தேசிய பாதுகாப்பு என்ற ஒற்றைச் சொல்லுக்குள்




மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ்மக்களின் எதிர்காலமும்." எனும் தலைப்பிலான கருத்தாய்வு 21/07/2019 அன்று வவுனியாவில்  இடம்பெற்றது. அதில் பங்கேற்று தமிழர் மரபுரிமை இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான நவநீதன் ஆற்றிய உரை வருமாறு:

சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இருந்தே தமிழர் தாயகப் பகுதியிலே திட்டமிட்டமுறையிலே தமிழர்களுடைய இனப்பரம்பலை மாற்றியமைக்கசிங்களப் பேரினவாத தலைவர்களால் சிங்கள குடியேற்றங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. குறிப்பாக 1947 ஆம் ஆண்டு அப்போதைய பிரித்தானிய அரசினுடைய விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா அவர்கள் விவசாயக் குடியேற்றங்கள் என்ற பெயரிலே 12 குடியேற்றங்களை உலர்வலயத்திலே மேற்கொண் டார். இந்த 12 குடியேற்றங்களுக்காவும் அவர் கிட்டத்தட்ட 30மில்லியன் ரூபாக்களை 1947 ஆம் ஆண்டு செலவழித்திருந்தார். ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு என்று பார்க்கின்ற பொழுது கிட்டத்தட்ட 10000 ரூபா 1947 ஆம் ஆண்டு ஒரு குடும்பத்திற்கு செலவழிக்கப்படுகின்றது என்றால் அந்த விவசாய அபிவிருத்தி என்பதற்கு அப்பால் அவர்களுக்கு நிச்சயமாக ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கின்றது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு பிற்பாடு அதே டி.எஸ்.சேனநாயக்கா இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாக பொறுப்பேற்றவுடன் மிகப் பரவலாக குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே பரவலான சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டிருக்கின்றார். கல்லோயத் திட்டத்தின்  வெளிப்படையான நோக்கம் உலர்வலயத்திற்கு நீர்ப்பாய்ச்சுவதாக இருந்தாலும் அதனுடைய மறைமுக நோக்கம் தமிழர் தாயகப் பகுதிகளிலே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதாக இருக்கின்றது.

அதற்கு சாட்சி சொல்வது போலவே 1949 ஆம் ஆண்டு பதவிய பிரதேசத்திலே ஒரு சிங்கள குடியேற்றத்தை அங்குரார்பணம் செய்துவிட்டு டி.எஸ்.சேனநாயக்கா பேசுகின்றார். "இன்று உங்களுடைய சொந்தக் கிராமத்திலிருந்து வெளியேறி இந்த புதிய கிராமத்திலே குடிபுகுந்த நீங்கள் இந்த தேசத்திலே வரலாற்றிலே பேசப்படுவீர்கள். கடலிலே அடித்துச் செல்லப்படுகின்ற மரக்குச்சிகள் கரையொதுங்கி காப்பரணாக இருப்பது போல சிங்கள மக்களுக்கு நீங்கள் காப்பரணாக இருப்பீர்கள். சிங்களவருக்கான இறுதி யுத்தம் இந்த பதவியாவிலே தான் தொடக்கம் பெறும். எதிர்காலத்திலே இந்த நாட்டைத்  துண்டாட நினைப்பவர்களுக்கு பதவியாவில் இருக்கக்கூடிய சிங்கள மக்கள் நீங்கள் நல்ல செய்திகளை சொல்லுவீர்கள்” என்று தீர்க்க தரிசனத்தோடு அந்த உரையிலே சொல்லுகின்றார்.

தமிழர் ஒரு இறையாண்மை உள்ள தேசமாக வடக்கு கிழக்கிலே அவர்களுக்கு உரிய மொழி கலாசார பண்பாட்டு விழுமியங்களோடு சுயநிர்ணய உரிமையோடு கூடிய ஒரு ஆட்சியை அமைப்பதற்கு எதிர்காலத்திலே திட்டமிடுவார்கள். அந்த திட்டத்திற்கு தாங்கள் தடையாக இருக்க வேண்டும் என்பதை முன்னுணர்ந்து அந்தக் காலத்திலேயே அவர்கள் அத்தகைய திட்டத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையின் பரம்பல் மாற்றத்தை எடுத்துப் பார்ப்பீர்களானால் புள்ளிவிபரங்களின்படி 1891 ஆம் ஆண்டு கிழக்கினுடைய ஒட்டுமொத்த சனத்தொகையிலே வெறும் 4.6%  தான் சிங்களவர்கள். இன்னும் சில தரவுகள் அதைவிட குறைவு என்று சொல்லுகிறது.  உத்தியோகபூர்வமான இலங்கை புள்ளிவிபரத்திணைக்களத்தால் 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தகவல் படி 23.15 %  . இன்று அது 25 %   ஆக அதிகரித்திருக்கின்றது.

வெறும் 4 %   ஆக இருந்த சிங்களவரின் சனத்தொகை கிழக்கு மாகாணத்தில் இப்பொழுது 25 %   ஐ தொட்டிருக்கின்றது என்றால் இது ஒரு இயற்கையான நிகழ்வு அல்ல. சிங்களத் தலைவர்களால் காலத்திற்கு காலம் நன்கு திட்டமிட்ட வகையிலே மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாகத்தான் தமிழர்களின் இருப்பு கிழக்கிலே மலினப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்த முயற்சி இப்பொழுது மிக வேகமாக வடக்கிலே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வடக்கினுடைய சிங்கள குடியேற்றங்களின் வரலாற்றை நாம் பார்க்கின்ற பொழுது குறிப்பாக வவுனியாவிலே ஏற்கனவே அனுராதபுரத்திலிருந்து குடியேற்றப்பட்ட சில குடும்பங்களுக்கு அப்பால் வடக்கினுடைய சிங்கள குடியேற்ற நிகழ்ச்சி நிரல் என்பது 1984 ஆம் ஆண்டு தான் முனைப்புப் பெறுகின்றது.

வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற இதயபூமியில் இருக்ககூடிய  டொலர்பாம், கென்பாம், நாவலர் பண்ணை, ரெயில்வேகுறூப் பண்ணை, போஸ்ற்மாஸ்டர் குறூப் பண்ணை என்று சொல்லப்படுகின்ற அந்த வளமான தமிழர்களுக்குச் சொந்தமான  பல ஆயிரம் ஏக்கர் கொண்ட 16 பண்ணைகளில் இருந்த எம்மவர்கள் வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்படுகின்றார்கள். அதனைத் தொடர்ந்து கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற எல்லைப்புற கிராமங்கள், வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற பாலமாக இருக்கக்கூடிய அந்த கிராம மக்கள் 1984 ஆம் ஆண்டு வெளியேற்றப்படுகிறார்கள்.

இவை அனைத்து ஒரு சாதாரணமான போரோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்ல. சிங்கள பேரினவாதத்தால் அந்த மக்கள் நன்கு திட்டமிட்ட முறையில் வெளியேற்றப்படுகின்றார்கள். ஏனென்றால் இந்த ஆறு கிராமங்கள் வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற பாலங்கள். அந்தக் கிராம மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்து அந்தப் பிரதேசங்களிலே சிங்கள குடியேற்றங்களை ஊக்குவிப்பதன் ஊடாக தமிழர்களின் தாயக கோட்பாட்டை கேள்விக்குட்படுத்துவது. இது மிகவும் திட்டமிடப்பட்ட முறையிலே அனுராதபுரத்திலே ஒரு தலைமையகம் அமைக்கப்பட்டு, ஒரு கூட்டிணைப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு,  விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டு, இராணுவ மயப்பட்டு, இந்தக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

எங்களுடைய தாயகத்தை துண்டாடுவதனை நோக்கமாக கொண்ட அவர்களுடைய முனைப்புகள் ஆயுதப் போராட்டம் உச்சம் பெற்றதன் காரணமாக அவர்கள் எதிர்பார்த்தது போல வேகமாக முன்னேற முடியாமல் போனது. 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் மிகவும் முழு வீச்சிலே இந்தப் பிரதேசத்திலே சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உண்மையிலே ஆரம்பத்திலே கிழக்கு மாகாணத்திலே மேற்கொள்ளப்பட்ட அனேகமான சிங்களக் குடியேற்றங்கள் நீர்ப்பாசன திட்டங்கள் என்ற போர்வையிலே மேற்கொள்ளப்பட்டன. அது மகாவலித் திட்டமாக இருக்கலாம்; கல்லோய திட்டமாக இருக்கலாம்; மாதுருஓயா திட்டமாக இருக்கலாம் எல்லாம் நீர்ப்பாசன திட்டங்கள் என்கிற போர்வையிலே கிழக்கு மாகாணத்தின் சனத்தொகைப் பரம்பலை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டன.

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையிலே நீர்ப்பாசனத்திட்டங்களுக்கு அப்பால் வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் இவ்வாறான மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட திணைக்களங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பு அமைச்சு என்பவற்றுக்கூடாக நன்கு திட்டமிட்டமுறையிலே வடக்கினுடைய சனத்தொகையை மாற்றியமைப்பதற்கான ஒரு கபடத்திட்டம் அரங்கேறி வருகிறது. மகாவலி L  வலயத்தின் கீழ் அவர்களுடைய அறிக்கைகளின்படி வவுனியா, திருகோணமலையினுடைய ஒரு பகுதி, முல்லைத்தீவின் ஒரு பகுதி, அனுராதபுரத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய வகையிலே 199000 ஹெட்டேயர் நிலம் அபிவிருத்தி செய்வதற்காக உத்தேசிக்கபட்டிருக்கிறது. 199000 ஹெட்டேயரிலே 46000 ஹெட்டேயர் நிலத்தில் ஏற்கனவே குடியேற்றங்கள் இடம்பெற்றுவிட்டன. இந்தக் குடியேற்றங்கள் வவுனியா மாவட்டத்தையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் எவ்வாறு பாதித்திருக்கின்றது என்பதனை ஆராய வேண்டியது அவசியமானது.

போர் முடிந்த கையோடு ஜனகபுர, கல்யாணபுர, நிலும்பவ, திரிபந்பவ என பல கிராமங்கள் 9 கிராமசேவையாளர் பிரிவுகளை உட்படுத்தி வெலிஓயா என்ற தனி ஒரு பிரதேசசெயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டு அது முல்லைத்தீவு மாவட்டத்தோடு இணைக்கப்படுகிறது. பதிவுகளின்படி 7017 சிங்களவர்கள் அங்கு குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்கு பின்னர் ஒரு தனி பிரதேசசெயலாளர் பிரிவே உருவாக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியாவில் ஏற்கனவே சிங்கள பிரதேச பிரிவில் இருக்கின்ற 14028 சிங்களவர்களுக்கு மேலதிகமாக   அண்மையில் கள்ளிக்குளம் என்ற கிராம சேவையாளர் பிரிவோடு மகாவலி திட்டத்தின் ஊடாக நான்கு கிராமங்கள் புதிதாக இணைக்கபட்டிருக்கின்றன. அதாவது நாமல்கம, நந்தமித்ரகம, சங்கமித்தகம,  என்று புதிய கிராமங்கள் 1200 சிங்கள குடும்பங்கள் வவுனியா தமிழ் பிரதேச செயலாளர் பிரிவோடு இணைக்கபட்டிருக்கின்றன. இதற்கு மேலதிகமாக வவுனியா வடக்கைப் பொறுத்தவரையிலே போகஸ்வெவ என்ற கிராமசேவையாளர் பிரிவு வெடிவைத்தகல் கிராமசேவையாளர் பிரிவோடு இணைக்கபட்டு 817 குடும்பங்கள் இணைக்கபட்டிருக்கிறன.

இன்று நீங்கள் வவுனியா வடக்கினுடைய பிரதேசசபையினுடைய அரசியல் பலத்தை பார்க்கின்ற பொழுது சிங்கள குடியேற்றத்தின் தாக்கத்தை நன்கு புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். உண்மையிலே ஒரு பாரம்பரியமான தமிழ்க் கிராமங்களை உள்ளடக்கிய தமிழ் பிரதேச செயலாளர் பிரிவிலே இன்று தமிழர்கள் பெரும்பான்மையற்ற ஒரு பிரதேசசபையாக ஆட்சியில் இருக்கின்றார்கள். தமிழ்தேசிய கூட்டமைப்பு 8 உறுப்பினர்கள், தமிழ்தேசிய மக்கள் முன்னணி 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலை கூட்டணி 3 உறுப்பினர்கள் இவை எல்லாவற்றிற்கும் மேலாக மகிந்தவினுடைய தாமரை மொட்டு சின்னத்திலே கேட்டவர்கள் 5 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். யூ.என்.பி 3 ஆசனம் பெற்றிருக்கின்றது. சிறிலங்கா சுதந்திரக்கட்சி 2 ஆசனம் பெற்றிருக்கின்றது. ஜே.வி.பி 1 ஆசனம் பெற்றிருக்கின்றது. சுயேட்சையிலே போட்டியிட்டவர் 1 ஆசனம் பெற்றிருக்கின்றார்.

இனிவரும் காலங்களில் வவுனியா பிரதேச சபையின்  தலைவர்களாக சிங்களவர்கள் இருக்கப் போகின்றார்கள். இது வவுனியா நகரத்திற்கும்,  முல்லைத்தீவுக்கும், கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாணத்திற்கும் நடக்க நாட்செல்லாது. மகாவலியின்  இன்னொரு கபடமான விடயத்தை இங்கு குறிப்பிடலாம். நாங்கள் இப்பொழுது மகாவலியின் L  திட்டம் பற்றி கதைத்துக் கொண்டிருக்கின்றோம். இதற்கு மேலதிகமாக J, K  என்ற இரண்டு புதிய வலயங்களை திட்டமிடுகின்றது .  J   வலயம் மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தியதாகவும் K   வலயம் முல்லைத்தீவின் பிரதேசங்களை உள்ளடக்கியதாகவும் திட்டமிடப்படுகின்றது.

2011 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வடக்கினுடைய அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையிலே ஒரு திட்டத்தைத் தயாரிக்கின்றது. அந்த திட்டத்திலே மிக தெளிவாக சொல்லுகிறார்கள் வடக்கினுடைய சனத்தொகை 2011 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 11 இலட்சம் (1.1மில்லியன்). இது 2030 ஆம் ஆண்டு 18 இலட்சமாக மாறும். கிட்டத்தட்ட 7 இலட்சத்தால் அதிகரிக்கும். இயற்கை சனத்தொகை அதிகரிப்பு வீதத்தினால் வடக்கினுடைய சனத்தொகை 7 இலட்சமாக அதிகரிக்க முடியாது. மிகத் தெளிவாக மகாவலி மற்றும் ஏனைய திட்டங்கள் ஊடாக அவர்கள் சிங்கள திணிப்பை அவர்கள் நிலஅபகரிப்பை ஊக்கப்படுத்தி சிங்கள குடியேற்றத்தை செய்கின்ற கபட நோக்கம் அந்த திட்டத்தில் மிக தெளிவாக தெரிகின்றது. குறிப்பாக மகாவலித்திட்டத்தை பொறுத்த வரையில் அதனுடைய சட்ட ஏற்பாடுகள் மிகத் தெளிவானவை. மகாவலி திட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படுகின்ற நிலங்கள் தேசிய சனத்தொகை விகிதாசாரப்படி பகிர்ந்து வழங்கப்படும். உதாணமாக வடக்கிலே 1000 ஏக்கர் நிலம் அபிவிருத்தி செய்யப்பட்டால் அந்த 1000 ஏக்கரில் கிட்டத்தட்ட 75% சிங்களவர்களுக்கும் ஏனையவை சிறுபான்மையினருக்கும் பிரித்து வழங்கப்படும். இந்த நிலை தொடருமாக இருந்தால் வடக்கினுடைய பெரும் பகுதியினை நாங்கள் சிங்களவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்க வேண்டிய ஒரு நிலைமைக்கு தள்ளப்படுவோம்.

தமிழர்களுடைய பூர்வீக நிலங்களிலே இருந்த நீர்ப்பாசன குளங்களாக இருக்கக்கூடிய ஆமையன் குளம் கிரிவெந்துவ ஆனதும் முந்திரிகைக்குளம் நிலும்வெவ ஆனதும் ஆனைவிழுந்தான் குளம் அத்தாபெக்குனுவ ஆனதும் இந்த மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் நிலஅபகரிப்பின் வடிவங்கள் தான். இது எங்களுடைய பாரம்பரிய கிராமங்கள். இந்தக் கிராமங்களிலே இடம்பெறுகின்ற நிலஅபகரிப்பை தடுப்பதற்கு நாங்கள் என்ன செய்திருக்கின்றோம்.

வனவளபாதுகாப்புத் திணைக்களம் வடபகுதியில் இதுவரை மட்டும் 2 இலட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒதுக்கி வைத்திருக்கின்றது. 2 இலட்சம் ஏக்கர் நிலத்திலே 114146 ஏக்கர் நிலங்களுக்கு தமிழர்கள் ஆவணங்களை கையிலே  வைத்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் அந்த நிலத்திலே குடியேறுவதற்கும் விவசாயம் செய்வதற்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது.

அதே நேரம் ஏற்கனவே சொல்லப்பட்ட எல்லைக்கிராமங்களாக இருக்கக் கூடிய கற்சல்சவுனக்குளம் என்ற கிராமம் தமிழர்களுடைய பூர்வீக கிராமம். அந்தக் கிராமத்திலே முழு வீச்சோடு சிங்கள குடியேற்றம் இப்பொழுது இடம்பெற்று வருகின்றது. பலஆயிரக்கணக்கான நிலங்கள் அழிக்கப்படுகின்றன. இதே வனவளபாதுகாப்பு திணைக்களம் பாராது இருக்கின்றது. அதே பகுதியிலே காஞ்சனமோட்டை என்ற தமிழ் கிராமத்திலே இந்தியாவிலிருந்து திரும்பிய மக்கள் தங்களுடைய சொந்த நிலத்திலே வீடு கட்டுவதற்கு இதே வனவளபாதுகாப்பு திணைக்களம் அனுமதி மறுக்கின்றது. ஆனால் பெரும் காடாக இருக்கின்ற கற்சல்சமனங்குளத்தை அழித்து பாரிய ஒரு குளத்தை கட்டி பாரிய ஒரு சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்ளுகின்ற பொழுது இதே வனவளபாதுகாப்பு திணைக்களம் பாராமுகமாக இருக்கின்றது.

ஒரு மாவட்டத்திலே அபிவிருத்தி வேலை செய்ய வேண்டுமாக இருந்தால் அந்த மாவட்டத்தினுடைய பிரதேசசெயலாளர் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அந்த மாவட்ட திணைக்கள அதிகாரிகள் வேலையை செய்வார்கள். கற்சல்சமனங்குளம் வவுனியா மாவட்டத்திலே வருகின்றது. வவுனியா மாவட்டத்திலே வருகின்ற கற்சல்சமனங்குளத்திலே ஒரு குளத்தினை அபிவிருத்தி செய்யவதற்கான வேலையை அனுராதபுரத்தினுடைய விவசாயத்திணைக்களம் செய்கின்றது. ஒரு மாவட்டத்திலே பக்கத்து ஊருக்கு வந்த நிதியை அடுத்த ஊருக்கு மாற்றுகின்ற போதே பல சட்டச்சிக்கல்களும் கணக்காய்வு பிரச்சனைகளும் வருகின்ற பொழுது இன்னொரு மாவட்டத்திலே இன்னொரு மாவட்டம் வந்து குளம் கட்டுவதற்கும் மத்திய அரசு அனுமதித்து இருக்கின்றது என்றால் சிங்கள குடியேற்றங்களை ஊக்கப்படுத்துவதிலும் அதற்கு அனுசரணை வழங்குவதிலும் அரசாங்கத்தினுடைய பங்கு மிகத்தெளிவாகத் தெரிகின்றது.

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் மட்டும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மகாவலி L வலயத்திலேயே 12349 ஹெக்ரேயர் காடு அழிக்கப்பட்டிருக்கின்றது. யாரும் அதைப்பற்றி பேசவில்லை. இந்த விடயம் தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்களும் பேசவில்லை. அவர்களுடைய பேரம் கம்பெரேலியாவிலும், கல்முனைக்கு கணக்காளர் பெற்றுக் கொடுத்ததிலும் முடிந்து விட்டது.   

அடுத்து தொல்லியல் திணைக்களம். போர் முடிந்த 2009 ஆம் ஆண்டு பின்னர் இலங்கை முழுவதிலும் சேர்த்து 337 இடங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன. அந்த 337 இடங்களிலே 167 இடங்கள் வடமாகாணத்தைச் சேர்ந்தவை. இவை கிட்டத்தட்ட  50%. அந்த 167 இடங்கிலே பெரும்பாலான பௌத்தத்தோடு தொடர்புபடுத்தி எழுதுகின்றார்கள். எந்தவிதமான வெளிப்படையான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை. எழுந்தமானமாக தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பிரகடனப் படுத்துகின்றார்கள்.

இது இன்னொரு நிலஅபகரிப்பின் வடிவம். அண்மையில் பத்திரிகைகளில் பேசப்படுகின்ற நீராவியடிப் பிள்ளையார் ஆலயமும் இந்த 167 இடத்தில் ஒரு இடம். அந்த இடத்திற்கு மட்டும் தொல்லியல் திணைக்களம் பிரதேசசெயலாளர் பிரிவிலே 86 ஏக்கர் காணியை கோரியிருக்கின்றது. 167 இடத்திற்கும் அவர்கள் காணி கோருவார்கள். அது  தொல்லியல் திணைக்களம்.

அடுத்த வடிவம் வனஜீவராசிகள் திணைக்களம். முல்லைத்தீவிலே நந்திக்கடல் மற்றும் நாயாறு, யாழ்ப்பாணத்திலே நாகர் கோவில், மன்னாரிலே விடத்தல் தீவு இவ்வாறான இடங்கள் வனஜீவராசிகளுடைய இயற்கை ஒதுக்கிடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனுடைய கருத்து என்னவென்றால் குறிப்பிட்ட அந்த களப்புக்களிலிருந்து 150 மீற்றருக்கு உட்பட்ட பிரதேசம் அந்த வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமாகும். எங்களுடைய மக்களின் வாழ்வாதாரத்தை இது மிக மோசமாகப் பாதிக்கும். மத்திய அரசாங்கத்தினுடைய அத்தனை திணைக்களங்களும் ஒன்று சேர்ந்து தமிழர்களின் இருப்பை இந்த மாகாணத்திலே மலினப்படுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள். இந்த நில அபகரிப்பு நிகழ்ச்சிகளை தடுப்பதற்கு நாங்கள் கையாலாதகவர்களாக இருக்கின்றோம்.

ஆனால் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு அப்போதிருந்த தமிழ் தலைவர்கள் தங்களால்  முடிந்தவற்றை நிலஅபகரிப்புக்கு எதிராக  செய்திருக்கின்றார்கள். தந்தை செல்வநாயகம் செய்திருந்த பண்டா செல்வா ஒப்பந்தமாக இருக்கலாம். டட்லி செல்வா ஒப்பந்தமாக இருக்கலாம். தியாகி திலீபனுடைய ஐந்து அம்சக்கோரிக்கைகளாக இருக்கலாம். இலங்கை இந்திய ஒப்பந்தமாக இருக்கலாம். அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளால் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமாக இருக்கலாம். அத்தனையிலும் இந்த நிலஅபகரிப்பு சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக காத்திரமான விடயங்கள் உண்டு.

மிக குறிப்பாக தியாகி திலீபனுடைய ஐந்து அம்ச கோரிக்கைகளில் முதலாவது கோரிக்கையில் மிகத் தெளிவாக சொல்லுகின்றார். மீள் குடியேற்றம் என் போர்வையிலே தமிழர் தாயகமாகிய வடக்கு கிழக்கு பகுதிகளிலே திட்டமிடப்படுகின்ற புதிய சிங்கள குடியேற்றங்கள் உடன்தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு தியாகி மரணித்து போனான். அந்தக் கனவோடு இறந்து போனான். அந்த தியாகிகளின் தியாகத்தை வைத்து அரசியல் செய்கின்ற இன்றைய அரசியல்வாதிகள் அவர்களுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் செய்யவில்லை என்பது வேதனையான அனுபவம்.

தமிழ் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரையிலே இந்த நிலஅபகரிப்பைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக அவர்களிடம் தெளிவான ஒரு கொள்கை நிலைப்பாடில்லை. அதைத் தடுத்து நிறுத்துவதற்கான தந்திரோபாய திட்டம் இல்லை. தமிழர் தாயகப் பகுதிகளிலே மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் நிலஅபகரிப்பு முயற்சிகளை சரியான முறையில் அவர்கள் ஆவணப்படுத்தவில்லை.  அவ்வாவணங்களைக் கொண்டு உள்நாட்டிலோ சர்வதேசத்திலோ சட்டநடவடிக்கைகளை எடுக்கவில்லை.

தமிழர் இனப்பிரச்சனை எப்பொழுது தொடங்கியதோ அப்பொழுதிருந்தே நிலஅபகரிப்பிற்கு  எதிரான கோரிக்கைகள் மிக வலுவாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்பொழுது தமிழர்களுடைய உதவியோடு ஆட்சி செய்கின்ற அரசாங்கத்திடம் அவ்வாறான வலுவான எந்தக் கோரிக்கைகளும் வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

மாற்றுத்தலைமை என்று சொல்லுகின்றவர்களிடம் கூட இதை தடுப்பதற்கான காத்திரமான எந்த செயற்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை. பொதுமக்களாலும் பொது அமைப்புக்களாலும் ஏற்பாடு செய்யப்படுகின்ற போராட்டங்களிலே கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்வதோடு அவர்களுடைய பங்களிப்பு முடிந்து போய்விடுகின்றது. உங்களை எங்களுடைய மக்கள் எங்கள் மண்ணைக் காப்பதற்கான காவலரண்களாக அனுப்பியிருக்கின்றார்கள். அந்தப் பொறுப்பும் கடமையும் உங்களிடம் இருக்கின்றது. அதை நீங்கள் செய்தீர்களா என்று சுயபரிசீலனை செய்து பார்க்க வேண்டும். அவர் செய்யவில்லை என்று சொல்லுகின்ற நான், நான் செய்தேனா என்ற கேள்வியைக் கேட்கவேண்டும். நாங்கள் எல்லோரும் இந்த விடயத்திலே வெட்கப்பட வேண்டும். தமிழர்பிரதேசத்திலே எழுகின்ற உரிமைக் கோரிக்கைகள் தமிழர்களுடைய நீதிக்கான கோரிக்கைகளை அபிவிருத்தி ஆசை காட்டி மலினப்படுத்த முடியாது என்பதுதான் வரலாறு.

நாங்கள் தமிழர்களாக சமூகமாக சிவில் சமூகமும் அரசியல்வாதிகளும் இணைந்தவகையிலே தமிழர் தாயகப் பகுதியிலே இடம்பெறுகின்ற இந்த திட்டமிட்ட நிலஅபகரிப்பு நிகழ்ச்சிகளை முதலிலே சரியான முறையிலே பதிவு செய்ய வேண்டும். சரியான ஒரு ஆவணப்படுத்தல் முறையினை உருவாக்க வேண்டும். அந்த நிலஅபகரிப்பைத் தடுப்பதற்கான எங்களுடைய கொள்கை நிலைப்பாடு என்ன என்பதனை பகிரங்கப்படுத்த வேண்டும். அந்த கொள்கை நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாய  வேலைத்திட்டத்தினை நாம் செய்ய முன்வர வேண்டும். அப்பொழுதுதான் இலங்கை அரசாங்கத்திற்கு காத்திரமான ஒரு செய்தியினை சொல்லமுடியும். நாம் அமைதியாக இருப்போமானால் நான் ஏற்கனவே  சொன்னது போல நெடுங்கேணியிலே நடந்தது யாழ்ப்பாணத்திலே நடைபெற நாட்கள் செல்லாது. கவனிக்க வேண்டிய விடயம். நில அபகரிப்பு விடயத்தை இத்தோடு நிறைவு செய்து கொண்டு அடுத்து மனித உரிமைகள் விடயம் தொடர்பாக பார்ப்போம்.

அம்மா ஒருவரிடம் போருக்கு முன்னர் எப்படி வாழ்க்கை இருந்தது இப்பொழுது எப்படி இருக்கின்றது என்ற கேள்வியை கேளுங்கள் விடை வரும். அவர்கள் மிகத்தெளிவாக சொல்லுவார்கள். போர் நடந்த காலத்தில் நாங்கள் வறுமையை அனுபவித்தாலும் மகிழ்ச்சியான நிறைவான திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்தோம். இப்பொழுது கார்பெற் வீதிகள் வந்திருக்கின்றது. கட்டடங்கள் வந்திருக்கின்றது. மின்சாரம் வந்திருக்கின்றது. ஆனால் நாங்கள் நிம்மதியைத் தொலைத்துவிட்டோம் என்று அவர்கள் சொல்லுவார்கள். அதுவே மிகத் தெளிவான மனிதஉரிமை மீறலுக்கான அடையாளம். இன்று தமிழர்கள் கிராமங்கள் அத்தனையும் மிக நுட்ப முறையிலே புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்படுகின்றது. ஒரு கோயிலில் திருவிழா நடத்த முடியவில்லை. பாடசாலையில் கூட்டம் நடத்த முடியவில்லை. கிராம அபிவிருத்திகளை செய்யமுடியவில்லை. கலாசார விழாக்களை செய்ய முடியவில்லை. பாதுகாப்பு என்ற போர்வையிலே நிறையக் கேள்விகள். யார் பங்குபற்றினார்கள், என்ன பேசினீர்கள், எதிர்காலத்திட்டம் என்ன?  இது எங்களுடைய ஒன்று கூடுகின்ற கருத்துச் சுதந்திரத்தை மிக மோசமாக பாதிக்கின்ற செயற்பாடு. இது மிகவும் அப்பட்டமான மனிதஉரிமை மீறல்.

எல்லாவற்றிற்கும் மேலாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மனிதப்  படுகொலைக்கு போர்க்குற்றத்திற்கு இன்று வரை நீதி கிடைக்காதது என்பதுவும் மிக மோசமான ஒரு மனிதஉரிமை மீறல். எங்களுடைய மக்களுடைய நீதிக்கான கோரிக்கைகள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பத்தாண்டுகளாக கடந்து தொடர்ந்து செல்கிறது. ஒருவரையாவது தண்டிக்க முடிந்ததா?  முடியவில்லை.

மூன்று நிலை நோக்குகளிலே நாங்கள் எங்கே இருக்கின்றோம் என் சொல்லுகின்றேன். நீதி பொறுப்புக்கூறல்  பூச்சியம். யாரும் தண்டிக்கப்படவும் இல்லை யாரும் பொறுப்புக் கூறவும் இல்லை. அபிவிருத்தி எழுச்சி ஒன்றுமில்லை. நாங்கள் சொல்லலாம் வீதி வந்திருக்கிறது வீடு வந்திருக்கின்றது என்று. அபிவிருத்திக்கும் முக்கியமான இரண்டு குறிகாட்டிகள் உள்ளன.ஒன்று கல்வி, இரண்டாவது வறுமை. கல்வியிலே நீங்கள் புள்ளிவிபரங்களை எடுத்துப் பாருங்கள். போர் அதிகாக இருந்த காலத்தில் கூட நாங்கள் கல்வியில் உச்சமாக இருந்தோம். இப்பொழுது எங்கே இருக்கின்றோம்?  இலங்கையிலே கடைசி மாகாணம். வறுமை போர் உச்சமாக இருந்த பொழுது இலங்கையிலே வறுமையான மாவட்டங்கள் மொனறாகல மற்றும் தென்மாவட்டங்கள். ஆனால்  இப்பொழுது இலங்கையிலே வறுமையான மாவட்டங்களிலே கிளிநொச்சியும் முல்லைத்தீவும் போட்டி போடுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளிலே வறுமையில் நாங்கள் முதலிடம். ஆக அபிவிருத்தியும் நடக்கவில்லை.

இவை இரண்டுக்கும் அப்பால் ஏற்கனவே சொல்லப்பட்ட கட்டமைக்கப்பட்ட ரீதியிலே திட்டமிட்ட இனஅழிப்புக்கள். சிங்கள் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல்கள் இது அப்பட்டமான மனிதஉரிமை மீறல். இவை எல்லாவற்றிற்கும் மேலாக மிக பரிதாபகரமான முறையிலே  காணாமல்ஆக்கப்பட்டோர்  விடயங்கள். அவர்களுடைய தன்னெழுச்சிக்கான கோரிக்கைகள். அவர்களுடைய போராட்டத்திற்கு அரசாங்கத்தால் கொடுக்கப்படுகின்ற அழுத்தங்கள் அப்பட்டமான மனிதஉரிமை மீறல்.

விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்ட அரசியல்கைதிகளின் பிரச்சனைகள் முடியாத கதையாக தொடர்ந்து கொண்டு செல்கிறது. மிக அண்மையில் இடம்பெற்ற கொழும்பு குண்டு வெடிப்புக்களால் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் காவலரண்கள் அமைக்கப்பட்டன. குண்டுவெடித்த இடத்தில் இருப்பவர்கள் நிம்மதியாக இருக்கின்றார்கள். இப்பொழுது இருக்கின்ற அவசரகால நிலைமைகளை பயன்படுத்தி அவர்களுடைய கண்காணிப்பில்தான் தமிழன் வாழவேண்டும் என்ற ஒரு மாயையை  ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

தேசிய பாதுகாப்பு என்ற ஒற்றைச் சொல்லுக்குள்  எங்களுடைய சுதந்திரத்தை விலை பேசுகிறார்கள். ஆக மனிதஉரிமை என்ற விடயத்தில் இதற்கு மேல் பேசத் தேவையில்லை. ஆகவே அபிவிருத்தி இல்லை, நீதி இல்லை, மனிதஉரிமையை நிலைநாட்டப்படவில்லை. இந்தச் சூழ்நிலையிலே நாங்கள் எங்கே போகின்றோம்?கருத்துருவாக்கிகள் என்ற வகையிலே உங்களிடம் வினயமாக கேட்டுக்கொள்வது தமிழர் தாயகப்பகுதிகளிலே மேற்கொள்ளப்படுகின்ற இந்த திட்டமிடப்பட்ட இன அழிப்புக்கு எதிராக மிகவும் அறிவு பூர்வமாக நல்ல கொள்கைத்திட்டங்களை வகுத்து தந்துரோபாயத்திட்டங்களை வகுத்து எல்லா வேறுபாடுகளுக்கும் அப்பால் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

தொகுப்பு-விக்னேஸ்வரி 
நிமிர்வு செப்டெம்பர் 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.