ஒரு புதிய பண்பாடு எமக்கு தேவையாக இருக்கின்றது




கடந்த 06.07.19 அன்று இடம்பெற்ற தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாட்டில் அரசியல் சமுக ஆய்வாளர் நிலாந்தன் ஆற்றிய உரை வருமாறு:

தேசியம் என்றால் என்ன? நாங்கள் தேசியத்தின் பேரால்  பல தசாப்தங்கள் போராடியிருக்கின்றோம்; இரத்தம் சிந்தியிருக்கின்றோம்; லட்சக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கின்றோம்; காணாமல்போயிருக்கின்றோம். எங்களிடம் கட்சிகள் உண்டு அதன் பெயர்களில்  தேசியம் என்ற வார்த்தை உண்டு. ஆனால் தேசியம் என்றால் என்ன என்று கேட்டால் அதற்கு பொருத்தமான பதிலைத் தரக்கூடிய நிலையில் எத்தனை அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்? பெரும்பாலான தொண்டர்கள் அதற்குப் பொருத்தமான பதிலைத் தரமுடியாது இருக்கின்றார்கள். அரசியற்கட்சி தலைவர்களிலும்  மிகச் சிலரே அதில் ஓரளவுக்கு விளக்கத்தோடு இருப்பதாகத் தெரிகிறது. எமது ஊடகங்களிலும் அந்தக் குழப்பம் உண்டு. முகநூலில் தேசியம் என்றாலே யாழ்ப்பாணத்து வெள்ளாளர் அரசியல் என்று கூறும் ஒரு போக்கு வலுவடைந்து வருகிறது. இத்தனைக்கும் நாங்கள் தேசியத்தின் பெயரால் இரத்தம் சிந்திய மக்கள். ஆனால், தேசியம் என்ற வார்த்தையை நாங்கள் விளங்கிக் கதைக்கின்றோமா?

தேசியம் என்றால் என்ன? இந்தக் கேள்வியே மூன்று தசாப்த ஆயுதப்போராட்டத்தின் பின் அதற்கு பின்னரான பத்தாண்டு காலமான மிதவாத அரசியலுக்குப் பின் கேட்க வேண்டியிருக்கிறது. தேசியம் என்பது ஒரு மக்கள் திரளின் கூட்டுப்பிரக்ஞை.  தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். நாடு என்பது புவியியல் ரீதியாக வரையறுக்கப்பட்ட எல்லைகளிடப்பட்ட  ஒரு நிலத்துண்டு. ஒரு நாட்டுக்குள் பல தேசங்கள் இருக்க முடியும். ஒரு நாட்டிற்குள் பல மக்கள் திரள்கள் இருக்க முடியும். ஆனால் எல்லாத் தேசங்களும் அரசுடையவையாக  இருப்பதில்லை. உலகில் அரசற்ற தேசங்களே அதிகம். அரசுடைய தேசங்கள் குறைவு.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மன்னரின் காலத்தில் குடியேற்ற (கொலனி) ஆதிக்கத்திற்கு முன்பு அவர்களிடம் ஒரு அரசு இருந்திருக்கிறது. வெள்ளைக்காரரின் வருகைக்கு பின் அந்த அரசு இல்லாமல் போனது. பின்னர் ஆயுதப்போராட்டம் 1986 ஆம் ஆண்டிலிருந்து ஒரு கருநிலை அரசைத் தோற்றுவித்தது. 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் அந்தக் கருநிலை அரசு தோற்கடிக்கப்பட்டது. அதற்குப்பின் அரசு என்பது தமிழ் மக்களின் கனவாகத் தொடங்கியது. இப்படிப் பார்த்தால் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அரசு என்பது ஒரு காலம் இருந்தது. பிறகு இல்லாமல் போயிற்று. எனவே ஈழத்தமிழர்கள் அரசுடைய தேசமாகவும் இருந்தார்கள். அரசற்ற தேசமாகவும் இருந்தார்கள். ஆங்கிலத்தில் இதை subjective ஆகவும் நாங்கள் அரசுடைய தேசமாக இருந்தோம், objective ஆகவும் நாங்கள் அரசுடைய தேசமாகவும் இருந்தோம் என்று கூறுவார்கள்.

இப்பொழுது நாங்கள் அகவயமாக ஒரு அரசுடைய தேசமாக எங்களை உணர்கின்றோம். ஒரு தேசமாக இருப்பது என்பதற்கு  அரசு ஒரு முக்கிய நிபந்தனை அல்ல. மக்கள் ஒரு திரளாக இருந்தாலே அது ஒரு தேசம் தான். இலங்கைத்தீவில் மூன்று மக்கள் திரள்கள் உண்டு. அதற்கு அப்பால் மலையகமும் இப்பொழுது தம்மை ஒரு தேசமாக கருதிக்கொள்வதனால் அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இலங்கைத்தீவில் மிகப்பெரிய 4 மக்கள் திரள்கள் உண்டு. இந்த நான்கு மக்கள் திரள்களில் சிங்கள தேசம் தான் அரசைக் கொண்டிருக்கிறது. எனவே தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் என்பது அந்த மக்கள் திரளின் கூட்டுப்பிரஞ்ஞை. எனவே மக்களை திரளாக்கும் எல்லாமே தேசியத்தின் தன்மை மிக்கவைதான். எதுவெல்லாம் மக்களைத் திரளாக்குகிறதோ அது தேசியத்தன்மை மிக்கது.

எதுவெல்லாம் மக்களைத் திரளாக்கும்? நிலம் திரளாக்கும் (அதைத்தான் நாங்கள் தாயகம் என உணர்கின்றோம்); இன உணர்வு திரளாக்கும்; மொழி திரளாக்கும்; கலாச்சாரம் திரளாக்கும்; பண்பாடு திரளாக்கும்; பொருளாதாரப் பிணைப்பு திரளாக்கும்; அதற்கெதிரான அடக்குமுறை திரளாக்கும்.  எந்த இன அடையாளத்தின் பெயரால் நாங்கள் ஒடுக்கப்படுகின்றோமோ அந்த ஒடுக்கு முறை எங்களை ஒரு திரளாக்கும். இப்படிப் பார்த்தால் ஒரு மக்களைப் பல காரணங்கள் திரளாக்குகின்றன. அதில் ஒன்று தான் நிலம், தாயகம்.

ஆனால் ஒரு மக்களை திரளாக்கும் எல்லாக் காரணங்களும் எல்லா அம்சங்களும் முற்போக்கானவைகளாக இருக்க வேண்டுமென்றில்லை. உதாரணமாக மதம். மதம் மக்களை திரளாக்கும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் ஒரு மதம் தன்னை ஏனைய மதங்களை விட பெரிது என்று சொல்லும். உயர்வு என்று சொல்லும். அப்படி சொல்லும் போது ஏற்றதாழ்வு வரும். சாதியும் ஒரு பகுதி மக்களை திரளாக்கும். ஆனால் அங்கேயும் ஒரு சாதி இன்னொரு சாதியைவிட பெரிது என்று வரும் போது அங்கே அசமத்துவம் உண்டாகும். திரள் உடையும்.

ஆண் பெண் பால் வேறுபாடுகளும் ஒரு திரள் தான். அங்கேயும் அசமத்துவம் வரும்போது திரள் அங்கும் உடையும். எனவே பால், சமயம், சாதி, வடக்கு கிழக்கு மலையகம் என்னும் பிரதேசம்  போன்ற அம்சங்கள் திரளாக்கத்திற்கு எதிரானவை. அவை திரளாக்கத்தை சிதைப்பவை. எனவே திரளாக்கத்திற்கு எதிரான அனைத்தும் தேசியத்தன்மை அற்றவை. எதுவெல்லாம் திரளாக்குகின்றதோ அதுவெல்லாம் தேசியத்தன்மை மிக்கது. இப்படிப் பார்த்தால் ஒரு மக்கள் திரளை ஒரு கட்டாக வைத்திருப்பது என்று சொன்னால் அவர்கள் ஒருவர் மற்றவர்களுக்குச் சமம் என்ற அடிப்படையில் திரளாக்கப்பட வேண்டும்.

என்னுடைய கோயிலுக்குள் நீ வரமுடியாது என்று சொன்னால் நான் தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு சாதிவாதி ஒரு தேசியவாதி அல்ல. ஒரு ஆண் ஆதிக்கவாதி தேசியவாதி அல்ல. ஒரு மத வெறியன் தேசியவாதி அல்ல. யார் தேசியவாதி என்றால் ஒருவர் மற்றவருக்கு சமம் என்று கருதுகின்றவர் தான் முதலாவதாக தேசியவாதி. எனவே ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையிற் தான் நாங்கள் மக்களைத் திரளாக்கலாம். அப்படி என்றால் ஜனநாயகம் என்கின்ற அடிச்சட்டத்தின் மீது தான் ஒரு தேசியபிரக்ஞையைக் கட்டியெழுப்பலாம். எனவே ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் ஒரு தேசிய ஆத்மா வனையப்பட வேண்டும். அப்படி வனையப்படுவதற்கு நிலம் ஓர் அடிப்படைக் காரணியாக அமையலாம். அதுதான் பசுமை இயக்கம் சொல்ல வருகின்ற விடயம். தேசியமும் பசுமையும் இணைகின்ற இடம் அதுதான்.

ஒரு தேசியப் பிரக்ஞையை, ஒரு மக்களைத் திரளாக்கும் அம்சங்களில் பிரதானமானவை நிலம், தாயகம், மக்கள் வாழும் சூழல். இந்தச் சூழல் தான் அந்த மக்களை ஒரு கட்டாக இறுக்கிக் கட்டுகிறது. அந்த தாயகச் சூழலை பேணுவது என்பது மக்களைத் திரளாக்குவதற்கு அவசியமானது. எனவே தனது தாயகச் சூழலைப் பேணுகின்ற ஒவ்வொருவருமே சூழலியல்வாதியாக இருக்கும் வேளையில் தேசியவாதியாகவும் இருக்கிறார்கள். ஒரு தேசியவாதி கட்டாயமாக ஒரு சூழலியல்வாதியாக இருக்க வேண்டும். ஒரு சூழலியல்வாதி ஒரு தேசியவாதியாகத்தான் தனது பயணத்தை தொடங்கலாம். உன்னுடைய கடலில் உனக்கு சொந்தமில்லை, உரிமையில்லை  என்று சொன்னால் நீ உலகிலுள்ள கடல்களை காப்பாற்ற முடியாது. நான் என்னுடைய வீட்டில் ஒரு புங்கமரத்தை நட்டால் அந்தக் காற்றை எனக்கு மட்டும் சொந்தங் கொண்டாட முடியாது. 

உலகிலேயே அரசறிவியலில் ஒரே நேரத்தில் தேசியத்தன்மை மிக்கதாகவும் சர்வதேசத்தன்மை மிக்கதாகவும் இருக்கக் கூடியது சூழலியல்த் தேசியம் தான். சூழலியல்த் தேசியவாதி ஒரே நேரத்தில் தேசியவாதியாகவும் இருக்கின்றான் அதே நேரத்தில் சர்வதேசவாதியாகவும் இருக்கின்றான்.

எனவே என்னுடைய கடலில், என்னுடைய காட்டில், என்னுடைய வயலில், என்னுடைய குளத்தில், என்னுடைய ஆற்றில், என்னுடைய ஆற்று மண்ணில் எனக்கு உரிமையில்லை என்று சொன்னால் நான் உலகங்களின் சூழலைப்பற்றிக் கதைக்க முடியாது. உதாரணமாக சில நாட்களுக்கு முன் காங்கேசன்துறையில் 400 மீற்றர் பரப்பளவான ஒரு பவளப்பாறைத்திட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்தது கடற்படை. navy. lk  என்ற இணையத்தளத்தில் தான் அந்தப்படங்கள் பிரசுரமாகியிருக்கின்றன. அந்தப் பவளப்பாறையை அவர்கள் பாதுகாக்கப் போவதாக அறிவித்திருந்தார்கள். அந்தப் பவளப்பாறை அவர்களுடைய பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கின்றது. அது தமிழ் மக்களின் தேசியச்சொத்து. அது தமிழ் மக்களின் தேசியச்சூழல். எனவே அந்த சூழல் மீது எனக்கு உரிமை இல்லை என்று சொன்னால்  பின்னர் நான் உலகங்களின் பவளப்பாறைகளைப்  பாதுகாக்க முடியாது.

எனது தாயகத்தை பாதுகாப்பதற்கு எனக்கு அதற்கு வேண்டிய கூட்டுரிமைகள் வேண்டும். அந்த தன்னாட்சி உரிமைகளைத் தான் தமிழ்மக்கள் கேட்கிறார்கள். என்னுடைய வயலை, என்னுடைய காட்டை, என்னுடைய குளங்களை, என்னுடைய கனிப்பொருட்களை, என்னுடைய கடலட்டைகளை நான் பாதுகாக்க வேண்டும். எனது கடலில் வெளியிலிருந்து வரும் மீனவர்கள் றோலர்களால் உழுதுவிட்டு போகலாம் என்று சொன்னால், எனது இறால்களை கேப்பாபுலவில் யாரும் அள்ளிக்கொண்டு போகலாம் என்று சொன்னால், எனது கடலில் உழவியந்திரங்களை (ட்ரக்டரை) வைத்து யாரோ ஒருவர் வலையை இழுக்கலாம் என்று சொன்னால் எனக்கு அந்தக் கடலின் மீதும் காட்டின் மீதும் உரிமை இல்லை என்று அர்த்தம். எனவே எனது சூழலைப் பாதுகாப்பதற்கான கூட்டுரிமை எனக்கு வேண்டும். தாயகத்தைப் பாதுகாப்பது என்பது நிலத்தைப் பாதுகாத்தல் ஆகும். நிலம் மக்களைத் திரள் ஆக்குகின்றது. எனவே ஒரு தேசியவாதி கண்டிப்பாக சூழலியல்வாதியும்தான்.

ஒரு தமிழ்தேசிய சூழலியல்வாதி இப்பொழுது பல தரப்புக்களோடும் மோத வேண்டியிருக்கின்றது. ஒரு புறம், தன் தாயகத்தை ஆக்கிரமிக்கும் அபகரிக்கும் தரப்புக்கள், இன்னொரு புறம் தொழில்நுட்ப விரிவாக்கம். இன்னொரு புறம் கூட்டு (கோப்ரேட்) நிறுவனங்கள். இந்தப் பசுமை இயக்கத்திற்கும் அதே சவால் உண்டு. நீங்கள் சூழலியல்வாதியாக இருக்கும் அதே நேரம் மக்கள் அதிகாரத்தைப் பெற்ற ஒரு அரசியல்வாதியாக இருக்கும் பொழுது அந்தச் சவால் உங்களுக்கு வரும். ஒரு பல்தேசிய  நிறுவனத்திற்கு நீங்கள் தரகராக இருக்கப்போகின்றீர்களா, அல்லது உங்கள் தாயகத்தின் சூழலைப் பாதுகாக்கப் போகின்றீர்களா, என்ற கேள்வி வரும்.

இன்று இந்தியாவில் அந்தக் கேள்வி வந்துவிட்டது. கூட்டு நிறுவனங்கள் எப்பொழுதும் ஈவிரக்கமின்றி நிலத்தைச் சுரண்டும், ஆற்றைச் சுரண்டும், கடலைச் சுரண்டும், காற்றைச் சுரண்டும், எல்லாவற்றையும் சுரண்டும். கூட்டு நிறுவனங்கள் சுரண்ட வரும் பொழுது ஒரு சூழலியல்வாதி எப்படி அந்த இடத்தில் செயற்படலாம்? இது இந்த பசுமை இயக்கத்திற்கு இருக்கும் ஒரு சவால். ஒரே நேரத்தில் சூழலியல்வாதியாகவும் தேசியவாதியாகவும் இருப்பது; அந்தக் கூட்டு நிறுவனத்தின் தரகராக மாறாமல் இருப்பது. ஒரே நேரத்தில் சூழலியல்வாதியாகவும் தேசியவாதியாகவும் இருக்க வேண்டிய சவாலை இந்தப் பசுமை இயக்கம் எதிர்கொள்ள நேரிடும். கட்சியைப் பாதுகாப்பதா, அல்லது கட்சியைச் சேர்ந்தவர்களது நலன்களைப் பாதுகாப்பதா, அல்லது தான் வாழும் சூழலைப் பாதுகாப்பதா என்பது கத்தியில் நடப்பதற்குச் சமமானது. ஏனென்றால் இன்று கூட்டு நிறுவனங்கள் எல்லாவற்றையுமே விழுங்கிக் கொண்டு வருகின்றன.

அலைபேசிகள் கைபேசிகள் கோபுரங்களின் எழுச்சியோடு நாங்கள் சிட்டுக் குருவிகளை இழந்துவிட்டோம். நாங்கள் சிட்டுக்குருவிகளை மட்டுமா இழந்தோம் இப்பொழுது 5G என்று சொல்லிக் கொண்டு உயரமான கோபுரங்கள் வந்துவிட்டன. அதன் விளைவுகளையும் நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு காலம் எங்களுடைய ஊர்களில் எங்களுடைய வீடுகளில் உயிர்வேலி இருந்தது. நான் பிறந்தது உயிர்வேலி உடைய ஒரு கிராமத்து வீட்டில். அந்த உயிர்வேலி என்பது வெறும் வேலி அல்ல. அது அந்த நிலத்தின் எல்லைகளை பிரிக்கும் பிரிகோடுகள் அல்ல. அது தற்காலிகமானது. அதனாலையே அந்த வீடுகளுக்கிடையிலான பிரிவும் தற்காலிகமானது. அந்த வேலிப்பொட்டுக்களால் அங்காலை கதைக்கலாம். அந்த வேலி வெறும் வேலி அல்ல. அந்த வேலியில் சண்டி இருக்கும், பிரண்டை இருக்கும், முருங்கை இருக்கும், எல்லா மூலிகைகளும் இருக்கும். அந்த உயிர்வேலி ஒரு மூலிகைப் பந்தலாக இருந்தது. ஒவ்வொரு நாளும் நாங்கள் வெள்ளைக்கறி சமைக்கும் பொழுதும், அதற்கு வேண்டிய பச்சடி செய்யும் போதும் அதற்கு வேண்டிய  இலைகளை நாங்கள் அந்த வேலியிலிருந்து எடுப்போம்.

அந்த வேலியிலிருந்த முருங்கை இன்று எங்களிடம் இல்லை. நாங்கள் முள்முருங்கையை தொலைத்துவிட்டோம். முள் முருங்கை குறைந்த பட்சம் கல்யாண வீடுகளிலாவது நாளுக்கு நடும் ஒரு மரமாக இருந்தது. இன்று அதுவும் இல்லை. கடைசியில் கல்யாண முருங்கை வந்துவிட்டது. போகின்ற போக்கில் குரோட்டன் செடியைக் கொண்டு வந்து  நடவேண்டி வரும். முள்முருங்கையை எப்படித் தொலைத்தோம். சில பத்தாண்டுகளுக்குள்  தான் தொலைத்தோம். எங்களுடைய தாவரவியலாளர்கள் எங்களுடைய அறிஞர்கள் எங்களுடைய சூழலியலாளர்கள் இதற்குப் பதில் சொல்லவேண்டும். முள்முருங்கையை தொலைத்தது போல இன்னும் எத்தனையை தொலைக்கப் போகின்றோம்?

ஒரு புறம் நகரமயமாதல். நகரமயமாதலின் விளைவாக எமது நிலங்கள் சிறுத்துக்கொண்டு போகின்றன. முற்றம், கோடி இல்லாமல் போகின்றது. எல்லாமே சீமெந்தாலை மூடப்படுகின்றது. கடலோரக்கிராமங்களில் தம் கழிவுகளை தாம் எந்தக் கடலில் மீன் பிடிக்கிறார்களோ அங்கேயே கொண்டுபோய் கொட்டுகிறார்கள். நகரமயாதல் எங்களுக்கு நிறைய பிரச்சனையைக் கொண்டு வந்து விட்டது. தொழிநுட்பப் பெருக்கம், கைத்தொழில் விருத்தி, கூட்டு நிறுவனங்களின் வருகை இவையெல்லாம் புதிய சவால்கள். இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கான தற்காப்பு கவசங்கள் எவையும் எங்களிடம் இல்லை. இதுதான் பிரச்சனை.

இப்படி ஒரு பின்னணிக்குள் தான் ஈழத்தமிழ் சூழலியல் இயக்கம் ஒன்று ஒரு கட்சியாக மலர்கிறது. எனவே அந்தக் கட்சிக்கு பொறுப்புக்கள் அதிகம். அது சூழலையும் பாதுகாக்க வேண்டும். கட்சியையும் பாதுகாக்க வேண்டும். இந்தக் கட்சி மக்கள் அதிகாரத்தை பெற்று ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதித்துவத்தை பெறும் பொழுது அது கூட்டு நிறுவனங்களோடு மோதவேண்டி வரும். இந்த உலகளாவிய நிறுவனங்கள் அரசியல்வாதிகளைத் தரகர்களாக பயன்படுத்தப் பார்ப்பார்கள். அப்பொழுது அந்தக் கட்சி தீர்மானிக்க வேண்டும் சூழல் முக்கியமா? கட்சியின் நலன் முக்கியமா? இது ஒரு சவால்.

ஐரோப்பா ஓரளவிற்கு இதில் வெற்றி கொண்டிருக்கின்றது. ஆனாலும் பிரச்சினை இருக்கின்றது. ஆனால் ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளைப்பொறுத்த வரை இது ஒரு சவால். ஏனென்றால் கூட்டு நிறுவனங்கள், உலகப் பெரும் முதலாளி நிறுவனங்கள் அரசியல்வாதிகளைத் தரகர்களாகப் பயன்படுத்துகின்றன. அவர்களைத் தரகுப் பணம் மூலம் விலைக்கு வாங்குகின்றன. இப்படியான பின்னணியில் ஒரு சூழலியல் இயக்கமானது ஒரே நேரத்தில் கட்சியாகவும் நின்று நிலைப்பது என்பது மிகவும் சவால்கள் நிறைந்தது. இந்த சவால்களை எதிர்கொண்டு இந்தக்கட்சி மேலெழ வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் கடந்த பத்தாண்டுகளில் புதிது புதிதாக கட்சிகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடங்கிய பின்னும் இன்று புதிய பல கட்சிகள் வந்துவிட்டன. இப்பொழுது மற்றொரு புதிய கட்சி தோன்றியிருக்கின்றது. இந்தக் கட்சிகள் தமிழ் மக்களை திரளாக்குகின்றனவா? அல்லது சிதறடிக்கின்றனவா? இந்தக் கேள்வி மிகவும் முக்கியம். நாங்கள் ஒரு பெருந்திரளாக வேண்டிய காலகட்டத்தில் வாழுகின்றோம். எனவே நாங்கள் திரளாக்கத்திற்கு போக வேண்டும். சிதற முடியாது.

ஒரு மாற்றுத் தலைமை பற்றிய உரையாடல்கள் அதிகம் சோர்ந்து போன காலகட்டத்தில் நாங்கள் கூடியிருக்கின்றோம். மாற்றைப் பற்றி எழுதிய பலர் அதைப்பற்றியே எழுதாமல் விட்டு பல மாதங்களாகி விட்டன. மாற்று என்பது ஏற்கனவே இருக்கின்ற தலைமைக்கு எதிரானது மட்டுமல்ல. அது ஒரு புதிய பண்பாடு. அது ஒரு பண்பாட்டு வெடிப்பாக வரவேண்டும்.

கழிப்பறைப் பண்பாடு. ஐரோப்பிய நாகரிகத்தின் ஐரோப்பிய ஜனநாயகத்தின் குறிகாட்டிகளில் ஒன்று அந்த நாடுகளில் இருக்கும் கழிப்பறை. என்னுடைய எல்லாப் பயணங்களின் போதும் நான் கவனித்து இருக்கின்றேன். அவர்கள் மதுக்கடைகள் வைத்திருப்பார்கள்; சாப்பாட்டுக் கடைகள் வைத்திருப்பார்கள்; தேநீர்க் கடைகள், குட்டிக்குட்டி கடைகள் வைத்திருப்பார்கள்; எல்லாத்தையும் விட பெரிதாக கழிப்பறை வைத்திருப்பார்கள். அந்தக் கழிப்பறை எப்பொழுதும் சுத்தமாக இருக்கும். அது ஒரு பண்பாடு. ஐரோப்பிய நாகரிகத்தின் ஜனநாயகம் என்பது ஒரு அமைப்புமறை (சிஸ்ரம்) அல்ல அது ஒரு பண்பாடு. பண்பாட்டின் விளைவாகத்தான் இது அமைப்பாக வருகின்றது. சிலர் ஒரு விவாதத்தை முன் வைப்பார்கள். அங்கே இருக்கின்ற மலசலகூடம் காய்ந்திருக்கும்.  எங்களுடையது ஈரமாகவிருக்கும். எங்களுக்கு தண்ணீர் ஊற்றி அடி கழுவாவிட்டால் பத்தியப்படாது. செருப்புக்காலுடன் தண்ணீர் ஊற்ற செருப்பிலிருக்கின்ற களிமண் வர அப்படியே  நுதம்பி விடும். எங்களுடைய ஈரமான கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பது என்பது கடினம் என்ற வாதம் முன் வைக்கப்படுகின்றது. முறிகண்டியிலிருந்து கீரிமலை வரையில் கட்டணக் கழிப்பறைகள் இருக்கின்றன. அவை நுதம்பிக் கொண்டு சிதம்பிப்போய் தான் கிடக்கின்றன. ஆனால் ஐரோப்பா பண்பாட்டில் எந்த ஒரு பொது இடத்திலும் அப்படிப்பட்ட கழிப்பறையை காணமுடியாது. அவர்கள் கழிப்பறையை அவ்வளவு துப்பரவாக பேணுகின்றார்கள். அது ஈரமோ உலர்ந்ததோ. கழிப்பறைக்குள் இருக்கின்றது பண்பாட்டு விழுமியத்தின் அளவுகோல்.

மேற்காசிய விமான நிலையங்களில் அங்கே இருக்கிற ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அங்கே வருகின்றவர்கள் வெள்ளையரா ஆசியரா  என்று. அவர் ஆசியர் என்று கண்டால் அவர்கள் மலசலகூடத்துக்கு போகும் போது சுத்திகரிப்பு தொழிலாளி வந்து வாசலில் நிற்பார். நீங்கள் வெளியில் வந்த உடனேயே போய் தரையை துடைப்பார்.  ஏனெனில் அவருக்கு தெரியும் ஆசிய நாடுகளில் இருந்து வருபவர்கள் தண்ணீரை பாவிப்பார்கள். மலசலகூடம் ஈரமாகும். அதற்கு ஏற்றால் போல் ஒரு பொறிமுறையை அவர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் கட்டணம் அறவிடும் கீரிமலையிலும், முறிகண்டியிலும் எங்கள் கழிப்பறைகள் எப்படி உள்ளன?

ஜனநாயகத்தைப் போலவே சூழலியலும் ஒரு பண்பாடு. என்னுடைய குப்பையை என்னுடைய வீட்டுக்குள் ஏதோ ஒரு விதத்தில் புதைக்க வேண்டும், அல்லது எரிக்க வேண்டும், அல்லது கொண்டுபோய் பொது இடத்தில் போட வேண்டும். பக்கத்து வீட்டில் போடமுடியாது. அது ஒரு பண்பாடு. மற்றவனுடைய சுத்தத்தை மதிப்பது ஒரு பண்பாடு.

அப்படித்தான் மாற்றுத் தலைமையும் ஒரு பண்பாடு. ஒரு புதிய பண்பாட்டு எழுச்சி எமக்குத் தேவையாக இருக்கின்றது. கடந்த பத்தாண்டுகளாக மட்டுமல்ல அதற்கு முன்னரே நாங்கள் தேங்கத் தொடங்கிவிட்டோம். அந்த தேக்கத்தின் விளைவாகத்தான் நந்திக்கடற்கரையில் அந்த தோல்வி நிகழ்ந்தது. நாங்கள் அந்தத் தேக்கத்தை உடைக்க வேண்டும். ஒரு புதிய பண்பாட்டு வெடிப்பொன்று எங்களுக்குள் நிகழ வேண்டும். அரசியலில் கலை இலக்கியம் எல்லாத் துறைகளிலும்  ஒரு புதிய பண்பாட்டு எழுச்சி எமக்குத் தேவையாக இருக்கின்றது. சூழலியலில் அறிவியலில் எல்லா விடயங்களிலும் புதிய பண்பாட்டு வெடிப்பு எங்களுக்குத் தேவையாக இருக்கின்றது. ஒரு புதிய பண்பாட்டு மரபு எங்களுக்குத் தேவையாக இருக்கின்றது. மாற்று என்பதும் புதிய பண்பாட்டை பிரதிபலிப்பதுதான். அந்தப் பாதையை நோக்கி இந்தக்கட்சி பயணிக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் தோன்றிய பல கட்சிகளைப்போல இந்தக் கட்சியும் மக்களை திரளாக்கப் போகின்றதா? அல்லது சிதறடிக்கப் போகின்றதா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் தேசியம் என்பது மக்களை திரளாக்குவது. எவ்வளவிற்கு எவ்வளவு பெரிய திரளாக்குகின்றோமோ அவ்வளவிற்கு அவ்வளவு பலம் பெற்ற மக்களாக நாங்கள் எழுவோம். எழுவோமாக.

தொகுப்பு- விக்னேஸ்வரி 
நிமிர்வு ஆகஸ்ட் 2019 இதழ் 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.