யுத்தத்தை அவர்கள் வேறு வழிகளில் தொடர்கிறார்கள்



இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஆனி 23 ஆம் திகதி இடம்பெற்ற கன்னியாவை பேசுவோம் கருத்தரங்கில் பங்கேற்று அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் ஆற்றிய உரையை இங்கே தொகுத்துள்ளோம்.

இறந்த காலத்தை நிகழ்காலத்து தேவைகளுக்கேற்ப கையாளுவதே மரபுரிமைச் சொத்துக்களை நிர்வகிப்பது என்ற அர்த்தத்தில் வரும். அதாவது மரபுரிமையை நிர்வகிப்பது அல்லது பாதுகாப்பது என்பது நிகழ்கால நோக்கு நிலையில்  இருந்து இறந்த காலத்தை கையாள்வது. நிகழ்காலத்தில் இருக்கக்கூடிய அரசியல் தேவைகள் பொருளாதார தேவைகள் சமூக பண்பாட்டு உளவியல் தேவைகள் இவற்றின் அடிப்படையில்  கடந்த  காலத்தை கையாள்வதுதான் மரபுரிமையை கையாள்வது. மரபுரிமை என்ற சொல் லத்தீன் மூலத்திலிருந்து  எடுத்துக் கொள்ளப்பட்டது. மரபுரிமை என்ற  லத்தின் சொல்லின் அர்த்தம் தந்தை வழியாக எமக்கு கிடைப்பவை என்பதாகும். மரபு மரபாக எமக்கு கிடைத்தவற்றை நாம் நிகழ்காலத்தில் பேணுகிறோம் முன்னிலைப்படுத்துகிறோம். சில சமயங்களில் பின்னிலைப்படுத்துகிறோம். இன்னொரு விதத்தில் அதை கையாளுகின்றோம்.

ஒரே நாடு ஒரே தேசம் என்பது ஒரு இராணுவக் கோஷம். இதை ஒரே இனம் ஒரே மதம் ஒரே குடி என்று அர்த்தப் படுத்துகிறார்கள். அதைத்தான் தொல்பொருள் திணைக்களம் செய்கிறது. அதைத்தான் உல்லாசப் பயணத்துறை செய்கிறது.  அதனைத் தான் 2009 பின் பிக்குகள் செய்கிறார்கள். அதைத்தான்  2009 இற்கு பின்னர் பெரும்பாலான அரச திணைக்களங்கள் செய்கின்றன. யுத்தத்தை அவர்கள் வேறு வழிகளில் தொடர்கிறார்கள். ஒரே நாடு ஒரே இனம் ஒரே மொழி ஒரே மதம் என்பதன் அடிப்படையில் பல்வகைமையை மறந்து பல்லினத்தன்மையை மறந்து பல்  மதத்தன்மையை மறந்து பல்  இனத்தன்மையை மறந்து பல வகைமைக்கு எதிராக ஒரு அரசியல் பண்பாட்டு போக்கு ஒன்று தொடர்ச்சியாக மேடை ஏறிவருகிறது.

இதனை அரசாங்கத்தின் உபகரணங்களாக காணப்படும் அரசாங்க திணைக்களங்கள் செய்கின்றன. இதுதான் இன்றைக்கு நடைமுறை அரசியலில் இருக்கும் நிகழ்ச்சி நிரல். இந்த நிகழ்ச்சி நிரலின் படி தான் மரபுரிமையை பேணலும் நடக்கிறது. இது இன்றைக்குத் தான் நடக்கவில்லை. 2009 ற்கு பின்னர்தான் நடக்கிறது என்றில்லை.2009 ற்கு முன்னரும் யுத்தம் நடந்தது. திணைக்களங்கள் இன்றைக்கு நாசூக்காக செய்ததை யுத்தம் வெளிப்படையாக செய்தது. யுத்த வலயத்துக்குள் சிக்கும்   மரபுரிமைச்சின்னங்கள் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டன. கவர்ந்து செல்லப்பட்டன, சிதைக்கப்பட்டன. கொள்ளை அடித்து செல்லப்பட்டு விற்கப்பட்டன. அன்றைக்கு யுத்தம் என்ற போர்வைக்கு கீழ் எல்லாவற்றையும் செய்யக்கூடியதாக இருந்தது.

சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய பல புத்தியீவிகள் இதனை சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள். 2015 ஆம் ஆண்டு யூட் பெர்னான்டோ என்கிற அறிவியலாளர் கொழும்பில் இருக்கின்ற ஒரு பத்திரிகையில் எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றில் விபரங்கள் முழுக்க வருகின்றது. எப்படி  சிங்கள அரசாங்கங்களின் தொல்லியல் துறையும் மரபுரிமை அமைப்புக்களை பேணுகின்ற நிறுவனங்களும் ஓரினத்தன்மை மிக்கவைகளாக ஒரு மதத் தன்மை மிக்கவைகளாக நல்லிணக்கத்துக்கும்  பல்லினத்திற்கும் பல்வகைமைக்கும் எதிராக செயற்படுகின்றன என்பதனை யூட் பர்னான்டோ முக்கிய தகவல்களோடு மிகவும் துலக்கமாக எழுதியிருக்கிறார்.

1976 ஆம் ஆண்டு யுனஸ்கோவின் உதவியோடு கலாசார முக்கோணத் திட்டம்  உருவாக்கப்பட்ட போது எப்படி தமிழ் பண்பாட்டு மரபுரிமை அம்சங்கள் அதற்குள் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் பொலனறுவையை உள்ளடக்கும் பொழுது பொலனறுவையில் இருந்த சைவ ஆலயங்களை அவர்கள் எப்படிக் கையாண்டார்கள் என்பதனையும் யூட் பெர்னான்டோ எழுதியிருக்கிறார். பொலனறுவைக்கு  அகழ்வாராய்ச்சிக்கு போகும் பொழுது அங்கே இருக்கக் கூடிய சிவ ஆலயங்களை முன்னிலைப்படுத்தக் கூடாது என்பதன் அடிப்படையில் தான் அவர்களுடைய மரபுரிமை பேணல் அமைகின்றது என்று சுஜாதா அருந்தலலீகம என்கின்ற இன்னொரு ஆய்வாளர் ஒரு கட்டுரையில் தெளிவாக சொல்லியிருக்கின்றார்.

அவர் 1800 களில் தொடக்க கால அகழ்வாராட்சியின் போது பொலனறுவையில் கிட்டத்தட்ட 15 ற்கு குறையாத சிவஆலயங்கள் இருந்தன. ஆனால் அவை மூன்றாக சுருங்கி விட்டன என்று கூறுகின்றார். இப்படி ஒரு சூழலுக்குள் தான் கலாசார முக்கோண திட்டத்தின் கீழ் யுனஸ்கோவின் நிதிஉதவியோடு முன்னெடுக்கப்பட்ட அந்த மரபு பேண் நிகழ்ச்சி நிரல் எனப்படுவது முழுக்க முழுக்க ஒரினத்தன்மை மிக்கதாக ஒரு மதத்தன்மை மிக்கதாக இருந்தது என்று யூட்பர்னான்டோ கூறுகிறார்.

இன்னொன்றையும் அவர் கூறுகிறார். சிங்கள மக்களின் பெருமைக்குரிய மரபுரிமைச் சொத்துக்களில் ஒன்று நீர்ப்பாசன நாகரீகம். சிங்கள மன்னர்களின் மிகப்பெரிய அடைவு அது. தங்களுடைய மகிமைக்குரிய மரபுரிமை சொத்தையே அவர்கள் ஆக்கிரப்பின் அலகாக மாற்றிவிட்டார்கள். சிங்கள நீர்ப்பாசன நாகரித்தை மகாவலி அபிவிருத்தி திட்டமாக மாற்றி நீரைக்கொடுத்து நிலத்தை பறிக்கும் ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக அவர்கள் மாற்றினார்கள். மகாவலி அபிவிருத்தி திட்டம் எனப்படுவது நீர்பாசன நாகரிகத்தின் நவீன தொடர்ச்சி. தங்களுடைய பெருமைக்குரிய ஒரு மரபுரிமைச் சொத்தையே அவர்கள் ஆக்கிரமிப்பு வடிமாக மாற்றிவிட்டார்கள்.

எனவே இது 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர்தான் நடக்கிறது என்றில்லை. என்றைக்கிருந்தோ நடக்கிறது. யுத்த காலத்தில் அது வெளிப்படையாக யுத்தம் என்ற போர்வைக்குள் நடந்தது. இப்பொழுது யுத்தம் இல்லை. எனவே யுத்தத்தை அவர்கள் வேறுவழியில் தொடரவேண்டிய நிர்ப்பந்தம். மரபுரிமையை, மரபுரிமை சொத்துக்ளை பேணுவது என்பது இலங்கைத்தீவைப் பொறுத்த வரையிலும் ஓரினத்தன்மை மிக்கதாக ஒரு மதத்தை ஒரு மொழியை பேணுவதாகத்தான் காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் தான் கன்னியா வெந்நீரூற்றும் பறிக்கப் பட்டது.

இது கன்னியா வெந்நீரூற்றுக்கு மட்டுமல்ல முல்லைத்தீவில் செம்மலை நீராவியடி பிள்ளையாருக்கு நடக்கிறது. நாவற்குழிச்சந்தியில் எழும்பிக்கொண்டிருக்கின்ற புத்த கோயிலும் அதுதான். கல்முனையில் தமிழ் முஸ்லீம் முரண்பாட்டைக் கையாண்டு கொண்டு தேரர்கள் உண்ணாவிரதம் இருப்பதும் அதுதான். யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி நிறுவனமாகிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தூக்கியிருக்கிறார்கள். அவரை நீக்கியது அரசியல். துணைவேந்தரை தெரிவு செய்வதும் அரசியல். நீக்குவதும் அரசியல்தான். இருக்கட்டும். ஆனால் கல்வித்திணைக்களத்தில் அதிபரை அப்படித் தூக்க முடியாது. ஆனால் ஒரு துணைவேந்தரை காரணம் சொல்லாது தூக்கியிருக்கிறார்கள். அதற்கு எதிராக எமது புத்திஜீவிகள் எப்படிப்பட்ட வலிமையான எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள்? எமது கருத்துருவாக்கிகள் எதிர்ப்பை காட்டினார்களா? எமது கல்வி நிறுவனங்கள் கல்விமான்கள் எதிர்ப்பை காட்டினார்களா? எமது சிவில் சமூகங்கள் எதிர்ப்பை காட்டினார்களா? துணைவேந்தரில் எந்த குறையும் இருக்கட்டும். ஆனால் இப்படி ஒரு துணைவேந்தரை அகற்றமுடியாது. இது தமிழ்மக்களின் அறிவியல் பண்பாட்டு அம்சத்திற்கு அவமானகரமான விடயம். இது குறித்து யாராவது கேள்வி எழுப்பினார்களா? இல்லை ஒரு சிவில் சமூகம் கூட முறையான அர்த்தத்தில்  அதற்கு எதிர்ப்பு காட்டவில்லை. ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் தலைவரை இப்படி அகற்றலாம் என்றால் கன்னியா வெந்நீரூற்றுக்கும், நீராவியடி பிள்ளையாருக்கும் அதுதான் நடக்கும். மூன்றடிப் புத்தர்  ஆறடியாக வளர்கிறார். ஒரே நாடு ஒரே தேசம். ஓரே மொழி ஒரே இனம். ஒரே இடம்.

இந்த 2009 ற்கு பின்னரான யுத்தத்தை வேறு வடிவில் தொடரும் நிகழ்ச்சி நிரலை எதிர்கொள்வது என்றால் அதற்கு ஒட்டுமொத்த வழி வரைபடம் வேண்டும். தனிய கன்னியாவை மட்டும் நாங்கள் கையாளமுடியாது. இது ஒரு மதப்பிரச்சனை அல்ல. இது ஒரு பண்பாட்டு மரபுரிமை சார்ந்த பிரச்சனை. அதைவிட ஆழமானது. நிகழ்காலத்தின் தொகுப்பு நிலையிலிருந்து  இறந்த காலத்தை கையாளுவதுதான் மரபுரிமை பேணுகை. நிகழ்கால அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப எதை முன்நிறுத்த வேண்டும் எதை பின்நிறுத்த வேண்டும் எதை அழிக்க வேண்டும் எதை அகற்ற  வேண்டும். எந்த மூன்றடியை ஆறடியாக்க வேண்டும். எங்கே சிங்கள தமிழ் முஸ்லீம் முரண்பாடுகளுக்குள் போய் குதிக்க வேண்டும். உண்ணாவிரதம் இருக்க வேண்டும். எல்லாமே ஒரு ஒட்டுமொத்த வழி வரைபடத்துக்குள்  தான் வருகின்றன.

இது முழுவதையும் கையாள்வதற்கு மதநிறுவனங்களால் முடியாது. மத நிறுவனங்கள் தங்களால் இயன்ற எதிர்ப்பைக் காட்டலாம். ஆனால் இதற்கு வரையறை உண்டு. இது ஒரு அரசியல் விவகாரம். இதைக் கையாள்வதற்கு அரசியல் தலைமைகள் தான் முன் வர வேண்டும். அரசியல் தலைமைகள் முன் வராதபடியால் தான் கல்முனையில் பிக்குகள் களமிறங்கினார்கள். ஒரு புறம் பிக்குகள் கன்னியாவை கபளீகரம் செய்கிறார்கள. இன்னொரு புறம் நீராவியடி பிள்ளையாரை  அபகரிக்கிறார்கள். இன்னொரு புறம் கல்முனையில் தமிழ் முஸ்லீம் முரண்பாட்டை கையாண்டு  உண்ணாவிரதம் இருக்கிறார்கள். எல்லாமே ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் நடக்கிறது.

சிங்கள பௌத்த மயமாக்கல் ஒரு புறம் வெளிப்படையாக கன்னியாவில் நடக்கிறது.  நீராவியடியில் நடக்கிறது. மிக வெளிப்படையாக ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் தலைவரை அகற்றல் நடக்கிறது. இன்னொரு புறம் இந்த சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராக சிறிய தேசிய இனங்கள் தங்களுக்குள் ஒற்றுமைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவற்றுக்கிடையே ஏற்கனவே இருக்கின்ற முரண்பாடுகளைக் கையாண்டு புகுந்து அதைக் குழப்புகிறார்கள். அங்கே முரண்பாடுகளை அதிகப்படுத்துகிறார்கள். இதெல்லாமே ஒரு நிகழ்ச்சி நிரலில் வெவ்வேறு அலகுகள் தான். எனவே இதை எதிர்கொள்வது என்றால் எங்களிடம் ஒரு ஒட்டுமொத்த வழி வரைபடம் வேண்டும். அரசியல்வாதிகள் அதாவது சரியான தமிழ் தலைமைகளை தமிழ் மக்கள் தெரிவு செய்து 2009 ற்கு பின்னரான யுத்தத்தை வேறு வடிவத்தில் கொண்டு செல்லும் அவர்களுடைய நிறுவன மயப்பட்ட செயற்பாட்டுக்கு எதிரான ஒரு நிறுவன மயப்பட்ட செய்பாடுகளுக்கு தமிழ் மக்கள் போக வேண்டும். அதை அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஊடாக செய்ய வேண்டும். அல்லது சிவில் அமைப்புக்களை உருவாக்கி அந்த அமைப்புக்களினூடாக ஒரு புறம் அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களை கொடுக்கலாம். அமுக்க குழுக்களாக செயற்படலாம். சிவில் அமைப்புக்கள் மக்கள் அமைப்புக்களாக மாறி மக்கள் எதிர்ப்பைக் காட்டலாம்.

இல்லையென்றால் கன்னியா வெந்நீரூற்றுக்கு இப்பொழுது கூட்டம் நடத்துகின்ற மாதிரி இன்னொரு மரபுரிமைச் சின்னத்திற்காக இன்னொரு கூட்டத்தை நடத்த வேண்டி வரும். ஏனென்றால் அவர்கள் மரபுரிமை பேணல் என்பதனை ஒரு யுத்தமாகவே செய்கிறார்கள். ஒரு இனத்தின் ஒரு மொழியின் ஒரு மதத்தின் மரபுரிமை சின்னத்தை மட்டும் முன்னிறுத்துவதன் மூலம் ஏனைய இனங்களின் ஏனைய மொழிகளின் மரபுரிமைச்சின்னங்களை பின் தள்ளும் ஒரு நிலைமையைத்தான் அவர்கள் ஒரு மரபுரிமை பேணுகை என்று நம்புகிறார்கள். அவர்கள் அதை  ஒரு யுத்தமாகவே செய்கிறார்கள்.

A 9 சாலையில் போனால் அங்கே காணப்படுகின்ற அத்தனை யுத்த நினைவுச்சின்னங்களும் அந்த வகைப்பட்டவை தான். ஏரா வீரசிங்க என்ற சிங்கள ஆராய்சியாளர் அதைப்பற்றி கேள்வி எழுப்புகிறார். யுத்தத்தின் நினைவுகளை பேணுவது என்பதில் கூட எதை பேணுவது எதை பேணக்கூடாது என்பதைக்கூட‘ஒரு நாடு ஒரு தேசம்’ தீர்மானிக்கின்றது. வென்றவர்களின் நினைச்சின்னங்களைப் பேணுங்கள் தோற்றவர்களின் நினைவுச்சின்னங்களையும் அவர்களுடைய துயிலும் இல்லங்களையும் அழித்து விடுங்கள். எந்த நினைவுகளைப் பேண வேண்டும் எந்த நினைவுகளைப் பேணக்கூடாது என்பதில் கூட அவர்களிடம் தெரிவு உண்டு. நினைவைப் பேணுவது என்பது மரபுரிமையைப் பேணுவதன்  ஒரு பகுதிதான்.

ஆனால் அவர்கள் மரபுரிமையை பேணுவது என்பதையே ஒரு யுத்தமாக முன்னெடுக்கிறார்கள். நீங்கள் கண்டி நெடுஞ்சாலை வழியே போவதாக இருந்தால் அங்கே காணப்படுகின்ற அத்தனை நினைவுச்சின்னங்களும் இருந்த இடத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் வேறொரு கட்டமைப்பு இருந்தது. 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின் போது வேறொரு கட்டமைப்பு இருந்தது. அந்த நெடுஞ்சாலையில் காலத்திற்கு காலம் இந்த நினைவுச் சின்னங்கள் மாறிக்கொண்டே வருகின்றன.

கீதையில் ஒரு வசனம் இருக்கின்றது நீ எதனை இழந்தாய் உன்னுடையது என்று சொல்வதற்கு. இன்று உன்னுடையதாக இருப்பது நாளை வேறொருவருடையதாக மாறிவிடும். நேற்று வேறொருவருடையதாக இருந்தது இன்று உன்னுடையதாக வந்துவிடும். இன்று அவர்களுடையதாக இருப்பது நாளை உன்னுடையதாக வந்துவிடும். இதை அவர்களுக்கு யார் போய் சொல்லுவது? புத்தபகவான் நேரில் வந்து சொன்னாலும் அவர்கள் அதைக் கேட்கமாட்டார்கள் என்பதலிற் தான் இலங்கைத்தீவில் அனைத்து துயரங்களும் ஊற்றெடுக்கின்றன.

நிமிர்வு ஜூலை 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.