2019 ஜனாதிபதி தேர்தல்; ஆள்மாற்றமே தவிர அரசியல் மாற்றம் இல்லைஇலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தகாலம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இன்றளவிலும் சிறுபான்மை இனத்தவர்களாகிய தமிழினம் இன்னமும் அதிலிருந்து மீள முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேதான் காணப்பட்டு வருகின்றது. சிங்களதேசம் வெற்றி கொண்டவர்களாக தம்மை அடையாளப்படுத்தி ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாய் கூவித்திரிந்தாலும் தமிழினம் போரின் வடுக்களை இன்னமும் சுமந்து கொண்டேதான் பயணிக்கின்றது என்பது வெளிப்படையானதே.

தமிழர்கள், அடிப்படைத் தேவைகள் தொடக்கம் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொள்வது வரை பல சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் சிறுபான்மையினரின் ஒற்றை நம்பிக்கையாக 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பல எதிர்பார்ப்புக்களைக் கொண்டதாகக் காணப்பட்டது.

இன விடுதலைக்காக, இனத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக, தமக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக, தமக்கென்று ஒரு தேசத்தை வேண்டிப் போராடிய நம்மவர்களை வல்லரசு நாடுகளின் கைகோர்ப்பின் மூலம் இன அழிப்பில் ஈடுபட்ட, அப்போது இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச மீது வெறுப்பை கொண்டிருந்த தமிழினம் அவருக்கான எதிர்ப்பைத் தெரிவிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைக் கருதினர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டார். அவருக்கு எதிராக முன்னாள் இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா முக்கிய எதிர்க் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இவருக்கு ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஈவிரக்கமின்றி நாட்டிலே இனப் படுகொலையை நிகழ்த்தி முடித்த ராஜபக்சவிற்கு எதிரான உணர்வின் காரணமாக  தமிழர் பெரும்பான்மையாக வாழும் தமிழ்ப் பிரதேசங்கள் யாவற்றிலும் ராஜபக்சவினால் வெற்றியை நிலைநாட்ட முடியாமல் போனது. யாழ்ப்பாணம், வன்னி,மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, நுவரெலியா போன்ற தமிழ் பிரதேசங்களில் சரத்பொன்சேகாவின் உடைய வெற்றி தமிழர்களின் ராஜபக்ச மீதான வெறுப்பை வெளிப்படுத்தியிருந்தது .

சரத் பொன்சேகாவை வெல்ல வைப்பதோ அல்லது எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கு ஆதரவளிப்பதோ தமிழர்களின் நோக்கமாக இருக்கவில்லை. மாறாக ராஜபக்ச வெற்றி பெறுவதை தடுப்பதே அவர்களது ஒரே ஒரு குறிக்கோளாக இருந்தது.

இருப்பினும் சிங்களப் பெரும்பான்மை ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களித்தமையால் 57.88 விழுக்காடுகள் வாக்குகளைப் பெற்று மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் 16 மாவட்டங்களில் அதிகூடிய வாக்குகள் பதிவாகி இருந்தன. இது சிங்கள பெரும்பான்மை இனவாதத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியிருந்தது.

யுத்தத்தின் வடுக்களை உடலிலும் மனதிலும் சுமந்த தமிழ்மக்கள் இழப்புக்களை நிறையவே பார்த்தவர்கள். இருந்த வேளையிலும் அரசியல் ரீதியான போராட்டமாக2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நம்பியிருந்த வேளையிலே அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது. 2009 யுத்தத்தில் தமிழ் இனத்தை அழித்தவனே மீண்டும் தம்மை ஆளப்போவதை எண்ணி தமிழர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். சகல விடயங்களிலும் தமிழர் தரப்பில் பாரியளவு பின்னடைவை சந்திக்க கூடிய சூழ்நிலை உருவாகியது.

யுத்தத்தின் பின் சரணடைந்தவர்கள் காணாமல் போனமை, அரசியல் கைதிகளாக தமிழ் இளைஞர்கள் பலரும் தடுத்து வைக்கப்பட்டமை, பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மேல் அநீதியான முறையில் பிரயோகிக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டமை, அவர்களின் நிலங்களை இராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்து இருந்தமைஎன போருக்குப் பின்னரும் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்பு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

இவ்வாறாக தமிழர்கள் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் 2010 செப்டம்பரில் நிறைவேற்றிய 18 ஆவது திருத்தத்தின் மூலம்  ஒருவர் அதிகபட்சம் இரண்டு பதவி காலங்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற சட்டம் நீக்கப்பட்டது. அதன்மூலம் ராஜபக்ஷ மூன்றாவது முறையும் போட்டியிட அனுமதி பெற்றார். இதன்படி 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரினை எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சி பொது வேட்பாளராக களம் இறங்கினார். தாம் பதவிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாகவும் சர்ச்சைக்குரிய 18 ஆம் திருத்தச் சட்ட மூலத்தை திரும்பப் பெறப் போவதாகவும் தமிழர்களுக்கான இனப்பிரச்சனைக்கு தீர்வினைப் பெற்றுத் தரப் போவதாகவும்மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் 2014 டிசம்பர் 30 அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தது. இதன்படி தமிழ்மக்கள் அனைவரையும் கூட்டமைப்பு சிறிசேனாவிற்கு வாக்களிக்கும்படி பணித்திருந்தது. இரண்டு வேட்பாளர்களுமே சிங்களவர்கள் மத்தியில் சம அளவிலான போட்டித் தன்மையுடன் காணப்பட்டதன் காரணமாக வெற்றியாளரைத் தீர்மானிக்கும் தரப்பாக தமிழர்கள் காணப்பட்டமையினால் இத்தேர்தலில் தமிழர்களுடைய வாக்குகளானது மிகவும் முக்கியமானதொன்றாகக் காணப்பட்டது. மீண்டும் மகிந்தவிற்கு எதிரான அரசியல் போராட்டமாக 2015 தேர்தலை கருதிய தமிழினம் தமது வாக்குகளை சிறிசேனவிற்கு அளித்திருந்த நிலையில் தமிழ் பிரதேசத்தின் பெரும்பான்மையான வாக்குகளால் மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

ஆயினும் தமிழரின் வாக்குகளினால் ஆட்சிபீடம் ஏறிய சிறிசேன தமிழ்த் தரப்பிற்கு அளித்த வாக்குறுதிகள் எவற்றையுமே தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றவில்லை. நிபந்தனைகள் ஏதும் இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களின் வாக்குகளை சிறிசேனாவுக்கு வழிங்கியதன் காரணமாக எதையுமே சட்டரீதியாக பெற முடியாமலும் போனது. சிங்களத் தலைவர்களால் மாத்திரமன்றி தமிழ்த் தலைமைகளாலும் தமிழினம் ஏமாற்றப்பட்டது யாவரும் அறிந்ததே.

இன்றளவிலும் தமிழ் தலைமைகள் எனக்கூறி பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களால் தமிழர்களுக்காக அரசியல் உரிமைகள் எதனையும் பெற்றுத் தராமல் இரப்பது தமிழினத்தின் சாபக்கேடே. தமிழ்மக்கள் போரின் நிறைவிற்கு பின்னர் இன்றளவிலும் எந்த ஒரு ரீதியிலும் எதையும் மீளப் பெற்றுக் கொள்ள முடியாமல், சிங்களப் பெரும்பான்மையாலும் தமிழ் தலைமைகளின் பிழையான நடத்துதல்களினாலும் பொய் வாக்குறுதிகளினாலும் துவண்டு போயிருக்கிறார்கள்.

இந்நிலையிலேயே இலங்கையில் மீண்டும் அரச தலைவர் தேர்தல் வந்திருக்கிறது. 2009 ல் இனஅழிப்பில் ஈடுபட்ட ராஜபக்சவின் குடும்பம் மீண்டும் தேர்தலில் களம் இறங்குகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தபாய ராஜபக்சவும் இவருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவும் தேர்தலிலே போட்டியிடுகிறார்கள்.

மீண்டும் அரசியல் ரீதியில் முக்கியமான முடிவொன்றை எடுக்க வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். இம்முறை தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தமிழர்கள் தரப்பில் எழுந்து வரும் நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழர் தரப்பில் உள்ள கோரிக்கைகளைமுன்வைத்து அதனை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருந்தனர். எனினும் முன்கூட்டியே 2 முதன்மை வேட்பாளர்களும் எழுத்து மூலமான எந்த ஒரு உடன்படிக்கையும் அளிக்கப் போவதில்லை என அறிவித்திருந்த நிலையில் இவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையிலேயே தான் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனினும் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலானது ஆள் மாற்றமே தவிர ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வரப்போவதில்லை என்று கூறி கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலை புறக்கணிக்கும் தமது கட்சியின் இறுதி முடிவை அறிவித்திருக்கிறது.

எது எப்படி இருப்பினும் 2010 மற்றும் 2015 இல் இடம்பெற்றது போலவே எந்தவிதமான மாற்றத்தையும் கொடுக்காத ஓர் ஆள் மாற்றத்தை விரும்பவில்லை எனில் தங்களுக்கு எது உகந்த முடிவு என அவர்களால் உணரபடுகின்றதோ அதனை சரிவர இந்த தேர்தலிலே வெளிப்படுத்த வேண்டும். அதன் மூலம் கடந்த இரு தேர்தல்களிலும் இழைத்த தவறை மீண்டும் இழைக்காமல், தமது வாக்களிக்கும் உரிமையை தவறாக பயன்படுத்தவில்லை என்ற ஆத்ம திருப்தியையேனும் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்பது திண்ணம்.

கிரிசாந்தி 
3ஆம் வருடம் ,
ஊடகத்துறை, யாழ் பல்கலைக்கழகம் 
நிமிர்வு நவம்பர்   2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.