முன்னுதாரணமாகும் திருநாவுக்கரசு நினைவு மாதிரிப்பண்ணை



யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மாவிட்டபுரம் நெசவுநிலைய வீதியில் இயற்கை எழில் சூழ்ந்து செழிப்பாக அமைந்துள்ளது  திருநாவுக்கரசு நினைவு மாதிரிப்பண்ணை. இதன் நிறுவனராக விளங்குகிறார் மாவை நித்தியானந்தன். அவர் பிறந்த வீடு தான் இன்று ஒரு மாதிரிப்பண்ணையாக உயிர்பெற்றுள்ளது. வயதானாலும் இளமைத்துடிப்புடன் பண்ணையை வலம் வந்து சிறப்பாக நிர்வாகம் செய்கிறார். பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் பண்ணை ஆரம்பிக்கப்பட்டதன் சமூக நோக்கத்தையும் கூறி வருவதால் அவர்களும் அக்கறையுடன் பணியாற்றுகிறார்கள்.   

கலை, இலக்கிய  ஆர்வம் இயல்பிலேயே இருந்ததால் இன்றைய மூத்த பல எழுத்தாளர்களுடன் சேர்ந்து  கலை, இலக்கிய நண்பர்கள் கழகங்கலில்  இயங்கியிருக்கிறார். மொரட்டுவ பல்கலையில் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்று, பின் லண்டனில் விவசாய பொறியியலாளர் பட்டம் பெற்றிருக்கிறார். மகாஇலுப்பள்ளமவில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் அங்கேயே தங்கியிருந்து 10 வருடங்கள் வேலை செய்திருக்கிறார்.     1989 ஆம் ஆண்டு  அவுஸ்திரேலியா சென்று அங்கு பொறியியலாளராக மிக உயர்ந்த பதவிகளை எல்லாம் வகித்திருக்கிறார்.   அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில்  கடந்த 25 வருடங்களாக அங்குள்ள 5 இடங்களில் பாரதி தமிழ்ப் பள்ளிக்கூடங்களை நடத்தி இருக்கின்றார்.


அவருடன் பேசியது:ஓய்வுபெற்றவுடன் தாயகத்திலும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். 2015 காலப்பகுதியில் தமிழர் தாயக பகுதிகளில் தற்கொலை வீதங்கள் அதிகரித்திருந்தது. இதனை எப்படி கையாளலாம் என யோசித்து 'கை கொடுக்கும் நண்பர்கள்' என்ற அமைப்பைத் தொடங்கினேன். உலகம் முழுவதிலும் தற்கொலைத் தடுப்பு அமைப்புக்கள் இருக்கின்றன. இலங்கையில் குறிப்பாக தென்னிலங்கையில் கடந்த 45 வருடங்களாக தற்கொலைத் தடுப்பு அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், வடக்கிலும், கிழக்கிலும் தற்கொலைத் தடுப்பு அமைப்புக்கள் இல்லை. 

போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட எங்கள் பிரதேசங்களில் தான் தற்கொலைத் தடுப்பு அமைப்புக்கள் அதிகம் தேவையாக உள்ளன.    கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தற்கொலைத் தடுப்பு அமைப்பாக கை கொடுக்கும் நண்பர்கள் அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இதில் சேவை நோக்கம் கொண்ட பல இளையோர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.  தற்கொலை எண்ணம் கொண்ட நூற்றுக்கணக்கானோரை மீட்டுள்ளோம். அவர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டி இருக்கின்றோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் கை கொடுக்கும் நண்பர்கள் அமைப்பு பற்றி நிமிர்வில் விரிவாக பேசுவோம்.


தொடர்ந்து வன்னியில் உள்ள விதவைப்பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் அரிசிமா, மிளகாய் தூள் பொதியிட்டு விற்கும் சிறிய தொழிற்சாலை ஒன்றை தொடங்கினோம். சிறிது காலப்பகுதியில் அப்படியான தொழிற்சாலைகள் நிறைய வந்துவிட்டன. இதனால்  அதனை அப்படியே இன்னொரு நிறுவனத்திடம் கையளித்து விட்டோம்.   

பாலைவனமாகும் யாழ்ப்பாணம்

இளம் வயதிலிருந்தே யாழ்ப்பாணத்தில் உள்ள தண்ணீர் பிரச்சினை தான் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.1960 களில் யாழ்ப்பாணம் வந்த இஸ்ரேலிய விஞ்ஞானிகள் யாழ்ப்பாணம் விரைவில் பாலைவனமாகும் என எச்சரித்து விட்டு போனார்கள். அந்த நிலைமைக்கு யாழ்ப்பாணம் இன்று போய்க் கொண்டிருப்பதனைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. கிணற்று நீர் உப்பாக மாறிக்கொண்டு வருகின்றமை யாழ்ப்பாணத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. எங்களது ஓய்வுபெற்ற நீர்ப்பாசன பொறியியலாளர்களைக் கேட்டால் சொல்வார்கள். நிலத்தடி நீர் ஆழத்துக்கு போவதும், உவர்நீராவதும் பாரிய பிரச்சினைகளாகும். இவற்றைப்பற்றி அன்று தொடக்கம் விவாதம் நடந்து வந்தாலும் இதற்கொரு தீர்வு காணவில்லை.


இங்கு நிலத்துக்கு கீழே சுண்ணாம்பு பாறைகள் உள்ளன. அந்தப் பாறைகளுக்குள் தான் மழை நீர் போய் தேங்கி நிற்கும். அதே போல் கடலுக்கடியில் உள்ள சுண்ணாம்பு பாறைகளுக்குள் கடல் நீர் இருக்கும். இரண்டும் சந்திக்கும் இடத்தில் இரண்டுக்கும் போட்டி இருக்கும். எங்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக நுகரும் போது அந்த மட்டம் கீழே கீழே போகும். அந்த இடத்தை நிரப்ப கடல் நீர் உட்புகுவதனால் தான் நன்னீர் உவர்நீராக மாறுகின்றது. நாங்களும் வேகமாக நன்னீரை இறைக்க, கடல்நீரும் வேகமாக உட்புகுந்து உவர்நீராக மாறுகின்றது.

தண்ணீரின் பெறுமதி அளவிடமுடியாதது. அடுத்த உலக யுத்தம் நீருக்கானது என்கிறார்கள். உலக நாடுகள் எங்கும் தண்ணீரைப் பற்றி எத்தனையோ விதமான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கே தண்ணீரைப் பற்றி சிந்திப்பார் இல்லை. என்னைப்பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தமிழர் எதிர்நோக்குகின்ற முதலாவது பிரச்சினை இனப்பிரச்சினை அல்ல. நாங்கள் தனிநாடு எடுத்தாலும் அடுத்த தலைமுறை இங்கு வாழமுடியாது. உப்புத்தண்ணீரில் எப்படி வாழ்வது? பிறகு நாடென்று எதற்கு?

உப்புத்தண்ணீர் வந்தால், பயிர்கள் வளராது. கருகும்;வளர்ச்சி குன்றும். எம் தேசம் வளமிழந்து போகும். பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும். இதற்கு என்ன செய்யலாம். இதற்கு இரண்டு முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று நிலத்துக்குள் செல்லும் நீரை அதிகரிப்பது. இரண்டு நிலத்திலிருந்து எடுக்கும் நீரின் அளவை குறைப்பது. இதற்கு தான் குளம் கட்ட வேண்டும் எனச் சொல்வார்கள். கோடைகாலத்தில் இருக்கின்ற குளங்களை தூர்வாரினால் மழை காலங்களில் குளத்தில் தேங்கும் நீரின் அளவை அதிகரிக்கலாம். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் மிகக்குறைந்த அளவு தண்ணீருடன் அதிகளவு பயிரை செய்யலாம்.

மாதிரிப் பண்ணையின் அவசியம்

இந்தநிலையில் தான் நஞ்சற்ற உணவை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அவர்களை விழிப்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். தண்ணீர் இல்லாத ஆபத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். இவற்றை நேரடியாக செய்து காட்ட வேண்டும் என்கிற நோக்கில் தான் இந்த மாதிரிப் பண்ணையை ஆரம்பித்தோம். இதனை ஆரம்பிக்க முன் நானும் நண்பரும் சேர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் நீண்ட தூரம் பிரயாணம் செய்து அங்கு இயற்கைவிவசாயம், கால்நடை வளர்ப்பு இடங்களை நேரில் பார்த்து அனுபவங்களை பெற்றுக் கொண்டதுடன், சில பயிற்சிப் பட்டறைகளிலும் கலந்து கொண்டோம்.  எமது பண்ணை முயற்சிக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள நண்பர்களும் கைகொடுத்து உதவினார்கள். நீடித்து நிலைக்கக் கூடிய இந்த பண்ணையை உருவாக்க காரணம் வெளிநாடுகளில் இருந்து வரும் திட்டங்கள் எல்லாம் குறுங்கால நோக்கிலேயே உள்ளன. அந்த நிலையை மாற்றி நீண்டகாலத் திட்டமாக இதனை நடத்தி வருகிறோம்.


விவசாயத்துக்கு இளைய தலைமுறையினரை கொண்டுவர வேண்டும். மாற்றம் வேண்டும். விவசாயம் செய்யும் தொழிநுட்ப முறைகளை மாற்ற வேண்டும். இலாபத்தைக் கூட்ட வேண்டும். பயிர்செய்யப்படாத நிலங்களில் பயிர்செய்யும் கொள்கைத்திட்டம்  வேண்டும். இன்றைய மண்ணிலும் குப்பைகளுக்குள்ளும்  முக்கியமாக நைட்ரஜன், பொஸ்பரஸ், பொட்டாசியம் (nitrogen, phosphorus, potassium)  போன்ற இரசாயனங்களை தான் உள்ளன.     தண்ணீர் ஆழத்துக்கு போகிறது, நிலமும் தண்ணீரும் உப்பாக மாறுகிறது, அதீத இரசாயன உரப் பாவனையால் மண் மலடாகிறது.

இவற்றை பாதுகாக்க நாங்கள் அரசியல் ரீதியாகவும், விஞ்ஞான  ரீதியாகவும் செயற்பட வேண்டும். இதனால் இந்த மாதிரிப்பண்ணையை ஒரு சமுக இயக்கமாக தான் நாங்கள் தொடங்கியிருக்கின்றோம். நீர்ச்செழிப்பு , இரசாயனமற்ற விவசாயம், பன்முகப்படுத்திய பயிர்ச்செய்கை  என்பன மிக முக்கியமான விடயங்களாகும்.      அண்மையில் எமது பண்ணைக்கு 30 விவசாயிகள் கூட்டாக வந்திருந்தார்கள். நாங்களும் அவர்களின் பண்ணைக்கு போயிருக்கிறோம். ஒரு மாதிரிப்பண்ணை எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற கனவு படிப்படியாக நிறைவேறி வருகின்றது. இவ்வாறு இளையோருடன் இணைந்து கூடுதலாக வேலை செய்வதனால் பொதுமக்கள் நலன்சார்ந்த எங்களது நோக்கங்களை விரைவில் எட்ட முடியும்.
 

வீட்டுத்தோட்டங்கள் செய்ய குடும்ப பெண்களை ஊக்குவித்து வருகிறோம். அதன்மூலம் பிள்ளைகளுக்கு நஞ்சில்லாத மரக்கறிகள் கிடைக்க வழி ஏற்படுவதுடன், எஞ்சிய மரக்கறிகளை விற்பனை செய்யவும் முடியும். பயிர்களை பல்வகைப்படுத்தல் முக்கியமானது. ஒரே பயிர்களை ஒரே நேரத்தில் விவசாயிகள் செய்வதால் விவசாயி நட்டமடையும் நிலை உள்ளது. தென்னிலங்கை விவசாயிகளுக்கும் எமது விவசாயிகளுக்கும் போட்டி உள்ளது.

உள்ளூரில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து எமது பண்ணையை பார்வையிட்டுள்ளனர்.  இரண்டு மாடுகளோடு தொடங்கிய பண்ணையில் இன்று 15மாடுகள் வரையில் நிற்கின்றது. தென்னிலங்கை மாஸ் போட்டு கோழிவளர்ப்பதில் இலாபமில்லை என்பதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்ததால், கோழி வளர்க்கும் முயற்சியில் இறங்கவில்லை. கோழி வளர்ப்புக்கு மாற்று வழிகளில் இறங்க வேண்டும்.

மண்புழுஉரத்தையும் இங்கே தயாரித்து வருகின்றோம். ஒருமுறை வாங்கியவர்கள் திரும்பவும் வாங்குகின்றார்கள். பயிர்வளர்ச்சி ஊக்கி கரைசல்களையும் தயாரித்து வருகின்றோம். மீள்குடியேறிய மக்களுக்கு தங்களுக்குத் தேவையான மரக்கறிகளத் தாங்களே உற்பத்தி செய்யும் நோக்கில் மரக்கறிக் கன்றுகளை வைத்த பையை இலவசமாக கொடுத்து வருகின்றோம். காளான் வளர்ப்பும் செய்தோம். ஆரம்பத்தில் நன்றாக வந்தது.

விவசாய திணைக்களத்தினால் சொட்டு நீர் பாசன கருவிகளை மானியத்தில் பூட்டினார்கள். எத்தனையோ விவசாயிகளுக்கு அரசாங்கம் இவ்வாறு பூட்டிக் கொடுத்தது.அதில் பழுது வந்தால் பாகங்களை இங்கே வாங்க முடியாதிருக்கிறது. சரி, பூட்டியவர்களை கொண்டு திருத்துவோமென்றால் அவர்களையும் பிடிக்க முடியாதிருக்கிறது. இதனால் சொட்டு நீர்பாசனத் தொகுதியை பலரும் கொண்டு போய் குப்பைக்குள் போட்டு விட்டார்கள். எல்லோருக்கும் இதே கதி தான்.

ஒரு மாங்கன்றுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்று கேட்டால் ஒருவருக்கும் தெரியாது. குறிப்பாக சொட்டு நீர்ப் பாசனம் மூலம் மாங்கன்றுக்கு தண்ணீர் பாய்ச்சினால் ஒரு மணித்தியாலத்தில் 15 லீட்டர் நீர் வெளியேறினால். அது போதுமா? போதாதா? என்பது தெரியாது. இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் நாங்கள் செய்யவேண்டியுள்ளது. நாங்கள் நான்கு விதமான சொட்டு நீர் பாசன கருவிகளை பொருத்தி ஆய்வு செய்து வருகின்றோம்.

படிக்க விரும்பும் எவரும் உதாரணமாக விவசாய திணைக்களத்தினரோ அல்லது பல்கலைக்கழக விவசாய பீடத்தினரோ அல்லது தன்னார்வலர்களோ எங்களது பண்ணையை ஒரு ஆராய்ச்சிக் களமாக பயன்படுத்தலாம். இதற்கு நாங்கள் எங்கள் ஒத்துழைப்புக்களை கொடுப்பதோடு எங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றோம். சமூக நோக்கமுள்ளவர்கள் தன்னார்வமாக தங்களது பண்ணையோடு இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் எனவும் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறார் மாவை நித்தியானந்தன்.

தொடர்பு கொள்ள : 0762348877
                                                                   

துருவன் 
நிமிர்வு ஜூன் 2019 இதழ் 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.