வல்லரசுகளின் இலக்குகளை தோற்க்கடிக்கும் தமிழ் பொது வேட்பாளர்
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் "ஐனாதிபதி தேர்தலில் யாருக்கு, ஏன், எதற்காக, தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்" எனும் தொனிப் பொருளிலான மக்கள் மன்றம் யாழ் பிரதான வீதியிலுள்ள திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையரங்கத்தில் 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேற்படி இயக்கத்தின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்ற இம்மக்கள் மன்றத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியற்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உரையாற்றியிருந்தனர்.அதில் பங்கேற்று யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியற்துறை தலைவரான பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம் ஆற்றிய உரை வருமாறு,
இந்த ஜனாதிபதித் தேர்தலில் சிவில் அமைப்புக்கள் சார்பில் நிறைய அம்சங்களோடு தொடர்புபட்ட விடயங்களோடு இந்த அரங்கில் சில பதிவுகளை செய்ய விரும்புகின்றேன். என்னுடைய பதிவுகள் சற்று வேறுபட்டது. சிவகரனுடைய அழைப்பில் அழகான வாசகம் இடப்பட்டிருந்தது. லெனினின் வாசகம் "அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும்” என்று. நானும் அதையே தான் நினைக்கிறேன்.
இந்த தேர்தல் என்பது தமிழர்களுக்கு ஒரு அறிவுபூர்வமான புத்திபூர்வமான தேர்தல். தமிழர்களிடம் ஆயுதம் முடிந்து போய்விட்டது. மிதவாதத்தின் எச்ச சொச்சங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதுகூட மிகப் பலமாக இல்லை. பலவீனமாகத்தான் இருக்கின்றது. எங்களிடம் இருக்கின்ற கேள்வி, அறிவுசார்ந்த எண்ணத்துக்குள் இந்தத் தேர்தலை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தான். இரண்டு விடயங்கள் இருக்கின்றன. விசுவாசமாக சொன்னால் முதலாவதாக ஒரு விடயத்தை முதன்மைப்படுத்தினோம். அது பொதுவேட்பாளர். இரண்டாவது 13 அம்சக்கோரிக்கைகள் என்ற விடயத்தை நாங்கள் முன்னிறுத்தினோம் தந்தோம். அது தென்னிலங்கைக்கு போய் வந்த பிற்பாடு தோற்று விட்டதாக பலர் நினைக்கின்றார்கள். உண்மையில் இரண்டும் தோற்கவில்லை என்பது எனது வாதம்.
இந்தோபசுபிக் என்ற உபாயத்திலிருந்தும் ஒரே சுற்று ஒரே பாதை என்கிற தளத்தில் இருந்தும் தான் இந்தத் தேர்தலை பார்க்கின்றோம். இந்தத் தளங்களைக் கையாளுகின்ற வல்லமை உபாயம் தமிழ் மக்களுக்கு உண்டு. தமிழ் மக்களின் வாக்குகளுக்கு உண்டு. தமிழ் மக்களுடைய இருப்புக்கள் இதனூடாக நகர்த்தப்படக்கூடிய ஒரு காலப்பகுதியில் இப்போது இருக்கின்றோம்.
நிறையக் கேள்விகள் கேட்பதனால் நிறைய அரசியல் கட்சிகள் எங்களிடம் வந்திருக்கின்றன.ஒரு காலத்தில் யூதர்களைப் பார்த்துச் சொன்னார்களாம். 4 பேர் இருந்தால் 5கட்சிகளை உருவாக்குவார்கள் என்று. அதே போல நாங்கள் 5 பேர் இருந்தால் 10 கட்சிகளை உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இத்தனைக்கும் நாங்கள் வெறும் ஒரு சிறிய தேசிய இனம். இந்த ஆறு பேரையும் ஒன்றிணைக்கப் செய்வதும் தொடர்ந்து அவர்களை பயணிக்கச் செய்வதும் எங்களுடைய அவா. இதனை நிறைவு செய்யாமல் தடங்கல் செய்வதற்கும் தென்னிலங்கையில் நிறையத் தளங்கள் இயங்குகின்றன. அந்த இயங்குதிறனைக் கடந்து போவதற்கு இந்த அரங்கும் இந்த அரங்கின் உரைகளும் சரியாக அமையக்கூடும்.
வாக்களிப்பவர்கள் அதனோடு சேர்ந்திருப்பவர்கள் ஒன்றித்து பயணிப்பவர்கள் அனைவரையும் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன். சிறிய தேசிய இனம் பல்வேறு நெருக்கடிக்குள் வந்து விட்டது. செம்மலை நிலைமை நல்லூருக்கு வருவதற்கும் அதிக காலம் எடுக்காது என நான் நினைக்கின்றேன். ஓரளவுக்காவது அறிவுபூர்வமாக செயற்பட வேண்டும்.
நாங்களோ இன்னும் புராதன இயல்புகளுககுள்ளும் பண்புகளுக்குள்ளும் இருக்கின்றோம். அதற்காக நான் அந்த மரபுகளை நிராகரிக்க வேண்டும் என்று கூறவில்லை. அந்த நிராகரிப்புக்குள் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் உள்வாங்கக் கூடிய ஒரு சூழலுக்குள் எங்களுடைய தேர்தல் விடயங்களும் தேர்தல் அவதானிப்புக்களும் அதனுடைய தீர்மானங்களும் அமைய வேண்டும். கட்சிகளின் கொள்கைகள் யாருக்காக என்று கேட்டால் மக்களுக்காக என்பார்கள். கொள்கைக்காக என்பது நியாயப்பாட்டுக்கான ஒரு விடயம். அந்த கொள்கையை நடைமுறை சார்ந்து எவ்வாறு கையாள்வது என்பது பற்றி உரையாடல் செய்வதனூடாக ஒரு தமிழ் சமூகத்தினுடைய அல்லது தமிழ் தேசிய இனத்தினுடைய இருப்புக்களை பற்றி சிந்தியுங்களேன் என்றே கேட்கிறேன். தற்போதைய சூழ்நிலைக்கு தனித்து தமிழ் தேசிய கூட்டமைப்போ தென்னிலங்கையில் இருக்கும் சக்திகளோ மட்டும் காரணம் இல்லை.
இந்தத் தேர்தல் தென்னிலங்கையின் தேர்தல் என்பது உண்மை தான். தென்னிலங்கையை கையாளுகின்ற சக்திகளை நாம் கையாளவில்லை. சிங்கள வேட்பாளர்களோடு, தமிழ் வேட்பாளர்களோடு, தமிழ் அரசியற்கட்சித் தலைவர்களோடு,புத்திஜீவிகளோடு கருத்தியலாளர்களோடு தூதுவர்கள் தனித்தனியே உரையாடியிருக்கின்றார்கள். தூதரங்கள் நிறைய விடயங்களை பகிர்ந்திருக்கின்றன. தங்களுடைய இலக்குகளை நாங்கள் தோற்கடிக்க முயற்சிக்கின்றோம் என்பதனை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள்.
இவை எல்லாமே 13 அம்சக்கோரிக்கைகளுக்கும் பொதுவேட்பாளர்களுக்கும் ஒரு வாய்ப்பான விடயம். நாங்கள் பொதுவேட்பாளர்களைத் தேடினோம். சாத்தியமாகவில்லை. சிவாஜிலிங்கம் மீன் சின்னத்தில் பொதுவேட்பாளராக தேர்தலில் நிற்கின்றார். தேசியத்திற்காக தேசிய இருப்பிற்காக பொதுவேட்பாளராக நிற்கின்றார். வாக்குகள் எடுத்து பாராளுமன்றத்திற்கு போகவேண்டிய அவசியமில்லை. என்னுடைய அபிப்பிராயம் இங்கே மீன் சின்னம் தான் பொதுவேட்பாளர். அது தமிழருக்கான சின்னம். தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
தொகுப்பு-அமுது
நிமிர்வு நவம்பர் 2019 இதழ்
Post a Comment