நிராகரி தேர்தல் அரசியல் பராமரி 'மக்கள் அரசியல்'




அறிமுகம்:

இலங்கைச் சந்தையில் வாக்கு வியாபாரம் ஆரம்பமாகிவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதிக் கதிரை கொள்வனவு மற்றும் பாராளுமன்றக் கதிரைகள் கொள்வனவு, மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டு உயர்ந்த நிலையை அடைய வியாபாரிகள் முயற்சிக்கின்றனர்.

இனவாத அறைகூவல், போர் வெற்றி முழக்கம், தோல்விப் புலம்பல், போலி வரலாற்று வாக்குறுதிகளுக்கு மீள்வீக்கம், ஏமாற்றுதல், அச்சுறுத்தல், என பல விளம்பர யுக்திகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதிக வாக்குகளை வாங்கி நாம் உங்களை ஆக்குவோம் என தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட பலரும் ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். மற்றவர்களை விமர்சிப்பதால், விற்பனையைத் தமக்கு சாதகமாக்கலாம் என எண்ணுகின்றனர் சிலர்.

இருக்கும் வாக்கை யாருக்கு அல்லது எந்தக்கட்சிக்கு அளிக்கலாம்? வாக்கை அளித்தல், வாக்கை அழித்தல் இரண்டுமே பொறி. எப்படி இந்த வியாபாரத்தை கையாள்வது? இது சாதாரண மக்களின் அவலம்.

சுயநிர்ணய உரிமை மைய தேசியம்:

சுயநிர்ணய உரிமையுடன் தமிழ் மக்கள் வாழ்வை உறுதி செய்வதே இன்றும் அவசர தேவை. அகிம்சைப் போராட்டம் மூலம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஆயுதப் போராட்டமாக்கப்பட்டமையும் அதன் பின்னரும் சுயநிர்ணயத்துக்கான குரல்கள் பல்வேறு மட்டங்களிலும் வெளியாவதை நாம் அவதானிக்கலாம்.

 போராட்டத்துக்கான காரணத்தை நீக்க முயற்சிகள் பாரியளவில் முன்னெடுக்கப்படாவிட்டாலும், போரினால் ஏற்பட்ட விளைவுகளை சார்ந்த போராட்டங்கள் இன்றும் தொடர்கின்றன. இவற்றை பாவிக்க பல முயற்சிகள் பல சக்திகளால் மேற்கொள்ளப்படுகின்றன. இவை சர்வதேசம் உட்பட பலரதும் இருப்பு சார் முன்னெடுப்புகள் என்பது மறைக்க முடியாத உண்மை.

ஒரு மக்கள் திரளின் கூட்டுப்பிரக்ஞை தேசியம்; இலங்கையில், இலங்கைத் தேசியத்துக்குள் அப்படிப்பட்ட அங்கீகாரம் வரலாற்று ரீதியாக தமிழ்மக்களுக்கு கிடைக்காததால் தான், ‘தமிழ்த் தேசியம்’ எனும் எண்ணக்கரு உதயமானது. இலங்கை எப்போது தமிழர்களை அவர்களின் அடிப்படைகளுடன் அங்கீகரிக்கும் நாடாகுமோ அப்போது ‘தமிழ்த்தேசியம்’ என்பது பற்றிய தேவை ஏற்படாது. அது மட்டுமல்ல இன்று இலங்கை எனும் நாட்டுக்குள், தேசமாக இருக்கும் ‘தமிழ்த்தேசியம்’ அதற்கு இருப்புக் கொடுத்திருக்கும் எதனையாவது புறக்கணிக்குமானால், நிச்சயம் ஒரு தேசியம் பிறந்துவிடும் என்பது தவிர்க்கமுடியாத உண்மை.

யதார்த்தங்களை இறைமைப்படுத்தி (Divinization) தேசியத்தை பௌதீகமயமாக்குவது யாருக்கும் நன்மை தராது. சிங்க தீப, தம்ம தீப புனைகதைகளோ அல்லது கல்தோன்றா மண்தோன்றா காலத்துக்கு முன்தோன்றிய" என கூறும் புனை கதைகளோ யதார்த்தத்தை நோக்கும் போக்கை கேள்விக்குள்ளாக்க இன்று அழுத்தம் கொடுப்பதில்லை. வரலாற்று புனைகதைகளைக் கடந்து வாழ்வுரிமை அடிப்படையில் தமிழர் சிங்களவர் முஸ்லீம்கள் உட்பட அனைவரும் வாழ்வது அடிப்படை இருப்பு சார்ந்தது.

யதார்த்தத்தின் ஒளியில் நன்மை விரும்பிகள், தீமை விரும்பிகள், சுயநலவாதிகள் மற்றும் சூழ்நிலைக்கைதிகள் என மனிதர்களை நோக்கலாம். நன்மை விரும்பிகள் யதார்த்தத்தில் நன்மைக்காக உழைப்பவர்கள். இவர்கள் சிறுபான்மையே. தீமை விரும்பிகள் தீமைகளை தொடர்ந்து கொண்டேயுள்ளனர். சுயநலவாதிகள், தீமைகளை மட்டுமல்ல நன்மைகளையும் தமது இருப்புக்காக செய்கின்றனர். சூழ்நிலைக்கைதிகள் தாம் இருக்கும் சூழ்நிலையை ஆழமாக நோக்கி, புரிந்துகொள்ளாமல் அச்சூழ்நிலையின் கைதிகளாகின்றனர். இதனால் நன்மை தீமை இவர்களுக்குப் புரிவதில்லை. இந்நிலையில் நமது இன்றைய யதார்த்தத்தில், ஒவ்வொருவருடைய வகிபாகமும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்.


சிங்கள பௌத்தம் மட்டுமே தேர்தல் வெற்றியின் அடிப்படை:

இலங்கையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களின் பெறுபேறுகள் தெளிவாக தரும் கருத்து: சிங்கள பௌத்தத்துக்கு நேரடியாக வாக்களிக்க வேண்டும் அல்லது சிங்கள பௌத்தத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையெடுத்தோருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது சிங்கள பௌத்தத்துக்கு எதிராக வாக்களிக்களிக்காமல் இருக்க வேண்டும்.

பௌத்தம் அரசியலாக்கப்படும் கொடுமை எதிர்க்கப்பட வேண்டும். பௌத்தம் கூறும் புத்தர் யார்? சுத்தோதனரின் மகன் சித்தார்த்தர். அரச வாழ்விலிருந்து விலகி துக்கத்தின் காரணத்தைத் தேடியவர். பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தவர். சாதிப்பாகுபாடு, சமயச்சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதவர். யுதார்த்தவாதி. துன்பத்துக்கு காரணமான ஆசையை நீக்க கற்பித்தார்.

நிறுவனமயமாதலின் விளைவாக ஏனைய சமயங்கள் போல பௌத்தமும், பௌத்தத்தின் அடிப்படைகளின்படி இயங்க முடியாதநிலை ஏற்பட்டுவிட்டது. எப்படி கொன்ஸ்டான்டைன் எனும் அரசன், ‘கிறிஸ்து வழியை’ அவரது ஆட்சியை நிலைப்படுத்த பாவித்தாரோ அதைப்போலவே இலங்கையில் பௌத்தம் அரச மதமாக்கப்பட்டுவிட்டது. ‘உயிர்கள் மீது காருண்யம்’ பௌத்த நெறியாக இருப்பினும் ‘இனஅழிப்பு – உயிர்க்கொலைகளுக்கு’ ஆசி வழங்கப்பட்டன.

நிராகரி ‘தேர்தல் அரசியல்’, பராமரி ‘மக்கள் அரசியல்’…

சிங்கள பௌத்தத்துக்கு வாக்களித்து நன்மை வரும் என நம்புவது யதார்த்தத்துக்கு பொருத்தமா? சிங்கள பௌத்தத்துக்காகவே நான் எனக் கூறாமல் வாக்கு வியாபாரத்தில் ஈடுபட எந்த அபேட்சகராவது முன்வருவது இன்றைய யதார்த்தத்தில் நடைபெறுமா?

இலங்கையின் புள்ளிவிபரங்களின்படி (https://en.wikipedia.org/wiki/Demographics_of_Sri_Lanka) நோக்கும்போது, ஒற்றையாட்சி அமைப்பின்படி சிங்கள பௌத்தத்தின் வெற்றி இலங்கையில் தவிர்க்க முடியாதது.  2012 புள்ளிவிபரப்படி பௌத்தர்கள் 70.10% இந்துக்கள் 12.58% இஸ்லாமியர் 9.66%  கிறிஸ்தவர் 7.61%. சிங்கள பௌத்த 70% க்கு மேலாக உள்ளதால் சிங்கள பௌத்த தேர்தல் வெற்றி யதார்த்தமயமானது.

அரசியல் என்பது வாழ்வின் அனைத்து மட்டங்களுடனும் தொடர்புடையது. மக்கள் நலத்தை மையமாகக்கொண்ட அரசியல் அனைவருக்கும் அவசியம். முக்கியமாக தமிழர் பெரும்பான்மையாக குடியிருக்கும் வடக்கு மாகாணம் போன்ற பிராந்தியங்களில் பெரும்பான்மை அரசியல் பலத்தை உறுதி செய்வது யதார்த்தம் சார்ந்தது.

மக்களரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தேர்தலரசியலை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு சாதனை செய்வதாக வாக்குக்கொடுப்பது ஆரோகியமானதொன்றல்ல. பொருளாதார, சமூக, சமய, கல்வி, சுகாதார, கலாசார மட்டங்களில் எத்தகைய யதார்த்தநிலை இன்று வடக்கு கிழக்கில் நிலவுகின்றது என்பது நோக்கப்பட்டு வளர்ச்சிக்காக மக்கள் நல அரசியல் இயக்கம் நடைபெறவேண்டும்.

தொகுப்பு:

மக்களரசியல் அரசியல் ஆரோக்கியமாக இருப்பின் பன்மைத்தவம் பேணப்படும். அனைவரும் மக்கள் நலனுக்காக வேறுபட்ட வழிகளில் தமது பங்கை உறுதி செய்யலாம். ஒரு கட்சியோ அல்லது ஒரு சில நபர்களோ தம்மால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் எனக் கூறத்தேவையில்லை. மக்களும் யோசித்து அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வது முக்கியம். சாதியம், ஆணாதிக்கம், வர்க்க வேறுபாடு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்போர் மக்கள் நல அரசியலுக்கு பொருத்தமல்லர் என்பது வெளிப்படுத்தப்படவேண்டும்.

மக்களரசியலில் ஈடுபட பொருத்தமானவர்கள் இன்றைய யதார்த்தத்தில் முன்வரவேண்டும். முள்ளிவாய்க்கால் போருக்குப்பின் 10 ஆவது ஆண்டில் வாழும் நாம் வரலாற்றுக்கற்பிதங்களை மறக்காமல் ஒற்றுமையுடன் இருப்பது முக்கியம். கருத்துப்பன்மைத்துவம் நிச்சயம் வேண்டும். பிரிவினைகள் நிச்சயம் களையப்பட வேண்டும். தேர்தல் அரசியல் நோக்கில் அர்த்தமற்ற குழப்பங்களில் நேரத்தையும் வளங்களையும் வீணாக்காமல், தமிழ்த்தேசத்தில் மக்களரசியலில் ஈடுபட்டு, பெரும்பான்மை அரசியல் பலத்தை எப்போதும் உறுதி செய்வது அவசியம். ‘பிரித்து ஆளுதல்’ எனும் பின்காலணித்துவ ஒடுக்குதலுக்கு யாரும் துணைபோகக்கூடாது.

-அருட்பணி-SDP செல்வன்-
நிமிர்வு செப்டெம்பர் 2019 இதழ்  


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.