பனை அதை விதை புதுச் சரித்திரம் படை
தமிழர்களின் பொருளாதாரமானது ஆரம்பத்தில் இருந்தே தற்சார்பானதாக தான் இருந்து வந்தது. எப்போது பல்தேசிய இலாபத்தை நோக்காக கொண்ட நிறுவனங்கள் வேரூன்ற தொடங்கினவோ அப்போதே எம் தற்சார்பும் அடிபட்டு போய் விட்டது. அந்த நிலையை மாற்றியமைக்க தமிழர் தாயகத்தில் இளைஞர்கள் களமிறங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.
ஒரு குடும்பம் பனைகளை நம்பியே தங்களது தற்சார்பு பொருளாதாரத்தை உயர்த்த முடியும். எம் பிரதேசங்களில் அடித்தட்டு மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக பனையே இருந்து வந்தது. தமிழர் தாயகத்தில் அழிந்து வரும் பனைகளை பாதுகாக்கும் நோக்கில் இம்முறையும் களமிறங்கி இருக்கின்றது வவுனியாவைத் தளமாக கொண்டியங்கும் சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்பு. இம்முறையும் ஒரு இலட்சம் பனம் விதைகளை நாட்டும் தமது இலக்கை நோக்கிப் பயணித்து வருகின்றது.
சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான அருளானந் 100 பனைமரங்கள் சேர்ந்தால் ஒரு காடே உருவாகி விடும் என சொல்வார்கள் எனக் குறிப்பிட்டார். பனைக் கூட்டமுள்ள இடங்களில் உயிர்ப்பல்வகைமை பெருகிவிடும். கடந்த வருடம் வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பெருமருதகுளம் எனும் கிராமத்திற் தான் பாரதி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் முதன்முறையாக 2000 பனை விதை நடுகை செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. புதுக்குளம் கிராமத்தில் அழகிரி நண்பர்கள் மூலமாகவும், வரிக்குட்டியூர், தரணிக்குளம், பூவரசன்குளம் ஆகிய 10 கிராமங்களில் பனைவிதைப்பு இடம்பெற்றது.
கடந்த வருடம் எங்கள் இளைஞர் குழுவை இவர்கள் பனங்கொட்டை நட்டு திரிகிறார்கள் என கேலி பேசியவர்களும் இருக்கின்றார்கள். எல்லாவற்றையும் தாங்கி கொண்டு தான் எம் எதிர்கால சந்ததிக்காக இந்தச் செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். சமூக வலைத்தளங்களில் குறிப்பாக முகநூல் மூலம் எங்கள் சுயாதீன இளைஞர்கள் அமைப்பில் பல இளையோர் தாமாக முன்வந்து இணைகின்றனர். அவர்களிடையே இந்த விழிப்புணர்வை செய்யக் கூடியதாக உள்ளது.
பனை வளர்ப்பை ஊக்குவிப்பதுடன் எமது செயற்பாடுகளை வெளிக்கொணரும் நோக்கில் “வெளி” எனும் பெயரில் சிறிய சஞ்சிகையையும் வெளியிட்டு வருகின்றோம். இப்போது ஐந்தாவது இதழ் வெளியாகி இருக்கின்றது.ஒரு இலட்சம் பனை விதை நடுகை இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்தும் அருளானந் விபரிக்கின்றார்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள கிராமங்கள் தோறும் உள்ள அமைப்புக்கள், தனிநபர் செயற்பாட்டாளர்களின் விபரங்களை திரட்டியுள்ளோம். அதன் மூலம் ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள அமைப்புக்கள் மூலம் அவர்களூடாகவே பனை விதைப்பு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இப்போது பனம் பழங்கள் விழுந்து வருகின்றன. அவற்றின் விதைகளை சேகரிக்கும் தன்னார்வலர்களையும் அடையாளம் கண்டு ஊக்குவித்து வருகின்றோம்.
போன வருடம் 10000 பனை விதைகளை நாட்டியுள்ளோம். அவற்றில் பெரும்பாலானவை முளைத்துள்ளமையை இன்று பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பனை விதைப்பது பாராமரிப்பது மிகவும் சுலபமானது. மழை காலத்திற்கு முன் சிறிய குழியை வெட்டி பனம் விதையை போட்டு மூடி விட்டால் போதும் அது முளைத்து விடும்.
எங்கள் முன்னோர்கள் ஆற்றங்கரைகளிலும், குளக் கரைகளிலும் ஏராளமான பனம் விதைகளை நட்டு வைத்திருப்பதனைப் பார்க்கக் கூடியதாக இருக்கும். பனை மரங்கள் ஆறுமாதத்துக்கு ஒரு தடவை வேர்களை புதுப்பிக்கும். பனை வேர்களில் அதிகளவான தண்ணீர் தேங்கி நிற்பதனால், நிலத்தடி நீர் மட்டம் எப்போதுமே கீழிறங்காது. கம்போடியாவில் பனை வளம் தான் அந்த நாட்டின் பொருளாதாரத்தையே உயர்த்துகின்றது. இலங்கையின் வடக்கு கிழக்கிலும் அதிகஅளவு பனை மரங்கள் உள்ளன. அவை எம் மக்களின் பொருளாதாரத்தை நன்றாக உயர்த்தும்.
இந்த ஆண்டு ஒரு இலட்சம் பனை விதைகள் என்ற இலக்குடன் பயணிக்கின்றோம். அதன் முதற்கட்டமாக கடந்த 17.08.2019 அன்று வவுனியா கூமாங்குளம் குளக்கரையை அண்டிய பகுதிகளில் 1000 பனம் விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி கச்சாய் கடற்கரையிலும் 1000 பனம் விதைகள் நாட்டப்பட்டுள்ளன.
விவசாய போதனாசிரியர் மாவட்டியூர் சிவதாஸ் கருத்து தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தின் தட்ஷணமருதமடு பண்ணைப் பெண்கள் அமைப்புக்கு சொந்தமான நிலத்தில் 500 பனம் விதைகளை நாட்ட உள்ளோம். மன்னார் பிரதேசங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால், காணிகளின் எல்லைகளுக்கு பனையை நாட்டினால் அது வளர்ந்து வரும் போது யானைகளைத் தடுக்கும் வேலியாகவும் இருக்கும்.
செல்வபாக்கியம் பண்ணை உரிமையாளரும், இயற்கை விவசாய முன்னோடியுமான செல்வநேசன், மாடு வளர்ப்பவர்கள் வேலிக்கு பனைமரங்களை நாட்டினால் நான்கு வருடங்களுக்கு பிறகு குறைந்தது 10 மாடுகளுக்கான சாப்பாட்டை அந்த வேலியே கொடுக்கும் என்று சொல்கிறார். மாடுகளுக்கு பனையோலையை விட சிறந்த உணவு வேறெதுவும் கிடையாது. பனையோலை வைக்கும் மாடுகளின் பாலில் கொழுப்பின் செறிவு அதிகரித்திருக்கும். பரிசோதனை செய்தால் இந்த உண்மை தெரியவரும் என்று மேலும் தெரிவித்தார்.
மறைந்த தொழிலதிபர் மில்க்வைற் கனகராசா அவர்கள் பனை விதைப்பை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். விழிப்புணர்வு செய்தி மடல்களை வெளியிட்டார். தான் போகும் காரில் பனை விதைகளை எடுத்து சென்று இலங்கையின் பல பாகங்களிலும் விதைத்துள்ளார். அவற்றில் பல இன்று வளர்ந்து பயன் தருகின்றன.
பனை விதையை நாட்டி கால்நடைகள் அதனை கடித்து உண்ணாமல் விட்டால் சரியாக 10 வருடங்களில் பயன் தரும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். பனைமரங்கள் வீட்டு கூரைத் தேவைக்காக நாளாந்தம் தறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனையும் தாண்டி பொக்லைன் இயந்திரங்களால் காணிகளை துப்பரவு செய்வோர் சிறிய வடலி பனைகளை வேரோடு பிடுங்கியும் அழித்து வருகின்றனர். இதனால் பனை மரங்கள் வெகுவாக அழிந்து வருகின்றன. எமது பிரதேசங்களில் பனை மரங்கள் உரிய அனுமதியின்றி தறிக்க முடியாத நிலை உள்ளது. ஆனால், சட்ட விரோதமாக ஏராளம் பனை மரங்கள் தறிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமூக நோக்குள்ள இளைஞர்கள் பனை நடுகையை ஊக்குவிக்கும் நோக்கில் களமிறங்கியமை நம்பிக்கையை தருகின்றது.
இந்த அமைப்பினருடன் இணைந்து பனை மரங்களை நாட்ட எல்லோரும் முன்வர வேண்டும். அமைப்பாய் திரண்டு தமிழர் தாயகத்தில் பனை விதைப்பை ஊக்குவிப்போம். எதிர்கால சந்ததிக்கு செழிப்பான வாழ்வை விட்டு செல்வோம்.
துருவன்
நிமிர்வு செப்டெம்பர் 2019 இதழ்
Post a Comment