30 ஆண்டுகளாக சொந்த நிலமின்றி அலைகின்றோம்
இன்று பலாலியை சர்வதேச விமான நிலையம் ஆக்குவதில் இந்திய, இலங்கை அரசுகள் மும்முரமாக உள்ளன. இந்த வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு விமானம் பறக்கும் என அரசாங்கம், அமைச்சர்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. பல கோடிகளில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விரிவாக்கப் பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரடியாக பங்கேற்றுமுள்ளனர். ஆனால், கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் தங்களது சொந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அக்கறை கொள்வார் யாருமில்லை. அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஊடகங்களும் இவர்களைப் பற்றி பேசுவதில்லை.
1989 ஆம் ஆண்டு பலாலி மேற்கில் இருந்து இடம்பெயர்ந்தோம். ஒரே நாளில் குளவிக்கூட்டில் இருந்து குளவிகள் கலைந்தது போல நாங்களும் ஊர் மக்களும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சிதறி விட்டோம். இன்று எஞ்சியுள்ளது நாங்கள் அன்று பலாலியில் வாழ்ந்த பசுமையான நினைவுகள் மட்டுமே. இவ்வாறு ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் பெரியதம்பி நாகராசா. பலாலியில் இருந்து இடம்பெயர்ந்த பின்னர் நாங்கள் திக்குத்திக்காக பிரிந்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் வசித்து வருகின்றோம். ஒரு தொகுதி மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கும் சென்று விட்டார்கள். சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்த பின்னர் இன்றுவரை 17 வாடகை வீடுகளுக்கு மாறி விட்டோம். எங்குமே நிம்மதியில்லை என்கிறார். கொக்குவில், கோப்பாய், திருநெல்வேலி, கோண்டாவில் என பல பிரதேசங்களிலும் மாறி மாறி குடியிருந்து விட்டோம். ஐந்து பிள்ளைகளையும் வளர்க்க பொருளாதார ரீதியாகவும் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளோம். எம்மை எங்களின் அரசியல்வாதிகளும் கை விட்டு விட்டனர் என்கிறார் அவர்.
பலாலியில் எங்களுக்கு கல்வீட்டுடன் 5 பரப்புக் காணி இருந்தது. அங்கே விவசாயம் செய்து நல்ல செழிப்புடன் தான் வாழ்ந்து வந்தோம். மிளகாய், வெங்காயம், மரவெள்ளி, தக்காளி என பல்வேறு பயிர்களை பயிரிட்டு அதனை சந்தைப்படுத்தும் போது நல்ல இலாபம் கிடைக்கும். வெளியூரில் இருந்தெல்லாம் வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து வாங்கிச் செல்வார்கள். இருபதுக்கும் மேல் ஆடுமாடுகள் இருந்தன. இப்போது போல் அன்று பால் சங்கங்கள் இல்லை. இதனால் கறக்கும் பாலை உறவுகள், நண்பர்கள் என்று எல்லோருக்கும் கொடுப்போம். பால் கொடுத்து பயிற்றங்காய், மரவெள்ளி வாங்குவோம். எல்லாம் பண்டாமாற்று தான். அன்று எங்களுக்கு காசு கூடப் பெரிதாக தேவைப்படுவதில்லை.
எங்களுக்கு அன்று என்ன வளம் இல்லை. எல்லாமே இருந்தது. வீடுகளில் வெங்காயம் கட்டுக்கட்டாக தூக்கி இருக்கும், செத்தல் மிளகாய் இருக்கும், தேங்காய் அளவுக்கதிகமாக இருக்கும், மரக்கறிகளும் மித மிஞ்சி இருக்கும். விறகுகளும் ஏராளம் இருக்கும். எஞ்சியதை உறவுகளுக்கும் கொடுத்து பகிர்ந்துண்டு சொந்தமண்ணில் வாழ்ந்த அந்த நாள் இனி எப்போது வரும் என்ற ஏக்கம் தான் இப்போது உள்ளது. சாமைச்சோறும், குரக்கன் பிட்டும், மரவெள்ளி மசியல், ஒடியல் கூழும், சீரகம் தூவிய நாட்டுக் கோழி முட்டைப் பொரியலும் சாப்பிட்டு வளர்ந்த எம் தலைமுறை இன்றும் ஆரோக்கியமாக 90 வயதைக் கண்டு வாழ்கின்றது. ஆனால், எங்கள் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தை நினைத்தால் கவலையாக உள்ளது.
சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்த பின்னர் நாம் அனுபவித்த இன்னல்கள் சொல்லில் அடங்காதவை. மேசன் வேலை, சுருட்டு சுத்துதல், சாரதி வேலை என எல்லா வேலைகளும் செய்திருக்கிறேன். 1996 ஆம் ஆண்டளவில் சீட்டு போட்டு தான் சிறிய ரக உழவியந்திரத்தை (லாண்ட் மாஸ்டர்) வாங்கினேன். அதில் சீமெந்து ஏத்துறது, மரந்தடிகள் ஏத்துறது என பல்வேறு வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று 2000 ரூபாய் உழைத்தாலும் நாளைக்கு கையில் காசு இருக்காது. நாங்கள் இடம்பெயர்ந்த பதிவில் தான் இன்றும் இருக்கிறோம். ஆனால் இன்றுவரை அராசாங்கத்தின் எந்த உதவிகளும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் இப்போது இருக்கும் இடத்தில் உள்ள கிராம சேவகரை அணுகிக் கேட்டால் உங்களுக்கு எந்த உதவியும் தன்னால் செய்ய முடியாதென்று கூறுவார். நீங்கள் பலாலி மேற்கு கிராம சேவகரைத்தான் அணுக வேண்டுமெனவும் சொல்லுவார். உங்களை இராணுவம் மீள குடியமர்த்தினால் தான் நாங்கள் உதவி செய்வோம் என பிரதேச செயலர் பிரிவுகளில் சொல்வார்கள்.
பலாலி கிழக்கில் ஒரு பகுதி மீள் குடியேற்றம் நடந்துள்ளது. ஆனால் எங்களது பலாலி மேற்கை இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயம் என அழைக்கின்றார்கள். வயாவிளான் மத்திய கல்லூரி தாண்டி பலாலி வீதியில் உள்ள இராணுவ வளைவில் இராணுவக் குடியிருப்பு என்று போட்டுள்ளார்கள். ரணில் ஒருமுறை இங்கு வந்திருந்த போது எங்களது காணிகளை நேரில் பார்த்தோம். எங்கள் காணிகளில் இராணுவத்தினர் தோட்டம் செய்கின்றார்கள். வாழை, முருங்கை, பூசணி என பலவகைப் பயிர்களையும் நடுகை செய்துள்ளார்கள். அந்த காய்கறிகளை இங்குள்ள சுன்னாகம், திருநெல்வேலி சந்தைகளுக்கு கொண்டுவந்து விற்கின்றார்கள்.
ஒரு முறை இராணுவ பெரியவர் ஒருவர் திருநெல்வேலி சந்தைக்கு முருங்கை, பூசணி, சோளம் என்பனவற்றுடன் வந்திருந்தார். இந்த மரக்கறிகள் எல்லாம் எங்கிருந்து வருகுது என்று கேட்டேன் அவர் பலாலியில் இருந்து என்று சொன்னார். பிறகு நானும் பலாலியில் இருந்து தான் இடம்பெயர்ந்து இருக்கிறேன். நீங்கள் எங்கட காணிகளில் தான் தோட்டம் செய்கின்றீர்கள் எனக் கூறினேன்.
வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து பலாலிச் சந்தி நோக்கி செல்லும் போது சந்திக்கு முன்னர் தான் எங்கள் பிரதேசம் அமைந்துள்ளது. தேர்தல் காலத்தில் வயாவிளான் பள்ளிக்கூடத்துக்கு வாருங்கோ. உங்கட வோட்டைப் போடுங்கோ என்றுதானே கூட்டமைப்பு காரர் சொன்னவை . மாவை சேனாதிராஜா ஐயாவுக்கு தான் போட்டோம். நாங்கள் நாடாளுமன்றம் போய் உங்கட அலுவலாத்தான் கதைக்கப் போறோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரையும் இவர்கள் கதைத்ததாக சரித்திரம் இல்லை. எங்களது பலாலியைப் பற்றி கதைப்பாரும் இல்லை.
நாங்கள் வாக்களித்த எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் எங்களை வந்து பார்க்கவில்லை. ஏனென்று கேட்கவில்லை. நாங்கள் இன்று காணி உறுதியுடன் வீடில்லாமல் இருக்கிறோம். நாங்கள் இன்று இருக்கின்ற பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு வீட்டுத் திட்டம் கொடுக்கின்றார்கள். ஆனால், எங்களுக்கு இல்லை என்கின்றார்கள். நீங்கள் சொந்த இடத்துக்கு போனால் தான் வீட்டு திட்டம் என்கிறார்கள். ஐந்து பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் தான் வாடகை வீடுகளில் அலைவது என்று கேட்டால் அரச அதிகாரிகளிடம் பதிலில்லை. போர் முடிந்து பத்து வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் ஏன் எங்களை சொந்த ஊருக்கு விடுகிறார்கள் இல்லை? நாங்கள் என்ன குடும்பத்துடன் கடலுக்குள் வீழ்ந்து சாவதா?
நல்லூர் பிரதேச செயலர் பிரிவு, கோப்பாய் பிரதேச செயலர் பிரிவு என யாழ் மாவட்டத்தின் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் எம் மக்கள் சிதறுண்டு வாழ்கின்றார்கள். பிரதேச செயலர்கள் நினைத்தால் தங்கள் கிராம சேவகரூடாக பலாலியில் இருந்து இடம்பெயர்ந்த எத்தனை குடும்பங்கள் இருக்கின்றார்கள் என்கிற விபரத்தை பெறலாம். அதன் பிற்பாடு அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையாவது வழங்கலாம்.
நான் தினமும் பேப்பர் படிக்கும் பழக்கமுள்ளவன். எங்களது பலாலி மேற்கைப் பற்றி ஊடகங்களில் கூட செய்திகள் வெளியாவதில்லை. பலாலி மேற்கில் இருந்து சிதறிக் கிடக்கும் மக்களை ஒன்றிணைத்து பலாலி மேற்கு மீள்குடியேற்ற சங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறோம். இவ்வாறாக கூறி முடித்தார் பெரியதம்பி நாகராசா.
பலாலி மேற்கு மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள பலாலி மேற்கு பிரதேசத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள கிராம சேவகரை தொடர்பு கொள்ள பலதடவைகள் முயற்சித்தும் பலனில்லை. பலாலி மேற்கு கிராம சேவகரிடம் இருந்து தொடர்பு கிடைக்கும் பட்சத்தில் அவரிடம் இருந்தும் தகவல்களை பெற்று பிரசுரிக்க தயாராக இருக்கின்றோம்.
அமுது
நிமிர்வு ஆகஸ்ட் 2019 இதழ்
Post a Comment