எழுக தமிழ்
ஆயுதப்போராட்ட மௌனிப்புக்குப் பின் தமிழ் மக்கள் பலரின் மனங்களில் “எல்லாம் முடிந்து விட்டது. இனி இருப்பதைக் காப்பாற்றி வாழ்ந்து விட்டுப் போவோம்” என்ற விரக்தி நிலைபெற்று விட்டது. இது யதார்த்தத்திலிருந்து இலகுவாக ஓடி ஒளித்து தப்புவதற்காக முன்வைக்கப் படுவது. ஆனால் இவ்வளவும் நடந்த பின்னரும் காணாமல் போன தமது சொந்தங்களைத் தேடும் போராட்டங்களையும், அரசியற் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களையும், காணிவிடுவிப்பதற்கான போராட்டங்களையும், தமது பூர்வீக வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்பதற்கான போராட்டங்களையும் மக்கள் நிறுத்தவில்லை.
ஆயுதப்போராட்ட மௌனிப்புக்குப் பின் எஞ்சியிருக்கும் அரசியற் தலைமைகள் தமக்குள்ளே ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியாமல் பல கட்சிகளாகப் பிளவுபட்டுக் கொண்டிருக்கையில் இம்மக்களின் அர்ப்பணிப்புடனான போராட்டங்கள் போர்க்குணம் கொண்ட தமிழ் மக்கள் மீண்டும் திரண்டெழுவார்கள் என்ற வரலாற்றுப் படிப்பினையைச் சுட்டி நிற்கின்றன. இந்த நிலையில் அரசியற்கட்சிகள் ஆகக்குறைந்த பட்சம் செய்யக்கூடியது இந்த மக்களின் போராட்டங்களிலாவது தமது கட்சி வேறுபாடுகளை மறந்து இணைந்து கொள்வதாகும். அந்த வகையில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் நிகழ்வு முக்கியம் பெறுகிறது.
இன்று எஞ்சியிருக்கும் அரசியற் தலைவர்கள் எல்லோருமே தமது கடந்தகால அரசியல் நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பார்வையில் பல பிழைகளை விட்டவர்கள். தமிழ் மக்கள் பேரவை உருவாக்கத்தின் போது பேசப்பட்ட விடயங்களையும் மறந்து பேரவை நிகழ்விலேயே தமிழ் மக்கள் கூட்டணியை மக்கள் முன் அறிவித்தார் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன். இதன் பிற்பாடு ஒரு கட்சியின் செயலாளர் நாயகமாகிய விக்கினேஸ்வரனை இணைத்தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க பேரவை எப்படி அனுமதிக்கலாம் என்கின்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் நடத்திய நம்பிக்கைத் துரோகங்கள், கொள்கையில் உறுதிப்பாடின்மைத் தன்மைகள் காரணமாக சுரேஷ் பிரேமச்சந்திரன் இருக்கும் கூட்டில் தாம் வர மாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஒற்றைக் காலில் நிற்கின்றனர். கடந்த எழுக தமிழ் முன்னேற்பாடு நிகழ்வுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றியமையாத பங்காற்றியது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதேபோன்று கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுடன் பேசமாட்டோம் என ‘மாற்றுத்தலைமை’ கட்சிகள் பிடிவாதமாக இருக்கின்றன. கட்சித் தலைவர்கள் ‘தான் மட்டும் சரி, மற்றவர்கள் பிழை’ என்று சொல்வதும், ஒரு பிழையான நபர் இருக்கும் அல்லது ஒரு பிழையான கட்சி இருக்கும் கூட்டுக்குள் தான் சேரமாட்டேன் என விலகி நிற்பதும் விளங்கிக் கொள்ளக் கூடியதே. ஆனால் ஒரு குறைந்த பட்ச பொது நோக்கத்துக்காகவாவது ஒரு நிகழ்ச்சியில் இணையமுன்வராமல் இருப்பது துரதிர்திஷ்டவசமானது.
இந்த மனப்பான்மையின் தொடர்ச்சியாக எழுக தமிழ் போன்ற நிகழ்வுகளில் இணைவதன் மூலம் மற்றக்கட்சிகளுக்கு அங்கீகாரம் கொடுத்து விடுவோம் அல்லது அவர்கள் கூடுதல் ஆதாயமடைய நாம் இடங்கொடுத்து விடுவோம் அல்லது அவர்களுடன் சேருவதால் தமது கட்சிக் கொள்கையின் பிம்பம் பாழாகிவிடும் என்றும் கட்சிகள் பயப்படுகின்றன. இவ்வாறான எண்ணப்பாடுகள் இன்றைய அரசியற்தலைவர்கள் சுயகௌரவத்தையும் கட்சிநலன்களையும் முன்னிறுத்தி இவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய மக்களின் அபிலாசைகள் மறந்து விடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
அவ்வப்போது நடக்கும் தேர்தல்களை மையமாக வைத்து தமக்குள் பேர அரசியல் நடத்தும் பொழுது மட்டும் இந்தக் கட்சிகள் தமது முரண்பாடுகளைத் தாண்டி ஒரு சில அடிப்படைகளில் இணைய முன்வருவதற்குத் தயங்குவதில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். இந்த நிலைமை சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு மிகவும் வாய்ப்பாக உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் தென்னிலங்கை கட்சிகள் ஊடுருவ வழி சமைத்துக் கொடுக்கிறது. ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்களை மேலும் பிளவு படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஒருவர் தனது கட்சியின் கொள்கைளில் இறுக்கமாக இருப்பதும் அக்கட்சியை வளர்த்தெடுக்கும் தந்திரோபாயங்களில் ஈடுபடுவதும் இன்றியமையாததே. ஆனால் தமிழர் உரிமைகளை வென்றெடுத்தல் என்ற மூலோபாயத்தை விலை கொடுத்துத்தான் கட்சியை வளர்க்க வேண்டுமென்றால் அது சுயநலம் சார்ந்ததே. இன்று தமிழர் பல்வேறு கட்சிகளில் பிளவுண்டு இருந்தாலும் தமது உரிமைக்கான போர் என்ற ஒரு பதாகையின் கீழ் ஒன்றாக இணைவர் என்று காட்ட வேண்டிய அவசியமான காலகட்டம் ஒன்றில் நின்று கொண்டிருக்கிறோம். அதற்கு எழுக தமிழ் நிகழ்வு ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.
யாழ்ப்பாண சமூகத்தின் மேற்தட்டு வர்க்கத்தினரை அதிகமாக கொண்ட தமிழ் மக்கள் பேரவை மக்களை திரளாக்கும் பொறுப்பை எடுக்கும் நிலையில் இல்லை. அவர்கள் வீதிக்கு இறங்கி பிரச்சாரம் செய்யும் நிலையிலும் இல்லை. இவ்வாறான நிலையில் பேரவை என்ற அமைப்பைக் கடந்து மக்களை ஒன்றாக்கி ஓரணியில் கட்சி வேறுபாடின்றி கொள்கைப் பற்றுடன் ஒருங்கிணைத்து எழுகத தமிழை சிறப்பாக நடாத்தி முடிக்க வேண்டிய தேவை தமிழ்த் தேசிய சக்திகளுக்கு இருக்கின்றது.
தமிழ் மக்கள் பேரவையை விடுங்கள், விக்கினேஸ்வரனையும் விடுங்கள், தமிழ் மக்கள் கூட்டணியையும் விடுங்கள், கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் விடுங்கள், சுரேஷின் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் விடுங்கள். ஆனால், இன்று எழுக தமிழ் என்கின்ற ஒற்றைக் கோஷத்தின் பின் அணி திரள வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இருக்கின்றது. இனவழிப்பின் பின்னரான பத்தாண்டுகளில் இது நன்றாக உணரப்பட்டிருக்கிறது.
அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் அண்மையில் எழுதிய பத்தியொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார், "மக்கள் எழுச்சிக்கான எல்லாவிதமான தேவைகளும் இப்பொழுது உண்டு. கூட்டமைப்புக்கு எதிரான அதிருப்தி திரண்டு வருகிறது. அரசாங்கத்தின் மீதான கோபம் திரண்டு வருகிறது. அனைத்துலக சமூகத்தின் மீதான அதிருப்தி திரண்டு வருகிறது. அரசின் உபகரணங்களாக உள்ள திணைக்களங்கள் யுத்தத்தை வேறு வழிகளில் முன்னெடுத்து வருகின்றன. ஆனால் தமிழ் மக்களோ அந்த யுத்தத்தை எதிர்ப்பதற்குத் தேவையான கூட்டுப் பொறிமுறை எதுவுமின்றி காணப்படுகிறார்கள்.
இயலாமையும் விரக்தியும் கோபமும் கொதிப்பும் அதிகரித்து வரும் இவ்வரசியற் சூழலில் எழுக தமிழுக்கான தேவை உண்டு. ஆனால் இங்கே பிரச்சினை என்னவென்றால் முதலாவதாக அது ஒரு நாள் நிகழ்வாக இருப்பதின் போதாமை. இரண்டாவதாக, முன்னைய எழுக தமிழ்களின் போது பேரவைக்குள் காணப்பட்ட கட்சிகளுக்கிடையே குறைந்தபட்ச ஒருங்கிணைப்பு இருந்தது. ஆனால் அது இப்போது இல்லை என்பது."
இறுதியாக பேரவையின் அறிவிப்பையும் இங்கு சுட்டிக் காட்டுதல் முக்கியமானது, "நமக்கிடையே இருக்கின்ற அரசியல் பேதங்களும் ஒற்றுமையீனங்களும் கருத்து மோதல்களும் எங்கள் இனத்திற்கு ஆபத்தாக முடியுமென்பதால், மீண்டும் மீண்டும் நாம் கேட்பது அரசியல் பேதங்களை மறந்து தமிழ் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒன்றுபட்டு, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்பதாகும்.இந்த ஒற்றுமை ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் பேரணியில் பேரலையாக ஒன்றுபட வைக்கும் என்பது எம் அசைக்க முடியாத நம்பிக்கை.
அன்பார்ந்த தமிழ் மக்களே! பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவி விட்டது. ஏற்கனவே படைத் தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடுவிக்க மனமின்றி காலம் கடத்தப்படுகிறது. இந்த வேளையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பேரணியாக எழுச்சிபெற்று எங்கள் அவலத்தை உலகறியச் செய்வோம். இது தமிழினம் வாழ்வதற்கான எழுகை. உங்கள் ஒவ்வொருவரின் வரவும் நிச்சயம் சர்வதேச சமூகத்திடம் மிகப்பெரும் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் செப்டெம்பர் 7 ஆம் திகதி பேரலையாய் எழுந்து பேரணியில் கலந்து கொள்ளுங்கள் என தமிழ் மக்கள் பேரவை உங்களை அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது……”
ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தாக்குதலின் பின் முஸ்லிம்களுக்கு எதிர்ப்பு வலுவடைந்த பொழுது கட்சி முரண்பாடுகளை எல்லாம் கடந்து முஸ்லிம் அமைச்சர்களெல்லாம் ஒன்றாகப் பதவி துறந்து தமது சமூகத்தின் ஒற்றுமையை பறைசாற்றினார்கள். அவ்வாறான ஒரு ஒற்றுமையை தமிழ் மக்கள் உலகுக்கு காட்ட வேண்டிய அவசியமான தருணம் இது.
பல வேறுபட்ட கொள்கைப் போக்குடைய கட்சிகள் இருப்பது தமிழ்ச் சமூகத்தின் ஜனநாயக வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அக்கட்சிகள் தாம் சார்ந்திருக்கும் சமூகம் அழிவை சந்திக்க நேரும் பொழுது குறைந்த பட்சம் “தமிழினத்தை அழிவிலிருந்து பாதுகாப்போம்” என்ற பதாகையின் கீழாவது ஒன்றிணைவதும் அத்தியாவசியமானதே.
நிமிர்வு செப்டெம்பர் 2019 இதழ்
Post a Comment