காஷ்மீரின் சுயாட்சிப் பறிப்பும் ஜனநாயக படுகொலையும்காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்து வந்த தன்னாட்சி உரிமையான சிறப்பு மாநில அந்தஸ்தை பிரதமர் நரேந்திர மோடியின் இந்து தேசியவாத அரசு ஆவணி5ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான ஐம்மு மற்றும் காஷ்மீர் சிறப்புரிமை இரண்டாவது திருத்த மசோதாவை அன்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். அப்போது ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவதோடு அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கான பரிந்துரையையும் முன்வைத்தார். இதன் அடிப்படையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய பிரதேசங்கள் ஒரு சட்ட மன்றத்தைக் கொண்டு இருப்பதோடு லடாக் தனி யூனியன் பிரதேசமாக விளங்கும். லடாக் பிரதேசத்திற்கென சட்டமன்றம் காணப்படாது.  370 சட்டப்பிரிவு நீக்கமானது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஜனநாயகப் படுகொலை என அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றனர்.

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசமைப்பு சட்டத்தின் உறுப்புரிமை 370 பற்றிய அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்கு சில நாட்களுக்கு முன்னால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு அனுமானங்கள் தோன்றியிருந்தன. இந்த முன்மொழிவுகள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் முன்பே அமர்நாத் யாத்ரீகர்கள் பாதியில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதோடு தேர்வுகள் இரத்து செய்யப்பட்டன. இச் செயற்பாடுகள் மூலம் மாநிலம் பிரிக்கப்படும் என்றும், பிரிவு 35A அகற்றப்படும் என்றும் அச்சம் நிலவியது. ஆனால் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த பிரிவு 370இன் அனைத்து சரத்துக்களும் ரத்து செய்யப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தெலுங்கான போல புதிய மாநிலங்களை பிரிப்பது இந்தியாவில் நடைபெறும் ஒன்றுதான். ஆனால் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கும் முடிவு ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை இல்லாமலாக்கும் நடவடிக்கை என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

பொதுவாக இது போன்ற முக்கியமான அரசியல் சாசன மாற்றம் செய்யும் போது ஜனநாயக வழிமுறைகள் பின்பற்றப்படுவது வழக்கம். தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மாநில அரசுகளுக்கிடையில் கலந்தாலோசனைகள் நடைபெற்று இதற்கான வரைவுகள் தயாரிக்கப்பட வேண்டும். பின்னர் அவை நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டு நீண்ட விவாதத்திற்கு விடப்பட வேண்டும். அத்துடன் இது தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ள நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டும். இதன் பல்வேறு விளைவுகளை பற்றி கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்ட குடிமக்களுக்கு அமைதியும் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதன் பிறகு தான் அது மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையில் வாக்கெடுப்புக்கு கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் எல்லா நடைமுறைகளும் மீறப்பட்டுள்ளன.


இந்தியாவோடு காஷ்மீர் ஒன்றிணைவதை அம்மாநிலத்துக்கு  சட்டப்பிரிவு 370 வாயிலாக கொடுக்கப்பட்டு வந்த சிறப்புரிமை தடுக்கின்றது என்று பல தசாப்தங்களாக இந்தியாவின் வலதுசாரி பாரதீய ஜனதா கட்சியும் அதன் தாய் அமைப்பான ஆர். எஸ். எஸ் உம் சொல்லி வந்தன. இதனால் கடந்த பல தேர்தல்களின் போது பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு சிறப்புரை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370ஐ ஒழிக்கப்போவதாக தெரிவித்து வந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் நடந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் Mehbooba Mufti தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்தது. ஆனால் இந்தக் கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணியாக பார்க்கப்பட்டது. ஆரம்பத்திலே இக்கூட்டணி நன்றாக செயற்பட்ட போதும் சில காலங்களுக்கு பிறகு கூட்டணியில் பிளவுகள் ஏற்பட்டு இறுதியில் உடைந்தே போய்விட்டது. அதன் பிறகு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல் செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஆளுனர் ஆட்சியினை காஷ்மீரில் பா.ஜ.க. மேற்கொண்டு வந்தது. மாநில சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்தல் வரும் என்று அவ்வப்போது கணிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நடாத்தப்படவில்லை.

மேலும் ஜனசங்க காலத்தில் இருந்தே ஜம்மு காஷ்மீர் மாநில அரசியலில் கால் பதிக்க பா.ஜ.க முயன்று வந்தது. இந்நிலையில் 2019ஆம்ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதால் தனது நீண்ட நாள் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலையை ஆளும் பா.ஜ.க. பெற்றது.

மாநிலங்களவையில் பா.ஜ.க. முன்மொழிந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 61 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். தி.மு.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சி.பி.ஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்தன. பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. பா.ஜ.க கூட்டணி கட்சியான சிவ சேனா, சிரமோனி அகாலிதளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பகுஜன் சமாஜ் கட்சி, பிஜு ஜனதா தளம், ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவையும் ஆதரவளித்தன.

இம் மசோதா மூலம் இந்தியாவில் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் இனி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இம் மசோதா கொண்டு வரப்பட்டதன் பின்னணியில் பின்வரும் இரண்டு காரணங்கள் காணப்படுகின்றன என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

01. காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். காஷ்மீரை அடிப்படையாக வைத்து பக்க நாடுகளும் மிரட்டுகின்றன. அதனால் இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீரை ஆக்கிக் கொண்டால் எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் இந்தியாவுக்குள் வந்துவிடும்.

02. மத்திய பா.ஐ.க அரசு நாடு முழுக்க செயல்படுத்தி வரும் பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட விலை உயர்வுகளும் நாடாளுமன்றத்தில் இவர்கள் இயற்றுகின்ற சட்டங்களும் ஜம்மு காஷ்மீரில் செல்லுபடியாகவில்லையே என்ற ஆதங்கம்.

இதன் மூலம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாநிலத்தை மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்துள்ளதோடு, நீண்ட காலமாக சர்வதேச பிரச்சனையாக இருக்கும் காஷ்மீர் விவகாரம் பேச்சுவார்த்தை தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

மேலும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு இந்தியா எடுத்துள்ள தன்னிச்சையான முடிவு என்பது, காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று உலகிற்கு விடுவிக்கப்பட்டுள்ள அறிவிப்பாகும். இந்த மாற்றம், இந்தியாவின் பார்வையிலிருந்து எல்லாவற்றையும் மாற்றியுள்ளது. இதற்கமைய உலக நாடுகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இக்கருத்துக்கள் மறைமுகமாக இந்தியாவின் செயலை அங்கீகரிப்பதோடு காஷ்மீர் மக்களின் நியாயமான சுயநிர்ணய கோரிக்கைகளை பெறுமதியற்றதாக்கின.  இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வளரும் பதற்றம் தொடர்பாகவே இதுவரை பல சர்வதேச பதில்கள் வந்துள்ளன. அணு ஆயுதங்கள் கொண்டுள்ள இரு நாடுகளும் கட்டுப்பட்டோடு செயல்பட வேண்டுமென பல நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

காஷ்மீர் சார்பாக பாகிஸ்தான் மாத்திரமே பல காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்க முனைந்து வருகின்றது. ஆனால் பாகிஸ்தானின் எல்லா நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பியது. இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வோம் என்றும், இந்தியாவின் உடனான போக்குவரத்து உறவையும் முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது.

நியூயோர்க் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஒர்ட்டாகுஸ், காஷ்மீர் பிரச்சனையை எந்தவொரு மூன்றாவது நபர் மத்தியஸ்தம் இல்லாமல் இந்தியாவும், பாகிஸ்தானும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்று தெரிவித்தார். இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கும் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவவும் பாகிஸ்தான் துணை போகக் கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. காஷ்மீரில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல் நடைபெறும் என பாகிஸ்தான் கூறியதற்கு பதிலடியாக இந்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து ஐ.நா சாசனத்தின் படியும் 1972 சிம்லா ஒப்பந்தத்தின்படியும் பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு சீனா பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கியது. லடாக் தொடர்பாக மட்டுமே சீனா தனது கண்டத்தை பதிவு செய்துள்ளது. ஏனெனில் லடாக் என்பது சீனாவின் எல்லையை ஒட்டிய பிராந்தியத்தில் வரக்கூடியதாகும்.

மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ரஷ்சியா ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீரின்  நிலையில் மாற்றம் செய்தமையானது இந்திய அரசின் அரசியலமைப்பிற்குள் அடங்கியது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான சிக்கல்களை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்திற்கு கட்டுப்பட்டு இரு நாடுகளும் சுமூகமாக தீர்த்துக் கொள்ளும் என நம்புவதாக ரஷ்சிய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பு நாடான ரஷ்சியா இந்தியாவிற்கு தனது வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா, துருக்கி, அரபு எமிரேட்ஸ் என எந்த இஸ்லாமிய நாடும் காஷ்மீர் மக்களுக்காக குரல்கொடுக்கவில்லை.

 எல்லாவற்றிற்கும் மேலாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலும் காஷ்மீர் மக்களை கைவிட்டு விட்டது. சிம்லா ஒப்பந்தத்தின் படி காஷ்மீர் விவகாரத்துக்கு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே தீர்வு காண வேண்டும் என்றும் இதில் மூன்றாவது நபர் தலையிட முடியாது என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தெரவித்துவிட்டது.

காஷ்மீர் விவகாரத்தினைப் பொறுத்தவரையில் காஷ்மீர் மக்கள் சுயாட்சியினை எதிர்பார்த்து நின்றனர். காஷ்மீர் மக்களின் உணர்வை சரியான கண்ணோட்டத்தில் பார்த்தவர்கள் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான பெரியாரும், சி.என் அண்ணாத்துரையும் ஆவார்கள். இதில் காஷ்மீர் குறித்து பெரியார் கூறிய கருத்துக்கள் நினைவூட்டப்பட வேண்டியதாகும்.

“காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி பேசுவதற்கு நீங்கள் யார்?பாகிஸ்தானும் இந்தியாவும் யார்? காஷ்மீரிகள் தங்களைப் பற்றித் தாங்களே முடிவெடுத்துக் கொள்வார்கள். தங்கள் எதிர்காலம் குறித்துத் தீர்மானிக்க நாம் அவர்களை விட்டுவிட வேண்டும். காஷ்மீர் விவகாரத்தை காஷ்மீரிகளின் கையில் விட்டுவிட வேண்டும். காஷ்மீரில் இந்திய ஆக்கிரமிப்பு முழுவதும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இது தான் காஷ்மீரிகளுக்கு நியாயம் வழங்குவதாக அமையும்” என பெரியார் கூறினார். ஆனால் பெரியாரின் நியாயத்தை இந்துத் தீவிரவாத அரசு குழி தோண்டி புதைத்துவிட்டது.

இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு பின் சிறுபான்மை இனங்கள் சுயாட்சி கோரிப் போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் இத்தகைய போராட்டங்கள் ஆட்சி அதிகாரம் கொண்ட ஆளும் அரசாங்கத்தினால் அடக்கப்படுகின்ற போக்கை அவதானிக்கலாம். இதற்கு ஈழத்து விடுதலை போராட்டம் மாத்திரமல்ல காஷ்மீர் மக்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதை 370 பிரிவு இரத்து செய்யப்பட்ட சம்பவமும் அந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் காட்டிய எதிர்வினைகளும் சிறந்த எடுத்துக்காட்டு.

லக்சனா பாலகுமாரன்
நிமிர்வு செப்டெம்பர் 2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.