சித்திரக்கதை இதழ்களும் சிறுவர் உளவியலும்
உலகில் வரிவடிவம் அல்லது எழுத்துவடிவம் என்பது தோற்றம் பெற முன்னரே சித்திரவடிவங்கள் அல்லது குறியீட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். மனித சமுதாயமானது தனது குரல் வெளிப்பாட்டினை வெளிப்படுத்த முன்னரே சித்திர வடிவங்கள் என்பது தோன்றியது என்கின்றனர். வரலாற்று மூலாதாரங்களான கல்வெட்டுக்களிலும் சுவரோவியங்கள், குகையோவியங்கள், மட்பாண்டங்கள் மற்றும் பண்டைய நாணயங்கள், பிரமிட்டுக்கள், இறந்தோரை புதைத்த மத்தாழிகள் என்பவற்றின் ஊடாக இதனை அறிய முடிகின்றது. இவற்றினது இடையறாத தாக்கமும் மனித சமூகத்தின் வளர்ச்சி போக்கும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே காலமாற்றங்களுடன் பயணித்தன எனலாம்.
மனித சமுதாயமானது பல்வேறுபட்ட வகையில் மொழி, இனம், பிரதேசம், பால் என வேறுபட்டுள்ளது. அவை அவற்றுக்கே உரிய தனித்துவமான கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் என்பவற்றைக் கொண்டு விளங்குகின்ற போதிலும் சித்திரம் அல்லது ஒவியம் என்பது இவற்றினைக் கடந்த பொதுவான வெளிப்பாட்டு ஊடகமாக உள்ளது. புரிதலுக்கு இலகுவான வகையிலும் தாக்கவன்மை மிக்கதாகவும் உள்ளது. இரசனை, வண்ணம், வடிவம் என்பவற்றை பயன்படுத்தி தனக்கே உரிய பாணியில் ரசிகர் கூட்டமொன்றை தன்னகத்தே வசப்படுத்தியுள்ளது.
“கதை கூறல்” என்பது மரபுரீதியாக தொன்றுதொட்டு காணப்படும் ஒரு மரபாகும். இதனை அனைவரும் தத்தமது வாழ்க்கையின் படிநிலை வளர்ச்சிகளின் போது சுயமாக அனுபவித்திருப்பார்கள். அதாவது பாட்டியிடம் கதைகேட்டல், குருவிடம் கல்வி கற்றலின் போது கதைகள் கேட்டல் என்பவற்றை குறிப்பிடலாம். உறவுகளின் ஊடான ஊடாட்டங்கள் மூலமாக அவரவர் அனுபவ முதிர்ச்சியின் அடிப்படையிலும் அவர்களின் வாழ்வியல் பின்புலங்களினை அடித்தளமாகக் கொண்டும் சிறுவர்களுக்கான கதைகள் கூறப்பட்டன இப்போதும் ஆங்காங்கே கூறப்படுகின்றன.
இந்த வகையில் அடித்தளத்தில் வெறுமனவே வாய்மொழிமூலமாக கூறப்பட்டு வந்த கதை மரபு, கால மாற்றத்தாலும் அச்சு ஊடகங்களின் வருகையினாலும் பௌதீக உருவம் பெற்றன. அதன் தொடரச்சியாக கதைகளில் வரும் கதாமாந்தர்களுக்கு உருவம் கொடுக்கப்பட்டு அவற்றிற்கான வசனங்கள் கதாமாந்தர்கள் பேசுவது போன்ற பாங்கில் சித்திரக்கதை இதழ்களாக வெளிவந்தன.
இலங்கையினை பொறுத்தவரையில் இலங்கையில் முறையாக அதாவது ஏற்றுக்கொள்ளப்பட்ட இதழியலின் தோற்றம் என்பது இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலப்பகுதியிலேயே நடந்தது. குறிப்பாக 1802 ஆம் ஆண்டு “அரசவர்த்தமானி” அதாவது “The Government Gazette” என்ற ஆங்கில வார இதழினை இலங்கையினுடைய ஆள்பதிநிர்வாகம் வெளியிட்டது. அரச அறிவித்தல்கள், அரசுவிளம்பரங்களைக் கொண்ட ஒன்றாகவே இது விளங்கியது. இதன் பின்னர் 1834 இல் கொழும்பு வர்த்தக குழுவினரால் வெளியிடப்பட்ட “Observer and Commercial Advertiser” என்னும் இதழே இலங்கையில் வெளிவந்த முதலாவது சுதந்திர இதழாகும்.
இவ்வாறாக வளர்ச்சியடைந்த இலங்கையினுடைய இதழியல் வரலாற்றினது போக்கில், சற்று வித்தியாசமானதும் சுவாரசியமானதுமாக “சித்திரக்கதை” இதழ்களினுடைய வரவு அமைந்தது. சித்திரக்கதை இதழ்கள் என்பன கதைகளை எழுத்து வடிவத்தில் மாத்திரம் பேசுவதாக இல்லாமல், பேசும் சித்திரங்களாக உணர்வுடனும் சிந்தனையுடனும் ஒன்றித்தவையாக இச்சித்திரக்கதை இதழ்கள் காணப்பட்டன. இவை சிறுவர் மத்தியில், குறிப்பாக சிறுவர் உளவியலில் பாரிய தாக்க வன்மை மிக்கதாக இருந்தன. இவை அனேகமாக வார இதழ்களாகவும், மாதாந்த இதழ்களாகவும் வெளிவந்தன. ஒர் இதழானது 16 முதல் 40 பக்கங்களை கொண்டதாக பொதுவாகக் காணப்பட்ட போதிலும், கதையினது போக்கு மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பக்கங்களின் எண்ணிக்கை மாறுபட்டு அமைந்தது. பல கதைகள் ஒரு புத்தகத்தில் அடக்ககப் பட்டவையாக அமைந்தன. இன்னும் பல கதைகள் தொடராக நீண்டதாக வெளிவந்தவையாகவும் காணப்பட்டன. இவை சிறுவர்களின் ஆவலைத் தூண்டும் வகையிலும் சிந்தனைத்தூண்டலுக்கு வித்திடுகின்ற வகையிலும் அமைந்தமை சிறப்பு.
கதைகள் சித்திரங்களால் வெளிபடுத்தப்படுவதோடு குறித்த சம்பவம் இடம் பெறுகின்ற காட்சிப்புலமும் சித்திரங்களின் ஊடாக சிறுவர்களால் பெறுகை செய்யப்படுகின்றன. சிறந்த கதையினையும் அழகிய சித்திரங்களையும் கொண்ட கதைகள் சிறுவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவையாக காணப்படுகின்றன. இலங்கையினுடைய சித்திரக்கதை இதழ்களினுடைய வரலாற்றினைப் பார்க்கின்ற பொழுது 1970களின் பிற்பகுதி முதல் 1980களின் முற்பகுதி வரை வெளியான “சித்திரா” சித்திரக்கதைப் பிரசுரம் முக்கியாமானது. இதனைத்தவிர வேறு பிரசுரங்கள் வெளிவந்ததற்கான தகவல்கள் அரிதாகவே காணப்படுகின்றன.
ஆனால் இந்தியா, ஜப்பான், சீனா, ஹொங்கொங் மற்றும் மேலைத்தேய நாடுகளிலும் ஒவ்வொரு வாரமும் சித்திரக்கதை இதழ்கள் வெளிவருகின்றன என்பதுடன் இவற்றுக்காக பெருமளவு வாசகர்களும் உள்ளமை சிறப்பான விடயமாகும். சிறுவர்கள் என்பவர்கள் மனதளவிலும் உடல் அளவிலும் மென்மையானவர்களாகவும் அவர்களுக்கே உரிய குறும்புத்தனமான சுபாவமுடையவர்களாகவும் காணப்படுவார்கள். அவர்கள் எந்த விடயத்தைப் பெறுகை செய்கின்றார்களோ, தமது அன்றாட நடவடிக்கைகளின் போது எவ்வாறான விடயங்களைப் புலன் ரீதியாக உள்வாங்குகிறார்களோ அவற்றினை மனோவியல்பூடாக உள்வாங்கி மனங்களில் பதிய வைத்து கொள்ளும் பண்புடையவர்கள். ஆகவே சித்திரக்கதைகள் என்பவை அவற்றினுடைய கருப்பொருள், விடயப்பொருள், பாத்திரங்கள், பாத்திர குணாம்சங்கள், கதை நடைபெறும் சூழல், பாத்திரவாக்க பண்புகள் என்ற பல விடயங்கள் அவர்களது மனவியல்புகளிலும், நடத்தைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றன என்கிறார்கள் உளவியலாளர்கள்.
தற்காலப்பகுதியில் உலகமயமாதல் மற்றும் நவ நாகரீக, நவீன கலாச்சாரப் பண்பாடு என்பவை சிறுவர் முதல் பெரியோர் வரையான அனைவரது நடத்தைகளிலும் தாக்கம் செலுத்துகின்றன. இந்த வகையில் திரைப்படங்களில் தோன்றும் நடிகர்களை, கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு வீரர்களை, குத்துச்சண்டை வீரர்களைப் பின்பற்றிச் செல்கின்ற மனநிலையில் சிறுவர்கள் காணப்படுகின்றனர். கதாநாயகத்தனமான (Heroism) செயற்பாடுகளிலும் சாகசச் செயல்களிலும் ஈடுபடும் உளவியற் தன்மையில் சிறுவர் சமுகமானது சென்று கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.
இந்த உளவியற் தன்மைகளினூடாக ஆரோக்கியமான, பயன்மிக்க செயல்வாத, சிந்தனைவாத மனோநிலையியும் உளப்பாங்கும் தோற்றுவிக்கப் படுமானால்த்தல் அவை ஏற்றுகொள்ளக்கூடியதும் வரவேற்க்கத்தக்கதாகவும் அமையும். மாறாக தவறான முன்னுதாரணங்களாகவோ வழி நடத்தல்களாகவோ அமையும் பொழுது அவற்றினைக் குறித்து விழிப்புடன் செயற்படுவது அவசியமானது.
சித்திரக்கதைகளாக வெளிவந்தவற்றை குறிப்பாக பஞ்சதந்திரக்கதைகள், நீதிக்கதைகள், புராண இதிகாசக்கதைகள், தத்துவகதைகள், விகடப்பண்புக்கதைகள், திகிலூட்டும் கதைகள், சாகசக்கதைகள் என்ற வகைப்பாட்டுக்குள் அடக்க முடியும். இவை சிறுவர்களுக்கு ஏற்ற வகையிலும் அவர்களது உளவியற் சிந்தனைப்பாங்கை வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தன. சிறுவர்களின் மத்தியில் அன்புணர்வு, விட்டுக்கொடுப்பு, கூட்டுமுயற்சி, நற்பண்புகளை பின்பற்றல், சவால்களையும், சிக்கல்களையும் தைரியமான உளப்பலத்துடன் முகம் கொடுத்தல் போன்ற பண்புகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தன. சிறார்கள் மத்தியில் உளத்துணிவை ஏற்படுத்தி மனவலுவும் சிந்தனை வலுவும் மிக்க எதிர்கால சந்ததியை உருவாக்கும் உயரிய பணியினை சித்திரக்கதைகள் மேற்கொள்கின்றன.
தமிழகத்தினுடைய சிறுவர் சித்திர இலக்கியமாக நீண்டகால வரலாற்றை “அம்புலிமாமா” எனும் பிரசுரம் கொண்டுள்ளது. இது ஈழத்திலும் பிரபலமான சிறுவர் இதழாக வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பிரசுரம் சமூகத்தின் உளவியலில் அதிலும் குறிப்பாக சிறுவர் உளவியலில் முக்கிய பல ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது. இதிற் காணப்பட்ட கதைகளுக்கான ஒவியங்கள் இன்றுவரையில் பிரசித்தி பெற்றவையாக அனைவராலும் பேசப்படுகின்றன. இவற்றை வரைந்த ஒவியர் சங்கர் என்பவர் மிகவும் சிலாகித்து பேசப்படுபவாரகக் காணப்படுகிறார். சிறுவர்களின் உளவியலில் “முயற்சி” என்பதை வலுபடுத்தும் தன்மையினை “விக்கிரமாதித்தனும் வேதாளமும்” என்ற தொடரின் மூலமாக விதைத்தமை முக்கிய விடயமாகும். இந்தக் கதையை மாத்திரமல்லாது இன்னும் பல கதைகளையும் குறிப்பிடலாம்.
இவ்வாறாக சிறுவர் உளவியலில் சித்திரக்கதை இதழ்களின் தாக்கம் வலுவாகக் காணப்படுகின்றது. சிறுவர் உளவியலில் புத்தகங்களினதும் கதையிதழ்களினதும் சித்திரக்கதைகளினதும் வகிபங்கு என்பது பல சாதகமான நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகமயமாதலின் விளைவான தொழல் நுட்பத்தின் இரும்புக்கரத்தில் இருந்து சிறுவர்களை விடுவிக்க வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவித்தல் இன்றியமையாத்து. அதனை முன்னெடுப்பதில் சித்திரக்கதைகள் வலுவான பங்களிப்பை வழங்க முடியும்.
சுந்தரசபாநாயகம் சஞ்சீவன் (தற்காலிக போதனாசிரியர்)
நடன நாடகத்துறை, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்
கிழக்குப்பல்கலைக்கழகம்.
நிமிர்வு ஜூன் 2019 இதழ்
Post a Comment