ஆக்கிரமிக்கும் முஸ்லிம் அதிகாரம்கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் முப்பது வருடங்களாக தடுக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை காணி நிதி அதிகாரங்களுடன் தரமுயர்த்துமாறு இப்பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்டு வரும் நியாயமான கோரிக்கை கடந்த முப்பது வருடங்களாக  திட்டமிட்டுத் தடுக்கப்பட்டு வருகின்றது.

இதனைக் கண்டித்தும் பிரதேச செயலகத்திற்கான காணி நிதி அதிகாரங்களை வழங்குமாறு கோரியும் கடந்த 17.06.2019 ஆம் திகதி முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம்  நடைபெறுகிறது.  மதகுருக்களான  கல்முனை சுபத்திரராமய விகாராதிபதி சங்கரத்தின தேரர், கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக்குருக்கள், அருட்தந்தை கிருபைநாதன், மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அழககோன் விஜயரெத்தினம், கல்முனை ஐக்கிய வர்த்தக சங்க பொருளாளரும் தொழிலதிபருமான கே.லிங்கேஸ்வரன் ஆகியோரால் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு  இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களும், மக்களும், பொது அமைப்புக்களும், தமிழ், சிங்கள அரசியல் பிரதிநிதிகளும் பூரண ஆதரவை வழங்கி பங்குகொண்டு வருகின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேசம் கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு, மணற்சேனை ஆகிய கிராமங்களையுடைய 29 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியது.  இதன் செயலகம் பௌதிக வளம், ஆளணிகளுடன் நிரந்தரமான கட்டிடத்தில் இயங்கிவருகின்றது.  ஆனால்  முப்பது வருடங்களாக நிதி மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படாமலும் அதற்கான அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தலின்படி நியமிக்கப்படாமலும்  இப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமல்  இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.


கல்முனை பிரதேசத்தில் நான்கு மதங்கள் காணப்படுகிறன. மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இவர்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குள் பெரும்பான்மையாக தமிழரும், சொற்பளவு சிங்களவர்களும் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். இவர்கள் இந்து, பௌத்தம், கிறிஸ்த்தவ இஸ்லாம் மதங்களை பின்பற்றுபவர்களாக உள்ளனர். இதேவேளை தனியாக முஸ்லிம் மக்களை மாத்திரம் உள்ளடக்கியுள்ள கல்முனை தெற்கு பிரதேச செயலகமானது சகல அதிகாரங்களுடனும் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு  கடந்த முப்பது வருடங்களாக ஜனநாயக ரீதியில் போராடிவரும் இம்மக்களின் கோரிக்கையானது  இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறுகிய அரசியல் நோக்கம்கொண்ட இனவாத அடிப்படைவாத கொள்கையுடைய முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் அதிகார பலத்தைப் பயன்படுத்தி இக்கோரிக்கை நிறைவேறாமல் தடுத்து வருகின்றனர்.  இதற்கு கடந்தகால அரசாங்களும் உடந்தையாக இருந்து வந்துள்ளமையும் கசப்பான உண்மையே.

நாட்டில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அரசில் அதிகாரங்களையும், சலுகைகளையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் பெற்று வந்தனர். தங்களின் அரசியற் பலத்தை பயன்படுத்தி கிழக்கில் தமிழர்களின் பல இடங்களைச் சூறையாடினர். முஸ்லிம்களுக்கான தனி நிருவாகங்களை உருவாக்குவதில் நீண்டகால திட்மிடலுடன் காய்களை நகர்த்தி உள்ளார்கள். அரசாங்கமும் இதனைக் கண்டும் காணாததுபோல் இருந்ததன் விளைவுகளை இன்று கிழக்கில் இலகுவாக புரிந்து கொள்ள முடிகின்றது. அப்பாவித் தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்கவைப்பில் இன்றும் வீதியில் இறங்கி போராட வேண்டிய துர்ப்பார்க்கிய நிலையே காணப்படுகிறது.  சிங்கள பௌத்த இனவாதத்தை எதிர்த்துப் போராடிய ஓர் இனம் இன்று அந்த பௌத்த பிக்குகளின் உதவியுடன் எமது முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கும் எதிராகப் போராட வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.  இதற்கு தமிழ் மக்களை இதுவரை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த் தலைமைகளின் அக்கறையின்மையே காரணம்.

இந்நிலைமைகள் இனியும் தொடராமலிருக்க இனவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் சிக்காது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே இன்று மக்களின் வேண்டுகோளாகும். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதால் முஸ்லிம்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத போதும் அதனை முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்.  ஏனெனில் இத்தரமுயர்த்தலால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு உள்ளது  போன்ற பொய் பிரச்சாரங்களை முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக கல்முனைப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள்  பரப்புரை செய்கின்றனர்.

ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தவிர்ந்த ஏனையவை அதிகாரங்களுடன் அதிகாரங்களுடன் தரமுயர்த்தப்பட்டுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான அமைச்சரவை அங்கீகாரங்கள் வழங்கப்பட்டிருந்தும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு மாத்திரம்  காணி, நிதி அதிகாரங்கள் வழங்குவததை   முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்மிட்டுத் தடுத்தே வருகின்றனர். கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியான முன்னாள் இராஜாங்க பிரதி அமைச்சர் பகிரங்கமாகவே தாங்கள் தடையாக இருப்பதை ஒப்புக்கொண்டும் இருந்தார். குறுகிய அரசியலுக்காக இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்துவதை எந்த அரசும் அனுமதிக்க கூடாது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தமிழர்களுக்கும்  சிங்களவர்களுக்கும் உரிய காணிகளை மற்றும் பல அரசகாணிகளை அரசியல்  அதிகாரங்களைப் பயன்படுத்தி முஸ்லிம் அரசியல்வாதிகள் கையகப்படுத்தி உள்ளனர். அவற்றில் தனியான முஸ்லிம் குடியேற்றங்களை  உருவாக்கியும்  உள்ளனர். வர்த்தக  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த  கல்முனையை தனியாக முஸ்லிங்களின் அதிகார ஆக்கிரமிப்புக்குள் மாத்திரம்  வைத்திருந்து முஸ்லிம்மயமாக்கும்   திட்டமாகவும்  இதனை நோக்க முடியும்.

கிழக்கில் தமிழர்களின் இருப்பை, வளங்களை திட்டமிட்டு அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி சூறையாடி கிழக்கு மாகாணத்தில் தனியாக முஸ்லிம்  அதிகார நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் கச்சிதமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் தனியாக முஸ்லிம் பாடசாலைகளை மாத்திரம் உள்வாங்கி நிலத்தொடர்பற்ற முறையில் தனியான கல்வி வலயம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  ஓட்டமாவடியில் 16 கிராம சேவகர் பிரிவுகளை இரண்டாக பிரித்து பிரதேச செயலகங்களை உருவாக்கியுமுள்ளனர்.

கடந்த ஏப்பரல் 21 தாக்குதல் சம்பவங்களின் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின்  திட்டங்களை   இலகுவாக யாவரும் அறிய முடிந்திருந்தது. முஸ்லிம் அரசியல்வாதிகளின் காய்நகர்த்தல்களுக்கும் இவற்றுக்கும் பெரிய வேறுபாடுகள்  உள்ளதாக தெரியவில்லை என்றே கூறலாம். ஒரு இனத்தை  வஞ்சித்து குறிப்பிட்ட இனத்தின் ஆதிக்கத்தை வளர்க்கும் சூழ்ச்சிகளுக்கு அரசும் இடமளித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குபட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை  அடிப்படை அரச சேவைகளை தங்குதடையின்றி பெற்றிட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான காணி, நிதி அதிகாரங்களை வழங்கி அனைத்து மக்களும்  சேவைகளை சமமாக பெற்றிட வழிவகை செய்ய வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும்.

தமக்கு வேண்டிய சேவைகளை அரச நிருவாக பணிமனையில்  தங்குதடையின்றி பெற முப்பது வருடங்களாக ஜனநாயக வழியில் இம்மக்கள் போராடி வந்துள்ளனர். இன்று அதன் உச்சமாக சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். கல்முனை வடக்கு பிரதேச மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது இனியும் தாமதிக்கப்படக்கூடாது.


-கேதீஸ் புவிநேசராசா-
நிமிர்வு ஜூன் 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.