தேசியவாதம் - அரசியல்கலவரங்கள், வன்முறைகள், அடக்குமுறைகள் இவை எதுவும் இலங்கைக்கு புதிதல்ல. அன்று தமிழர்கள் மீது சிங்கள - பௌத்த பேரினவாதம் காட்டிய அடக்குமுறை - ஆக்கிரமிப்பு மனோபாவம் ஈஸ்டர் திருநாளில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய தாக்குதல்களுடன் முஸ்லிம்கள் மீது திரும்பியிருக்கிறது என நம்புகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.

மஹிந்த ராஜபக்ஸவின் அரசுக்கு சற்றும் சளைக்காத தமிழின அழிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முண்டுக் கொடுப்புடன் நடக்கும் ரணில் அரசாங்கம் அரங்கேற்றுகிறது. பேரழிவு ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் இறுதிப் போரில் பயன்படுத்தப்பட்டன. உணவு, குழந்தைகளின் பால்மா, மருந்துகள் என்பவற்றுக்கு தடை விதித்து மஹிந்த அரசு நடத்திய மனிதாபிமானமற்ற - கொடூரப் போரில் பட்டினி, அவலச்சாவுகள் ஏராளம். விளைவு 2006 போர் தொடங்கும் முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை சுமாராக 4 இலட்சம். போர் முடிவுக்குப் பின்னர் 2009 வைகாசி நடுப்பகுதிக்குப் பின்னர் எஞ்சிய மக்களின் எண்ணிக்கை 2இலட்சத்து 90 ஆயிரம்.

மனிதாபிமானப் போர் எனக் கூறி மஹிந்த அரசாங்கம் நடத்திய இனவழிப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கு அதிகம். மஹிந்தவின் இனவழிப்புக்கு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் எதிர்ப்புக்கள் கிளம்பின. உள்நாட்டு எதிர்ப்புகள் அடக்கப்பட்டன. சர்வதேச எதிர்ப்புகள் வல்லரசுகளின் ஆதரவு இல்லாததால் பெரியளவில் கண்டு கொள்ளப்படவில்லை.

2015 தேர்தல் ரணில் மைத்திரி தலைமையில் புதிய ஆட்சியை உருவாக்கியது. சமாதானம், நல்லிணக்கம் என்ற பாதையில் பயணிக்கப் போவதாகக் கூறிய புதிய அரசாங்கம் அவற்றுக்கு முற்றிலும் எதிரான பாதையிலேயே பயணித்தது - பயணிக்கிறது. மஹிந்த அரசாங்கத்தின் கீழ் நடந்த இராணுவப் போர்க் குற்றங்கள், மனித உரிம மீறல்களுக்கு தண்டனையையோ போரில் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு நீதியையோ வழங்க இவர்களும் தயாரில்லை. “மன்னிப்போம் மறப்போம்” என்ற புதிய கோசத்துடன் தமிழின இருப்பையே இல்லாதொழிக்கும் செயல்களே முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கத்தியின்றி… இரத்தமின்றி… நடத்தப்படும் இந்தத் தமிழின அழிப்பு உள்நாட்டிலும் அவ்வளவு கவனம் பெறவில்லை. இதனால் சர்வதேசத்தின் கவனத்தையும் பெறவில்லை.  சுயாட்சி கோரிப் போராடும் தமிழினத்தின் மீது இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போர் அதன் இருப்பை இல்லாமல் செய்வதுதான். தமிழ்த் தேசியத்தின் நிலைத்திருப்புக்கான அம்சங்களை அழிப்பதன் மூலம் இதனை இலகுவாகச் செய்துவிட முடியும். அவற்றையே ரணில் அரசாங்கமும் கையாண்டு வருகின்றது. (ரணில் அரசாங்கம் இதைத் தீவிரமாக முன்னெடுத்தாலும் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் அதற்கு முன்னரும் இதற்கு அடித்தளம் போடப்பட்டு விட்டது என்பதே உண்மை.)

தேசியத்தின் இருப்பு அல்லது தேசிய இனமொன்று சுயாட்சி கோருவதாயின் தனக்கென கட்டமைக்கப்பட்ட அரசியல், சமூகம், பொருளாதாரம், தாயகம் என்பவற்றுக்கு உரித்துடையதாக இருக்க வேண்டும் என்பது தேசியவாதத்துக்கான வரைவிலக்கணம்.  அதாவது, தேசியவாதம் என்பது அரசியல், சமூகம், பொருளாதார கொள்கைகளையுடைய ஒரு இயக்கம். அது குறிப்பிட்ட ஓர் இனத்தின் நலன்களை முன்னெடுப்பதாகவும் குறிப்பாக அவ்வினத்தின் தாயகத்தின் மீதான இறையாண்மையைப் பேணுவதாகவும் இருக்கிறது.

(Nationalism is a Political, Social and Economic ideology and movement. Characterized by the promotion of the interests of a Particular Nation especially with the aim of giving and maintain the Nation’s Sovereignty (Self governance) over its Homeland)

அரசியல்

ஈழத்தமிழினம் தனக்கெனத் தொன்மை நிறைந்த அரசியல் வரலாற்றைக் கொண்டது. ஆனாலும், இதற்கான ஆய்வுகள் இன்னமும் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை. எனினும் வரலாற்று ஆதாரங்களின்படி யாழ்ப்பாணத்தரசர்கள், கிழக்கு வன்னிமைகள், வன்னிச்சிற்றரசர்கள் என அரசியல் நிர்வாகங்கள் தமிழர்கள் மத்தியில் இருந்தன. தென்னிலங்கையின் துட்டகைமுனு, பாராக்கிரமபாகு, ஆறாம் புவனேகபாகு போன்ற ஒரு சில மன்னர்களின் காலத்திலேயே இலங்கை முழுமையாக இணைந்திருந்தது. ஆனாலும்கூட அக்காலத்தில் சிற்றரசுகள் சில சுதந்திரமாக இருந்தன என்பதற்கும் வரலாற்றாதாரங்கள் உண்டு.

ஐரோப்பியரின் ஆட்சிக்காலத்திற் கூட தமிழர் தாயகத்திலும் இன்றைய தென்னிலங்கையிலும் மக்களின் பண்பாடு, கலாசார வேறுபாடுகளுக்கு ஏற்ப தனியான ஆட்சி முறைகளே நடைமுறையில் இருந்தன. இதற்கு தமிழரின் அரசியல் முறைகளும் ஒரு காரணம். ஈழத்தில் அரசியல் கட்சிகளின் வரலாறு ஆரம்பித்தபோது சேர் பொன்.அருணாசலம் இலங்கைக் காங்கிரஸ் கட்சியை (1919) ஆரம்பித்தார். இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதற் கட்சி இதுதான் - பதிவுபெற்ற முதற் கட்சியும் இதுவே.

இலங்கையில் நடத்தப்பட்ட முதற் தேர்தலில் படித்தவர்கள் மட்டும் வாக்களிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போது தெரிவானவர் சேர் பொன்.இராமநாதன். நாடு சுதந்திரமடைந்த பின்னர் நாட்டின் அரசியல் பல மாற்றங்களைச் சந்தித்தது. தமிழர்கள் சுயாட்சிக் கோரிக்கையை நோக்கித் தள்ளப்பட்டனர். அந்தளவுக்கு அரச நிர்வாக முறைமைகள் பேரினவாத சக்திகளின் ஆளுமைக்கு உட்பட்டன. தமிழர்களின் பேரபிமானம் பெற்ற தலைவரான “தந்தை” எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தனியாக கட்சி ஆரம்பிக்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட போது சுயாட்சிக் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு தனது கட்சிக்கு The Ceylon Federal Party என்றே ஆங்கிலத்தில் பெயரிட்டார். இதன் நேரடி மொழிபெயர்ப்பு ‘இலங்கைத் தமிழ்  அரசுக் கட்சி’ என்ற பெயர் பெறாவிடினும் கூட ‘தமிழ் அரசு’ என்ற பெயர் கையாளல் இருக்கிறது. இது தனித்தேசம் குறித்த சிந்தனையிலேயே உருவானது.

தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் - வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட பின்னர் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்த ஒரு பலம் அவசியம் என்ற நிலை உருவானது. இதையடுத்து தமிழ் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அப்போது மலையகத் தமிழர்களின் பேரபிமானத்தைப் பெற்றிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பவை இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி உதயமானது.

வரலாற்று தவறுகள் மற்றும் சில உதிரிக் காரணங்களால் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரிந்தது. இளைஞர்களின் ஆயுத எழுச்சிப் போராட்டம் தீவிரமாகிய பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ‘ஏக பலம்’ பெற்றதன் பின்னர் கட்சி அரசியல் செயற்பாடுகள் பலமிழந்து போயின.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் தனியான நிர்வாகத்தை நடத்தினர். பெரும்பான்மை தமிழர்கள் குறிப்பாக யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இந்நிலைமை புலிகளுக்கு சாதகமாக அமைந்தது. பின்னாளில் வன்னி, கிழக்கின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே ஆட்சி செலுத்திய விடுதலைப்புலிகள் ஒட்டு மொத்த தமிழர்களின் அபிலாசைகளையும் நிறைவேற்றவே போரிட்டனர். ஆனால் அதை சர்வதேசம் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. சர்வதேசம் தமிழர்களின் விருப்பு ஒரு ஜனநாயக வழி வெளிப்பாடாக இருக்க வேண்டும் என விரும்பியது.

சர்வதேசத்தின் இந்த எண்ணத்தைப் புலிகளும் நன்கு புரிந்திருந்தனர். அதேவேளை ஆயுதப் போராட்டத்துக்கு சமாந்தரமாக மக்கள் வழி அரசியல் போராட்டமும் அவசியம் என்பதையும் உணர்ந்திருந்தனர். இதனால் தான் 1999 களின் இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி (இலங்கை தமிழ் அரசுக் கட்சி முதலில் இந்தக் கட்சியின் ஊடாகவே அங்கம் வகித்தது) அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ என ஆயுதப் போராட்ட அமைப்புகளாக இருந்து பின்னாளில் அரசியல் கட்சிகளாக மாறிய கட்சிகளும் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டன. எது எப்படி இருந்தாலும் புலிகள் என்ற ஒற்றைச் சொல்லே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்தது வழிநடத்தியது-இயக்கியது. அன்று கூட்டமைப்புக்குள் ஜனநாயகம் சற்றுக் குறைவு எனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும் அதுவே தமிழர் அரசியலின் பலமாகவும் ஒருமித்த குரலாகவும் இருந்தது. கூட்டமைப்பு சந்தித்த இரண்டாவது தேர்தலில் (2004) 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று தமிழர்களின் அரசியல் பலமாக ஒளிர்ந்தது.

ஆனால் 2009 இன் பின்னர் புலிகளின் ஆயுத போராட்ட மௌனிப்புடன் நிலைமை தலைகீழாகியது. தமிழத் தேசியக் கூட்டமைப்புக்குள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் மேலோங்கியது. இந்தியாவின் செல்லப்பிள்ளையாக மாறியது கூட்டமைப்பு. புலிகளால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கூடவே தீவிர தமிழத் தேசிய வாதத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க முயன்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசும் வெளியேற்றப்பட்டது – வெளியேறியது. தமிழ் அரசுக் கட்சியை அனுசரிப்பவர்களே கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் அங்கம் வகிக்கலாம் என்ற நிலை உருவானது.

2009 இறுதியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழின அழிப்பைச் செய்த பிரதான சூத்திரதாரி கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளியாக மாறியது கூட்டமைப்பு. 2006-2009 வன்னி இறுதிப் போரில் பெரும் இனவழிப்பை செய்த மஹிந்தவிற்கு எதிர் என்ற பெயரில் இனவழிப்புப் போரை வழிநடத்திய தளபதி சரத்பொன்சேகாவை ஆதரித்தது. மஹிந்த வீழ்ச்சியை அவர்களால் அன்று செய்ய முடியவில்லை. இதற்கு அவர்களின் பலவீனமான தந்திரங்களும் அணுகுமுறைகளுமே காரணம். அன்று தொடங்கிய த.தே.கூட்டமைப்பு -  ஐ.தே.கட்சி பங்காளி உறவு இற்றைவரை தொடர்கிறது. இந்த உறவுதான் தமிழரின் பலமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மெல்ல மெல்லச் சிதறடித்தது- சிதறடிக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இப்போதும் நடக்கும் குழப்பங்கள் தன்னிச்சைப் போக்குகள் - பிளவுகள் - பிரிவுகள் எல்லாவற்றுக்கும் காரணம் சாட்சாத் ஐ.தே.க.வேதான். சமாதானப் பேச்சுக்காலத்தில் (2002-2006) இது ஆபத்தில் முடியப் போகிறது என்பதைப் புலிகள் உணர்ந்தபோது அவர்களால் பேச்சிலிருந்து விலகவும் முடியவில்லை. அமைப்புக்குள் எழுந்த உடைவுகளையும் - குழப்பங்களையும் தடுக்கவும் முடியவில்லை. இப்போதும்கூட அவ்வாறானதொரு நிலைப்பாட்டிலேயே கூட்டமைப்பும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

24 ஆண்டுகளாக வடக்கில் நடத்தப்படாத மாகாண சபைத் தேர்தல் 2013 இல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. அதேவேளை தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு மனநிலையையும் சர்வதேசத்ததுக்கு வெளிப்படுத்த வேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால் தமிழ் மக்கள் ஜனநாயக வழியாக தேர்தலில் நம்பிக்கை அற்றவர்களாக காணப்பட்டார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் மக்களை ஜனநாயகத்தின் பாலும் தேர்தலின் மீதும் நம்பிக்கை வைக்கச் செய்ய வேண்டிய  பொறுப்பும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தேவைப்பட்டன . இதேவேளை தனித்து அமையும் மாகாண அரசு, மத்திய அரசுடன் முரண்பட வேண்டியும் ஏற்படும். இதனை சமாளிக்க சட்ட நுணுக்கம் தெரிந்த ஒருவர் முதல்வராக வேண்டும் என்பதும் கட்டாயமானது.

இவ்வாறான நிலையில்தான் முன்னாள் நீதியரசர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்  அழைத்துவரப்பட்டார். அவர் கவர்ச்சிகரமான சட்டம் நன்கறிந்த வேட்பாளர் மட்டுமல்ல மக்களின் மதிப்பையும் பேரபிமானத்தையும் பெற்றவராகவும் திகழ்ந்தார். அறுதிப் பெரும்பான்மையை பெற்று வடக்கின் ஆட்சியை கூட்டமைப்பு கைப்பற்றினாலும் அவர்களால் எதனையும் சாதிக்க முடியவில்லை. மத்திய அரசின் அனுமதியின்றி எதுவும் அசையவில்லை. வெறுமனே கூடித் தீர்மானங்களை நிறைவேற்றி கலைந்தார்கள்.

2015 இல் ஆட்சி மாறியது. ஆட்சி மாற்றத்தில் பங்காளியாகியது த.தே.கூ. ஆனால் மாகாண - மத்திய அரசுகளின் இந்த மாற்றம் எதையும் சாதித்துவிடவில்லை. மாகாண அரசின் ஆயுள் முடியும் வரை வடக்கில் மாகாண அரசால் எதையும் நடைமுறைப்படுத்தவோ – மாற்றியமைக்கவோ முடியவில்லை. இத்தனைக்கும் மாகாணத்தில் ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் மத்தியில் ஆளும் அரசுக்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கிறது. மாகாண அரசால் எதுவும் முடியாமல் போனமைக்கு கூட்டமைப்பக்குள் நிலவிய உட்கட்சி பூசல்கள்தான் காரணம். தமிழ் அரசுக்கட்சியே அனைத்தும் என்று ஆகிவிட்டமையே குழப்பங்கள் - பூசல்கள் அதிகரிக்கக் காரணம். இதன் உச்சமே பிளவுக்கும் வழிவகுத்தது. முதலில் ஈ.பிஆர்.எல்.எவ் கட்சியும் பின்னதாக முதல்வர் விக்னேஸ்வரனும் அவருடன் சேர்ந்த சிலரும் பிரிந்து தனியாகக் கட்சிகளை ஆரம்பித்தனர்.

கூட்டாக தமிழனத்தின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலிக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தனித்தனியே சிதறிக் கிடக்கிறது. தமிழினத்தை வழி நடத்தி முன்னெடுக்க வேண்டிய எமது அரசியல் - அரசியல் தலைமைகள் இன்று எதிரிகளான சிங்கள - பௌத்த தலைமைப் பீடங்கள் தீர்மானிக்கும் - விரும்பும் திசையில் பயணிக்கின்றது.

* சிதறிக் கிடக்கும் தமிழ் தேசிய வாதக்கட்சிகள்

*   தமிழரின் அரசியல் குடுமி சிங்கள தலைமைகளிடம்

*   உறுதியற்ற அரசியல் தலைமை

*   வடக்கு - கிழக்கு - மலையகம் - கொழும்பு எனப் பிளவுண்டு கிடக்கும் மனநிலை அரசியல்.

*   தமிழர் - முஸ்லிம்கள் தமிழ பேசும் மக்களாக இணைய மறுக்கும் அரசியல் தந்திரம்

*   தேசிய கட்சிகளுடன் பயணிக்க முனையும் தமிழ்க் கட்சிகள்

என தமிழ் பேசும் மக்களின் ஒட்டு மொத்த அரசியல் நகர்வும் பிளவுண்டு - சிதறுண்டு கிடக்கிறது. இதே நிலை நீடித்தல் நீர்கொழும்பு தமிழர்களின் நிலையே வடக்கு - கிழக்கு - மலையக தமிழர்களுக்கும் ஏற்படும்.

இந்நிலை தொடர்வதையே ஐ.தே.கட்சியும் பேரினவாத சக்திகளும் விரும்புகின்றன. விரும்பியோ - விரும்பாமலோ தமிழரின் அரசியல் நெறி ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

சமூகம் - பொருளாதாரம் - தாயகம் அடுத்த இதழ்களில்…!

ஐங்கரன் 
நிமிர்வு ஆகஸ்ட் 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.