இனவாதத் தீயால் வெந்தது செம்மலை



தமிழர் பகுதிகளில் பௌத்த பேரினவாதம் மீண்டும் தலைவிரித்தாடுகிறது. இந்நாட்டின் உயர்சபைகளில் ஒன்றான நீதிமன்றத்தின் தீர்ப்பையே காலடிகளில் போட்டு மிதித்துள்ளது சிங்களப் பேரினவாதம்.

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை நீராவியடிப் பிள்ளையார்  ஆலயத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதி கோலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு  நீதிமன்றம் 23.09.2019 அன்று உத்தரவிட்டிருந்தது. அதனை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய  தீர்த்தக்கேணியடியில் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவினரால் அன்று பிற்பகல் மறைந்த தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.   நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துமாறு கோரிய சட்டத்தரணிகள் பிக்குகளால் தாக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஆலய வளாகப் பகுதியில் தேரரின் உடலைத் தகனம் செய்ய சிறிலங்கா கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தடுக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி தீர்ப்பை மீறிய முடிவை ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் எடுத்துள்ளனர். அந்நேரம் அங்கு கூடியிருந்த சிங்கள மக்களுக்கும் தமிழ்மக்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு இனக்கலவரம் ஏற்படும் ஆபத்தும் இருந்தது.

வரலாற்று ரீதியாக, அநாகரிக தர்மபாலவின் அடியொற்றி இலங்கையில் பிக்குகளின் அரசியல் முடிவுகளில் காலம்காலமாக செல்வாக்கு செலுத்தி வந்திருக்கின்றனர். 2004 ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சியூடாக போட்டியிட்டு 9 பிக்குகள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். பின்பு பொதுபலசேனா எனும் தீவிரவாத பௌத்த அமைப்பொன்றை  ஞானசார தேரர் கட்டமைத்தார். அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கையில் வாழும் ஏனைய இனங்களுக்கு எதிராக இனவாத தீயைக் கக்கி வருகின்றனர்.

கொலை மிரட்டல், அச்சுறுத்தல் குற்றச்சாட்டில் கைதாகி ஹோமகம நீதிமன்றத்தால் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் ஞானசார தேரர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.கடந்த வைகாசி மாதம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பில் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். விடுதலையான பின்பும் மேலும் மேலும் சிங்கள பௌத்த மேலாண்மையை திணித்து வருகிறார்.

இலங்கையின் ஒற்றையாட்சி அரசின் நீதித்துறையினை பிக்குமார் மீறுகின்றனர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய பொலிஸாரோ கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்ற கட்டளை அனைவருக்கும் பொதுவானது. அது இனம், மதம், சாதி பார்ப்பதில்லை. ஆனால், இலங்கையில் பௌத்த அரசியல் அதிகாரம் என்பது இலங்கையின் நீதித்துறையை விட மேலானது என்பதற்கு நீராவியடிப் பிள்ளையார் கோவில் சம்பவத்தை விட வேறெது உதாரணமும் தேவையில்லை.

தமிழ்மக்களை ஒடுக்குவதில் சிங்கள அரச இயந்திரம் இராணுவம் அரச திணைக்களங்கள் என தன்வசமுள்ள பல கருவிகளை வரலாற்று ரீதியாக பயன்படுத்தி வந்துள்ளது.  இச்செயற்பாடுகளில் அரசை வழிநடத்துபவர்களாகவே பௌத்தபீடங்கள் செயற்பட்டு வந்தன. மட்டக்களப்பு அம்பிட்டியே சுமணரத்தின தேரர் போன்ற ஓரிரண்டு பிக்குகள் தமிழின ஒடுக்குமுறைகளில் நேரடியாக ஈடுபட்டிருந்தாலும் பெரும்பான்மையான பிக்குகள் பின்னணியிலிருந்தே பௌத்தபீடங்களூடாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். தமிழரின் ஆயுதப் போராட்டக் காலத்தில் ஆயுதங்க‍ளை நேரடியாக எதிர்கொள்ள முடியாமையால் ஆயுதம் வைத்திருந்த அரசு அல்லது இராணுவத்தை ஆயுதங்களாகப் அவர்கள் பயன்படுத்தினர்.  தமிழரிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட்டதும் அவர்களுக்கு அரசோ இராணுவமோ தேவைப்படவில்லை.  இதன் அப்பட்டமான வெளிப்பாடாகவே அமரரான பௌத்த பிக்குவின் உடற்தகனம் தொடர்பாக அரச நீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயற்பாடு நடந்தது.

மேலும் இவ்வாறான அடக்குமுறைகளுக்கு அரசையோ இராணுவத்தையோ பயன்படுத்தினால் அரசும் இராணுவமும் சர்வதேசத்தின் கண்டனங்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக நேரிடும்.  இதனை விளங்கிக் கொண்டதனாலேயே ஜனாதிபதி சிறிசேனவூடாக ஞானாசார தேரரை சிறையிலிருந்து விடுவித்து அவர் தலைமையில் பௌத்த பீடங்கள் தமது அதிகாரத்தை செலுத்துகின்றன.

நன்கு திட்டமிட்டே சிங்கள பேரினவாத அரசு காய்களை நகர்த்தி வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் நாட்டை ஆளுவதாக ஒரு தோற்றப்பாடு இருந்தாலும் அவர்களுக்கு பின்னால் தேரர்கள்தான் இருந்து இயக்குகிறார்கள்.  யாழ்ப்பாணம் நாகவிகாரை தேரர் இறந்த போதும் முற்றவெளியில் தேரரின் உடலை முன்னின்று எரிப்பதில் ஞானசார தேரர் தலைமையிலான தேரர்களே முன்னின்றனர். தேரர்களின் அடாவடித்தனங்களுக்கு அரச உயர்மட்டங்களால் எதிர்ப்புக் காட்ட முடியாத போக்கு அதிகரித்து வருகின்றது.


தமிழரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியற் தலைவர்களின் வங்குரோத்து நிலை காரணமாக தமிழர் உரிமைப் போராட்டங்கள் வெகுசன அமைப்புக்களாலும், மத குருமாராலும் தலைமை தாங்கப்படும் நிலை உருவாகி வருவது 2019 ஆனி நிமிர்வு இதழில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.  முக்கியமாக கல்முனை வடக்கைத் தரமுயர்த்துவதற்கு நடத்தப்பட்ட போராட்டமும், கன்னியா பிள்ளையார் கோவிலைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டமும் மதகுருமாராலேயே முறைப்படுத்தப் பட்டதைக் குறிப்பிடலாம்.  தமிழரின் தொலைநோக்க அரசியல்நலனுக்கு இவ்வாறான நிலைமை பாதகமானது என்றும் நிமிர்வு இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் நடத்திய அத்துமீறல்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து வலுவான எதிர்ப்புக்கள் எதுவுமே வரவில்லை.  இது தொடர்பாக நீதிமன்ற ஆணையைப் பெற்றுக் கொள்ள நடந்த வழக்கை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வழக்கறிஞர்கள் முன்னெடுத்ததை இங்கு குறிப்பிட வேண்டும்.  நீதிமன்ற உத்தரவு மீறப்படுகையில் அவர்கள் தெரிவித்த எதிர்ப்பும் இங்கு பதிவு செய்யப்படவேண்டும். அவர்கள் எடுத்த முயற்சிக்கு அங்கீகாரமும் பாராட்டும் வழங்கப்பட வேண்டும். இந்தச் சம்பவம் தமிழர் எதிர்நோக்கும் அடக்குமுறைகளை சட்ட ரீதியாகவும் கையாள ஒரு நிரந்தர வழக்கறிஞர் குழு தேவை என 2019 ஆடி  நிமிர்வு இதழில் வெளிவந்த கட்டுரைக்கு மேலும் பலம் சேர்க்கிறது.  தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் அவ்வாறான ஒரு குழுவை உருவாக்க தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டிய தருணம் இது.

தமிழ்மக்களின் பிரதான பிரச்சினைகளான காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் பிரச்சினை, சிங்கள அதிகார  வர்க்கத்தினால் திட்டமிட்டு உருவாக்கப்படும் நீராவியடி பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளை நாங்கள் அரசியல்ரீதியாகவும் அதே நேரம் சட்டப் போராட்டங்கள் மூலமாகவும் தீர்க்க வேண்டும். இதற்கு நாம் கட்சி அரசியலையும் தாண்டி தமிழ் சமூகமாக இணைந்து திறமையான வழக்கறிஞர்களை உள்ளடக்கிய அணியொன்றை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

நீராவியடி சம்பவம் தொடர்பில் பெரதெனியா பல்கலையின் சமூகவியல் துறையை சேர்ந்த மூத்த விரிவுரையாளரான துஷார கமலரத்ன அவர்களிடம் இது தொடர்பாகக் கேட்கப்பட்ட போது அதனை  இனங்களுக்கிடையிலான முரண்பாடாக நோக்கவில்லை  என்று சொன்னார்.  அதனை ஒரு சம்பவமாகவே தாம் பார்த்ததாக கூறினார். நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் பிரதிபலிப்பாக தான் இதனை நோக்குகிறேன். என்றார். உண்மையில் நீராவியடியில் விகாரையே அடாத்தாக கட்டப்பட்ட விடயம் அவருக்கு தெரியாதுள்ளது.   மேலும் அவரது கருத்து இவ்வாறுள்ளது. அந்தப் பகுதி விகாரை பிக்கு மரணமடைந்தால் அந்த வளவுக்குள்ளே எரிப்பது தான் வழமை என அவர் கூறுகின்றார்.

இதிலிருந்து ஒரு விடயம் முக்கியமாக தெரிகின்றது. அதாவது நீராவியடி சம்பவத்தை தமிழ் ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்த விதமும் சிங்கள ஊடகங்களும் வெளிக்கொண்டு வந்த விதமும் முற்றிலும் வித்தியாசமானது. சிங்கள ஊடகங்கள் செம்மலையில் பூர்வீகமாக விகாரை இருந்ததாக தொனிப்படவே எழுதியிருக்கின்றன. மேலும் பல சிங்கள ஊடகங்கள் அந்தப் பிரச்சினையையே கண்டு கொள்ளவில்லை. அதனால் தான் பேராசிரியரும் அதனை ஒரு சம்பவமாக பார்த்ததாகவும், விகாரை வளாகத்தில் எரித்ததில் என்ன தவறு உள்ளது என கேட் டமையும் முக்கியமானது. சிங்கள மக்களுக்கு சரியான செய்திகள் போய்ச் சேர்வதில்லை என்பது தெளிவாகின்றது.

சிங்கள மக்களின் அடிமனதில் உள்ள மகாவம்ச மனோநிலை இதற்கு மேலும் வலுச் சேர்க்கின்றது. அதாவது இலங்கை நாடு பௌத்தர்களுடையது. என்கிற எண்ணம் தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பின்னுக்கும் உள்ளது. இலங்கையில் 320 இடங்கள் பௌத்தத்துக்கு உரியதாக மத்திய அரசின் தொல்பொருள் திணைக்களம் அடையாளப்படுத்தி இருக்கிறது. அவற்றில் 167 இடங்கள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் அடையாளப்படுத்தபட்டு இருக்கின்றன. முழுமையான பௌத்தமயமாக்கலுக்குள் கொண்டு போய் தமிழர் தாயகத்தை உட்படுத்தி தாயக கோட்பாட்டை சிதைத்து கூறு போடுவதில் சிங்கள பேரினவாதம் நன்கு திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது.

தமிழர் தாயகப்பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட  குறித்த  167 இடங்களும் பௌத்த சமயம் சார்ந்த தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் சாதாரண ஏணிப்படி வைத்தமை தொடர்பாக தொல்லியல் திணைக்களம் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக முறைப்பாடு செய்து இருக்கிறது. இந்த ஆலயத்தோடு தொடர்புபட்ட அப்பாவி மக்கள் பொலிஸ் விசாரணைகளை தற்போது எதிர்கொண்டுள்ளனர். இனி நீதிமன்றப்படி ஏறி இறங்கும் நிலையும் ஏற்படப் போகின்றது. இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய தெளிவு நம் அரசியல் தலைமையிடம் இல்லை. இந்த நிமிடம் வரை மத்திய அரசை தாங்கிப் பிடித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படியான விவகாரங்களை ஏன் கண்டு கொள்ளவில்லை.

தமிழ்மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களும் அவை தொடர்பான சமய நம்பிக்கைகளும் இங்கே தகர்க்கப்படும் நிலை வரும் போது கூட நம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைகள் கையாலாகாத நிலையில் இருப்பது வேதனையானது. தமிழர் பிரதிநிதிகளின் கையாலாகாத இந்த நிலையில் இவ்வாறான போராட்டங்களின் தலைமை  தமிழ் மதகுருமார்களின் கைகளிலே அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ விழுகின்றது. இதனால்தமிழர் போராட்டத்தில் மதமும் ஒரு கூறாக திணிக்கப் படுவதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன.  இது தமிழரை மதரீதியாக பிளவு படுத்தி அவர்களது தேசிய அரசியலை நீர்த்துப் போகச் செய்வதற்கான சிங்கள பேரினவாதத்தின் திட்டத்தின் ஓர் அங்கம். இதனை முறியடிக்க தமிழ் அரசியல் தலைவர்கள் போராட்டங்களின் தலைமைப் பாத்திரத்தை எடுக்க வேண்டும்.

தமிழரின் தேசிய அரசியலில் மதம் நுழைவது தொடர்பான கரிசனை ஒருபுறமிருக்க பேரினவாதம் கண்களை மறைப்பதால் தமது ஜனநாயக உரிமைகளும் எதிர்காலத்தில் பிக்குகளால் காலடியில் போட்டு மிதிக்கப் படும் என்பதை சிங்கள பௌத்தர்களும் உணராமல் இருக்கிறார்கள். இன்று தமிழர் மீது அடக்குமுறைகளை நடைமுறைப்படுத்த அரச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் பிக்குகள் இதையே சிங்கள மக்களுக்கும் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

மேலும் கணிசமான தொகையான சிங்களவர் கிறிஸ்தவர்களாகவும் முஸ்லிம்களாகவும் இருக்கின்றனர்.  இன்று நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் நடந்தது அவர்களின் கிறிஸ்தவ தேவாலயங்களிலோ அல்லது முஸ்லிம் பள்ளிவாசல்களிலோ நடக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.  நடந்தும் இருக்கின்றன.  அவ்வாறான நிலையில் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அரசையும் நீதிமன்றங்களையும் சிங்கள மக்களே நம்ப முடியாத நிலை ஏற்படும்.

 ஓர் அரசாங்கத்திற்கும் அதனால் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கும் மதிப்பு இல்லாமல் போகும் போது அவை செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படும்.  இதனால் எந்த ஒரு விடயத்திலும் தாம் பாதிக்கப்படும் போது அதற்கான தீர்வைத் தரக்கூடிய அரச நிறுவனங்கள் மீது மக்கள் தங்கியிருக்க முடியாத நிலை ஏற்படும்.  மொத்தத்தில் ஒரு அராஜக நிலைமைஉருவாகும்.  அரசற்ற சமூகம் ஒன்றின் இருப்பு நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்காது.  இதனை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.  எந்தச் சிங்கள இனத்தைப் பாதுகாக்க பிக்குகளின் அட்டகாசங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ அந்த இனமே பிக்குகளால் அழிந்து போகக்கூடிய ஆபத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நிமிர்வு ஒக்டோபர்  2019 இதழ்  



No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.