எல்லைக்கல் புத்தன் !!!



வடக்கே ஒரு காணி உண்டு.
ஆங்கே,
பறவை எச்சத்தில் முளைத்த
'போதி' மரம் ஒன்று.
தெற்கே சேதி போயிற்று.
அன்றே,
படை பரிவாரங்களோடு
கிளம்பி வருகிறார்.
இது நூற்றாண்டு காலப் 'போதி' என்று
புராணக் கதை அளக்கிறார்.

புத்த தேவா!
அடுத்தவன் காணி பறித்து
உனக்கொரு புண்ணிய பூமி.
ஏதிலிகள் முகடு பிரித்து
உனக்கொரு மேற்கூரை.
கந்தனின் காண்டாமணி திருடி
உனக்கொரு மணி மஹால்.
விஷ்ணுவின் ரதச்சில்லு பிடுங்கி
உனக்கொரு தர்ம சக்கரம்.
கண்ணகி ஆத்தாள் சேலை உருவி
தேரர் உடம்புக்கொரு காவித்துணி.
நீ வந்து குடியேறும் ஊரெல்லாம்,
ஏலவே குடியிருந்த
 எம்பெருமானின் 'மூத்த பிள்ளை' 
குடிபெயர்ந்து போகிறான்.
நாளைக்கு கர்த்தரும்?
நாளைக்கு மறுநாள் அல்லாஹ்வும்?

கோவில் இல்லா ஊரில்
குடியிருத்தல் ஆகாதாம்.
ஆள் அரவம் இல்லா
இடுகாடு எல்லாம்
உனைக் குந்த வைத்து விட்டார்.
'இலங்கையின் கொலைக்களம்
முள்ளிவாய்க்கால்' நிலத்திலும்
நாளை நீ குந்த வைக்கப்படுவாய்,
துருப்பிடித்த பல்லும்
உக்கிய என்பும் மசிரும்
கண்டெடுக்கப்பட்டதாய்ச் சொல்லி.

தூயவனே!
'பாசம்' உளம்
ஆளும் என்றாய்.
இவரோ,
'பாசிசம்' உலகு
ஆளும் என்கிறார்.
'அறம் செய் தலை
காக்கும்' என்றாய்.
இவரோ,
'அரம் செய்
தலை கொய்' என்கிறார்.
இதயங்கள் பிணைக்க
'அன்பை தூது விடு' என்றாய்.
இவரோ,
இதயங்கள் பிளக்க
'அம்பை ஏவி விடு' என்கிறார்.
தீது அதை 'அன்பால் கொல்'
என்றாய். இவரோ,
நன்று அதை 'அணுகுண்டால்
கொல்வோம்' என்கிறார்.
'புஷ்பங்கள் நிறைந்த பாதையில்'
நாட்டுக்கு வழி
காட்டுங்கள் என்றாய். இவரோ,
'சர்ப்பங்கள் நிறைந்த பாதையில்'
காட்டுக்கு வழி
காட்டுவோம் என்கிறார்.
'தானியங்களை விதை'
என்றாய். இவரோ,
'கண்ணிவெடிகளை
புதை' என்கிறார்.
'புத்தகசாலைகள்
பெருகட்டும்' என்றாய். இவரோ,
'சிறைச்சாலைகள்'
பெருகட்டும்' என்கிறார்.
'எண்ணங்களின் மனம்'
தான் முதன்மை என்றாய்.
இவரோ,
'மரணங்களை எண்ணிக்
கொண்டிருத்தல்'
முதன்மை என்கிறார்.
ஈ எறும்பைக் கொல்தல்
கூடப்பாவம் என்றாய்.
இவரோ,
'இருபத்தோராம் நூற்றாண்டு
இனப்படுகொலையை'
செய்து விட்டு
தொழுது களிக்கிறார்.
காயம் பட்ட புறாவுக்கு
மருந்து தந்து
காத்து மகிழ்ந்தாய். இவரோ,
நீ உயிர் காத்த புறா
உந்தன் கோபுர கலசத்தில்
எச்சமிட்டதற்காய் குற்றம் கடிந்து
தூக்கிலிட்டு விருந்துண்டு
களிக்கிறார்.

திருட்டுப் போனது துரவுகள்
மட்டும் அல்ல, தமிழர்
பொழுதுகளும் தான்.
'சுப்ரபாதம்' கேட்டே விடிந்த
அதிகாலையை,
'பிரித்' ஓதும் சத்தம்
களவாடிக் கொண்டு போய் விட்டது.
தியானத்தில் ஆழ்ந்து நீ இருப்பதை,
உன் அடியவர் உறக்கம் என்றெண்ணித்
தரும் தொல்லைகள் தான் பாரும்.

மஹா தேவா!
உலகெல்லாம்
அமைதியின் உருவான நீ,
ஈழ நிலத்தில் மாத்திரம்
ஆக்கிரமிப்பின் உருவமாக
உருத்திக் கொண்டு இருக்கிறாய்.
உந்தன் அடியவர்க்கு
இப்போ நீ 'தெய்யோ' அல்ல,
காணி பிடிக்க ஒரு
எல்லைக்கல் மட்டுமே!


புத்தா!
உன் போதனைகள்
பேரர்க்குப் போதவில்லை.
மறுபடியும் பிறந்து வந்து
இவர் புத்திக்குள் புகுத்தினால்,
கபாளம் பிளந்து இவரே
உமக்கு வகுப்பெடுப்பார்.

இந்த நிகழ்கால குறிப்பில் ஆளப்பட்டுள்ள சொல்லாடல்கள் சிலவற்றின் விளக்க குறிப்புகள்: 
# போதி மரம் - அரச மரத்தை சிங்கள மொழியில் 'போதி' என்று அழைப்பர்,
# எம்பெருமானின் மூத்த பிள்ளை - இந்துக்களின் முழுமுதல் கடவுள் சிவபெருமானின் 'மூத்த பிள்ளை' பிள்ளையார் கடவுள்,
# தெய்யோ - தெய்வம் என்பதை சிங்கள மொழியில் 'தெய்யோ' என்று அழைப்பர்,

எழுதப்பட்ட சந்தர்ப்பம்:
ஈழத்தில் சமீப காலத்தில் முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை  நீராவியடி பிள்ளையார் ஆலயம், கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயம், தென்னைமரவாடி அமரிவயல் பிள்ளையார் ஆலயம், தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயம், வவுனியா மாவட்டம் ஒலுமடு வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம், திருகோணமலை மாவட்டம் கன்னியா வெந்நீறூற்று பிள்ளையார் ஆலயம் என்பவற்றை பெயர்த்து விட்டும்...

யாழ்ப்பாணம் மாவட்டம் நாவற்குழி மற்றும் காங்கேசன்துறை தையிட்டி பகுதிகளில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை கபளீகரம் செய்தும்... பிரமாண்டமாக பெளத்த விகாரைகள் நிர்மாணம் செய்யப்பட்டு வரும் சூழலில் இந்த நிகழ்கால குறிப்பு எழுதப்பட்டது.

தாயக கவிஞர்,
-அ. ஈழம் சேகுவேரா-
 (முல்லைத்தீவு)
நிமிர்வு ஜூலை 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.