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து நாடாளாவிய ரீதியில் சோதனைக் கெடுபிடிகள் தொடங்கியுள்ளன. இராணுவத்தினரில் பெரும் பங்கினர் வடக்கிலேயே நிலைகொண்டுள்ளனர். இதனால் வடக்கில் சோதனைச் சாவடிகளும் கெடுபிடிகளும் மற்றைய இடங்களை விட அதிகம்தான்.

இந்நிலையில் வடக்கில் முக்கிய ஸ்தலங்களுக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் எச்சரிக்கைகளால் மக்கள் கூடுவதைத் தவிர்க்க - தடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் வழக்கமாகக் கூடும் மக்களின் எண்ணிக்கையை விட இம்முறை நினைவேந்தலில் கூடிய மக்களின் எண்ணிக்கை சற்றுக் குறைந்துதான் போனது.

தவிர யாழ். பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் மீது பிரயோகிக்கப்பட் அவசரகால சட்ட அடக்குமுறையால், அச்சம் காரணமாக பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் விதத்தில் மாணவர்கள் பங்கேற்கவில்லை. வழமைக்கு மாறான அதிக சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைகளால் மக்களின் ஒன்றுகூடல் தடுக்கப்பட்டது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

ஆனால், எத்தகைய கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவை நினைவேந்துவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது என்பதை கட்டியம் கூறியுள்ளது முள்ளிவாய்க்கால் நினைவுநாள்.

ஐங்கரன் 
நிமிர்வு வைகாசி 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.