இருட்டறைக்குள் கறுப்புப் பூனை
“இருட்டறைக்குள் கறுப்புப் பூனையை தேடுவது போல சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் எங்களுடைய தலைவர்கள் 13 ஐத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.”
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் "ஐனாதிபதி தேர்தலில் யாருக்கு, ஏன், எதற்காக, தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்" எனும் தொனிப் பொருளிலான மக்கள் மன்றம் யாழ் பிரதான வீதியிலுள்ள திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையரங்கத்தில் 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.அதில் பங்கேற்று தமிழர் மரபுரிமைகள் பேரவையின் இணைத்தலைவர் நவநீதன் ஆற்றிய உரை வருமாறு,
2015 ஆம் ஆண்டு போர் முடிந்து 5 ஆண்டுகள் கடந்த நிலையிலே மிகுந்த ஒரு நம்பிக்கையோடு எதிர்பார்ப்போடு தமிழ் மக்கள் அந்தத் தேர்தலை சந்தித்திருந்தார்கள்.2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களினுடைய அரசியல் பிரச்சனைகளுக்கும் அன்றாடப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்குமென வலுவாக நம்பினார்கள். அந்த நம்பிக்கை தமிழ் அரசியற்கட்சிகளிடமும் தமிழ்சிவில் சமூகத்திடமும் இருந்திருக்கின்றது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலே தான் அந்த தேர்தலுடைய முடிவும் அமைந்தது.
அந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலே இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்து சிங்கள மக்களினுடைய செல்லப்பிள்ளையாக, வெற்றி வீரனாக,துட்டகைமுனுவாக வர்ணிக்கப்பட்ட ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்கள் வெறுமனே 57 இலட்சத்தி 68000 வாக்குகளைப் பெற புதிதாக களமிறங்கி தன்னுடைய சொந்தக் கட்சியிலிருந்து வெளியேறி ஒரு அந்நிய கட்சியோடு கூட்டுச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் 62 இலட்சத்தி 17000 வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானார். அந்த வாக்கு வித்தியாசத்தையும் வாக்குப் பங்கெடுப்பையும் ஆராய்கின்ற போது மகிந்த ராஜபக்ச அவர்கள் சிங்கள மக்களினுடைய 58 வீதமான வாக்குகளைப் பெற்றார். மைத்திரிபால சிறிசேன அவர்கள்வெறுமனே 41 வீத சிங்கள மக்களின் வாக்குகளை மட்டுமே பெற்றார். 84 வீதமான தமிழ் முஸ்லிம் மக்கள் அவருக்கு வழங்கிய வாக்குகளின் அடிப்படையிலே அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.
அந்த தேர்தலிலே சிறுபான்மை மக்கள் அவர்மீது ஒரு நம்பிக்கையை வைத்திருந்தார்கள் என்பதற்கு அப்பால் எங்களுடைய இனத்தை கொன்றொழித்த எங்களுடைய மக்களை கொத்து கொத்தாக கொலை செய்த இனப்படுகொலையை அரங்கேற்றிய மகிந்த ராஜபக்ச என்ற அந்த தனிமனிதனையும் அந்தக் குடும்பத்தையும் அரசியல் அரங்கிலேயிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்து மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக்கினார்கள்.
எங்களுடைய தமிழ் தலைவர்களே மைத்திரிபால சிறிசேன அவர்களை நெல்சன்மண்டேல ஆகவும் கறுப்புக் காந்தியாகவும் பிரகடனம் செய்தார்கள். ஆனால் ஈற்றிலே என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். வாக்குறுதிகள் காற்றிலே பறக்க விடப்பட்டன. தேர்தல் வாக்குறுதிகள் தேர்தலுக்கு மட்டுமானவையே தவிர அது நடைமுறைப்படுத்துவதற்கானது அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டது. நிரூபிக்கப்பட்ட அந்த சூழலிலே நாங்கள் இப்பொழுது இன்னொரு ஜனாதிபதித் தேர்தலை சந்தித்திருக்கின்றோம். தாங்கள் ஏமாற்றப்படப் போகின்றோம் என்று தெரிந்து கொண்டே தமிழ் மக்கள் மீண்டும் ஒரு அரசியல் ஏமாற்று வேலைக்கு தயார்ப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதிலே சில தமிழ் அரசியற் கட்சிகளுடைய வகிபாகம் காத்திரமானது என்பது மறுப்பதற்கு இல்லை.
இந்த சூழ்நிலையிலே வரலாற்றை இன்னும் சற்றுப் பின் நோக்கி பார்க்கின்ற பொழுது இலங்கை ஜனாதிபதித் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொட்டு இன்று வரை தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக வந்த எந்த ஒரு ஜனாதிபதியும் இந்த நாட்டினுடைய ஒட்டுமொத்த மக்களுக்குமான ஜனாதிபதியாக இருக்கவில்லை. அவர்கள் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர்கள் அல்ல. தானே சளைக்காத பேரினவாதி என்பதை உறுதிப்படுத்துவதிலேயே தங்களுடைய ஆட்சிக் காலத்தை கொண்டு நடாத்தியிருக்கின்றார்கள் என்பது வரலாறு.
இலங்கையினுடைய முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா என்ன செய்தார்? 1983 ஆம் ஆண்டு இனப்படுகொலைகள்,தமிழர்களுடைய கல்விச் சொத்தாக இருக்கக் கூடிய யாழ் நூலக எரிப்பு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் இப்பொழுதும் அதனுடைய விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் மகாவலி என்கின்ற கபடத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியதும் இதே ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தான். 1979 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி சபையை நிறுவி அதனூடாக திட்டமிட்ட முறையிலே கட்டமைக்கப்பட்ட அடிப்படையிலே நிலத்தினுடைய இனப்பரம்பலை மாற்றியமைத்தார். இப்பொழுது அது வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. அவர் தான் சிங்களவர்களுக்கான ஜனாதிபதி என்பதை மிகவும் காத்திரமான முறையிலே பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து ஆட்சிபீடம் ஏறிய இப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அவர்களினுடைய தந்தையார் ரணசிங்க பிரேமதாஸ, ஊர்காவற்படை என்ற போர்வையிலே மிகப்பரவலாக எல்லைக் கிராமங்களிலே சிங்கள குடியேற்றங்களைச் செய்தார். கிராமம் கிராமமாக எங்களுடைய மக்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்டார்கள். கிழக்கிலே பல உதாரணங்கள்: சத்துருகொண்டான் படுகொலை, வீரமுனைப் படுகொலை, வந்தாறுமூலை படுகொலை, கஞ்சிகுடிச்சாறு படுகொலை, புல்லுமலைப் படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என படுகொலைகள் நீண்டு செல்லுகின்றன. அவரும் மிகவும் காத்திரமான முறையிலே தான் சிங்கள பேரினவாதிகளின் தலைவர் என்பதை பதிவு செய்தார். 1993 ஆம் ஆண்டு அவரின் மரணத்திற்குப் பின்னர் மிக சொற்ப காலத்திற்கு பதவி ஏற்ற டி.பி.விஜயதுங்க காலத்தில் கிளாலிக்கடலிலே 35 தமிழர்கள் படகிலே வெட்டிக் கொல்லப்பட்டார்கள். இவை எல்லாவற்றையும் விட மிக வேதனையான விடயம், தனது உரையிலே வாக்குமூலம் அளித்தார். "இது சிங்கள பௌத்த நாடு. சிங்கள பௌத்தர்கள் என்பவர்கள் மரம் போன்றவர்கள். அந்த மரத்திலே பற்றிப் பரவுகின்ற கொடிகள் போன்றவர்கள் தான் தமிழர்ளும் முஸ்லீம்களும்" என்று சொன்னார். அங்கே அவர் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி என்பதை விட தான் சிங்களவருடைய ஜனாதிபதி என்பதைப் பதிவு செய்தார். மிகவும் வேதனையான விடயங்கள்.
எங்கள் எல்லோராலும் ஒரு காலத்திலே சமாதானப் புறாவாக சமாதான தேவதையாக வர்ணிக்கப்பட்ட சந்திரிக்கா அம்மையார் என்ன செய்தார்? வடக்கிலே பொருளாதார தடையை மிகவும் இறுக்கமாக்கி எங்களுடைய மக்களை பட்டினிச் சாவிற்கு உட்படுத்தினார். முன்னெப்போதும் இல்லாத வகையிலே வடக்கு கிழக்கிலே விமானத்தாக்குதலை அதிகரித்தார். அதனூடாக நடந்த அப்பட்டமான படுகொலைகள் எங்களுக்கு நினைவு இருக்கின்றது. நவாலிப்படுகொலை மிக முக்கியமானது. நாகர்கோயில் பாடசாலையிலே இடம்பெற்ற படுகொலை. இவ்வாறாக அவரும் சிங்கள மக்களுக்கான தலைவி என்பதைப் பதிவு செய்து கொண்டார்.
இந்தப் பின்னணியில் தான் மகிந்தராஜபக்ச ஜனாதிபதியானார். அவரைப்பற்றி சொல்ல நேரம் போதாது. படுகொலைகளில் உச்சம்தொட்ட இனவாதியாக அவர் தன்னைப் பதிவு செய்தார். அது பன்முகப்படுத்தப்பட்ட படுகொலை நிகழ்ச்சி நிரல். பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். திருகோணமலையிலே மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். விமானத் தாக்குதலினூடாக பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இவையெல்லாம் முள்ளிவாய்க்காலிலே உச்சம் தொட்டு 1,46,700 பேர் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்டார்கள். எங்களுடைய மக்கள் தமிழர்கள் என்ற அடையாளத்திற்காக வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள். வன்புணர்வு செய்யப்பட்டார்கள். கடத்திக் கொலை செய்யப்பட்டார்கள். காரணமின்றி கைது செய்யப்பட்டு இன்றும் சிறையிலே அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவை எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவாக தலைவராக மகிந்த ராஜபக்ச இருந்திருந்த போதும் விரல் நீட்டி சொல்லப்படுகின்ற குற்றவாளியாக அப்போதைய பாதுகாப்புச் செயலாளரும் இப்போதைய ஜனாதிபதி வேட்பாளருமாகிய கோத்தபாய ராஜபக்ச அவர்கள் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றார்.
இந்தச் சூழ்நிலையில்தான் நாங்கள் 2015 ஆம் ஆண்டு இந்தச் சூழ்நிலையிலிருந்து விடிவு வேண்டும் என்பதற்காக மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக்கினோம். ஆனாலும் அவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்பதை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தினார். இதற்கு நீண்ட வரலாறுகள் உண்டு. இரண்டு விடயங்களை மிகச் சுருக்கமாக குறிப்பிடுகின்றேன்.
மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். நான் உங்களுக்கு மீட்பராக இருப்பேன் என்று வாக்குக் கேட்டவர் யாரை சர்வாதிகாரி என்று சொன்னாரோ அவரையே பிரதமராக்கி தானும் ஒரு பேரினவாதி என்பதை உலகத்திற்கு காட்டினார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக வாக்கு கேட்கின்ற பொழுது நான் தமிழ் மக்களுக்கு உண்மையாக இருப்பேன். பொறுப்புக் கூறுவேன். நீதியாக நடப்பேன் என்று வாக்குறுதி தந்து சர்வதேசத்திற்கும் அந்த வாக்குறுதியைக் கொடுத்த அந்த ஜனாதிபதி சர்வதேசத்திலே ஐநா மட்டத்திலே பெயர் குறிப்பிடப்பட்டு போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவர் இந்த நாட்டினுடைய இராணுவத் தளபதியாக நியமிப்பதனூடாக தானும் உச்சபட்ச இனவாதி என்பதைப் பதிவு செய்திருக்கின்றார்.
வரலாறு எங்களுக்கு எதைச் சொல்லுகிறதென்றால் நாங்கள் யாருக்கு வாக்களித்தாலும் எந்த சிங்கள பெரும்பான்மையினருக்கு வாக்களித்தாலும் அவர்கள் எப்பொழுதுமே இந்த நாட்டினுடைய ஜனாதிபதி என்பதற்கு அப்பால் சிங்கள மக்களின் தலைவர்கள் தாம் என்பதை பதிவு செய்வதிலே மிகவும் காத்திரமாக செயற்படுவார்களே தவிர அவர்கள் எங்களுடைய மக்கள் தொடர்பாக தமிழர்கள் தொடர்பாக கரிசனை கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதே நடைமுறை.
இப்பொழுது ஓரளவு திருப்திப்படக்கூடிய விடயம் நடந்தது. சிவில் சமூகத்தினுடைய ஏற்பாட்டிலே பல கட்சிகளின் பங்குபற்றலோடு கூடி மிகக் காத்திரமான 13 அம்சக் கோரிக்கைகளை வைத்தார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய நியாயமான ஒரு கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் கூட 13 கோரிக்கைகளும் யாரும் நிராகரிக்க முடியாதவை. அவை சரியானவை. அந்தக் கோரிக்கைகளோடு நாங்கள் பேரம் பேசி இந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களுக்கு ஒரு காத்திரமான வகிபாகம் இருக்கின்றது என்பதைக் காட்டக்கூடிய வகையில்நிகழ்ச்சிகள் நடந்தநிலையிலே அந்த 13 கோரிக்கைகளையும் பரிசீலிக்கக் கூடத் தயாரில்லை என்று இந்த வேட்பாளர்கள் அறிவித்துவிட்டார்கள்.
ஒருவர் வெளிப்படையாக அறிவித்து விட்டார். இன்னொருவருக்கு வெளிப்படையாக அறிவிக்க முதுகெலும்பில்லை. அவர் சொல்லிக் கொண்டிருக்கின்றார், அதை நாங்கள் பேசுவோம் என்று. இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் அவர் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருட்டறைக்குள் கறுப்புப் பூனையை தேடுவது போல எங்களுடைய தலைவர்கள் 13 ஐ தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அது கானல் நீர்! கிடைக்காது!! வார்த்தைகளுக்கு பொருள் கோடல் கொடுப்பதற்காக நாங்கள் தாயாராகிக் கொண்டிருக்கின்றோம். அங்கே எதுவுமே இல்லை.
இந்த சூழலிலே இரண்டு வேட்பாளர்களும் தமிழ் மக்களுடைய தார்மீக கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு கூடத் தயாராக இல்லாத நிலையிலே இந்த தேர்தல் சிங்கள மக்களுக்கும் சிங்கள பேரினவாதிகளுக்கும் உரிய தேர்தலே ஒழிய தமிழ் மக்களின் நலன் சார்ந்தது அல்ல என்று பதிவு செய்கின்றேன்.இந்தப் புறச் சூழ்நிலையிலே நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு எங்களுடைய மக்களைக் கோருகிறேன்.
தொகுப்பு-விக்னேஸ்வரி
நிமிர்வு நவம்பர் 2019 இதழ்
Post a Comment