முன்னேறும் புலம்பெயர் இளையோர்
அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் PEARL Action (People for Equality And Relief in Lanka)எனும் அமைப்பில் முன்னெடு குழும பணிப்பாளராக (Advocacy Director) முழு நேரப் பணியில் இருக்கிறார் மரியோ அருள்தாஸ். அவருடைய பணிகளில் ஒன்றாக இலங்கையில் நிலவும்இனமுரண்பாடு தொடர்பாக சர்வதேச அரசாங்க அதிகாரிகளையும் கொள்கை வகுப்பாளர்களையும் சந்தித்து வருகிறார்.  இவ்வமைப்பில் இணைய முன்னர் தமிழ் கார்டியன் (Tamil Guardian) பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும்,Royal Borough of Kingston இற்கு கொள்கை ஆலோசகராகவும் இங்கிலாந்தின் தமிழ் இளைஞர் அமைப்பின் பணிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.PEARL Action அமைப்பினூடாக அரசியல் சீர்திருத்தம், நினைவுகூரல், இராணுவ ஆக்கிரமிப்பு,போர்க்குற்றவாளிகளை நீதிக்கு முன்பாக நிறுத்துவது என்பன தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.  இது தொடர்பாக பலதடவைகள் தாயகத்துக்கு வந்து போயிருக்கிறார்.அவ்வாறு வந்திருந்த  அவரை நிமிர்வுக்காக சந்தித்திருந்தோம். அவருடனான நேர்முக உரையாடல்களில் இருந்து முக்கியமான விடயங்களைப் பார்ப்போம்.

எங்கள் வயதுகளில் (30 இற்கு மேலே) இருப்போருக்கு எங்கள் பெற்றோர்கள் தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சொல்லித் தந்தே வளர்த்தார்கள். அதனால் தமிழ்மக்கள் இலங்கைத்தீவில் பட்ட துன்பதுயரங்கள்  எல்லாமே தெரிந்து தான் வளர்ந்தோம். அதையும் விட இயக்கம் இருக்கிற காலங்களில் நாங்கள் பிரச்சினைகள் துன்பங்களை நேரடியாக பார்த்து வளர்ந்தோம். ஆனால் இப்போது 20 - 25 வயதுகளில் இருக்கிற இளைய தலைமுறையினர் 2009 காலப்பகுதிகளில் 10-15 வயதுகளில் தான் இருந்திருப்பார்கள். அந்த நேரங்களில் நடந்த போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு அரசியல்மயப்பட்டவர்களாக அவர்கள்  இருக்கிறார்கள். பலர் தங்கள் பூர்வீகம்தொடர்பில் தானாக தேடி அறிந்து கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

இன்று புலம்பெயர் தேசத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை அடையாளம் தொடர்பானது. ஜேர்மனில் இருந்தாலோ கனடாவில் இருந்தாலோ லண்டனில் இருந்தாலோ அவர்கள் அந்நாட்டவர்களாக  உணருவதை விட தமிழ் அடையாளத்தைத்தேடுகின்றார்கள். அதனையே விரும்புகின்றார்கள். இன்றைய தலைமுறையினர் பெற்றோர்களுடனும் ஒரு ஆரோக்கியமான உறவைப் பேணுகின்றார்கள். புதிய தலைமுறையினர் மூலம் வருகிற அரசியல் சிந்தனைகள் எல்லாம் முற்போக்கானதாக உள்ளன. அவர்கள் தெளிவான சிந்தனையோடும் இருக்கின்றார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாங்கள் முன்னெடுக்கும் ஈழத்தமிழர் தொடர்பிலான விடயங்களை எங்களுக்கு பிறகு இனி வருகின்ற இளையோரும் முன்னெடுப்பார்களா என யோசித்திருக்கின்றோம். ஆனால், இப்போது எங்களுக்கு கவலை இல்லை. புலம்பெயர் தளங்களில் இருந்துசெயற்படுவதற்கு இளையோர் அதிகமாக முன்வருகின்றார்கள். கடந்த காலப்பகுதிகளை விட இப்போது வேலைகள் கூடுதலாக இடம்பெறுகிறது. 2009 போர் முடிந்த காலப்பகுதியில் இருந்த நிலையை விட இப்போது இளைய செயற்பாட்டாளர்கள் கூடிக்கொண்டு வருகின்றார்கள். முந்திய கட்டுப்பாடுகள் வரையறைகளைவிட்டு தமிழ்த்தேசியம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை எதிர்த்து எங்களுக்கொரு விடிவு வேண்டும் என்கிற கொள்கையை எம் இளையோர் வலுவாக வைத்திருக்கின்றார்கள். சமூகவலைத்தளங்கள் மூலம் எண்ணங்கள் ஜனநாயகமயப்பட்டிருக்கின்றன. இளையோர்களின் தொடர்ச்சியான உரையாடல்களில் தமிழ்த்தேசியம் வெளிவருகின்றது. உரையாடல்கள் மூலம் வருவதால் இயங்குவோரும் வலுவாக உள்ளனர்.


முன்னைய காலப்பகுதிகளில் சொந்தக்காரர் மூலம், தெரிந்தவர்கள் மூலம், நண்பர்கள் மூலம் தான் தொடர்புகள் கிடைத்தன. ஆனால், இப்போது சமூகவலைத்தளங்கள் மூலம் இயங்குவோருக்கான தொடர்புகள் வலுப்பெற்று வருகின்றன. புலம்பெயர் தேசத்திலிருந்து சமூகவலைத்தளங்களில் பதிவிடுவோரும், தாயகத்தில் இருந்து சமமூக வலைத்தளங்களில் பதிவிடுவோரும் இணைய வெளியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

அண்மையில் ரொறன்றோவில் தமிழர் சார்ந்து இயங்கும் அமைப்பு ஒன்றின் கலந்துரையாடலில் பங்கேற்று இருந்தேன். அதில் 10 ஆண்கள், எல்லோருக்கும் வயது55 க்கும் அதிகம். ஒரு பெண் இருந்தார். இளையோர் எங்கே, இளையோர் எங்கே என  அங்கே இருந்தவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன் இளையோர்கள் களத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று. சும்மா அவர்கள் உங்களைப் போல் கூடிக் கதைத்துக் கொண்டு மட்டும் இருக்கவில்லை என நேரடியாகவே கூறினேன்.  ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒன்றிரண்டு வீதத்தினர் தான் செயற்பாட்டாளர்களாக இருப்பார்கள். அவர்களின் செயற்பாடுகள் சரியான திசையில் அமையும் பட்சத்தில் பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவார்கள். அவர்களுக்கு பின்னால் செல்வார்கள்.   

போர் முடிந்து 10 வருடங்களுக்கு பிறகு எங்களுக்கு வலுவான 2 ஆம் தலைமுறை இல்லாவிடின் நிலைமை என்னாவது? இதனால் இன்று இளையோர்கள் தாமாகவே அமைப்புக்களைக் கட்டமைத்து பல்வேறு வேலைத் திட்டங்களையும் செய்து வருகின்றார்கள். இவ்வாறு தான் இளையோர்களாகிய நாங்கள் சேர்ந்து PEARL Action என்னும் அமைப்பை உருவாக்கினோம். அதில் நான் முழுநேர செயற்பாட்டாளாராக வேலை செய்கின்றேன். ஏனெனில் அதனை ஒரு நிறுவனமாக கட்டமைத்து வளர்வதற்கு ஒருவருடைய முழுநேர உழைப்பு கட்டாயம் தேவைப்படுகின்றது.   

எங்கள் சமுதாயத்தில் இருந்தே இன்று சர்வதேச விவகாரங்களில் தேர்ந்த இளையோர்கள் பலர் இருக்கின்றார்கள். நாங்கள் வெள்ளையர்களுக்கு காசு கொடுத்து எங்கள் பிரச்சினைகளை சர்வதேச அரங்கில் கதைக்க சொல்லாமல், அப்படியான இளையோரை தயார்படுத்தி அவர்களுக்கு முடிந்தால் ஊதியம் கொடுத்து எங்களுக்காக பேச அனுப்புவது தான் ஆரோக்கியமானது. புத்திசாலித்தனமானதும் கூட.   

முன்னைய தலைமுறையினர்  மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளையே அதிகம் தெரிவு செய்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினைச் சேர்ந்தவர்களோ சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையிலான படிப்புக்கள், சமூக விஞ்ஞானம்,  சர்வதேச அரசியல், ஊடகவியல், மனிதவுரிமை சார்ந்த பல்வேறு படிப்புக்களையும்தெரிவு செய்கின்றனர். இப்படியாக எம் இளையோர் இன்று சர்வதேசமெங்கும் பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ளனர். கனடாவின் நாடாளுமன்றில் 40 ஈழத்தமிழர்கள் பல்வேறு பதவி நிலைகளில் வேலை செய்கின்றார்கள். நாங்கள் இனப்படுகொலை கண்காட்சி ஒன்றினை ரொறன்ரோ மற்றும்நியூயோர்க்கில் செய்தோம்.   அதற்கு இளையோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. 

வெளிநாடுகளில் நடக்கும் நாடுகள் சார்ந்த நிகழ்வுகளில் கூட இன்று எம் இளையோர்கள் சிறீலங்கன் என சொல்லி சிங்கக்கொடியுடன் நிற்பது குறைந்து வருகிறது.  எங்கள் மக்களுக்கு நான் சிறீலங்கன் இல்லை. தமிழ் என்கிற அடையாளம் பொதுவாக இருக்கின்றது. அதுவும் இன்றைய இளையோர்களிடமும்அந்த உணர்வு இருப்பது தான் ஆச்சரியமானது.

பிரபல பொப்பிசைப்பாடகி மாயா சிங்கள பெருந்தேசியவாதத்தை சர்வதேச அரங்கில் கடுமையாக எதிர்த்து வருகின்றார். பிரபலமான சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என சொன்னார். தன் பொப்பிசை மூலம் எங்கள் பிரச்சினையையை சர்வதேச கவனத்துக்கு கொண்டு சென்றவர். தமிழர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ் என்கிற அடையாளமூடாக தனித்துவமாக இருக்கின்றோம். 

எங்கள் மக்களிடையே பல்வேறு அமைப்புக்கள் தோற்றம் பெற்றிருந்தாலும் பெரும்பாலான அமைப்புக்களிடையே கொள்கையில் ஒற்றுமை உள்ளன. "நீங்கள் எல்லா அமைப்புக்களையும் சேர்த்துக் கொண்டு வாங்கோ.... தனித்தனியாக எங்களால் கதைக்க முடியாது". என என்னிடம் ஒரு இராஜதந்திரி சொன்னார். அதற்கு நான் சொன்னேன், நீங்களும் தான் வேறு வேறு கட்சிகள் மற்றும் அமைப்புக்களாக இருக்கின்றீர்கள். உங்களுக்கு தெரியும் யார் உபயோகமான தகவல்களை வைத்திருப்பார்கள், எந்த நேரத்தில் யாரை அணுக வேண்டும் என்கிற விடயம்.  அப்படியானவர்களுடன் நீங்கள் கதைத்துக் கொள்ளத் தான் வேண்டும் என்று சொன்னேன்.

ஒற்றுமை என்று சொல்லிக் கொண்டு வருபவர்கள், அந்த ஒற்றுமைக்கூடாக மற்றவர்களை கட்டுப்படுத்தப் பார்க்கின்றார்கள். சுதந்திரமான செயற்பாடுகளுக்கு வேலி போடப் பார்க்கின்றார்கள். புலம்பெயர் தேசத்தில உள்ள பிரபலமான கூற்று இது தான் "எல்லாரும் ஒன்றுக்குள்ள வாங்கோ" என்பதாகவே இருக்கிறது. அப்படி மேலிருந்து கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் விசேடமாக இளையோருக்கு சரி வராது. நாங்கள் ஒரு வேலையை செய்யும் போது எல்லோரும் சேர்ந்து கதைத்து முடிவெடுத்தே செய்வோம். முன்னைய காலங்களில் உருவாகிய சில இளையோர் கட்டமைப்புக்கள் கூட மேலே இருந்து கட்டுப்படுத்தியமையால்தான் உடைந்து போனமை வரலாறு.

இன்று பல இளையோர் அமைப்புக்கள் வெற்றிகரமாக உருவாக 10 வருடங்கள் எடுத்ததற்கும் காரணம் இது தான். நான் தான் இயக்கம், இல்லை நான் தான் இயக்கம் என்று சொல்லி உருவாகிய அமைப்புக்கள் இளையோர் அமைப்புக்களை  கட்டுப்படுத்த பார்த்தமையும், தன் பிடிக்குள் வைத்திருக்க முயற்சித்தமையும்  நடந்துள்ளது.

கூடுதலாக பெண்கள் இப்படியான மேலிருந்து கட்டுப்படுத்தும் அமைப்புக்களுக்குள் போனால் அவர்களாகவே முடிவெடுக்கும் அதிகாரம் கொடுக்கப்படுவதில்லை. பெரும்பாலும் "கூட்டத்துக்கு வந்து ஆங்கிலத்தில் கதையுங்கோ, கூட்டத்தில் நடந்த விடயங்களை எழுதி தாங்கோ"  போன்ற விடயங்கள்தான் பெண்களுக்கு கொடுக்கப்பட்டன. முடிவுகளை மட்டும் அங்கே நான்கு ஆண்கள் எடுக்கும் சூழல் இருக்கிறது. ஒற்றுமை, மேலிருந்து கட்டுப்பாடு என்று சொல்கிற   அமைப்புக்களில் இதுதான் நிலைமை. இன்று பால்நிலை சமத்துவம் பற்றி கூடுதலாக எங்கள் இளையோர்கள் கதைக்கிறார்கள். கதைப்பதுமட்டுமல்ல செயலிலும் நடக்கிறது. எங்களது PEARL Action அமைப்பிலும் அதிக பெண்கள் வேலை செய்கின்றார்கள்.

கொழும்பு அரசியல்வாதிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர் சமூகத்துக்கு நிலைமைகள் விளங்கவில்லை என்று தான் நினைக்கிறார்கள்.  கதைக்கிறார்கள். ஆனால், புலம்பெயர் தேசங்களில் பிறந்து வளர்ந்து தமிழ் அரசியலை நோக்கி பல்வேறு வேலைத்திட்டங்களை அமைதியாக செய்து கொண்டிருக்கும் இளையோர்கள் ஏராளம் இருக்கின்றார்கள். கோழி ஒரு முட்டை இட்டுவிட்டு பல தடவைகள் கொக்கரித்துக் கொண்டே இருக்கிறது. ஆமை ஆயிரம் முட்டைகளை இட்டுவிட்டு அமைதியாகவே இருக்கிறது.    அபிவிருத்தி, சுகாதாரம், ஆரோக்கியம் சார்ந்து பலரும் அரசியல் சார்ந்து குறிப்பிடத்தக்கோரும் வேலை செய்கிறார்கள்.

இவ்வளவு பேரழிவு 2009 இல் நடந்த பின்னும் இன்று பத்து வருடங்களுக்குள் நாங்கள் மீண்டும் இப்படி மீண்டு வருவோம் என  நாங்கள் நினைத்திருக்கின்றோமா? எல்லாம் முடித்துவிட்டதெனத் தானே நினைத்தோம்.  ஆனால், நாங்கள் இன்று பாரிய அழிவில் இருந்து வேகமாக மீண்டு கொண்டிருக்கிறோம்.

அமுது 
நிமிர்வு ஜூலை 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.