இளைய தலைமுறைகளுக்கு ஞாபகங்களை கடத்துங்கள்



கனடாவை தளமாக கொண்டியங்கும் இகுருவி ஊடகம் 12.05.2019 அன்று ஒழுங்கு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று அரசியல், சமூக ஆய்வாளர் நிலாந்தன் ஆறறிய உரை வருமாறு,

பத்தாண்டுகளுக்கு முன் இதே காலப்பகுதியில் வன்னி கிழக்கில் ஒரு கருநிலையிலிருந்த அரசு  அதன் இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது.நவீன தமிழர் வரலாற்றில் தோன்றிய ஒரு கருநிலை அரசு ஒரு பெருங்கடலுக்கும் சிறுகடலுக்குமிடையே மூன்று கிராமங்களாக சுருங்கிக் காணப்பட்ட காலகட்டம்.  அந்த வைகாசி மாதம் ஒரு சிற்றரசு ஒரு கிராமமாக சுருங்கிப் போய்விட்டது. ஒரு புறம் வங்கக்கடல். நாங்கள் அதை மலக்கடல் என்று அழைத்தோம். இன்னொரு புறம் சாலைக்கடல் ஏரி. அது ஒரு பிணக்கடலாக மாறிக்கொண்டது. ஒரு மலக்கடலுக்கும் பிணக்கடலுக்குமிடையே ஒடுங்கிய நிலப்பரப்பரப்பில் ஒரு சிறு கிராமமாக அது காணப்பட்டது. அந்நாட்களில் மத்தாளனுக்கு கடைசியாக வந்து போன ஐ.சி.ஆர்.சி யின் தென்னாசிய பிரிவுப்  பொறுப்பாளர் தன்னுடைய பதவிக்காலத்தில் தான் கண்ட மிக மோசமான நரகம் இது என்று கூறினார்.

அந்த நரகத்தில் அப்பொழுது உணவிருக்கவில்லை. உணவு இல்லாதவர்களுக்கு கஞ்சிக்கொட்டில்கள் அமைக்கப்பட்டிருந்தன. கஞ்சிக்கொட்டில்களில் அரிசியை அண்டாவில் போட்டு அவிப்பார்கள். விடுவதற்கு பால் இருக்காது. ஆனந்தபுரம் சண்டையோடு தேங்காய் இருக்கவில்லை. பாலுக்குப்பதிலாக இரண்டு பைக்கற் அங்கர் மாவைப் போடுவார்கள். அப்படி காச்சியதற்குப் பெயர்தான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. அது உண்மையில் பொக்கனையிலே தொடங்கிவிட்டது. அந்தக் கஞ்சியை வாங்குவதற்காகவே காலையில் இருந்தே சனங்கள் வரிசையாக நிற்பார்கள். கஞ்சி வருவதற்கிடையில் செல் வந்து விழும். கஞ்சி வரிசைக்குள்ளும் செல் விழும். சனங்கள் காயப்படுவார்கள். குருதி தெறித்து கஞ்சிக்குள்ளும் விழும். ஆனால் காயப்பட்டவர்களை தூக்கிக்கொண்டு போனபின் வரிசையில் மறுபடியும் கூடி கஞ்சியை வாங்கிக்கொண்டு போவார்கள்.

கஞ்சியைத்தவிர வேறுசில உணவுகளும் இருந்தன. நிவாரணத்திற்கு தரப்பட்ட மாவையும் சீனியையும் கலந்து வாய்ப்பன் செய்வார்கள். அந்த வாய்ப்பன் ஒன்று 100 ரூபாக்கு விற்கப்படும். மூன்று வாயப்பன்கள் ஒரு பூவரசம் இலையில் வைத்து விற்பார்கள். இதைத்தவிர இந்திய நிவாரணத்தில் கிடைத்த முழு துவரம் பருப்பு அதை பொரித்துச் சாப்பிடுவார்கள். அல்லது அதோடு உப்பும் செத்தல் மிளகாயும் சேர்த்து அரைத்து ஒரு வடை செய்வார்கள். அதனை வலைஞர்மட வடை என்று சொல்வோம். சில நேரங்களில் அந்த துவரம் பருப்பை அவித்துக் குடிப்பார்கள். அது வயித்தாலை அடிக்கும். அதை குடித்து இறந்து போன குழந்தைகளும் உண்டு. இவை மூன்றும் அக்காலகட்டத்து சிறப்பு உணவுகள். இதைத்தவிர கறிகளுக்கு பால் இருக்காது. தேங்காய் அனேகமாக கிடைக்காது. பாலுக்கு பதிலாக அரிசி வடித்த கஞ்சியை விட்டு கறி சமைப்பார்கள். புளி இருக்காது. புளிக்குப் பதிலாக புளியம் இலையை அவித்து அரைத்துப் போடுவார்கள். ஒரு பச்சைமிளகாய் சில நேரம் நூறு ரூபாவிற்கு விற்பார்கள். ஒரு கிலோ மீன் அல்லது நண்டு அல்லது கணவாய் சில நேரங்களில் 2000 ரூபாவிற்கு வரும். அதைவிடக் கூடவும் வரும். நாங்கள் வழக்கமாக கோழித்தீவனத்தோடு ஒருவகை சிறு மீனைக் கரைப்போம். அம்மீனை காரல்மீன் என்று சொல்லுவார்கள். அந்தக் காரல்மீனை அங்கே ஒரு கிலோ 2000 ரூபாவிற்கு விற்பார்கள்.

அதுமட்டுமல்ல அக்காலகட்டத்தில் உணவிற்கு மட்டும்தான் பிரச்சனை இருந்தது என்றில்லை. மலங்கழிக்கவும் பிரச்சனை இருந்தது. கழிப்பறைகள் இருக்கவில்லை. அதனால் பெண்கள் குறைவாக சாப்பிடுவார்கள். அல்லது கழிப்பறைகள் இல்லாத நிலையில் தாங்கள் வாழும் கூடாரத்துக்குள் பொலித்தீன் பைகளில் மலத்தைக்கழித்து ஆண்களிடம் வங்கக்கடலில் எறியச்சொல்லி கொடுப்பார்கள். கொஞ்சம் துணிச்சலானவர்கள் இரவு வேளைகளில் மண்வெட்டியோடு கடற்கரைக்கு போவார்கள். கொஞ்சம் புத்திசாலிகள் வேட்டிகளை எடுத்து இரண்டு கரைகளும் மடித்து தைத்தபின் அந்த இரண்டு கரைகளிலும் பனரைப்போல தடியை உட்செலுத்தி கடற்கரையில் அதனை இரண்டு புறமும் வேலிபோல நட்டுவிடுவார்கள். அது அப்படியே மறைப்பாக நிற்கும். அதற்குள் வங்கக்கடலை பார்த்தபடி மலங்கழிப்பார்கள். அந்நாட்களில் வங்கக்கடல்தான் ஒரு பெரும் கழிப்பறையாக இருந்தது. அப்பொழுது அங்கிருந்த உள்ளூர் ஐநா அதிகாரி ஒருவர் அதனை உலகின் நீண்ட கழிப்பறை என்று சொன்னார். அந்தக் கழிப்பறை கிட்டத்தட்ட 6 இலிருந்து 7 கிலோமீற்றர் வரையிலுமாக இருந்தது.

அக்கழிப்பறையில் சனங்கள் கழித்த மலத்தை வங்கக்கடல் அடித்து அடித்து கரைக்கும். ஒரு கட்டத்தில் அந்த மலம் படிந்து படிந்து கடற்கரையில் நிற்கும். அது மஞ்சள் நிறத்தில் சரிகை வேலை போல லேயர் லேயராக கடற்கரையில் அடுக்கு அடுக்காக படிந்திருக்கும். அந்தக்கடலில்தான் மீனை பிடித்துக்கொண்டு  வருவார்கள். அந்நாட்களில் மரணமும் காயமும் தோல்விகளும் அவநம்பிக்கைகளும் இலையான்களும் பெருகிக்கொண்டே இருந்தன. இலையான்கள் மரணத்தின் தூதுவர்களாக எங்கும் பெருகிக் காணப்படும். அவை குழந்தைகளிலும் மொய்க்கும்; பிணங்களிலும் மொய்க்கும்; காயங்களிலும் மொய்க்கும்; சாப்பாட்டிலும் மொய்க்கும். மீனை பிடித்துக்கொண்டுவர அந்த காரல் மீன்களிலும் மொய்க்கும். ஆனால் அந்தக் காரல் மீனுக்கும் விலை இராண்டாயிரம் ரூபாய். ஒரு பைக்கற் அங்கர் மா ஆறாயிரம் ரூபாய்க்கு விற்றார்கள். ஒரு பச்சை மிளகாய் 100 ரூபாய்க்கு விற்றார்கள். ஆனால் ஒரு கொம்பியூட்டர் 500 ரூபாய்க்கு விற்றார்கள். தங்கம் ஒரு பவுண் ஆயிரம் ரூபாய்க்கு விற்றார்கள்.  உயிருக்கு விலையே இல்லை. மிக மலிவு. அப்படி ஒரு நரகத்தில் அன்றைக்கு மக்கள் வாழ்ந்தார்கள். அந்த நரகம் ஒரு கட்டத்தில் சுருங்கிக்கொண்டு போய் அதன் கடைசி வேட்டுக்கள் 18ஆம் திகதி தீர்க்கப்பட்டன. அதோடு அந்த கருநிலை அரசு முடிவிற்கு வந்தது. நவீன தமிழில் தோன்றிய ஒரு வீரயுகம் சோகமாய் முடிந்தது. இது நடந்து பத்தாண்டுகளின் பின் நாங்கள் இப்பொழுதும் மறுபடியும் அதை நினைக்கின்றோம்.

அக்காலகட்டத்தில் புதுவை இரத்தினதுரை தன்னைச் சந்தித்த ஒரு கவிஞரிடம் சொன்னார் “உனக்குத் தெரியுமா ஊரிலை கோழி பிடிக்கின்ற கதை? கோழி பிடிக்க பிடிக்க அது அம்பிடாட்டில் துரத்திக்கொண்டு போவார்கள். ஒரு கட்டத்தில் பதி பதி என்று சொல்ல கோழி தன்பாட்டில் பதுங்கிவிடும். பிறகு அதை அமுக்கி பிடிப்பார்கள். எங்களையும் அவர்கள் பதி பதி என்று அப்படியே ஒரு மூலைக்குள்ளே தள்ளிக்கொண்டு வருகிறார்கள்” என்று புதுவை இரத்தினதுரை சொன்னார். அப்படியே வன்னி கிழக்குக்குள் கோழியை அமுக்குவது போல பதி பதி என்று கொண்டு வந்து அப்படியே அந்த சிற்றரசை தோற்கடித்தார்கள். எப்படித் தோற்கடித்தார்கள்? ஒரு ஆயுதப்போராட்டத்தை  தோற்கடிப்பதற்கு அவர்கள் வகை தொகையின்றி அப்போராட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மக்களை கொல்வது என்று முடிவெடுத்தார்கள். ஒரு ஆயுதப்போராட்டதை தோற்கடிப்பதென்றால் அப்படி ஒரு இன அழிப்பைச் செய்தால் தான் முடியும் என்ற இந்த நூற்றாண்டில் முதலாவது முன் உதாரணம் ஒன்றை அவர்கள் அங்கே அரங்கேற்றினார்கள். நவீன தமிழில் தோன்றிய ஒரு வீரயுகம் இப்படித்தான் முடிவிற்கு வந்தது. கடலில் மீனைப் பிடிப்பதற்காக கடலைப் பிழியலாம் என்று அவர்கள் முன் உதாரணத்தை செய்து காட்டினார்கள்.

ஈழத்தமிழர்களை  பொறுத்தவரையில் அப்படி ஒரு நிகழ்ச்சி அங்கே முள்ளிவாய்க்காலில் மட்டும்தான் நடந்தது என்று இல்லை. சில மாதங்களிற்கு முன் கிழக்கில் வாகரையில் நடந்துவிட்டது. இந்த நாடகத்தின் ஒத்திகை வாகரையில் செய்யப்பட்டது. அது போதிய ஊடகக் கவனத்தை பெறவில்லை. வாகரையிலும் இப்படித்தான் பிதுக்கி எடுத்தார்கள்.  மீனைப் பிடிப்பதற்காக கடலைப் பிழிந்து இரத்தமாக்கினார்கள். அங்கே பிதுக்கி எடுத்தபொழுது தப்பி வந்த மக்கள் முடிவில் வன்னிக்கு வந்தார்கள். இறுதியில் வன்னி கிழக்கில் கடலை பிழிந்து மீனை பிடிப்பதற்காக ஒரு இன அழிப்பைச் செய்தார்கள். ஒரு ஆயுதப்போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர ஒரு இன அழிப்பைச் செய்யலாம் என்ற துணிச்சலை அவர்களுக்கு உலகம் கொடுத்தது. உலகின் சக்தி மிக்க நாடுகள் அனைத்தும் அந்த இடத்தில் அந்த சிறிய மக்கள் கூட்டத்திற்கு பெருமளவிற்கு எதிராக காணப்பட்டனர். முழு உலகமுமே சுற்றி நின்று அந்த மக்களை தோற்கடித்தது. புதுவைஇரத்தினதுரை சொன்னது போல கோழியை அமுக்குவது போல பதி பதி என்று கொண்டு வந்து கடைசியாக அமுக்கி பிடித்தார்கள்.

பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இந்த பத்தாண்டுகளின் பின்னரும் கோழியின் நிலை என்ன? கோழி இப்பவும் கறிச்சட்டிக்குள் தான் இருக்கிறது. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன் கனடாவிற்கு வரும் பொழுதும் கோழி கறிச்சட்டிக்குள் தான் இருந்தது. இப்பொழுதும் கோழி கறிச்சட்டிக்குள் தான் இருக்கிறது. குறிப்பாக ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பிறகு கோழி அடுப்புக்குள்ளும் விழுந்துவிட்டது. ஏன் எங்களுடைய அரசியல் இப்படி கறிச்சட்டிக்கும் அடுப்புக்கும் இடையில் போகிறது. மாறி மாறி அடுப்புக்குள் இருந்து கறிச்சட்டிக்கும் கறிச்சட்டிக்குள் இருந்து அடுப்புக்கும் என்று போகிறது.  பொதுவாக அறிவியல் பரப்பில் பத்து ஆண்டுகள் என்று வரும்பொழுது அதை ஒரு Graduation க்கான காலப்பகுதியாக கணிப்பார்கள். பத்து ஆண்டுகள் Technical Officer ஆக  இருந்தால் அதன் பின்னர் பொறியியலாளருக்கான முதிர்ச்சி வந்துவிடும். முந்தி கதைப்போம், பத்தாண்டுகள் ஒரு அப்போதிக்கரியாக  இருந்தால் அவர் ஒரு முழு டொக்டராகிவிடுவார் என்று.

பத்தாண்டுகள் என்பது ஒரு  Graduation இற்குஉரிய காலம். என்னுடைய நண்பர் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஒரு புலமையாளர். அவர் சொல்வார், ஒரு இனத்தில் பத்தாண்டுகள் என்பது பெரிய காலகட்டம் இல்லை என்று. ஆனால் பத்து ஆண்டுகள் என்பது  Graduationஇற்குஉரிய காலம் என்று எடுத்துக்கொண்டால் கடந்த பத்தாண்டுகளில் நாங்கள் என்ன பட்டத்தை பெற்றிருக்கிறோம்? ஒன்றையும் கற்கவில்லை என்ற அனுபவத்தைத் தான் பெற்றிருக்கிறோம். இதனால் தான் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழும் அரசியலுக்குள் தான் நாங்கள் தொடர்ந்து இருக்கின்றோம்.

ஏன் பத்தாண்டுகளாக நாங்கள் எதையுமே கற்காமல் போனோம். நாங்கள் ஒரு செழிப்பான மக்கள். எங்களுடைய அரசியலில் நாங்கள் சாதி பார்த்து சமயம் பார்த்து கல்வித்தராதரம் பார்த்து தலைவர்களை தெரிந்து எடுத்தவர்கள் இல்லை. நாங்கள் சீதனம் கேட்டு பெண்களை கொளுத்தும் மக்களும் அல்ல. சாதி வேறுபாடு பார்த்து பெருமெடுப்பில் கௌரவக் கொலைகளை செய்யும் மக்களும் அல்ல. எங்களுக்கென்று ஒரு செழிப்பான அரசியல் பாரம்பரியம் இருந்தது. சிங்கள மக்கள் மத்தியில் இருந்து புரட்டஸ்லாந்து கிறிஸ்த அரசியல்வாதிகள் டொனமூர் சீர்திருத்தத்தோடு டொனமூர் பௌத்தர்களாக மாறினார்கள். சிங்கள வாக்காளர்களை கவருவதற்காக மதம் மாறினார்கள். தமிழில் அப்படி நடந்ததில்லை. தமிழில் உருவான புரட்டஸ்லாந்து கிறிஸ்தவர்கள் நவீன யாழ்ப்பாணத்தை உருவாக்கினார்கள். எங்களுக்குள் ஒரு செழிப்பான பாரம்பரியம் இருந்தது. இந்துக்களை அதிகமாக கொண்ட தமிழ் சமூகம் புரட்டஸ்லாந்து கிறிஸ்தவரான ஹண்டி பேரின்பநாயகத்தை தனது இளைஞர் அமைப்பின் தலைவராக ஏற்றுக்கொண்டது. அதே புரட்டஸ்தாந்து  அமைப்புக்குள் வந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை ஈழத்துக் காந்தி, தந்தை என்றெல்லாம் அழைத்தோம். நாங்கள் தலைவர்களைத் தெரிவு செய்யும் போது சாதி பார்க்கவில்லை, மதம் பார்க்கவில்லை, மாவட்டம் பார்க்கவில்லை, பிராந்தியம் பார்க்கவில்லை, கல்வித்தகமை பார்க்கவில்லை. அவர் இந்த சமூகத்திற்காக இழக்கத் தயாராக இருக்கிறாரா என்றுதான் பார்த்தோம். இந்த சமூகத்திற்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்று தான் பார்த்தோம். இப்படியான செழிப்பான பாரம்பரியத்திற்குள் இருந்த மக்கள் நாங்கள்.

ஆனால் ஒரு பெருந்தோல்விக்கும் ஒரு பேரழிவுக்கும் ஒரு கூட்டுத்துக்கத்திற்கும் கூட்டுக்காயங்களுக்கும் பின்னால் கடந்த பத்தாண்டுகளாக நாங்கள் கற்றுக்கொண்டது என்ன? ஏன் கற்கத் தவறினோம். ஒரு காலம் எங்களிடம் மகத்தான நிறுவன உருவாக்கிகள் இருந்தார்கள். அவர்கள் நிறுவனங்களை உருவாக்கினார்கள். புரட்டஸ்லாந்து கிறிஸ்தவத்தின் வருகையிலிருந்து தொடங்கி எங்களிடம் பல நிறுவன உருவாக்கிகள் வந்தார்கள். அவர்கள் கிறிஸ்தவ பின்னணிக்குள்ளும் இருந்து வந்தார்கள். இந்துப் பின்னணிக்குள்ளும் இருந்து வந்தார்கள். எந்த ஒரு சமூகம் தன்னிடத்தில் நிறுவன உருவாக்கிகளை கொண்டிருக்கிறதோ அந்த சமூகத்தின் அடித்தளம் மிகவும் பலமாக இருக்கும்.

யாழ்ப்பாண நூலகத்தை கட்டியெழுப்பியது ஒரு தனிமனித ஆளுமை. அதுதான் பிறகு பொதுச்சொத்தாக மாறியது. அப்படித்தான் எங்களிடம் நாவலர் இருந்திருக்கிறார். வெளிநாடுகளிலிருந்து வந்து கருணாலாயத்தைக் கட்டியெழுப்பிய வெள்ளைக்காரர்கள் இருந்திருக்கிறார்கள். பிறகு இந்து போர்ட்  இராஜரத்தினம். அதற்குப்பிறகு தங்கம்மாஅப்பாக்குட்டி, மில்க்வைற் ஸ்தாபகர் கனகராசா,எங்கள் மத்தியிலிருக்கும் ஆறுதிருமுருகன் இப்படியாக எங்களிடம் காலத்திற்குக் காலம் நிறுவன உருவாக்கிகள் எழுச்சி பெற்றிருக்கிறார்கள்.

இந்த நிறுவன உருவாக்கிகள் யாரிலும் தங்கியிருக்காமல் சொந்தமாக நிறுவனங்களைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். மில்க்வைற் கனகராசா உள்ளூர் மரங்களை நடுங்கள் என்று சொன்னார். வேப்பங்கொட்டை சேர்த்துக்கொண்டு வந்து கொடுத்தவர்களுக்கு பரிசு கொடுத்தார். எல்லாப் பாடசாலைகளிலும் சுற்றுச் சூழல் தொடர்பாகவும், அறநெறிகள் தொடர்பாகவும் துண்டுப்பிரசுரங்களை அனுப்பி மாணவர்கள் மத்தியில் அவற்றை பதியச் செய்தார். எங்கள் மத்தியில் சூழல் தொடர்பாக விழிப்புக்கள் ஏற்படுவதற்கு முன்னரே ஒரு சூழலியல்வாதியாக மில்க்வைற் கனகராசா இருந்தார். பால்நிலை சமத்துவம் பற்றிய விழிப்பு வர முன்னரே தங்கம்மாஅப்பாக்குட்டி பொம்பிளைகள் சைக்கிள் ஓடக்கூடாது என்று நினைத்த ஒரு சமூகத்திற்குள் தோன்றி பிரசங்கியாக மாறினார்.

இன்றும் நிறுவன உருவாக்கிகள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிறுவன உருவாக்கிகள் தொடங்கிய ஒரு சமூகத்தில் பின்னர் ஒரு போராட்டம் வந்தது. பிறகு ஒரு அரசு உருவாக்கி (state builder)வந்தார். அவர் ஒரு சமாந்தர அரசைக் (defacto state) கட்டியெழுப்பினார். அது தோற்கடிக்கப்பட்ட காலகட்டம்தான் இது. அது தோற்கடிக்கப்பட்ட பத்தாண்டுகளின் பின் நாங்கள் கூடியிருக்கிறோம்.  எனவே நாங்கள் இந்த பத்தாண்டுகளில் எதையும் சாதிக்கவில்லை என்று சொன்னால் அல்லது நாங்கள் திரும்ப அடுப்புக்குள் இருந்து சட்டிக்கோ சட்டிக்குலிருந்து அடுப்புக்கோ போகின்றோம் என்று சொன்னால் எங்களிடம் போதியளவு நிறுவன உருவாக்கிகள் வரவில்லை என்றுதான் அர்த்தம்.

அரசியலை விடுவோம். அரசியல்தலைமை ஒழுங்கில்லை, அரசியல் தலைமைக்கு புலம்பெயர் தமிழர்களையும் தாயகத்தையும் இணைக்கத் தெரியவில்லை.தமிழகத்தையும் தாயகத்தையும் இணைக்கத் தெரியவில்லை.புலம்பெயர் சமூகம், தமிழகம், தாயகம் ஆகிய மூன்றையும் ஒன்றிணைக்க அதனிடம் ஒரு நிகழ்ச்சிநிரல் இல்லை. அவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் நிறுவன உருவாக்கிகள் அவரவ‍ர் தன்னிச்சையாக எழுவார்களாக இருந்தால் நாங்கள் சமூகத்தை மீளக்கட்டியெழுப்பலாம். எங்களுக்கு இப்பொழுது தேவை நிறுவன உருவாக்கிகளே.

துரதிஷ்டவசமாக தாயகத்தில் கொஞ்சம் செல்வாக்கோடு இருப்பவர்கள் எல்லோரும் அரசியல்வாதிகளாக மாற நினைக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசியல் என்பது தியாகம் செய்யும் துறையாக இருந்தது.2009 ஆம் ஆண்டிற்கு பின்பு அரசியல் என்பது பிழைக்கும் துறையாக மாறிவிட்டது. பிரபல்யம் அடைவதற்கும் சொத்தைப் பெருக்குவதற்குமான ஒரு துறையாக மாறிவருகிறது. 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் அரசியல் என்பது றிஸ்க் எடுக்கும் துறையாக இருந்தது. அதற்கு பின்பு அரசியல் என்பது ஒரு பிழைக்கும் துறையாக மாறிவிட்டது. எனவே எங்களில் பிரபல்யமானவர்கள் சக்திமிக்கவர்கள் எல்லோரும் அரசியலுக்குள் போக எத்தனிக்கிறார்கள். ஆனால் எல்லோரும் அரசியலுக்குள் போய் ஒன்றும் ஆகப் போவதில்லை. கடந்த பத்தாண்டுகள் அதைத்தான் நிரூபித்திருக்கிறது. 

எனவே அவரவர் துறையின் ஒழுக்கத்தின்படி தன்தன் துறையில் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்யட்டும். இந்து சமயத்தில் ஒரு கோட்பாடு உண்டு. சுதர்மா கோட்பாடு. நான் எப்பொழுதும் சமூக சேவை அரசியல் என்று வருகின்ற பொழுது இந்த சுதர்மா கோட்பாட்டையே தாயகத்திலும் சொல்வேன். இங்கேயும் சொல்வேன். சுதர்மா கோட்பாடு என்ன சொல்கிறதென்றால் உன்னுடைய தியானம் தனியறைக்குள் இருந்து கடவுளை பிரார்த்திப்பது அல்ல. உன்னுடைய சமூகக் கடமை எதுவோ அதனை முழு மனதோடு செய்.  உன் சமூகத்தில் உன் துறைசார் ஒழுக்கம் எதுவோ அதில் முழு விசுவாசத்தோடு நில். 

அவரவர் தன் துறைக்குரிய ஒழுக்கத்தில் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதைத்தான் சுதர்மா கோட்பாடு சொல்லுகிறது. அதன்படி ஒரு ஆசியர் ஆசியராக என்ன செய்யமுடியுமோ அதற்குரிய கல்விச் செயற்பாட்டில் அவர் இறங்கட்டும். மருத்துவர்கள் மருத்துவச் செயற்பாட்டில் இறங்கட்டும். பொறியலாளர்கள் கட்டுமான செயற்பாட்டில் இறங்கட்டும்.ஒரு தொழிலை ஒரு தொண்டாக செய். ஒரு தொழிலை ஒரு தவமாக செய். உன் தொழிலை தியானமாக செய். எது ஒன்றைச் செய்யும் பொழுது உனக்கு சக்தி பெருகுகிறதோ, எது ஒன்றைச் செய்யும் பொழுது உனக்கு புதிதாக நண்பர்கள் ஓடி வருகிறார்களோ, எதுவொன்றை செய்யும் பொழுது ஊனின்றி உறக்கமின்றி அதை உன்னால் செய்யக்கூடியதாக இருக்கிறதோ, செய்யச் செய்ய சக்தி பெருகுகிறதோ அதுதான் உனக்குரிய சுதர்மம் என்று கூறப்படுகிறது. எனவே அவரவர் தம் துறைக்குரிய இடங்களில் தங்களுக்குரிய நிறுவனங்களை கட்டியெழுப்பலாம்.

நான் உங்களை எங்களிலிருந்து வேறாகக் காணவில்லை. அதேநேரம் நீங்கள் வழங்குனர்கள் (Donors)ஆகவும் நாங்கள் பெறுனர்கள் (Beneficiaries)ஆகவும் இருக்கும் அந்தப் பொறிமுறையையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் கொடையாளிகளாகவும் நாங்கள் தானம் பெறுபவர்களாகவும் இருக்கும் அந்த அமைப்பு பிழை என்பதே என்னுடைய வாதம். எங்களுக்குத் தேவை நிறுவன உருவாக்கிகளேதான். உங்களுக்குள் இருக்கும்  துறைசார் நிபுணர்கள் அந்தந்த துறைசார்ந்து முதலில் இங்கேயே நிறுவனங்களைக் கட்டியெழுப்பட்டும். பிறகு அங்கே படரட்டும். இங்கேயிருந்து கொண்டு அங்கே பைனாக்குழலால் பார்க்க வேண்டாம். மாறாக இந்த சமூத்துக்குள்ளேயே நாங்கள் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவோம். இதற்கு பிறகு தாயகத்துக்குஅவற்றைக் கொண்டு வருவோம். ஒருகாலகட்டத்தில் கிறிஸ்தவ மிஷநெறிகள் எங்களுடைய சமூகத்திற்கு வந்து வேலை செய்தார்கள். அவர்கள் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எங்களுக்கு புறத்தியானவர்கள்.

வெள்ளைக்காரர்கள்.கிறிஸ்தவமத ஒழுக்கத்திற்குள் இருந்து கொண்டு சமூகத்தொண்டு செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டு கீழைநாடுகளுக்கு வந்தார்கள். அவர்கள் ‘மதம் பரப்பினார்கள், பைபிளையும் பீரங்கிகளையும் கொண்டுவந்தார்கள்’ என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால் தனிப்பட்ட சில ஆளுமைகள் கீழைநாடுகளுக்கு வந்தார்கள். வந்து ஆங்காங்கே நிறுவனங்களையும் அமைப்புக்களையும் கட்டியெழுப்பினார்கள். அந்த முன்னோடி மிஷனரிகள்போட்ட அத்திவாரத்தின் மீது தான் எங்கள் பாட்டன்களும் பூட்டிகளும் எழுந்து வந்தார்கள். நவீன ஈழத்தமிழ் சமூகம் எனப்படுவது அந்த மிஷனறிகள் போட்ட அடித்தளத்தின் மீது தான் எழுச்சி பெற்றது.

புரட்டஸ்தாந்து நிறுவனங்கள் கத்தோலிக்க நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கூடங்களைக் கட்டிக்கொண்டு வந்தார்கள். ஒரு கட்டத்தில் நாவலரும் இந்து போர்ட் இராஜரத்தினமும் இதற்கு எதிராக நாங்களும் பள்ளிகூடத்தை கட்டுவோம் என்று புறப்பட்டார்கள். அதில் ஒரு மதப்போட்டி இருந்தது. எனவே அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் எங்கெல்லாம் அமெரிக்க மிஷன் பள்ளிக்கூடம் அல்லர் றோமன் கத்தோலிக்க பள்ளிக்கூடம் இருந்ததோ அதற்கு அங்காலை ஒரு நாவுக்கரசரை ஒரு மங்கயற்கரசியை ஒரு செங்குந்தாவை கட்டினார்கள். கட்ட கட்ட இந்த பள்ளிக்கூடம் கட்டும் போட்டியில் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தின் கல்விதரம் உயரத்தொடங்கியது. ரோட்டின் இரண்டு பக்கமும் பள்ளிக்கூடம் இருக்கும் பிள்ளை ரோட்டிலையிருந்து போளை அடிச்சுக்கொண்டிருந்தால் தாய் தகப்பன் என்ன செய்யும்? ஓடு, அங்கே போய் படி அல்லது இங்கே போய் படி என்று கலைக்கும்.

இப்படி இருக்கும் போது, ஒரு கட்டத்தில் கிறிஸ்தவ அமைப்புக்குள்ளேயே போட்டி வந்தது. எனவே குறிப்பிட்ட திருச்சபைக்கு வழங்கும் நிதியை நிறுத்தச்சொல்லி அவை மேலிடத்திற்கு முறைப்பாடு செய்தன.  அதன் விளைவாக அன்டர்சன் என்ற ஒரு ஓய்வு பெற்ற மிஷன் அதைப்பற்றி ஆராய யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த அன்டர்சன் ரிப்போட்டில் ஒரு சுவாரிசயமான தகவல் இருந்தது. 1800ஆம் ஆண்டின் நடுப்பகுதிகளில் இலங்கைத் தீவில் இருந்த மொத்த பள்ளிக்கூடங்களில் 49%  ஆன பள்ளிக்கூடங்கள் யாழ்பபாணத்தில் இருந்தன. இலங்கையிலிருந்த முழுப்பள்ளிக்கூடங்களிலுமே அரைவாசி யாழப்பாணத்தில் இருந்தது. எப்படி வந்தது? திருச்சபைகளுக்கும் நாவலருக்கும் இந்துபோட்டுக்கும் இடையிலான போட்டிப் பள்ளிக்கூடம் கட்டும் அந்த பொறிமுறையின் விளைவாக உருவாகியது. அப்படி உருவானதுதான் நவீன யாழ்ப்பாணம்.

எனவே எங்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது நிறுவன உருவாக்கிகள். எப்படி முன்னோடி மிஷனரிகள மேலைநாடுகளிலிருந்து அங்கு வந்தார்களோ அப்படி நீங்களும் அங்கு வாருங்கள். உங்களுடைய இரண்டாம் தலைமுறையை அனுப்புங்கள். முந்தி வந்தது வெள்ளைக்காரர். எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் இரத்த சம்பந்தம் இருக்கவில்லை. ஆனால் நீங்கள் எங்களுடைய சரீரமாக இருக்கிறீர்கள். நீங்கள் எங்களுடைய இரத்தமாக இருக்கிறீர்கள். எனவே நீங்கள் வாருங்கள். நீங்கள் வந்து எங்களுடைய இடங்களில் நிறுவனங்களை கட்டியெழுப்புங்கள். எங்களிடம் ஒரு காலகட்டத்தில் இயக்கங்கள் வருவதற்கு முன்னரே ரீ.ஆர்.ஆர்.ஓ எனப்படும் ஒரு அரசசார்பற்ற தொண்டு நிறுவனம் இருந்தது. நாங்கள் இனிமேல் அப்படிப்பட்ட தொண்டு நிறுவனங்களை உருவாக்கலாம். தமிழ் வங்கிகளை உருவாக்கலாம். தமிழ் நிதிநிறுவனங்களை உருவாக்கலாம். தமிழ் திட்டமிடல் அமைப்புக்களை உருவாக்கலாம்.

நீங்கள் தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு தானம் வழங்கிகளாக இருக்க வேண்டாம். முதலீட்டாளர்களாக மாறுங்கள். முதலீடு செய்யுங்கள். அதற்கு ஏற்ப நிறுவனங்களை உருவாக்குங்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக மாகாணசபைக்கு ஊடாகவும் வேறு தெரிவு செய்யபட்ட தமிழ் தலைமைகளுக்கு ஊடாகவும் அப்படிப்பட்ட ஒரு பொறிமுறையை உருவாக்க முடியாமல் போய்விட்டது. அதுதான் நாங்கள் திரும்ப அடுப்புக்குள் இருந்து சட்டிக்குள் விழ அதுவும் ஒரு காரணம். எனவே நீங்கள் நிறுவனங்களை உருவாக்க முன் வரவேண்டும்.

உங்களிடம் முதலாம் தலைமுறை புலம்பெயரியை பொறுத்தவரை நாங்களும் அவர்களும் ஒரே அலைவரிசையில் தான் நிற்கிறோம். உங்களில் பலர் ஒரு காலகட்டத்திற்கு பின் அங்கே வரவேண்டும் ஆச்சியின் வீட்டில் இருக்க வேண்டும். அப்புவின் வீட்டில் இருக்க வேண்டும் கடைசிக்காலம் அங்கே தான் கழிய வேண்டும் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பின்னர் கொஞ்சம் காட்சி மாற்றம் உண்டு.  என்றாலும் அங்கே வரவேண்டும், இறுதிக்காலத்தை அங்கே கழிக்க வேண்டும் என்ற தவிப்பு முதலாம் தலைமுறையிடம் உண்டு. இரண்டாம் தலைமுறையிடம் இருக்கப்போவதில்லை.

மூன்றாம் தலைமுறையிடம் இன்னும் குறைந்து போகும். தலைமுறை தோறும் அது குறைந்து கொண்டே போகும். முதலாவது தலைமுறையிடம் விட்டுப்பிரிந்த தாயைப்பற்றிய ஏக்கம் இருக்கும். நிலத்தைப்பற்றிய ஞாபகம் இருக்கும். மொழி இருக்கு பண்பாடு இருக்கிறது. ஆனால் நிலம் மட்டும் இல்லை. இரண்டாம் தலைமுறையிடம் நிலம் பற்றிய ஞாபகம் இல்லை. மொழி, பண்பாடு அரைக்கரைவாசி இல்லை. மூன்றாம் தலைமுறையிடம் அதுவும் குறைந்து கொண்டே போகும். ஆனாலும் ஒரு சந்தோசம் என்னவென்றால் நான் ஐரோப்பா முழுக்க சென்று கண்டு பிடித்தது எங்களுடைய மூன்றாம் தலைமுறையும் உறைப்பு சாப்பிடுகிறது. இதை நான் சொல்ல ஒரு நண்பன் கேட்டான் இதை நான் மிளகாய்ப்பொடி தேசியவாதம் (சில்லிப்பவுடர் நஷனலிசம்) என்று அழைக்கலாமா என்று.அவன் அதைக் கேட்ட காலம் பாராளுமன்றத்தில் ஆட்சிக்குழப்பம் வந்து போன ஒக்டோபர் மாதம். சிங்கள கட்சிகள் ஆளுக்காள் மிளகாய்த் தூளை விசுக்கின காலம். நான் சொன்னேன் அங்கே சிங்கள லீடர்ஸ் மிளகாய்த்தூளை விசுக்கிறாங்கள்.நாங்கள் குறைந்த பட்சம் மிளகாய்த்தூளிலாவது ஒரு தலைமுறையை தொடர்ந்து பேணுகின்றோம் தானே என்று.

உண்மை. உங்களுடைய வீடுகளில் தூளிருக்கிறது. அது ஒரு இனத்தின் உயிரணுவைக் (DNA) கடத்துகிறது. இரண்டாம் தலைமுறையும் தூள் சாப்பிடுகிறது. மூன்றாம் தலைமுறையும் தூள் சாப்பிடுகிறது. அதற்குள் அந்த வேரின் தொடர்ச்சி இருக்கிறது. இது போல ஞாபங்களை கடத்தும் பொறிமுறைகளை நாங்கள் கண்டு பிடிக்க வேண்டும். 

முதலாம் தலைமுறை ஓய்வு காலத்தை கழிக்க அங்கே வரும். இரண்டாம் தலைமுறைக்கு அப்படி வரவேண்டிய அவசியம் இல்லை. மூன்றாம் தலைமுறைக்கு விளங்காது. அதற்கு மொழியே இல்லை. அது மேலைத்தேயபண்பாட்டோடு பெருமளவிற்கு கரைந்துவிட்டது. அந்தத் தலைமுறையை தாயகத்துக்குக் கொண்டு வந்து என்கேஜ் செய்வதென்றால் என்ன செய்யலாம்? இதற்கென நிறுவன பொறிமுறை இருக்கிறது. எப்படி முன்னோடி மிஷனரிகள் அங்கே வந்து, தொண்டு நிறுவனங்களை உருவாக்கி, நவீன யாழ்ப்பாணத்தை, நவீன ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்குவதற்கு பங்களித்தார்களோ அப்படி உங்களுடைய இரண்டாம் மூன்றாம் தலைமுறையை உருவாக்குங்கள். அவர்களை அங்கே வரச்செய்யுங்கள். அதற்கேற்ற பொறிமுறையைக் கண்டு பிடியுங்கள்.

அரசியல்வாதிகளைப்பற்றி நீங்கள் யோசித்து அரசியல்வாதிகள் செய்வார்கள் என்று காத்திருந்து அல்லது அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டிருந்து காலத்தைக் கடத்த வேண்டாம். மாறாக சுதர்மா கோட்பாட்டின் படி உங்களுக்குரிய ஒழுக்கத்தில் உங்களுக்குரிய தொழில் சார் ஒழுக்கத்தில் உங்களால் இயன்றதைச் செய்யுங்கள்.  அப்படிச் செய்வதன் மூலம்தான் நீங்கள் இந்த தலைமுறையின் ஞாபகங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு வரலாம். தாயகத்துடனான உறவைப் பேணலாம். இப்பொழுது எங்களிடம் இருக்கும் பொறி முறை பெருமளவிற்கு போதாது. நீங்கள் தானம் வழங்குகின்றவர்களாயும் நாங்கள் தானம் பெறுபவராகவும் இருப்பது பிழை.

எனது நண்பனான கிழக்கு பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஒரு புலமையாளர் கேட்டார் உன்ரை சகோதரம் உனக்கு காசு அனுப்புது ஆனால் உன்ரை சகோதரத்தின் பிள்ளை உன்ர பிள்ளைக்கு காசு அனுப்புமா? உண்மை. காசு அனுப்பவேண்டாம் அறிவைப் பகிருங்கள். முன்னோடி மிஷனரிகள் வந்தமாதிரி அங்கே வாருங்கள். வந்து கொஞ்சக்காலம் நின்று வேலை செய்யுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் தான் சமூகத்தைக் கட்டியெழுப்பலாம்.

நாங்கள் ஒரு அரசற்ற தரப்பு. அதனாலேயே எங்களுக்கு அனைத்துலக அரங்கில் வரையறைகள் உண்டு. ஆனால் அரசற்று இருப்பதனால் நாங்கள் தேசமாக இருக்க முடியாது என்றில்லை. ஒரு தேசமாக இருப்பது என்பது அரசறிவியலை பொறுத்தவரை ஒரு பெரும் மக்கள் திரளாக இருப்பதுதான். தேசம் என்றால் ஒரு பெரிய மக்கள் திரள். ஒரு தேசமாக இருப்பது என்பது ஒரு திரளாக இருப்பதுதான். எல்லாத் தேசங்களும் அரசுடையவை அல்ல. இன்று அரசற்ற தேசங்கள் பல உண்டு.

ஈழத்தமிழர்களிடம் ஒரு காலகட்டத்தில் அரசு இருந்தது. கருநிலை அரசு இருந்து அது தோற்கடிக்கப்பட்ட பத்தாவது ஆண்டில்தான் நாங்கள் இப்பொழுது கூடி இருக்கின்றோம். எனவே அரசு வரும் போகும். ஆனால் நாங்கள் ஒரு தேசமாக சிந்திக்கலாம். ஒரு தேசமாக திரண்டிருக்கலாம். ஒரு தேசமாக திரள்வது என்பது எப்படி என்றால் நீங்கள் இங்கே உங்கள் துறை சார்ந்த நிறுவனங்களைக் கட்டி எழுப்புங்கள். அதை அங்கே படரச் செய்யுங்கள்.

யூதர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்களுடைய Passover பண்டிகையை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போம். எகிப்திடம் அடிமைப்பட்டிருந்த யூதர்கள் அதிலிருந்து விடுதலைபெற்ற பொழுது கடவுளால் வழிகாட்டப்பட்ட தலைவர்கள் அவர்களை திடீரென்று இடப்பெயர்வுக்கு தயார்ப்படுத்தினார்கள்.அது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு என்பதனால் உணவைப் புளிக்க வைக்கும் வசதி கிடைக்கவில்லை.அந்த இடப்பெயர்வு நாளை யூதர்கள் நினைவு கூரும் Passover பண்டிகையின் போது புளிக்க வைக்காத அப்பத்தையும் ரசத்துக்கீரையையும் இறைச்சியையும் சிறப்பு உணவாக‍ உண்பார்கள். பாசோவரை நினைவு கூறும் பொழுது குடும்பத்தினர் அந்த இடப்பெயர்வை நினைவு கூர்ந்து ஒரு உணவைத் தயாரிப்பார்கள். அந்த உணவை அந்த நாளில் அந்தக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் குடும்பத்தின் மிக இளைய உறுப்பினருக்கு வழங்கி ஏன் நாங்கள் இன்று இந்த உணவை அருந்துகிறோம் என விளக்கம் கொடுப்பார். நாங்கள் ஒரு காலம் அடிமைகளாக இருந்தோம். பிறகு அதிலிருந்து விடுவிக்கப்பட்டோம். அந்த நினைவை கடத்தத்தான் இந்த உணவு என்று அவர் அந்த வரலாற்றை எடுத்துக்கூறுவார்.

நாங்களும் மே மாதத்தை அவ்வாறு நினைவு கூரலாம். மே மாதத்தில் ஏதோ ஒரு நாளில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வீடுகளில் காய்ச்சலாம். அந்தக் கஞ்சியை உங்கள் இளைய தலைமுறைக்கு கொடுத்து அதற்கான காரணத்தையும் விளக்கலாம். அந்தக் கஞ்சிகளை அவர்களுக்கு கொடுக்கின்ற பொழுது அது அங்கே அந்த மக்கள் குடித்த கஞ்சியைவிடவும் சுவையானதாகத் தான் இருக்கும். நீங்களும் தேங்காய் பாலில்லாமல் காய்ச்சிக் குடிக்கலாம். அந்தக் கஞ்சியை கொடுத்துவிட்டு உங்கள் குழந்தைகளிடம் சொல்லுங்கள் இந்த கஞ்சியை அருந்துங்கள் இது முன்னோர்கள் பட்ட துயரத்தின் சுவையை உனக்கு காட்டும். இந்த கஞ்சியை அருந்துங்கள். பெருங்கடலுக்கும் சிறுகடலுக்குமிடையில் இருந்த நரகத்தில் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்தார்கள் என்பதை  உணர்த்தும். இந்தக் கஞ்சியை நீ அருந்து; நாங்கள் இனிமேலும் இரத்தம் சிந்தக்கூடாது என்பதை அது உனக்கு உணர்த்தும். இந்தக் கஞ்சியை நீ அருந்து; நாங்கள் இனிமேலும் தோற்கக்கூடாது என்பதனை அது உனக்கு உணர்த்தும். இந்தக் கஞ்சியை நீ அருந்து; தமிழ் கூட்டுக்காயங்களிலிருந்தும் கூட்டு மனவடுக்களிலிருந்தும் ஒரு புதிய தமிழ் ஜனநாயகம் ஊற்றெடுக்க வேண்டியதன் அவசியத்தை அது உனக்கு உணர்த்தும்.இவ்வாறு கூறி அந்தக் கஞ்சியை அவர்களுக்கு அருந்த கொடுக்கலாம்.

உங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கும் மிளகாய்த்தூள் மூலம் எவ்வாறு ஒரு இனத்தின் அந்த ருசி வேர் கடத்தப்படுகிறதோ அப்படி ஒரு துயரமான காலகட்டத்தின் நினைவுகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தலாம். அந்தக் கஞ்சியை குடிக்க கொடுத்து அவர்களுக்கு  உன்னுடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள், நாங்கள் எப்படி கனடாவிற்கு வந்தோம், ஏன் கனடாவிற்கு வந்தோம், எது எங்களை தாயகத்தைவிட்டு துரத்தியது என்ற காரணத்தை அந்த பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். நிறுவன உருவாக்கிகளாக அவர்கள் தாயகத்துக்கு திரும்ப ஓர் ஊக்கியாக அது அமையும்.

நிமிர்வு ஜூன் 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.