அமெரிக்கா ஈரான் போர் சாத்தியமில்லை
மத்திய ஆசியப் பிரதேசத்திலுள்ள பாரிய நில எண்ணெய் மற்றும் நிலவாயு வளங்களைச் சுரண்டுவது உள்ளடங்கலான மேற்குலக நலன்களுக்கு ஈரான் ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா நோக்குகின்றது. அமெரிக்காவின் நெருங்கிய நட்புநாடான இஸ்ரேலின் பாதுகாப்புக்கும் ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது. இவ்வச்சுறுத்தல்களை இல்லாமல் செய்ய அமெரிக்கா ஈரானுக்கு எதிரான பல இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போதும் அவை ஈரானின் அச்சுறுத்தலைக் குறைப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அமெரிக்கா - ஈரான் முரண்பாடு அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. இவ்வகையில் அமெரிக்காவின் சமீபத்திய இராஜதந்திர நகர்வான அணுவாயுத ஒப்பந்த முறிவு மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அணுவாயுத ஒப்பந்த விவகாரத்தினால் ஏற்பட்ட அமெரிக்க ஈரான் முரண்பாடும் அது தொடர்பான சர்ச்சைகள் பற்றிய தேடலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அமெரிக்கா ஈரானுடன் மேற்கொண்டு இருந்த உடன்படிக்கையிலிருந்து 2018ம் ஆண்டு ஒரு தலைபட்சமான முறையில் விலகியிருந்தது. அது முதற்கொண்டு அமெரிக்கா ஈரானிய பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் தடைகளை அமுல்படுத்தி வருகிறது. அத்துடன் ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளபாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது. இந்த நிலையில் ஈரான் தனது சிறிய ரக போர் விமானம், போர்க்கப்பல்களை அமெரிக்கத் தளபாடங்களை நோக்கித் திருப்பியுள்ளது. 2019ம் ஆண்டு யூன் மாதம் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்முஸ் என்ற பகுதிக்குள்ளே அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் பறந்ததை அடுத்து அந்த விமானத்தை ஈரான் காவல்படையினர் சுட்டு வீழ்த்தினார்கள். இதனால் கடும் கோபம் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக இராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்ததாகவும் தகவல் வெளிவந்தது. பின்னர் தாக்குதலுக்கு தயாரான நிலையில் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

ஏற்கனவே ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ள வேளையில் இந்தப் பிரச்சனைக்கு பின்னர் ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்தது. இது தொடர்பான சிறப்பாணையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். ஏற்கனவே பொருளாதார ரீதியாக பெரும் பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்த ஈரானுக்கு இது மேலும் பிரச்சனையை கூட்டியுள்ளது.

இந்நிலையில் ஈரான் கடந்த மே மாதம் செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்தது. இந்த யுரேனியத்தை மின்சாரப் பிறப்பாக்கிகளுக்கான எரிபொருளாக பயன்படுத்த முடிவதுடன் அதனைப் பயன்படுத்தி அணு ஆயுதங்களையும் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் தனது யுரேனிய செறிவூட்டல் நடவடிக்கையை அணு ஆயுதங்கள் தயாரிக்கும் நோக்கில் முன்னெடுப்பதாக மேற்குலக நாடுகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. எனினும் ஈரான் அதனை தொடர்ந்து மறுத்து வருகின்றது.

அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய ஆறு நாடுகளுடன் ஈரான் கடந்த 2015 இல் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இவ் ஒப்பந்தம் மூலம் செறிவூட்டப்பட்டு யுரேனியத்தில் அதிகமாக இருப்பவற்றை சேமித்து கொள்ளாமல் ஈரான் வெளிநாடுகளுக்கு விற்க வேண்டும். அணு மின்சார உற்பத்தி செய்யும் போது கிடைக்கின்ற செறிவூட்டிய யூரேனியத்தை சேமித்து வைத்துக் கொண்டால் ஈரான் அணு ஆயுதங்களை செய்வதற்கு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரான் வெளிநாடுகளுக்கு விற்பதன் மூலம் அணு மின்சாரம் தயாரிப்பதை ஈரான் தொடருகின்ற வேளையில் அது அணு ஆயுதங்களை தயாரிக்காமல் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள முடியும்.

எனினும் 2018ம் ஆண்டு ட்ரம்ப் இவ்வொப்பந்தம் பலவீனமான அம்சங்களை கொண்டுள்ளது எனக் கூறி அதிலிருந்து விலகினார். வெளிப்படையாக ட்ரம்ப் அவ்வாறு கூறினாலும் நட்புநாடான இஸ்ரேலைத் திருப்திப் படுத்தவும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவிற்கு இவ்வொப்பந்தத்தால் கிடைத்த நற்பெயரை இல்லாமலாக்கவுமே ட்ரம்ப் இதனைச் செய்ததாக பல சர்வதேச ராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகியதை அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஏனைய நாடுகள் கண்டித்தன. எனினும் அமெரிக்காவுடனான தமது வர்த்தக நலன்களைப் பேணும் முகமாக அமெரிக்காவை எதிர்த்து ஒப்பந்தத்தைப் பேண அவை தயாராக இருக்கவில்லை.

ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி ஒராண்டு நிறைவடைந்த நிலையில் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கும் நாடுகளான ஏனைய சீனா, பிரான்ஸ், ஜேர்மன், ரஷ்சியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு ஈரான் 60 நாட்கள் காலக்கெடுவை நிர்ணயித்தது. அமெரிக்காவின் பொருளாதார தடைகளில் இருந்து தன்னைக் காப்பாற்றுமாறு கோரியே இந்நாடுகளுக்கு ஈரான் இக்கால அவகாசத்தை வழங்கியது.

கச்சாய் எண்ணெயை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முடியாமல் தவித்த ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளை உதவி செய்யுமாறு வலியுறுத்தியது. அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லாததாலும் போதிய ஒத்துழைப்பு வழங்காததாலும் உலக நாடுகள் தங்கள் வாக்கை காப்பாற்றவில்லை என ஈரான் குற்றம் சாட்டியது.

ஐரோப்பிய நாடுகள் உரிய காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எதனையும் எடுக்கத் தவறியுள்ள நிலையில் தனது புஷிஹர் சக்திப் பிறப்பாக்க நிலையத்திற்கான எரிபொருளை வழங்குவதற்காக யுரேனிய செறிவூட்டலை ஒரு சில மணி நேரத்தில் 3.67 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் செயற்கிரமத்தை ஆரம்பிக்கவுள்ளதாக யூலை மாதம் 8ம் திகதி ஈரானிய பிரதி வெளிநாட்டு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்து இருந்தார். அராக்சியின் இவ் அறிவிப்பிற்கு முன்னரே சுமார் 5 சதவீதமளவிற்கு யுரேனியம் செறிவாக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அணு ஆயுத தராதரத்துக்கான செறிவூட்லுக்கு யுரேனியத்தை 90 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக செறிவூட்ட வேண்டியிருக்கும்.

எனினும் இன்னும் ஒப்பந்தத்தை காக்க வேண்டும் என்ற எண்ணம் ஈரானுக்கு உள்ளதாக குறிப்பிட்ட அப்பாஸ் அரக்சி “தங்கள் கடமைகளை சரியாக செய்யத் தவறிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே இதற்கு காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார். 2015 அணு ஆயுத ஒப்பந்தத்துக்கான தங்கள் அர்ப்பணிப்பை ஒவ்வொரு 60 நாளும் குறைத்து கொண்டே வருவோம் என்றும் அப்பாஸ் கூறியுள்ளார். ஆனால் ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டால் சமரசப் பேச்சு வார்த்தைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் அழுத்தமாக கூறினார்.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளின் விளைவுகளில் இருந்து ஈரானின் பொருளாதாரத்தை காக்கும் விதமாக வர்த்தகத்தை எளிதாக்கும் வகையிலான புதிய நுட்ப முறையை செயல்படுத்த ஐரோப்பிய சக்திகள் நடைமுறையில் சாத்தியமான தெளிவான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எடுக்காவிட்டால் அணுசக்தி ஒப்பந்தத்தின் படி உள்ள எங்களது சில கடமைகளையும் பத்து நாட்களுக்குள் மீறுவோம் என ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ட்விட்டரில் பதிவிட்டதாவது, “ஈரானின் அணுசக்தி திட்டத்தின் சமீபத்திய விரிவாக்கம் அதனை மேலும் தனிமைப்படுத்தப்படுவதற்கும், பொருளாதாரத் தடைகளுக்கும் வழிவகுக்கும். ஈரானின் அணுசக்தி திட்டத்திற்காக செறிவூட்டல் இல்லாத நீண்ட கால தரத்தை, உலக நாடுகள் மீட்டெடுக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதங்கள் ஏந்தியிருப்பது உலகிற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்” என பாம்பியோ எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த அறிவுப்பு ஈரானின் மிக மிக அபாயகரமான முன் அடி எடுத்து வைப்பு என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக தடைகளை விதிக்க பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளுக்கு அவர் மீள அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரான் எடுத்துள்ள இந்த முடிவு குறித்து மேக்ரான் கூறுகையில் “இது எந்த வகையிலும் ஈரானுக்கு நன்மை அளிக்காது அதற்கு பதிலாக மத்திய கிழக்கு ஆசியாவில் தேவையற்ற பதற்றத்தையே ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார்.

இவ்வாறு ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரானிய தளபதி ஹொசைன் நெஜாத் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு புதிய உக்கிரமான எச்சரிக்கை விடுத்துள்ளார். தளபதி நெஜாத் கூறியதாவது “அமெரிக்க தளங்கள் எங்கள் ஏவுகணைகளின் எல்லைக்குள் உள்ளன. தவறு செய்தால் அத்தளங்களை எங்கள் ஏவுகணைகள் அழிக்கும். ஈரானுடனான இராணுவ மோதலின் விளைவுகளை அமெரிக்கர்கள் நன்கு அறிவார்கள். வளைகுடாவில் இரத்தக் கடலை அமெரிக்கா எதிர்கொள்ள நேரும்” என ஈரான் இராணுவ தளபதி ஹொசைன் நெஜாத் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரானை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முயற்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இறங்கியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை வரும் 15 திகதி நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூகானி ஆகியோருடன் சமாதான முயற்சி குறித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் மத்திய கிழக்கு நாடுகளில் செல்வாக்குடன் விளங்கும் ஆசிய வல்லரசுகளும், ஈரானின் நட்பு நாடுகளுமான சீனா மற்றும் ரஷ்சியா அமெரிக்காவினைக் கடுமையாக சாடியுள்ளனர். இது ஈரானின் நிலைப்பாட்டுக்கு சாதகமானதொரு நிலையாகும். அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாகத் தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்ததே யுரேனியம் குறித்த ஈரானின் முடிவுக்குக் காரணம் என சீனா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் கூறும்போது “அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகியது மட்டுமல்லாமல், ஒரு தலைபட்சமாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் தொடர்ச்சியாக அதிகாரத்தைப் பயன்படுத்தியது. இதன் விளைவாக உலக அளவில் பிரச்சனை உருவாகியுள்ளது” என்றார்.

2010ம் ஆண்டு அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட அரபுவசந்தம் மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு எதிரான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. பிரதானமாக சிரியா போரின் முடிவுகள் மத்திய கிழக்கில் ரஷ்யா- சீனா- ஈரான் - சிரியா கூட்டினை பலப்படுத்தியுள்ளது. இக்கூட்டினால் அமெரிக்காவின் ஈரான் எதிர் செயற்பாடுகள் பலம் இழந்து செல்கின்றன. ஈரானிய ஸ்திரமான அரசியல் தலைமைத்துவம் மற்றும் ஈரானுக்கு பக்கபலமாக இருக்கும் ரஷ்சியா – சீனா – சிரியா கூட்டும் ஈரானுக்கு எதிரான வலுவான அரசியல் பொருளாதார இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு தடையாக அமைகின்றன.

ஈரான் தன்னுடைய போர்த்தளவாடம் ஒன்றை சுட்டு வீழ்த்திய பின்னரும் அந்நாட்டின் மீது வெளிப்படையாக எந்த இராணுவ நடவடிக்கையையும் அமெரிக்காவினால் எடுக்க முடியாதுள்ளது.  மேலும் ஹோர்முஸ் கடற்பகுதியில் பிரித்தானியக் கொடியுடன் சென்ற Stena Impero என்ற எண்ணெய்க்கப்பலை ஆடிமாதம் 19 ஆம் திகதி ஈரான் கைப்பற்றியுள்ளது.  இதற்கு முன் ஸ்பெயினின் தென்பகுதியிலுள்ள ஜிப்ரால்டர் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானுக்கு சொந்தமான Grace 1 என்ற எண்ணெய்க்கப்பலை பிரித்தானியா ஆடி மாதம் 4 ஆம் திகதி கைப்பற்றியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாகவே பிரித்தானியாவின் எண்ணெய்க்கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளதாக நம்பப்படுகிறது. இவ்வாறாக மேற்குநாடுகளின் நடவடிக்கைகளுக்கு வெளிப்படையாகவே சவாலளிக்கும் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க மேற்கு நாடுகள் தயங்குகின்றன.

ஈரான் தனது கப்பலைக் கைப்பற்றிய பின்னரும் அமெரிக்கா தலைமையில் வளைகுடாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட பிரித்தானியா மறுப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைப் பின்பற்றி இராக் போரில் ஈடுபட்டதால் தாம் பட்ட நட்டங்களை மனதில் கொண்டு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் போர்நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இல்லை. அதேவேளை இராக்கில் தமக்கேற்பட்ட இழப்புக்களுக்கும் தோல்விக்கும் பின்னர் ஈரானுடன் மோதுவதற்கு அமெரிக்க மக்களும் தயாராக இல்லை. சர்வதேசத்திடமிருந்தும் ஆதரவு இல்லாமல் உள்நாட்டிலும் ஆதரவு இல்லாமல் அமெரிக்க அரசாங்கத்தால் இன்னொரு போரைக் கொண்டு நடத்த முடியாது. அதேவேளை இஸ்ரேல் அரசும் ட்ரம்ப் ஆலோசகர்கள் மத்தியிலுள்ள கடும்போக்காளர்களும் ஈரானுக்கு எதிராகப் போர் தொடுக்க முனைந்து நிற்கின்றனர். அவர்களின் அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுப்பதை உள்நாட்டு அரசியலில் அதிக கவனம் செலுத்தும் ட்ரம்ப் தவிர்த்து வருகிறார்.  எது எவ்வாறு இருந்த போதும் மத்திய கிழக்கில் காணப்படும் முரண்பாடு காரணமாக போர் ஏற்படுமானால் அமெரிக்கா - ஈரான் ஆகிய நாடுகளுக்கு பல மடங்கு இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். 

லக்ஷனா பாலகுமாரன்.
நிமிர்வு ஆகஸ்ட் 2019 இதழ் 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.