பனை ஆராய்ச்சிகளும் உற்பத்திகளும்




எந்த ஒரு உணவுப்பண்டத்திற்கும் அதனைச் சேமித்து வைத்து நீண்டகாலப் பாவனைக்கான வழிவகைகளைச் செய்வதன் மூலம் அதற்கு வெளியூர் மற்றும் உள்ளூர் சந்தைகளில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்த இலகுவாக இருக்கும். அதேபோன்று அதன் ஊட்டச்சத்துக்கள் போன்ற தரவுகளை அது அடைக்கப்படும் கொள்கலன்களில் பொறிப்பதன் மூலமும்  சந்தை வாய்ப்பை ஏற்படுத்த இலகுவாக இருக்கும். இந்நடவடிக்கைகளுக்கு துணைபுரியக் கூடிய பனை ஆராய்ச்சி நிலையம் ஒன்று கைதடியில் 1988 இல் ஆரம்பிக்கப்பட்டது. கட்டிட வேலை முடிவடைந்து ஆய்வு கூட உபகரணங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த பனை அபிவிருத்திச் சபை முயற்சிகளை மேற்கொண்டது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் அங்கு ஆராய்ச்சி நடவடிக்கைகளை முழுமையாகவும், முனைப்புடனும் நிறைவேற்ற முடியாமற் போனமை பனை உற்பத்திகளுக்கு ஏற்பட்ட ஒரு துரதிஷ்டமான நிகழ்வு என்றே கூறலாம்.

ஆனாலும் மக்கள் தாம் வழிவழியாக திரட்டிய அறிவைக் கொண்டு பனை உற்பத்திகளைக் கணிசமாக விற்பனை செய்து வந்தனர். ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவர்களது தரவுகளை உறுதிப்படுத்தியிருந்தால் அவற்றின் விற்பனவு பல மடங்கு அதிகரித்திருக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.பனை வசதிகளுக்கு உள்ளூரில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாகவும் அதிக கேள்விகள் உள்ளன.


எவ்வளவோ முயற்சிகளின் பின் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 2012ம் ஆண்டு ஆடி மாதம் 22ம் திகதி பனை ஆராய்ச்சி நிலையம் முழுமையாக தனது செயற்பாட்டை கைதடியில் ஆரம்பித்தது. அதன்பின் பனை உணவினால் பெறப்படக்கூடிய மருத்துவ நன்மைகள், சத்துக்கள் போன்ற விபரங்களை நாட்டின் பல பாகங்களிற்கும் வெளிப்படுத்தக் கூடியதாக இருந்தது.

பனை ஆராய்ச்சி நிலையம் இயங்க ஆரம்பிக்கப்பட்ட அதே ஆண்டில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய சந்திப்பு பனை ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.அங்கு சங்கங்களுக்கு தேவையானவற்றைக் கேட்டறிந்து அவற்றுள் உடனடியாகச் செய்ய வேண்டிய ஆராய்ச்சிகளை முன்னுரிமைப்படுத்தி பனை ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் சங்கங்கள் சார்பாகக் கோரிக்கைவிடப்பட்டது. அதன் பலனாக போத்தலிலடைக்கப்பட்ட கள் உற்பத்தியில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை தொடர்பில் பரிசோதனைகள் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.  அதன் தரத்தை மேம்பாடடையச் செய்வதற்கான செயல்முறைகள் என்ன என்பது தொடர்பான அறிவுகள் எட்டப்பட்டன.  இந்த விளக்கங்கள் ஆராய்ச்சி உத்தியோகத்தர்களினால் ஒவ்வொரு சங்கங்களுக்கும் நேரில் சென்று உரிய விளக்கச் செய்முறை மூலம் காட்டப்பட்டது. அதனூடாக சங்கங்களின் உற்பத்தித் தவறுகள் திருத்தியமைக்கப்பட்டது. அவர்களின் உற்பத்திகளின் தரம் மேம்பட்டது.


இதே போன்று பனை வெல்லம், பனம் பாணி போன்றவை உற்பத்திகளுக்கும் மேற்கூறிய நடவடிக்கைகளை பனை ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர். அவர்களின் ஆராய்ச்சியின் அடைவுகளைகுறிப்பிட்ட சில சங்கங்கள் பின்பற்றி தரமான பனைவெல்லம், பனம்பாணி, பனங்கற்கண்டு என்பவற்றை உற்பத்தி செய்து விற்பனவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பனஞ்சாற்று உற்பத்தியில் முக்கியமானது பதநீர். இது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பானம் என்பதற்கான தரவுகளை நிறுவுவதற்கும் அதன் பாவனைக் காலத்தைக் கூட்டுவதற்குமான ஆராய்ச்சிகளை பனை ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டது. வெற்றியும் கண்டது. இதே போன்ற பனை உற்பத்திகளான பனங்கிழங்கு, புழுக்கொடியல், புழுக்கொடியல் மா, ஒடியல் மா ஆகியவற்றை பதப்படுத்தி விற்பனையை எவ்வாறு மேம்படுத்துவது போன்ற ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டது. இவ்வாராய்ச்சிகளின் முடிவுகள் வெளியிடப்படும் ஒவ்வொரு முறையும் ப.தெ.வள.கூ.சங்க உற்பத்தி முகாமையாளர் மற்றும் உற்பத்திக்கு பயன்படும் தொழிலாளர்கள் ஆகியோர் வரவழைக்கப் பட்டு உரிய விளக்கங்கள் செய்முறை மூலம் செய்து காண்பிக்கப்பட்டன. இந்த விடயத்தில் பனை ஆராய்ச்சி நிலையம் முனைப்புடன் செயற்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக பனைவெல்ல உற்பத்தியின் போது சாதாரணமாகப் பாவிக்கும் சுண்ணாம்பினை ஆய்வுக்குட்படுத்தியபோது அதில் தூய சுண்ணாம்பின் அளவு 65%  மாகக் காணப்பட்டது. பல ஆராய்ச்சிகளைச் செய்ததன் மூலம் ஆய்வுகூடத்து உபகரணங்களைப் பயன்படுத்தி அதன் தூய்மையை  93% ஆக அதிகரிக்க முடிந்தது. இந்தத் தூய சுண்ணாம்பை நேரடியாக பரிசோதிக்க சாவச்சேரி பனை தெ.வ.அ.கூ.சங்க தொழிலாளர்களின் உதவியை நாடினோம். சங்கத்தினர் அல்லாரைப் பகுதி தொழிலாளர்களை இச்செயற்பாட்டைப் பரிசோதிக்க  அனுமதித்தனர். அவர்களிடம்  தூயசுண்ணாம்பைக் கொடுத்து பதநீர் உற்பத்தி செய்வதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதன் விளைவாக சாதாரணமாகக் கிடைக்கும் பதநீரை விட நல்ல தரமான பதநீர் பெறப்பட்டது. ஆனாலும் அங்கே தொடர்ந்து இவ் ஆய்வு நடவடிக்கையை செய்யமுடியவில்லை.


பின் அச்சுவேலி ப.தெ.வள.அ.கூ.சங்கத்தைத் தொடர்பு கொண்ட போது அவர்கள் மிகவும் முனைப்புடன் செயற்பட்டு இவ் ஆராய்ச்சிக்கு உதவி புரிந்தனர். அத் தொழிலாளர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டு அவர்களிடம் இத் தூய சுண்ணாம்பைக் கொடுத்து பதநீர் பெறப்பட்டு அச்சுவேலி பனை வெல்ல உற்பத்தி நிலையத்தில் வைத்து பனை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டது. இது பனை ஆராய்ச்சி நிலையத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றியாகும்.

பனை ஆராய்ச்சி நிலையம் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் ஆகியோரைக் கொண்டிருந்தது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம். அவர்கள் செய்யும் ஆராய்ச்சி முடிவுகளை மூலைமுடுக்குகளுக்கு எல்லாம் கொண்டு செல்லும் அதாவது கைத்தொழில் மயப்படுத்தும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஒருவரை நியமிக்க முடியாமற் போனமை துரதிஷ்டமே. இந்நிறுவனத்தில் எல்லோரும் பட்டதாரிகளாகவே உள்வாங்கப்பட்டிருந்தனர். அவர்களால் தொழிலாளர்களுடன் சிறந்த தொடர்பாடல்களை நிகழ்த்த முடியவில்லை. ஆனால், சிறந்த தொடர்பாடல் அனுபவம் உடையவர்கள்  சேவை மூப்பிலிருந்தனர். அவர்களை இதில் ஈடுபடுத்தினால் பட்டதாரிகளுக்கு ஒரு குறைவான நிலையேற்படுமோ என எண்ணியதால் இப்பதவி உருவாக்கப் படவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது. இருப்பினும் எப்படியாவது ஆராய்ச்சி முடிவுகள் ஏனையோருக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பனை ஆராய்ச்சி நிலையம் உள்ளானது. இதனால் அங்கு கடமை புரிந்த என்னிடமே இப்பணி தரப்பட்டது. நீங்கள் தான் தகவற்பரப்பு உத்தியோகத்தர் (dissemination officer) என வாய்மூல உறுதி அளிக்கப்பட்டது. விரைவில் உத்தியோகபூர்வ நியமனம் வழங்குவோம் எனக் கூறப்பட்டது. ஆனால் நான் 2017.05.08 ம் திகதி இளைப்பாறும் வரை எவ்வித உத்தியோக பூர்வமான நியமனமும் வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

ஆயினும் ப. தெ.வள.அபி.கூ.சங்கங்களுக்கும் பனை ஆராய்ச்சி நிலையத்துக்குமிடையே சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்தியதோடு ஆராய்ச்சிக்கு தேவையான வளங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. மேலும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குகளையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகள் செவ்வனே செய்து கொடுக்கப்பட்டன. இதனால் எனக்கு வாய்மொழிமூலம் தரப்பட்ட பதவியை செவ்வனே செய்தேன் என்ற திருப்தியுடன் இளைப்பாறினேன்.

பனைவெல்லம் சந்தைப்படுத்துவது தொடர்பாக பொதியிடல் சேமித்து வைத்தல் போன்றன ஆய்வு செய்யப்பட்ட போது அதனை கண்ணாடிக் குடுவையில் (போத்தலில்) இறுக்கமாக அடைத்து வைத்து பாதுகாக்க முடியும் என முடிவுகள் தெரிவித்தன. பனம் பாணியை குடுவையில் அடைக்கும் போது அதனை நிறைத்து அடைத்தால் நீண்ட காலத்திற்கு பூஞ்சணம் பிடிக்காமல் பாதுகாக்கலாம் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் கிடைத்தன. பனை உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வுகள் தனித்தனி ஒவ்வொரு உற்பத்திகளிற்கும் நடத்தப்பட்டன.  அவற்றை வெளிப்படுத்த பனை ஆராய்ச்சி நிலையம் முனைப்புடன் செயற்பட்டது.


அத்தோடு பொதியிடும் போது  உற்பத்தி திகதி, முடிவுத்திகதி மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கிய விபரச்சிட்டை மாதிரியை வடிவமைத்து ஒவ்வொரு ப.தெ.வ.அபி.கூ.சங்கங்களுக்கும் பனை ஆராய்ச்சி நிலையம் சமர்ப்பித்தது. முல்லை மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ப.தெ.வ.அபி.கூ. சங்கம் மாத்திரம் அதைப் பின்பற்றி அழகான விபரச்சிட்டைகளை அச்சிட்டு தாம் உற்பத்தி செய்த உற்பத்திகளை அழகாக பொதியிட்டு விபரச்சிட்டைகளுடன் சந்தைப்படுத்தியது. இது வரவேற்கத்தக்கதாக அமைந்தது. இப்படி பெருமுயற்சி எடுத்து உற்பத்தி செய்யும் சங்கங்களிற்கு பனை ஆராய்ச்சி நிலையம் வழிகாட்டியாக செயற்பட்டு வருகிறது.

அத்தோடு கள்ளை கண்ணாடிக்குடுவையில் அடைத்து விற்பதற்கான அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரிந்துரை அறிக்கையை பனை ஆராய்ச்சி நிலையம் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக் கொடுத்தது. யாழ் பல்கலைக்கழகத்தினர் அவர்களின் வேலைப்பழுவின் மத்தியிலும் இச்செயற்பாட்டை செய்து கொடுத்தது வரவேற்கத்தக்கது. பனை ஆராய்ச்சி நிலையம்  தேவைப்படும் சங்கங்களிற்கு மிகக் குறைந்த கட்டணத்தில் இவ் அறிக்கையினை வழங்கிவருகிறது. அத்தோடு மட்டுமல்லாது உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் நல்லெண்ணெய், குளிர்களி ஏனைய குளிர்பானங்கள் போன்ற உற்பத்திகளுக்கும் பகுப்பாய்வு அறிக்கைகளினை மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்கி அத்தொழில்களுக்கு உதவிக்கரமாக இருந்து வருகிறது.

இவற்றோடு மட்டுமல்ல குறிப்பாக பனை வெல்லம், பனங்கள்ளு என்பவற்றில் கலப்படம் செய்தால் அவற்றையும் பகுப்பாய்வின் மூலம் கண்டறியும் செயற்பாட்டினையும் செய்து வருகின்றது. இதன்மூலம் மக்கள் விழிப்புடன் செயற்பட்டால் இக்கலப்படம் செய்வதைத் தடுக்கவும் வாய்ப்புள்ளது.

பனை.தெ.வள.அபிவிருத்தக் கூட்டுறவுச் சங்கங்கள் இவை யாழ் மாவட்ட கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலுள்ள பனைத் தொழில் வல்லுனர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு அவர்களின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தும் அமைப்பாக இயங்கும் பெரியதொரு அமைப்பாகும். இவைபற்றி முன்னைய பகுதியில் விரிவாக விளக்கியிருந்தேன்.

பனை அபிவிருத்திச்சபை 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் பிரதான நோக்கங்களில்  பனை.தெ.வள.அபி.கூ.சங்கங்களிற்கு அவர்களின் உற்பத்திகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துதல் என்பது முக்கியமானது. இந்நிறுவனம் அரசசார்புள்ள அபிவிருத்திச் சபை. அரசு மாறும் போது சபைக்கு நியமிக்கப்படும் தலைவர் மாற்றப்படுவது அல்லது தாமதப்படுவது நடைமுறையாக உள்ளது. சபையில், அபிவிருத்தி, உற்பத்தி, நிர்வாகம். உள்ளகக்கணக்காய்வு, கணக்குப் பகுதி, விரிவாக்கல் ஆராய்ச்சி போன்றவறிற்கு முகாமையாளர் ஒருவரும் உள்ளார். இத்தனையும்  முகாமைசெய்ய பொதுமுகாமையாளர் ஒருவரும் உள்ளார். இவற்றிற்கு மேலாக அரசாங்கத்தால் நியமிக்கப்படும் தலைவரும் இயக்குனர் சபையும் உள்ளன.

யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கினாலும், இலங்கை முழுவதற்குமான பாரியதொரு அமைப்பே பனை அபிவிருத்திச் சபையாகும். இவ் அமைப்பில் உள்ள ஒவ்வொரு பிரிவும் தமது கடமைகளை சரிவரச் செய்தால் எம் மண்ணின் அரும்பெரும் மூலவளமான பனையின் உற்பத்தி பனை மீள் நடுகை என்பவற்றை உலகமே வியக்கும் வண்ணம் செய்யமுடியும். அரசினால் சபைக்கு ஒதுக்கப்படும் நிதி சரிவரப் பயன்படுத்தப்பட்டால்  இவ் உற்பத்திகளை சர்வதேசத்திற்கு சபையினால் திறம்பட அறிமுகப்படுத்த முடியும் என்பது எனது கருத்து. மேலே கூறப்பட்ட பனை அபிவிருத்திச் சபையில் உள்ள பல பிரிவுகள் ஒருங்கிணைந்து செயற்பட்டிருந்தால் இன்று பனை உற்பத்திகள் மக்கள் முன் பாவனைக்கு மலிவாகக் கிடைக்கக் கூடியதாக வந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமே பனைஅபிவிருத்தியில் தான் உள்ளது என்பதனை அபிவிருத்திச்சபை நிர்வாகத்தினர் உணர வேண்டும். ஊழல் என்ற பெயருக்கே இடமில்லாமல் கொண்டு நடத்த வேண்டும். பனை உணவுகளின் மகத்துவத்தை உணர்த்த திரு.சண்முகநாதன் சுகந்தன் அவர்கள் முதலில் பதநீர் போத்தலில் அடைத்து விற்பனவு செய்வதற்கு பண்டத்தரிப்பு ப.தெ.வள.அபி.சங்கத்தை நாடினார். அவர்கள் மூலம் பதநீரை கண்ணாடிக்குடுவையில் அடைத்து சந்தைப்படுத்தினார். அப்பதநீரை வாங்கிச் சுவைத்தோர் மீண்டும் மீண்டும் வாங்கத் தூண்டப்பட்டனர். இது 08.05.2018 தொடக்கம் பதநீர்க்காலம் முடிவடையும் வரை இடம்பெற்றது. இவ்வருடம் (2019 இல்) பதநீரைக் குடுவையில் அடைத்து விற்பதைச் செய்ய அச்சங்கம் முன்வரவில்லை. அவரின் முயற்சியினால் பனங்கள்ளு புதிய போத்தல்களில் அடைக்கப்பட்டு கவர்ச்சியான விபரச்சிட்டைகளுடன் விற்பனவுக்கு விட்டு இன்று கனடா நாட்டிற்கு முதன்முதலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளுக்கு அச்சுவேலி ப.தெ.வ.கூ.சங்கமும் நெடுங்கேணி ப.தெ.வ.கூ.சங்கமும் புதுக்குடியிருப்பு ப.தெ.வ.கூ.சங்கமும் உதவுகின்றனர். மேற்படி உற்பத்திகளின் தரக்கண்காணிப்பு எனது மேற்பார்வையிலேயே நடைபெறுகிறது. இயலுமான வரை தரமான உற்பத்திகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தியாகராஜா பன்னீர்செல்வம்
(ஓய்வுபெற்ற அலுவலர், பனை அபிவிருத்திச் சபை)
நிமிர்வு ஆகஸ்ட் 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.