ஆசிரியர் பார்வை




பேராபத்தில் ஒன்றாகிறது சிங்களம் பேரழிவின் பின்னரும் உதிரிகளாகிறது தமிழினம்

2009 இல் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உலகின் பல நாடுகள் சிறீலங்கா அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. இதனை தொடர்ந்து உலகெங்கும் எழுந்த தமிழ் மக்களின் எதிர்ப்பலையால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி சில நாடுகள் முன்வந்தன. அதனை இழுத்தடித்து நீர்த்துப் போக செய்வதில் வெற்றி கண்டிருக்கிறது சிங்கள அரசு.  அதற்கு உடந்தையாக இருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.

ராஜபக்ச குடும்பமே முன்னின்று இனப்படுகொலையை அரங்கேற்றியதால் அவர்களின் மேல் இனப்படுகொலை குற்றச்ச்சாட்டுக்கள் சர்வதேசமெங்கும் இருந்தும் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இலங்கையில் நடந்த தேர்தலில் நல்லாட்சி அரசு என்கிற பெயரில் மைத்திரிபால ஜனாதிபதியாகிறார். ரணில் பிரதமராகிறார். இதனால் ராஜபக்ச குடும்பம் போர்க் குற்றச் சாட்டுக்களில் இருந்து காப்பாற்றப்படுகிறது. ஆட்சிக்கு வந்த மைத்திரிபாலாவும் போர்க்குற்றசாட்டுக்களுக்கு உள்ளான மஹிந்த குடும்பம், இராணுவம் மீது சட்ட  நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என பகிரங்கமாகவே கூறி விட்டார்.

மஹிந்த காலத்தில் நடந்த நிதி ஊழல்களுக்குக்கூட ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த எவருக்கும் தண்டனை பெற்றுக் கொடுக்க நல்லாட்சி அரசு முன்வரவில்லை.   மஹிந்த காலத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மீதான விசாரணையும் இழுபட்டு வருகின்றது. எல்லாமே ஒரு கண்துடைப்பாக தான் இருக்கிறது.  இலங்கையின் கேந்திர முக்கியத்துவ நலன்களைப் பெற்றுக் கொள்வதற்காக அதனுடன் ஒத்துப் போய் இந்தக் கண்துடைப்பில் மேற்குலகமும் ஈடுபட்டுள்ளது.

இந்த நல்லாட்சி என்கிற நாடக ஆட்சியின் பல்வேறு கட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்கள் முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்து வந்தனர். தமிழ் மக்களுக்கு இவர்களின் ஆட்சியின் போது உறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு இருக்கும் இடம் தெரியவில்லை காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.   கண்முன்னே அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களை விடுவிக்க கூட கூட்டமைப்பால் நிபந்தனை விதிக்க முடியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கை காட்டியதன் பெயரில் அதிகளவான தமிழ்மக்கள் வாக்களித்து நல்லாட்சியை கொண்டுவந்திருந்தனர். அதற்கு நன்றிக்கடனாக இனப்படுகொலை குற்றச் சாட்டுக்கு உள்ளானவரும் சிங்களக்   கடும் போக்காளருமான சவேந்திரசில்வா மைத்திரிபாலவினால் இராணுவத்தளபதியாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். கூட்டமைப்பின் முகத்திலடிப்பது போன்ற இச்செயலை சிங்கள மத்தியில் தன்னை நாயகனாகக் காட்டிக் ஜனாதிபதி செய்திருப்பதாக கருதப் படுகிறது.

இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்து கடந்த அரசாங்கம் மகிந்த குடும்பத்தை காப்பாற்றியிருக்கிறது. இப்போது மீண்டும் மஹிந்த குடும்பத்திலிருந்து இனவழிப்புக்கு உத்தரவிட்ட கோத்தபாய ஜனாதிபதியாக வரும் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

காலச் சக்கரம் மீண்டும் சுழன்று வருகின்றது. ராஜபக்ச குடும்பமே மீண்டும் ஆளும் நிலை வருகிறது. இனப்படுகொலைக்கு உத்தரவிட்டவரும், இனப்படுகொலையை நேரடியாக அரங்கேற்றியவரும் ஆளப்போகும் நாட்டில் இன்னொரு தேசிய இனமான தமிழ் மக்களின் கதி என்ன?

இந்த வரலாற்றுப் படிப்பினையில் இருந்து நாம் கற்க வேண்டியது ஒன்று தான். சிங்களம் எப்படித்தான் கட்சிகளாக பிரிந்து கிடந்தாலும் தக்க நேரத்தில் ஆபத்தான கட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை காப்பாற்றியிருக்கிறது. இப்போது மீண்டும் சிங்கள தலைவர்கள் எதிரெதிர் அணிகளாக நின்று வேஷம் போடுகின்றனர்.

ஆனால் தமிழத் தலைவர்கள் தமிழ்த் தேசியம் என்ற அடிப்படையில் கூட இணைய முடியாமல் கட்சிகளாக பிரிந்து நிற்கிறார்கள். தமிழ் மக்களையும் பிரித்து வைத்திருக்கிறார்கள்  பேரழிவு நடந்து பத்தாண்டுகளின் பின்னும் நாம் எதையும் கற்காது போனால் எம்மினத்தின் விடிவு எப்போது?

-செ.கிரிஷாந் -
நிமிர்வு செப்டெம்பர் 2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.