கன்னியாவை பேசுவோம்




கடந்த ஆனி 23 ஆம் திகதி “கன்னியாவை பேசுவோம்” எனும் தலைப்பிலான கருத்தரங்கம் ஒன்று யாழ்ப்பாணம் நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் மண்டபத்தில் இடம்பெற்றது. கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டுவதற்கு எதிராக அங்குள்ள மக்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். அந்த மக்களின் எதிர்ப்பினைப் பறைசாற்றி அந்த விடயம் தொடர்வாக மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை அளவளாவும் நோக்கத்தில் இந்தக் கருத்தரங்கு அமைந்திருந்தது.

தென்கயிலை  ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் அங்கு பேசுகையில் பின்வருமாறு தெரிவித்தார். வடக்கு கிழக்கு எங்களுடைய தாயகம். குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை  கவனிப்பாரற்று அழிந்து  கொண்டிருக்கின்றன. நாங்கள் எங்களை தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். எங்களுடைய மண் எங்களைவிட்டு தொலைந்து போய்க்கொண்டிருக்கின்றது. கன்னியாவினுடைய பிரச்சனை யாவரும் அறிந்ததே. இந்தப் பிரச்சனையை நாங்கள் எவ்வாறு கையாளப்போகின்றோம்? எங்களுக்கு முன்னால் இருக்கின்ற திட்டமிட்ட அபகரிப்புச் சவால்கள், பண்பாட்டுச் சிதைவுச் சவால்கள்  பொருளாதாரச் சவால்கள் ஏனைய திட்டமிட்ட சவால்களை எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம்? இதுவே எங்களுடைய பெரிய கேள்வி. 

அந்த வகையிலே எங்களுடைய நிலத்தினை தொல்பொருள் என்ற தொனிப்பொருளில் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்ற நிலையினை நாங்கள் அறிவு பூர்வமாகவும் சட்ட பூர்வமாகவும் கையாள வேண்டிய தேவை  இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையிலே நாங்கள் யாவரும் எங்களுடைய இருப்பைத் தொலைக்காது காத்துக்கொள்ள வேண்டிய கடமைப்பாட்டுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய இருப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கின்றது. எங்களுடைய இருப்பை தொல்பொருள் திணைக்களம், வன இலாகா என்பன  திட்டமிட்டு நசுக்கிக் கொண்டு வருகின்றன. கழுத்தை இறுக்கப் பிடிக்கின்றன. இவற்றினூடாக நாங்கள் எவ்வாறு பயணிக்கப் போகின்றோம்? இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தொல்பொருள் சம்பந்தமான பிரச்சனைகளை கையாள்வதற்காக தென்கையிலை ஆதீனத்திலே ஒரு செயற்பாட்டுக்குழுவினை நாம் ஆரம்பித்தோம். அந்த செயற்பாட்டுக் குழு திறம்பட செயற்பட வேண்டும். எங்களுக்கு முன்னால் உள்ள சட்டப்பிரச்சனை, அறிவுசார் பிரச்சனைகளை நாங்கள் கையாள வேண்டும் இவற்றுக்கு வடக்கிலுள்ள புத்திசாலிகள், அறிஞர்கள், சட்டவல்லுனர்கள் ஆகியோரின் உதவி எங்களுக்கு தேவைப்படுகின்றது. எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கின்ற கிழக்கிலே கன்னியாவைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் உங்கள் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகின்றது.

ஒரு செயற்பாட்டுத் தளம் தேவைப்படுகின்றது. செயல்முறை ஒன்று தேவைப்படுகின்றது. செயல் இல்லாது நாம் எந்தவித முன்னேற்றத்தையும் காணமுடியாது. வெறுமனே பேச்சுக்களும் கலந்துரையாடல்களும்  முடிவினைத் தந்துவிடப்போவதில்லை. இன்று எங்களுடைய பிரச்சினை நாளை முழு தாயகத்திற்குமான பிரச்சினையாக மாறும். எனவே அதை கருத்திற்கொண்டு ஆவன செய்து தருமாறு உங்கள் யாவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் குருநாகலிலே என்ன நடந்ததோ அதுவே கன்னியாவிலும் நடக்கும்.  நாங்களும் சைவமகாசபையினுடைய செயலாளரும் அண்மையில் குருநாகலுக்கு சென்றிருந்தோம்.  அங்கு 25000 தமிழர்கள் இருப்பதாக அறிந்தோம். விக்கிரமராஜனுடைய ஆறாவது பரம்பரையை சேர்ந்த ஒருவரை சந்தித்தோம். அவர்கள் இன்னும் அங்கேயே வாழுகிறார்கள். அந்தக் குழந்தைகள் தங்களுக்குள்ளேயே சிங்களத்தில் கதைக்கிறார்கள். 25000 தமிழர்கள் வாழுகின்ற அந்த இடத்திலே அவர்களுடைய பரிமாற்ற மொழியாக சிங்கள மொழி இருக்கின்றது. இதே சூழ்நிலை எங்களுடைய மண்ணிற்கும் வருவதற்கான காலம் மிகத் தொலைவில் இல்லை. எனவே அதை நாங்கள் இன்றே உணரவேண்டும்.

நான் பெரும்பாலும் குறிப்பிடுகின்ற ஒரே ஒரு விடயத்தை மீளவும் உங்களிடம் குறிப்பிட்டு இந்த அவையினை கொண்டு செலுத்துமாறு வேண்டுகின்றேன். எங்களுடைய பூட்டப்பிள்ளைகளுடைய பெயர்கள் புஞ்சிபண்டாவாகவோ, லொக்குமெனிக்கேயாகவோ வருகின்ற நிலையிலிருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. அப்படி அழைக்கும் காலம் மிக அண்மித்துக் கொண்டிருக்கின்றது. எனவே ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மிக்க ஒரு நல்ல அமைப்பினை இங்கே எங்களுக்கு வழங்குங்கள். உங்களுக்கு நாங்கள் எங்களுக்கு நீங்கள். நீங்கள் நாங்கள் என்ற சொற்பிரயோகத்திற்கு அப்பால் நாம் நமக்காக நம்முடைய சந்ததிக்காக இந்த செயற்பாட்டினை செய்து கொண்டு நாம் ஒன்று சேர்ந்து உழைப்போம். எங்களால் முடிந்தரை தமிழினத்தை தமிழ் நிலத்தினை எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு ஒப்படைக்கப் பாடுபடுவோம்.  இவ்வாறாக தென் கைலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் அறைகூவல் விடுத்தார்.

எம் இருப்பை பேணுவதற்கான அரசியல் வேண்டும்

அதனையடுத்துப் பேசிய கலாநிதி கணேசலிங்கம் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார். ஒரு சமூகத்தின் இருப்பைப் புடம்போடுவதில் அரசியல் வல்லமை பொருந்தியது. அந்த சமூகத்தின் இருப்பிற்கு களம் சேர்ப்பதும் அரசியல் தான்.  இப்பொழுது அரசியல் களம் ஒன்று புதிதாக உருவாகியிருக்கிறது. இது சுயாதீனமான குருமார்களுடைய அரசியல் தளம். இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் குரு முதல்வர்களின் அல்லது அவர்களுக்குரிய அரசியல் களம் ஒன்று ஆரம்பித்திருக்கிறது. அது வெளிப்படையாக நிறைய செய்திகளை  சொல்லத் தொடங்கிவிட்டது. அந்த செய்திகளினுடைய தொடர்ச்சிகளை இங்கிருக்கின்ற குரு முதல்வர்களின் உரைகளை கேட்கும் பொழுது  காண்கிறேன்.  இதேவேளை ஆறுமுகநாவலரையும் அனாகரிக தர்மபால அவர்களையும் நினைத்தேன். நாங்கள் இடையில் அந்த தொடர்ச்சியை கைவிட்டோம்.

மதம் அல்லது பண்பாடு அல்லது மரபுரிமை என்பது அரசியல் அல்லாதது. அதன் எல்லை வரையறுக்கப் பட்டது. அதே போலவே சிவில் ஏற்பாட்டாளர்களினதும் சமூக ஆர்வலர்களினதும் இந்த உரையாடல்களின் எல்லையும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சமூகத்தின் இருப்பு என்பது அரசியலின் பாற்பட்டதும், மையப்பட்டதும் ஆகும். சிவில் சமூகமும், அறிஞர்களும், மதகுருமாரும் ஒரு களத்தை ஏற்படுத்தி அதற்குரிய வடிவங்களை  ஒப்படைக்கிறார்கள். ஆனால் அவற்றைக் கொண்டு செல்வது, நிறைவு செய்வது, முழுமைப்படுத்துவது, அதற்குரிய வல்லமையை உருவாக்குவது என்பவற்றை ஓர் அரசியல்தளம் தான் செய்ய வேண்டும்.

இந்த கன்னியா வெந்நீரூற்று, தமிழர்களுடைய அரசியல் மரபுரிமை எல்லாவற்றையும் சேர்த்து  பாதுகாக்கும் வல்லமை கொண்டது. அந்த அரசியல் தளம் தான். அரசியலை மாற்றலாம், அரசியல் தலைவர்களை  மாற்றலாம், அதனுடைய களத்தை மாற்றலாம். ஆனால் அரசியலால்  தான் ஒரு சமூகத்தின் வரலாற்று இருப்பை வெற்றிகரமாக காக்க முடியும்.  குருமுதல்வர்களுடைய, சமூகஏற்பாட்டாளர்களுடைய, இந்துமத பேரவையினுடைய சமூக ஈடுபாட்டினுடைய வலிமை என்பது அரசியல் சார்ந்த கருத்துருவாக்கங்களை மட்டுமே செய்து கொள்ள முடியும் என்பது ஒரு புரிந்துணர்வு.

வரலாறு முழுவதும் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் அதனை ஆதாரப்படுத்துகின்றோம். நிறுவுவதற்கு நிறைய முயற்சிக்கின்றோம். 

போர்த்துக்கேயர் வருகின்ற பொழுது வடக்கு கிழக்கு பூர்வீகமாக தமிழர்களுடைய தேசம். அங்கே இருந்த  அனைத்து மரபான சொத்துக்களும் எண்ணங்களும் அவற்றினுடைய பாரம்பரியமான அவர்கள் பராமரித்துக் கொண்டிருக்கக் கூடிய அம்சங்களும் அந்த தமிழ் இனத்தினுடைய உரித்துடைய அம்சம். இதற்கு வரலாறெல்லாம் தேடி பதிவு செய்து முதன்மைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் 1960ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய வரைபுகளில் குறிப்பாக சமூக பண்பாடு கலாச்சார பொருளியல் சார்ந்த வரைபுகளை முதன்படுத்தியது. குழுமங்கள் அதன் பிற்பாடு தேசியங்கள் அதன் பிற்பாடு அந்த தேசிய இனங்களிற்கு உரித்துடைய தொன்மங்களும் வரலாற்றினுடைய வரைபுகளும் மரபோடு சார்ந்த அம்சங்களும் பேணப்பட வேண்டும், பராமரிக்கப்பட வேண்டும். அவை அந்த தேசிய இனத்திற்கோ குழுமத்திற்கோ உரித்துடையது என்ற சுயநிர்ணய வரைபு ஐக்கிய நாடுகள் சபையில் 1960 ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டிருக்கின்றது. இந்த அம்சங்கள் இந்த தேசம் எங்களுக்கு உரித்துடையது என்பது எங்களுக்கு மிகத் தெளிவாக தெரிவிக்கிறது. எங்களுக்கு உரித்துடையது என்பதை நிறுவது அல்ல பிரச்சனை. அந்த இருப்பை பேணுவதற்கான அரசியல் வேண்டும். அந்த அரசியல் வடிவத்தை யார் கொண்டு வருவது. யார் முன்னெடுத்துச் செல்வது.  அதனுடைய வாய்ப்புக்கு எவ்வாறு மெருகூட்டுவது. இது தான் எங்களிடம் உள்ள பிரதானமான சூழ்நிலை. இத்துடன் கலாநிதி கணேசலிங்கம் தனது உரையை முடித்துக் கொண்டார்.

எங்கெல்லாம் எங்களுடைய மரபுரிமைக்கு, தொன்மத்துக்கு ஆபத்து  இருக்கிறதோ அங்கெல்லாம் அவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும்

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அருட்தந்தை ரவிச்சந்திரன் பின்வருனவற்றைக் கூறினார். இந்த இடத்தில் நாம் சமயரீதியாக சிந்திக்க வேண்டிய தேவை இல்லை. இது தமிழர்களுக்கு உரியது. தமிழர்கள் இந்த மண்ணிலே நீண்ட காலம் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. அது தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததின் எச்சம் தான். தமிழ் பௌத்தத்தின் தொல்பொருட்களை தமிழர்களாகிய நாங்கள்தான் பாதுகாக்க வேண்டும். அவற்றினுடைய நிலஉரிமையைப் பேண வேண்டும்.

இந்து மதம் சார்ந்த தொன்மைகளாக இருந்தால் என்ன அதை நாம் எல்லோரும் எங்களுடைய தொன்மையாகவும் மரபுரிமையாகவும் கருதி பாதுகாக்க முன்வர வேண்டும். அதேபோல கிறிஸ்தவம் சார்ந்த தொன்மங்களாக இருந்தால் என்ன அது தமிழர்களின் தொன்மைகள் என்று நாங்கள் இணைந்து நின்று பாதுகாக்க வேண்டும். தமிழர்களுடைய மரபுரிமை தமிழர்களுடைய நிலங்கள். அதனை பேணி பாதுகாப்பது தமிழர்களின் கடமை என்ற உணர்வோடு செயற்படுவது முக்கியமானது. அது ஒரு இந்து ஆலயம் கிறிஸ்தவராகிய எனக்கு முக்கியமில்லை என்றும் இது கிறிஸ்தவ ஆலயம் இந்துக்களுக்கு முக்கியம் என்றுமில்லை என்று கருதாது தமிழர்களின் மரபு என்ற ரீதியில் நாம் செயற்பட வேண்டும்.

இது ஒரு பௌத்த எச்சம் தமிழர்களாகிய எங்களுக்கு மரபுரிமை இல்லை என்று கூறமுடியாது. தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்கின்றது. இந்த இறைமையை எமது வரலாற்று எச்சமாக கருதி பேணவைப்பது என்பது எங்களுடைய கடமை. முல்லைத்தீவிலே மகாவலியின் L  வலயத்திற்கு எதிராக மரபுரிமை பேரவை உருவாக்கப்பட்டு தமிழர்கள் தமது உரிமைக்காக குரல் கொடுத்தார்கள். தொடர்ந்தும் அங்கேயிருக்க கூடிய தமிழர் குடும்பங்கள் தொன்மங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள்.  கன்னியாவிலே உள்ள இந்து ஆலயம் அங்கிருந்து அகற்றப்பட்டு அதற்கு மாறாக அது ஒரு பௌத்த சின்னமாக மாற்றப்படக்கூடிய சூழ்நிலையிலே அதைப் பற்றி சிந்திக்க இங்கு கூடியிருக்கின்றோம்.

இவ்வாறு வடக்கு கிழக்கில் எங்களுடைய மரபுரிமைகள் இல்லாது ஆக்கப்படுகின்ற அல்லது பெயர் மாற்றம் செய்யப்படும் ஒரு சூழ்நிலையிலே வடக்கு கிழக்கு தழுவிய தமிழர் தொன்மங்கள் மரபுரிமையை பாதுகாக்க ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பு உருவாக வேண்டும். அந்தக் கட்டமைப்பு தொடர்ச்சியாக விழிப்புணர்வோடு இயங்கி எங்கெல்லாம் எங்களுடைய மரபுரிமைக்கு, தொன்மத்துக்கு ஆபத்து  இருக்கிறதோ அங்கெல்லாம் அவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் நகர வேண்டும்.


தொகுப்பு -விக்னேஸ்வரி 
நிமிர்வு ஜூலை 2019 இதழ் 



No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.