தமிழ் மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பாக இத்தேர்தலை மாற்றுவோம்“ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு, ஏன், எதற்காக, தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்பதைப் பற்றி  விவாதிக்க தமிழ் அரசியற்கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்  பங்கேற்ற மக்கள் மன்றம் 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.  தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் இந்நிகழ்வில் பங்குபற்றி இருந்தன.  அதில் பங்கேற்ற கட்சிகளின் தலைவர்கள், சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதி தேர்தல் குறித்து இரண்டு நிலைப்பாடுகளை கூறினர். ஒன்று தேர்தலை புறக்கணிப்பது, இரண்டாவது தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது.
ஆனால், துரதிஷ்டவசமாக கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களும் சரி புத்தியீவிகளும் சரி  நேரடியாக தமிழ் வேட்பாளரை ஆதரிப்பதனைத் தவிர்த்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த அனைத்து கட்சிகளும் “தமிழ் மக்கள் தாம் விரும்புபவர்களுக்கு வாக்களிக்கலாம்” என்று கூறி தமது “வரலாற்றுக் கடமையை” முடித்துக் கொண்டார்கள்.  தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடத்துவதற்காக கட்சிகளை ஆரம்பித்ததாகச் சொல்லிக்கொள்ளும் இவர்கள் மக்களையே அந்த முடிவை எடுக்கச் சொல்லுவார்களாயின் இக்கட்சிகளின் இருப்புக்கான தேவை என்ன?அரசியலில் இவர்களின் பொறுப்புத்தான் என்ன?
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஐந்து தமிழ் கட்சிகளால் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட   13 கோரிக்கைகளையும் பிரதான சிங்கள வேட்பாளர்களிடம் வழங்குவதாக உறுதியளித்த சுமந்திரன் பின்னர் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்  கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறித்த கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களிடம் வழங்கவில்லை, ஆனாலும் சஜித்துக்கே ஆதரவு என நேரடியாகவே கூறினார். ஏலவே 13 தீர்மான வரைபில் ஒப்பமிட்ட  கூட்டுக் கட்சிகளைக் கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்காமல்,  அங்கத்துவக் கட்சிகளின் ஆதரவையும் கூடக் கோராமல் மீண்டும் ஒருமுறை தமிழரசுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை ஐ.தே.கவுக்கு வழங்கியுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு காலத்தில் நடைபெறும் இந்த தேர்தலில் கூட தமது கட்சி நலன்களை கைவிட்டு ஒரு பொதுக் கொள்கையின் கீழ் ஒன்றிணைய முடியாத தமிழ்க் கட்சிகள் எமக்குத் தேவையா  என்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது.
தேர்தலைப் புறக்கணிக்கக் கோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் வாதம், புறக்கணிக்கும் அரசியல் என்பதே விடுதலை அரசியல் என்கிறது.  இது சிங்கள மக்களின் தேர்தல், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை, ஆகவே இதனைப் புறக்கணிப்போம் என்பதுவே அவர்கள் நிலைப்பாடு.  அப்படியான புறக்கணிப்பு தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தில் வகிக்கும் பாத்திரம் என்ன என்பது தொடர்பாக அவர்களிடம் எந்தவித தெளிவும் இல்லை.
ஏற்கனவே தமிழ் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு பலன் எதையும் தரவில்லை.  இந்த தந்திரத்தை நாம் கையாண்டு தோற்றுப் போயிருக்கிறோம்.   இன்றைய சர்வதேச அரசியற் சூழலில் புறக்கணிப்பு என்பது எம்மை தனிமைப்படுத்தும்.  நாம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ எம்மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் ஒரு தேர்தலை எவ்வாறு கையாள்வது என்பதைப் பற்றி  சிந்திப்பதே தந்திரோபாயமானது.
சிவாஜிலிங்கம் என்ற தனிமனிதன் தமது கட்சிகளை விட பிரபலமடைவதா என்ற பொறாமை கூட இக்கட்சிகளின் இவ்வாறான பொறுப்பற்ற தன்மைக்கு காரணமா என எண்ணத் தோன்றுகிறது.  இங்கே போட்டியிடுவது சிவாஜிலிங்கம் அல்ல.  இன்னும் சொல்லப் போனால் இங்கு போட்டியிடுவது மீன் சின்னம் தான்.  அதனைக் குறியீடாக கொண்டு தமிழ் மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பாக இத்தேர்தலை பயன்படுத்தி தெற்குக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியைச் சொல்வோம்.  அதாவது தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஒன்றையே செய்து கொண்டிருக்கும் அரசியலைத் தாண்டி ஒரு புதிய வெகுசன அரசியல் நடவடிக்கைக்குத் தயாராகி விட்டார்கள் என்ற செய்தியை சொல்வோம்.

செ.கிரிஷாந் 
நிமிர்வு நவம்பர்   2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.