பத்தாண்டு விட்டுக்கொடுப்பு அரசியலால் சாதித்தது என்ன?




ஒன்றைத் திரும்பத் திரும்ப செய்துகொண்டு வித்தியாசமான விளைவை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். என்று ஐன்ஸ்டீன் சொல்லுவார்.  திரும்பத் திரும்ப ஒன்றைச் செய்ய முடியாது. நாங்கள் சித்த சுவாதீனமாக இருக்கின்றோமா? திரும்பத் திரும்ப நீங்கள் வாறீங்கள். திரும்பத் திரும்ப நாங்கள் கதைக்கின்றோம். திரும்பத் திரும்ப கேட்டிட்டுப் போறீங்கள். ஆனால் திரும்பத் திரும்ப அந்தக் கட்சியைத்தான் கொண்டு  வருகின்றீர்கள். ஒரு மாற்றமும் நிகழவில்லை.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ்மக்களின் எதிர்காலமும்." எனும் தலைப்பில் 21/07/2019 அன்று வவுனியாவில்  ஒரு கருத்தாய்வு இடம்பெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றிய அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

வித்தியாசமாகச் சிந்திக்கின்ற இடத்திற்கு நாங்கள் வந்துவிட்டோம். எப்படிச் சிந்திக்கப் போகின்றோம். எங்கிருந்து ஆரம்பிக்கப்போகின்றோம். மக்கள் அரசியற் தலைவர்களில் நம்பிக்கையை இழந்து தேரர்களின் பின்னும் வேறுயார் யாரோ நபர்களின் பின்னும் போகின்றார்கள்.

தொழில்நுட்பம் ஒருபுறம் எங்களைக் குலைக்கிறது. ஒரு தலைமுறை தொழில்நுட்பத்தின் கைதியாகிவிட்டது. இங்கே நீங்கள் நிலம் உங்களுடையது இல்லை என்கிறீர்கள். ஆனால் உங்களுடைய பிள்ளைகளும் உங்களுடையது இல்லை என்று ஆகிவிட்டது. உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் திறன்பேசி (ஸ்மார்ட்போன்) நிற்கிறது. உங்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையில் வாளைக் கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் போதைப்பொருட்களைக் கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். முகவர்கள் இருக்கின்றார்கள். நிலம் மட்டுமல்ல உங்களுடைய பிள்ளைகளும் உங்களிடம் இல்லை. இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக யோசிப்போம்.

நவநீதன் சொன்ன புள்ளிவிபரங்களுக்குள்ளாலை யோசிக்கும் போது ஒரு பயம்  உண்டாகின்றது. உங்களுடைய தாயகம் இப்பொழுது உங்களுடையது அல்ல. அந்தத் தாயகத்தைம் பாதுகாப்பதற்கான கட்டமைப்பு எதுவும் உங்களிடம் இல்லை. அதுதான் உண்மை. 2009 ஆம் ஆண்டு ஆயுத மோதல் முடிவிற்கு வந்ததன் பின் கிளிநொச்சியிலிருக்கும் தேவாலயங்களைத் திரும்ப பெறுவதற்காக கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த ஆயர்களும் பிரதானிகளும் இரணைமடுவிலிருந்த இராணுவத் தலைமையகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை செய்தார்கள். அப்பொழுது அந்தத் தளபதி ஒரு விடயத்தைச் சொன்னார். அது உலகம் முழுக்க உள்ள ஒரு பொது விதி. இந்த நிலத்தை நாங்கள் வென்றோம். இந்த நிலத்தில் இருக்கும் எல்லாம் எங்களுடையது. அதுதான் உண்மை. போரில் அவர்கள் உங்களை வென்றிருக்கிறார்கள். உங்களுடைய நிலம் வாழ்க்கை வளம், கடல், காடு, கழனி சகலதும் இப்பொழுது அவர்களுடையது. 2009 ஆம் ஆண்டிற்கு பின் அதை அவர்கள் படை கொண்டு செய்யவேண்டிய தேவை இல்லை. அதை அரசின் உபகரணங்களான திணைக்களங்களின் ஊடாக செய்கிறார்கள். முன்னுக்கும் செய்தார்கள். இப்பொழுதும் செய்கிறார்கள். ஏன்? இந்த நிலம் அவர்களுடையது. உங்களுடையது என்று சொல்லத்தக்கதாக உங்களிடம் என்ன பலம் இருக்கின்றது. இந்த இடத்திலிருந்துதான் நாங்கள் மாற்றிச் சிந்திக்க தொடங்க வேண்டும்.

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் எங்களிடம் என்ன பலம் இருக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த மேதை என்று அழைக்கப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு அருமையான வசனம் சொல்லுவார்.   நீ எதை இழந்தாய் என்பதல்ல இங்கு முக்கியம். உன்னிடம் இங்கே என்ன மிஞ்சியிருக்கின்றது என்பதே இங்கு முக்கியம். உங்களிடம் என்ன மிஞ்சியிருக்கின்றதோ அங்கிருந்து தொடங்கலாம்.  2009 ஆம் ஆண்டிற்கு பின் நீதி கேட்பதற்கான ஒரு அரசியல் எங்களிடம் மிஞ்சியிருக்கின்றது. உலக அரங்கில் நீதியைக் கேட்கும் ஓர் அரசியல் எங்களிடம் மிஞ்சியிருக்கின்றது. இந்த அரசியலை உங்களை விடத் துணிச்சலாகவும் வேகமாகவும் முன்னெடுக்கத்தக்க ஒரு பலமான புலம்பெயர்ந்த சமூகம் மிஞ்சியிருக்கின்றது. அது யுத்தத்தின் விளைவு. எங்களுடைய குடும்பங்கள் திரைஞ்சு போய்விட்டன. ஆனாலும் பத்து இலட்சத்திற்கு மேலான மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அது இப்பொழுது பலமாக மாறியிருக்கின்றது. தீமையில் கிடைத்த ஒரு நன்மை. அது மிஞ்சியிருக்கின்றது.

அது மட்டுமல்ல ஒவ்வொரு தேர்தல்களிலும் நீங்கள் தான் தீர்மானிக்கும் சக்திகள். பேரம் இருக்கின்றது உங்களிடம். ஐநாவிற்கு உங்களுடைய தேவை இருக்கின்றது. அமெரிக்காவிற்கு உங்களுடைய தேவை இருக்கின்றது. இந்தியாவிற்கு உங்களுடைய தேவை இருக்கின்றது. ஏனென்றால் இந்தப் பிராந்தியம் 2002 இற்கு பின்னர் இந்தோபசுபிக் பிராந்தியம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. அதற்கு முன்னர் எங்களுடைய புவியியல் புத்தகங்களில் இதற்கு பெயர் ஏசியாபசுபிக். இப்பொழுது இதற்கு பெயர் இந்தோபசுபிக்.  ஏசியாபசுபிக் இல் இந்தியா இல்லை. இந்தோபசுபிக்குள் இந்தியா வந்துவிட்டது. இந்தியா இதற்குள் வந்தால் சீனா சிறுபான்மையாகிவிடும். அமெரிக்கா, யப்பான், அவுஸ்ரேலியா, இந்தியா இவை நான்கும் இணைந்தால் சீனா அதற்குள் சிறுபான்மையாகிவிடும். எனவே பிராந்திய பெருவல்லரசுகளின் இழுவிசைக்குள் சிக்குண்டிருக்கும் ஒரு நிலத்துண்டு இது. இந்தோபசுபிக் என்பது ஒரு யுத்த வலயம். சோபா உடன்படிக்கையும் சரி, மிலேனியம் சலேஞ் என்று சொல்லப்படுகின்ற இந்த நிதி வழங்கலும் சரி எல்லாமே அதன் பகுதிகள் தான்.

உலகின் 60 வீதத்திற்கு மேலான பொருளாதாரம் இதற்குள் வருகின்றது. உலகின் மிகப்பெரிய இரண்டு சனத்தொகைகள் இதற்குள் வருகின்றன. உலகின் மிகப்பெரிய நுகர்வுச் சந்தையான  சீன இந்திய நடுத்தர வர்க்கங்கள்  இதற்குள் வருகின்றன. உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து இதற்குள் வருகின்றது. அதுமட்டுமல்ல உலகின் பகை அணுஆயுத எல்லையும் இதற்குள் தான் வருகின்றது. பாகிஸ்தான்-இந்தியா, சீனா-இந்தியா போன்று உலகில் வேறு எங்கும் அணுஆயுதம் கொண்டிருக்கும் பகை எல்லைகள் கிடையாது. இவ்வாறான கேந்திரமான இடத்தில் நீங்கள் அமைந்திருக்கின்றீர்கள்.

உங்களை எல்லோருக்கும் தேவை. ஏனென்றால் சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமான இந்தத் துருவ இழுவிசைக்குள் அமெரிக்காவிற்குச் சாதகமான ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தீர்மானிக்கும் வாக்குகளைக் கொண்டிருக்கின்றார்கள். சில கிழமைகளுக்கு முன்னரும் நீங்கள் தீர்மானித்தீர்கள். இந்த ஆண்டு இறுதியில் வரப்போகின்ற அரசுத் தலைவருக்கான  தேர்தலிலும் நீங்களே தீர்மானிப்பீர்கள். வருகின்ற அரசுத் தலைவர் மகிந்த அணியைச் சேர்ந்தவராக இருந்தால் வருகின்ற மாசி, பங்குனி மாதம் அளவில் இந்த நாடாளுமன்றம் கலையும். அதற்கு பிறகு வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் நீங்களே தீர்மானிக்கப் போகின்றீர்கள். தீர்மானிக்க பிறந்தவர்கள் நீங்கள்.

ஆனால் உங்களுடைய வெந்நீரூற்றை அபகரிக்கின்றார்கள். உங்களுடைய நீராவியடிப் பிள்ளையாரை இடித்துவிட்டு அந்த இடத்தில் புத்த விகாரையை கட்டுகிறார்கள். நாவற்குழியில் விகாரையை கட்டுகிறார்கள். ஏன் இப்படி நடக்கின்றது? தீர்மானிக்கும் தரப்பாக இருக்கின்றீர்கள். பேரம் உங்களிடம் இருக்கின்றது. வருகின்ற எல்லா வெளிநாட்டு பிரதிநிதிகளும் உங்களை தேடித் தேடி வந்து சந்திக்கின்றார்கள். இவ்வளவும் இருக்கத்தக்கதாக ஏன் உங்களுடைய மரபுரிமைச் சொத்துக்கள் கவரப்படுகின்றன? ஏன் நீங்கள் 2009 ஆம் ஆண்டு இழந்ததை திரும்பப் பெறமுடியாமல் இருக்கின்றது? இதுதான் பிரச்சனை.

இழந்த பேரத்தை எப்படிப் பெறுவது? எங்கிருந்து தொடங்குவது? இது தொடர்பாக ஒரு சரியாக ஆராய்ச்சி நடக்கவில்லை. இது தொடர்பாக ஒரு சிந்தனைக் குழாம் அதற்குரிய  ஒழுக்கத்திற்குள்ளாலை சிந்திக்கவில்லை. இப்போது நாங்கள் சிதறி, சிந்தி நிற்கின்றோம். இப்படி ஆண்டு தோறும் கூட்டங்களை நடத்துகின்றோம். ஆனால் அவர்கள் வென்ற நிலத்தில் எதை செய்ய வேண்டுமோ அதைத் தாராளமாக செய்கின்றார்கள். 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தான் அவர்கள் செய்கின்றார்கள் என்றில்லை. முன்னர் அதைப் படைத்தரப்பு செய்தது. இப்பொழுது அரசின் மற்றொரு உபகரணமான திணைக்களங்கள் செய்கின்றன. ஒன்றைத் தான் செய்கிறார்கள். வெவ்வேறு ஆட்கள் செய்கிறார்கள். இந்த நிலம் உங்களுடையது அல்ல. வென்றவர்களின் நிலம். எனவே அது வென்ற தரப்பு நீங்கள் தோற்ற தரப்பு என்கின்ற நிலை இருக்கின்ற வரைக்கும் இதெல்லாம் தொடரும். அந்தத் தோல்வியை வெற்றியாக மாற்ற வேண்டும். அந்தத் தோல்வியை வெற்றியாக மாற்றி ஒரு பேரத்தை கொண்டுவர வேண்டும்.

அப்படிப் பேரம் இல்லை என்றபடியாற் தான் சில கிழமைகளுக்கு முன்னர் வீரசிங்கம் மண்டபத்தில் ‘ஆயுதப் போராட்டம் வரும்போது அடங்கினீர்கள், ஆயுதப் போராட்டத்தோடு பேச்சு வார்த்தைக்கு போனீர்கள், எங்களோடு போகவில்லை’ என்று கூட்டமைப்பினர் முறையீடு செய்யும் நிலை வந்தது. ஏன்? பேரம்  இல்லை. ஆனால் பேரம் உங்களிடம் இல்லையா? இருக்கின்றது. அதற்குப்பிறகும் அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் வாக்களிப்பை நீங்கள் செய்தீர்கள். அப்பொழுது என்னென்று பேரம் இல்லை என்று சொல்லுவீர்கள்? இருக்கின்ற பேரத்தைப் பயன்படுத்த தெரியவில்லை. அதுதான் பிரச்சனை.

இந்தப் பிராந்தியம் திரும்ப திரும்ப இந்த வாய்ப்பை எஙகளுக்கு வழங்குகின்றது. இந்தப் பிராந்தியம் தான் நாங்கள் சிந்திய கண்ணீருக்கும் இரத்தத்திற்கும் காரணம். இந்த பிராந்தியம் தான் ஒரு நாளைக்கு நாங்கள் பெறப்போகின்ற விடுதலைக்கும் காரணமாக அமையும்.  பிரச்சனை என்னவென்றால் பேரம் கிடைக்கின்றது. எங்களுக்குத்தான் அந்தப் பேரத்தைப் பயன்படுத்தத் தெரியவில்லை. ஏன் தெரியாமல் போனது?

மாற்றிப்  பார்ப்போம் எப்படி நாங்கள் இந்தப் பேரத்தை கடந்த பத்தாண்டுகளில் பயன்படுத்தியிருக்கின்றோம் என்று. ஆட்சி மாற்றத்திற்கான சந்திப்புக்கள் நடந்த காலகட்டத்தில் கடந்த 2015ஆம் ஆண்டில் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் தலைவராக இருந்தவரிடம் கேட்கின்றார். “நாங்கள் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம். சிங்களத் தலைவர்கள் 60 ஆண்டுகளாக உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அப்படி இருக்கின்ற பொழுது நீங்கள் ஏன் எழுதப்பட்ட ஒரு உடன்படிக்கைக்கு போகாமல் இப்படி ஒரு கனவான் உடன்படிக்கைக்கு போகின்றீர்கள்” என்று. அதற்கு திரு சிவாஜிலிங்கம் சொன்னார். “தற்போக்கிலிகளோடை உடன்படிக்கையை  செய்யமுடியாது. கனவான்களோடுதான் உடன்படிக்கைகளை செய்யலாம்” என்று. கனவான் உடன்படிக்கைகளை  செய்யமுடியாததற்கு தந்திரோபாயக் காரணங்கள் இருக்கும். செய்தால்  அது  புலி-யானை உடன்படிக்கையாகக் காட்டப்படும். அதுவே போதும் புலி-யானைக் கூட்டைத் தோற்கடிக்க என்ற தந்திரோபாய காரணம் இருக்கின்றது. அந்த இடத்தில் சொல்லப்பட்ட பதில் என்னவென்றால் எவ்வளவு மையைக் கொட்டி நாங்கள் உடன்படிக்கை செய்கின்றோம் என்பதில்லை பிரச்சனை.  எவ்வளவு நம்பிக்கைகளை முதலீடு செய்கின்றோம் என்பதுதான். நம்பிக்கைகளை எப்படி முதலீடு செய்தோம்?

2009 ஆம் ஆண்டிற்கு பின்னிருந்து குழுக்களை அமைத்து பேசத்தொடங்கினோம்.  ஆனால் யுத்த வெற்றி வாதம் பேச்சு வார்த்தைக்கு வந்ததே தவிர ஒன்றையும் தரத் தயாராக இருக்கவில்லை. எனவே 2015 ஆம் ஆண்டு ஆட்சியைக் கவிழ்த்தோம். கவிழ்த்த பிறகு சந்திரிக்கா கேட்ட உடன்படிக்கையை நாங்கள் யோசிக்கவில்லை. சொன்ன காரணம் நம்பிக்கைகளை முதலீடு செய்யப் போகின்றோம். அதன் பின்னர் ஒவ்வொரு பட்ஜெட் வாக்கெடுப்பின் போதும் எங்களுக்குத் தான் பேரம். நாங்கள் எந்த எழுதப்பட்ட உடன்படிக்கையையும் முன்வைக்கவில்லை. பேரத்தை வைக்கவில்லை. அதனைத் தவிர கடைசியாக போன வாரத்துக்கு முதல்வாரம் வரை நம்பிக்கை வாக்கெடுப்புக்கள் வந்தது. அங்கேயும் நாங்கள் எழுதப்பட்ட உடன்படிக்கை, பேரம்  எதையுமே வைத்துக்கொள்ளவில்லை.

அதுமட்டுமல்ல ஈழத்தமிழர்களின் தலைமைப் பாரம்பரியத்தை எடுத்து நோக்கினால் ஒரு கிழக்குத் தலைமை ஈழத்தமிழர்களின் தலைமையாக வந்தது என்பது ஒரு புறநடை. அப்படிப் பார்க்கும் பொழுது இந்த காலகட்டத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது. வடக்கு மையத் தலைமைகளை உடைத்துக்கொண்டு ஒரு கிழக்கு மையத் தலைமை வந்திருக்கின்றது. அது கூட ஆயுதப் போராட்டத்தின் விளைவுதான்.  இது ஈழத்தமிழர்களின் தலைமைப் பாரம்பரியத்திலிருந்து ஒரு விலகல். முஸ்லிம் மக்களுக்கு எந்த தமிழ் தலைவர்களும் முன்னர் விட்டுக்கொடாத அளவிற்கு விட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. மாகாணசபையில் அவர்களுக்கு பதினொன்று. எங்களுக்கு ஒன்பது வாக்குகள் என்றிருந்தது.  ஆனால் முதலமைச்சரைக் கொடுத்தோம். கல்முனையைக் கூட கேட்கவில்லை.அவ்வளவிற்கு விட்டுக் கொடுத்தோம்.

பின்னர் தேரர்கள் உண்ணாவிரதம் இருந்த சில கிழமைகளுக்கு முன்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு என்று வந்த பொழுது என்ன முடிவெடுத்தோம்? அந்த முஸ்லிம் தலைவர்களைப் பாதுகாக்கும் முடிவைத்தான் எடுத்தோம். அந்தளவிற்கு நாங்கள் முஸ்லிம் தலைவர்களுக்கு  விட்டுக்கொடுத்தோம். சிங்களத் தலைவர்களுக்கு விட்டுக்கொடுத்தோம். எல்லாமாக விட்டுக் கொடுத்தோம். எப்பொழுதாவது ஏன் விட்டுக்கொடுத்தீர்கள் என்ற கேள்வி கேட்டீர்களா? போன கிழமை வரை விட்டுக் கொடுத்திருக்கின்றோம். கன்னியா உங்களிடம் இல்லை, பழைய செம்மலை உங்களிடம் இல்லை, நாவற்குழிச் சந்தி உங்களிடம் இல்லை. இன்னும் எத்தனையோ உங்களிடம் இல்லை. அரசியற் கைதி ஒருவர் உண்ணாவிரதமிருந்து செத்துக்கொண்டிருக்கிறார்.  பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்தப் பத்தாண்டு கால விட்டுக்கொடுப்பிற்கு என்ன காரணம்?

‘ஆயுதப் போராட்டம் விட்டுக்கொடுப்பற்றது என்ற ஒரு உணர்வு உலக சமூகத்தில் எழுந்தது. தமிழீழம் தவிர இரண்டாம் பட்சமான ஒரு தீர்விற்கு இலகுவில் இறங்காது இறங்குகின்ற மாதிரிக் காட்டினாலும் அது இடைவெளியாக எடுத்துக்கொண்டு திரும்பச் சண்டைக்கு வரும் என்கின்ற ஒரு பதிவு உலக சமூகத்திடம் இருந்தது. எனவே அதற்கு மாறாக ஒரு புதிய நடைமுறையைப் பயன்படுத்தப்போகின்றோம். புதிய பண்பாட்டைக் கட்டியெழுப்ப போகின்றோம். எனவே விட்டுக்கொடுப்போம். விட்டுக்கொடுப்பதன் மூலம் உலக சமூகத்திற்கு ஒரு புதிய மனப்பதிவை ஏற்படுத்துவோம். இந்தா பார் நாங்கள் எவ்வளவிற்கு விட்டுக் கொடுத்தோம் அதற்குப் பிறகும் அவன் மசியவில்லை.’ அது தான் வீரசிங்கம் மண்டபத்தில் இரண்டு கிழமைகளுக்கு முன் கூட்டமைப்பு கதைத்தது.

மீன் குஞ்சுக்கு பறக்கத் தெரியாது. நாங்கள் மீன் குஞ்சுகளிடம் பறக்கும் படி கேட்கின்றோம்.  நாங்கள் ஒரு பாரம்பரிய மிதவாத அரசியலுக்குள்ளால் வந்தவர்கள். எங்களுக்கு பேரம் பேசும் அரசியல் என்றால் அதை செய்கின்ற ஒழுக்கம் எங்களிடம் இல்லை. பேரம் பேசும் அரசியல் என்பது ஒருவிதமான எதிர்ப்பு அரசியல். அதில் பல வகைகள் உண்டு. காந்தி ஒரு உதாரணம், மண்டேலா இன்னொரு உதாரணம். ‘நாங்கள் பேரம் பேசும் அரசியல் செய்யும் ஒழுக்கத்திற்குரியவர்கள் அல்ல. பாரம்பரிய தொழில்சார் மிதவாதிகளே நாங்கள். எங்களுடைய ஒழுங்குக்கு வெளியில் பாயச்சொல்லி  நீங்கள் கேட்கிறீர்கள். எங்களால் இயலாது. எங்களால் இப்படித்தான் அரசியல் செய்ய முடியும். உங்களோடு சேர்ந்து ஊர்வலத்திற்கு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வரமுடியாது. உங்களோடு சேர்ந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உண்ணாவிரதம் இருக்க இயலாது. எங்களுக்கு இவ்வளவுதான் இயலும். நாங்கள் ஒரு பாரம்பரிய மிதவாத அரசியலுக்கு பழக்கப்பட்டவர்கள்.’ என்பது தான் அவர்களின் நிலை.



இந்த விட்டுக்கொடுப்பு அரசியலுக்கான காரணம் என்ன? அதற்கான பதிலைக் கண்டுபிடித்தால் தான் இந்த தேக்கத்தை உடைக்கலாம். முதலாவது பதில், ‘நாங்கள் விட்டுக்கொடுப்பதன் மூலம் சிங்கள இனவாதத்தை கனியச் செய்ய முயன்றோம்.’ இனப்பிரச்சனைக்கு தீர்வு எனப்படுவது சிங்கள பௌத்த பேரினவாதத்தை அந்தத் தீர்வை நோக்கிக் கனிய வைத்தல்.  ஆயுதப் போராட்டம் இனவாதத்தை அடித்துத் தோற்கடிக்க முற்பட்டது. முடியவில்லை. அது தோற்கடிக்கப்பட்டுவிட்டது. கனிய வைத்தால் மட்டுமே தீர்வு. கனிய வைப்பதற்கான பொறிமுறை என்ன? விட்டுக்கொடுப்புப் பொறிமுறை. வரையறையின்றி விட்டுக்கொடுத்தல். அதனாற்தான் விட்டுக் கொடுக்கின்றோம்.

இரண்டாவது பதில், ‘பலம் பொருந்திய நாடுகளுக்குக் காட்ட.’ அப்படியென்றால் பலம் பொருந்திய நாடுகளுடன் உடன்படிக்கைகள் இருந்ததா? நான் விட்டுக் கொடுக்கின்றேன். அவன் தராவிட்டால் நீ அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று உடன்படிக்கை இருந்ததா? அந்த நாடுகள் அழுத்தம் கொடுத்தனவா? இல்லை. ஏன்? உடனே அந்நாடுகள் சொல்லும் ‘இப்பொழுது இறுக்கிப் பிடித்தால் இந்த அரசாங்கம் பலம் இழந்திடும். இந்த அரசாங்கம் பலம் இழந்தால் எங்களுடைய இந்தோபசுபிக் மூலோபாயம்  ஆட்டம் காணும். இதனைப் பாதுகாக்க வேண்டும். இந்த அரசாங்கத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும். கொஞ்சம் பொறுங்கோ. நீங்கள் இப்பொழுது இனப்படுகொலைக்கான பரிகார நீதி கேட்டால் திரும்பவும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் மேலெழும். இரண்டு தேரர் உண்ணாவிரதம் இருந்தால் குழம்புகின்ற நாடு இது. குழம்பிவிடும் குழப்பாதீர்கள்’ என்று அந்த நாடுகளே சொல்லும். இது இரண்டாவது பதில் அது. இது சரியா? விட்டுக் கொடுப்பு யாருக்காக செய்தாயோ அந்த வெளித்தரப்போடு நீ ஒரு உடன்படிக்கைக்கு போயிருக்க வேண்டும். ஏன் போகவில்லை? அமெரிக்கவோடு அல்லது இந்தியாவோடு ஒரு உடன்படிக்கையைச் செய்யலாம் தானே. நாங்கள் இப்படி இப்படியெல்லாம் செய்கிறோம் நீங்கள் வாங்கித்தர வேண்டும் என்று கேட்டிருக்கலாம் தானே. ஏன் கேட்கவில்லை?

இதில் நான் ஒரு உதாரணத்தை சொல்லுகிறேன்.  சிவகரனின் முதலாவது தமிழ் தேசிய மாநாடு மன்னாரில் நடந்தது.  அங்கு நான் உதாரணத்தைச் சொன்னேன். இலங்கைத் தீவில் இந்த மோதும் தரப்புக்களானவை ஒரு வெளித்தரப்பின் தலையீடின்றி ஒரு தீர்வுக்கு வரமுடியாதவை என்பதுதான் கடந்த கால வரலாறு. இலங்கைத்தீவில் ஓரளவு நீடித்திருந்த இரண்டு சமாதான முயற்சிகள், ஒன்று இலங்கை இந்திய உடன்படிக்கை, மற்றது ரணில் பிரபாகரன் உடன்படிக்கை. இந்த இரண்டிலுமே வெளித்தரப்புக்கள் தலையிட்டன. இந்த இரண்டிலுமே படைப்பிரசன்னம் அல்லது யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களின் பிரசன்னம்  இருந்தது. மூன்றாம் தரப்பு ஒன்று தலையிட்டு அழுத்தத்தைக் கொடுக்கும் போதுதான் கொஞ்சமாவது நடக்கிறது.

ஆயுதப் போராட்டத்தின் விளைவுதான் இந்திய இலங்கை உடன்படிக்கை. இந்திய இலங்கை உடன்படிக்கையை ஏற்பது ஏற்காதது வேறு விடயம். ஆயுதப் போராட்டத்தின் விளைவு அது. பிள்ளைகள் சிந்திய இரத்தத்தின் விளைவு அது. அங்கேயும் மூன்றாம் தரப்பு இந்திய இராணுவத்தை  கொண்டுவந்து வைத்திருக்க வேண்டியிருந்தது. ரணில் பிரபாகரன் உடன்படிக்கையின் போது இணை அனுசரணை என்று மேற்கு நாடுகள் அப்படியே சூழ்ந்து நின்றன. இந்தியாவிற்கும் ஒவ்வொரு முறையும் சென்று அறிக்கை அளிக்க வேண்டியிருந்தது. யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளில் ஒரு பகுதியாக ஆயுதக் கண்காணிப்பாளர்கள் நின்றார்கள். யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு உபகரணம் நின்றது.

இந்த இரண்டு அனுபவங்களுக்குள்ளாலையும் யோசித்தால் இலங்கைதத்தீவின் சிங்கள பௌத்த பெரும் தேசியவாதம் எனப்படுவது வெளிஅழுத்தம் இல்லாமல் ஒரு தீர்வுக்கு இறங்கி வராது.இது ஒரு வரலாற்று அனுபவம் என்று சுட்டிக்காட்டிய போது கூட்டமைப்பின் தலைவர் ‘சிங்கள இனவாதம் ஒரு தீர்வைத் தராது என்பது ஒரு வறண்ட வாதம்’ எனப் பதிலளித்தார்.  எந்த அடிப்படையில் அவரது வறளாத வாதம் வந்தது? என்ன பொறிமுறை உங்களிடம் இருந்தது? விட்டுக்கொடுப்பின் ஊடாக சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை கனியச் செய்யலாம் என்று நம்பினீர்கள். ஆனால் கனியவில்லை. இது எங்களுக்குப் புதிதில்லையே. இதற்கு முன்னர் அமிர்தலிங்கமும் இதைத்தான் செய்தார். செல்வநாயகமும் இதைத்தான் செய்தார். அவர்கள் செய்யாத ஒன்றையும் நீங்கள் செய்யவில்லை. நீங்கள் புதிதாக ஒரு தடவை ஏறிச்சறுக்க வேண்டும் என்றீர்கள்.

மூன்றாவது பதில், ‘எங்களுக்கு யூ.என்.பி யோடு ஒரு காதல் இருக்கின்றது.’  நான்காவது பதில், ‘எங்களுக்கு இவ்வளவு தான் இயலும்.’ யாழ்ப்பாணத்திற்கு  வந்திருந்தி திருமாவளவன் தனிப்பட்ட சந்திப்பில் “உங்களுடைய தலைவர்கள் தீர்ந்துபோன சக்திகள்” என்று சொன்னார். நீங்கள் புதியவர்களைக் கண்டுபிடியுங்கள்.  நீங்கள் பறக்கும் தலைவர்களை கண்டுபிடியுங்கள். பறக்கும் தலைவர்களை எப்படி தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள்?

இரணைமடு தலைமையகத்தில் இருந்த அந்தத்  தளபதி தன்னை நோக்கி வந்த கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்குச் சொன்னார். ‘நாங்கள் வெற்றி கொண்ட நிலம் இது. எங்களுடையது. நாங்கள் இதில் விரும்பியதை செய்வோம்.’ அதுதான் உண்மை. திணைக்களங்கள் அதைச் சொல்லாமல் வெளிப்படையாகச் செய்கின்றன. ஞானசார தேரரும் அதைத்தான் அன்று கண்டியில் சொல்லுகின்றார். ஆனால் அரசியல்வாதிகள் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். சொல்லிவிட்டு ஐநாவிற்கு போகமுடியாது. வெள்ளைக்காரரோடு பழகமுடியாது. அதை இந்த திணைக்களங்கள் செய்யும். கேட்டால் சட்டப்படி என்று சொல்லுவார்கள்.

உலகில் இனப்படுகொலைகள் எல்லாம் சட்டப்படி தான் நடந்திருக்கின்றன. ஹிட்லர் சட்டப்படி தான் இனப்படுகொலை செய்தவர். முசோலினி சட்டப்படிதான் இனப்படுகொலை செய்தவர். தென்னாபிரிக்க நிற ஒதுக்கல் சட்டப்படிதான் நடந்தது. காலனி ஆதிக்கமே சட்டப்படி தான் நடந்தது. உலகத்தில் நடந்த பெரும்பாலான அநியாயங்கள் சட்டப்படிதான் நடந்தன. இதை எதிர்ப்பதற்கு கூட எங்களிடம் சட்ட அமைப்புக்கள் இல்லை என்பதே பிரச்சனை.

உங்களிடம் வருகின்ற எல்லா சட்டத்தரணிகளும்  காரும் புகழும் கொஞ்ச காசும் சேர்ந்த உடனை எம்.பி ஆக வெளிக்கிடினம். கொஞ்சம் துருத்திக் கொண்டு வருகின்ற ஊடகவியலாளர் அடுத்த கட்டமாக எப்படி அரசியலுக்கு போகலாம் என்று யோசிக்கிறார். ஊருக்குள் துருத்திக்கொண்டு வருகின்ற அதிபர் ஆசிரியர்கள் எப்படி உள்ளூராட்சிக்குள் போகலாம் என யோசிக்கின்றார்கள். எல்லோரும் ஒன்றை நோக்கியே போகப் பார்க்கின்றோம்.

மண்வெட்டி கோடரி செய்கின்ற வேலையை செய்யப் பார்க்கின்றது. கோடரி அலவாங்கு செய்கின்ற வேலையை செய்ய பார்க்கின்றது. இந்த உடலில் மூக்கின் வேலையைத் தான் மூக்கு செய்யலாம். வாயின் வேலையை வாய் செய்யலாம். வாயின் வேலையை மூக்கு செய்தால் செத்துப் போவோம். அது அது அதன் வேலையைத் தான் செய்யலாம். எல்லோருமே அரசியலுக்கு வர ஆசைப்படுகின்றார்கள். ஏன்?

நாம் ஒரு சிறிய இனம். நீதிக்காகப் போராடும் இனம். எங்களுடைய உளவியலில் ஒரு அடிப்படை பலவீனம் இருக்கின்றது. அவரவர் தன்தன் சமூகத்திற்குரிய கடமைகளை முதலில் செய்ய வேண்டும். ஒரு தேசமாக எழுவோம் என்று நான் எப்போதும் சொல்லுகின்றேன். ஒரு தேசம் வேண்டாம் ஒரு சமூகமாகவே இல்லை. ஒரு கிராமமாகவே இல்லை. அதுதான் துயரம்.


தொகுப்பு-அமுது 
நிமிர்வு செப்டெம்பர் 2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.