யாழ். நாகர் கோவில் பாடசாலை விமானக் குண்டுவீச்சு 24 ஆம் ஆண்டு நினைவலைகள்



யாழ். நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது இலங்கை விமானப்படையின் புக்காரா விமானங்கள் நடாத்திய குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்ட 21மாணவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த- 22. 09.2019 முற்பகல் நாகர் கோவில் மகாவித்தியாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

மகாவித்தியாலய அதிபர் கு. கண்ணதாசன் தலைமையில் நடந்த நினைவேந்தல் நிகழ்வில் மாணவ, மாணவிகளின் உருவப்படங்களுக்கு உயிர்நீத்தவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மலர்மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இலங்கை விமானப்படையினரின் கொடூரமான தாக்குதல் இடம்பெற்று 24 ஆண்டுகளாகி விட்ட போதும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் நாகர் கோவில் மண்ணில் வாழும் மக்கள் மனங்களில் ஆழப்பதிந்து விட்டது.
மேற்படி துயரைச் சம்பவம் இடம்பெற்ற போது நாகர் கோவில் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய சி. மகேந்திரம் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கண்ணீருடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

1995 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம்22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை06.30 மணியளவில் நான் வீட்டிலிருந்து புறப்பட்டு வருகின்ற போது காலை07.30மணியளவில் மணற்காட்டில் ஓர் குண்டுச் சத்தம் கேட்டது.அப்போது உந்தப் பக்கம் போகாதேயுங்கோ சேர் என சிலபேர் கூறினார்கள். அப்போது நான் புக்காரா போயிடும், பிள்ளைகள் பாடசாலைக்கு வருவார்கள் எனக் கூறிவிட்டுப் பாடசாலைக்கு வந்து சேர்ந்தேன்.

அன்றைய தினம் சரஸ்வதி பூஜையை நடாத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்ய வேண்டியிருந்தமையால் காலையில் எமது கூட்டம் இடம்பெற்றது. அதில் உமாதேவி என்ற சிறுமி மிக அழகாக சில நற்சிந்தனைகளைக்   கூறியிருந்தார். அனைவரும் அவரைப் பாராட்டியிருந்தார்கள். பின்னர் முற்பகல்11.15 மணியளவில் பாடசாலையில் இடைவேளை விடப்பட்டது.


மாணவர்கள் வீடு சென்று  மீண்டும் திரும்பி வந்து விட்டார்கள். இதன்பின்னர் எங்களில் சில ஆசிரியர்கள் ஒன்றுசேர்ந்து சரஸ்வதி பூசையை எவ்வாறு நடாத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை நடாத்திக் கொண்டிருந்தோம். அந்தவேளையில் செம்பியன்பற்றுக்கு அண்மையில் ஒரு குண்டுச் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்திலேயே எங்களுடைய பிள்ளைகள் கதிகலங்கி விட்டார்கள்.

பெற்றோர்கள் அழைக்கும் சத்தம் கேட்டுப் பல மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே போய்விட்டார்கள். இந்தநிலையில் தான் எமது பாடசாலைக்கு நேராக புக்காரா விமானங்களின் ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றது.  அந்த வேளையில் நானும், எனது ஆசிரியர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் கதி கலங்கி விட்டோம். பாடசாலைக்கு முன்பாக ஓடிய சில சிறுவர்கள் தாக்குதல் காரணமாக அவ்விடத்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.

இந்தநிலையில் தான் நாங்கள் பயந்தவாறு பாடசாலைக்கு மேற்குப் பக்கமாக ஓடினோம். காட்டுக்குள் ஒழித்தால் விமானத் தாக்குதலிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென்ற எண்ணத்தில் தான் நாம் இவ்வாறு செயற்பட்டோம். இதன் பின்னர் மீண்டும் அவ்விடத்தைச் சுற்றிவந்த புக்காரா தாக்குதல் நடாத்தியது. அப்போது எனக்குப் பக்கத்தில் நின்ற பழனி எனும் மாணவர் சேர் பயப்படாதையுங்கோஎன்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறி ஓரிரு நிமிடங்கள் தான் கடந்திருக்கும். திடீரென அவனுடைய தலையிலிருந்து இரத்தம் வரத் தொடங்கி விட்டது. பின்னர் புக்காரா அங்கிருந்து சென்ற பின்னர் மீண்டும் பாடசாலைக்குள் சென்றோம். அங்கு 65 மாணவர்கள் வரையானோர் காயமடைந்திருந்தனர். இதற்கிடையில் இந்தக் கிராமத்திலிருந்த பெரியோர்களும், கிராமத்தைச் சுற்றியிருந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து காயப்பட்ட எமது பிள்ளைகளைத் தமது வாகனங்களில் ஏற்றி மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள்.


19 மாணவர்கள் காயம் காரணமாக உடனடியாகவே இறந்துவிட்டார்கள். இரண்டு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும், அவர்கள் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.

நான் மந்திகை வைத்தியசாலைக்குச் சென்று பார்த்த போது பல மாணவர்களை இரத்தம் ஒழுகிய நிலையில் படுத்தியிருந்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் இறந்தநிலையில் தான் காணப்பட்டார்கள். ஆனாலும், என்னுடைய பிள்ளைகள் இறந்து விட்டார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

விமானத் தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்ட மாணவர்கள் தொடர்பாக எந்தவித விசாரணைகளும் நடாத்தப்படாமல் அவர்களது பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் உடல்கள் கையளிக்கப்பட்டன. இவ்வாறு கையளிக்கப்பட்டவர்களில் ஒரு சிலரின் உடல்கள் அன்றைய தினமே அடக்கம் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் காரணமாக மூன்று நாட்களாக நான் வீடு செல்லாமல் கொல்லப்பட்ட மாணவர்களின் வீடுகளிலேயே நான் தங்கியிருந்தேன். இதன்  பின்னர் மாணவர்களின் வரவின்மையால் இந்தப் பாடசாலை பல நாட்களாக இயங்கவில்லை.

மிகுந்த துயர் மிக்க இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் இந்தப் பாடசாலையின் அதிபராக நான் கடமையாற்றியதை நினைத்து இன்றுவரை நான் வேதனைப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்.

விமானத் தாக்குதல் இடம்பெற்ற போது இந்தப் பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றவரும்,  தற்போது பருத்தித்துறைப் பிரதேசசபை உறுப்பினராகவுமுள்ள ஆ. சுரேஸ்குமார் தாம் சந்தித்த்த நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

1992 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் அனுரத்த ரத்வத்தை எனும் படைத்தளபதியைப் பலாலிப் படைத் தலைமையகத்துக்கு அனுப்புகிறார். இதன்பின்னர் யாழ். குடாநாட்டைக் கைப்பற்றும் வகையிலான நில ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பமாகிறது.

அந்தச் சமயத்தில் ஆனையிறவிலிருந்து கடல் மார்க்கமாகவும் ஒரு படை நடவடிக்கை ஆரம்பமாகிறது. இதன்மூலம் வெற்றிலைக்கேணியை இலங்கை இராணுவம் முற்றுகையிடுகிறது. இந்த இரண்டு பகுதிகளுக்குள்ளும் காணப்படும் மக்கள் எறிகணைகளுக்குள் அகப்படுகிறார்கள். போர் வலயமாக காணப்பட்ட அந்தவிடங்களிருந்து பாரிய இடப்பெயர்வுக்குள்ளாகிறார்கள்.

குறித்த காலப் பகுதியில் வந்தாரை வாழ வைக்கின்ற கிராமமாகிய எமது நாகர் கோவில் கிராமம் அனைத்துத் தரப்பினரையும் இங்கு வரவேற்கிறது. அந்தவகையில் மயிலிட்டி, காங்கேசன்துறை, திருகோணமலை, ஆனையிறவு, உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளிலிருந்து இங்கு வருபவர்களுக்கு ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டுக் குடியமர்த்தப்படுகிறார்கள். இந்நிலையில் இவ்வாறு குடியமர்த்தப்பட்ட குடும்பங்களினதும், கிராமத்து மக்களினதும் பிள்ளைகளின் கல்வியின் உறைவிடமாக இந்த நாகர் கோவில் மகாவித்தியாலயம் காணப்படுகின்றது.

அக்காலத்தில் இந்தப் பாடசாலை இடநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடசாலை மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட போது நான் இங்கு ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றேன்.

நாகர்கோவில் கிராமத்தைப் பொறுத்தவரை எங்களுடைய பிரதான வாழ்வாதாரத் தொழிலாக கடற்தொழிலே இருந்து வருகிறது. இந்த நிலையில் நாங்கள் இந்தப் பாடசாலையில் படிக்கும் காலத்தில் எமக்கென சில சலுகைகளை எமது ஆசானாகவும், தந்தையாகவும் செயற்பட்ட மகேந்திரம் சேர் வழங்கியிருந்தார்கள். நீங்கள் கடற்தொழிலுக்குச் சென்றாலும் பாடசாலைக்கு வருகை தராமல் நின்றுவிடக் கூடாது. தொழிலுக்குச் சென்றுவிட்டு ஒரு பாடவேளை கடந்த பின்னரும் நீங்கள் பாடசாலைக்கு வரலாம். உங்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

22.09. 1995 ஆம் ஆண்டு காலை காலைப் பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காகப் பாடசாலையின் நடுப் பகுதியில் ஒன்றுகூடுகிறோம். எமக்கு அன்றைய தினம் நான்காம் பாடமான உடற்கல்விப் பாடம் நடைபெறவில்லை. நாங்கள் பாடசாலையின் பிற்பகுதியால் சென்று மரநிழலின் கீழ் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சிவமணி அக்காவிடம் சிற்றுண்டிகள், இனிப்புக்கள் வாங்கி உண்டு கொண்டிருந்தோம்.

பலாலி விமான நிலையத்திலிருந்து திருகோணமலை சீனக்குடா பகுதிக்கு இரண்டு புக்காரா விமானங்கள் காலையிலும், மாலையிலும் இராணுவ ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழமை. இந்நிலையில் அன்றைய தினம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான பெரிய கப்பலொன்று கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டு விமானத் தாக்குதலின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாகர் கோயில் கடற்பரப்பில் கட்டப்படுகிறது.

இவ்வாறான நிலையில் தான் அங்கே இரண்டு புக்காரா விமானங்கள் வருகின்றன. அந்தச் சந்தர்ப்பத்தில் நானும் மயிலிட்டியைச் சேர்ந்த எனது நண்பனான மகேஸ்வரனும் பாடசாலை முன்பாக நின்றிருந்தோம். அப்போது வானத்தின் மேலே வட்டமிட்ட விமானங்கள் முதலாவது தாக்குதலை நடாத்துகின்றன.

வழமைக்கு மாறாகப் பெரும் சத்தம் கேட்டமையால் நான் எனது நண்பனை அழைத்து நண்பா...சத்தம் பெரிதாக கேட்கின்றது. நாங்கள் இங்கிருந்து ஓடுவோம் எனக் கூறினேன். நானும், எனது நண்பனும் ஓடிச் சென்று தாக்குதல் நடைபெறப் போகும் புளியமரத்திற்கு கீழே இருக்கிறோம். எனது வீடு அருகாமையிலுள்ள நிலையில் என் அம்மா நேரே ஓடி வருகிறார். அப்போது தம்பி குட்டி இங்கே ஓடிவாங்கோ....ஓடிவாங்கோ....என அம்மா அழைக்கிறார்.

அப்போது எனது நண்பனை நோக்கி நீ உன் அம்மாவிடம் ஓடிச் செல்....நான் என் அம்மாவிடம் செல்கிறேன்...எனக் கூறிவிட்டு அம்மாவிடம் சென்றுவிட்டேன். அம்மாவிடம் சென்ற பின்னர் அங்கிருந்து சுமார்50 மீற்றர் தூரம் தான் சென்றிருப்போம். கோயிலுக்கு முன்னாலுள்ள ஆலமர நிழலின் கீழ் சென்று கொண்டிருந்த போது வித்தியாசமானதொரு சத்தம் காதுகளுக்கு கேட்கின்றது. அப்போது அம்மா என்னைப் பார்த்து "புக்காரா குத்துறான்... குண்டடிக்கப் போகிறான்... உடனே கீழே படுங்கோ..." என்று கூறி என்னை நிலத்தில் படுக்க வைக்கிறார்.

அப்போது தான் நாகர்கோயில் பாடசாலை மீது குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்படுகிறது. நான் படுத்திருந்த ஆலமரத்தின் மீது குண்டுத் துகள்கள் பட்டுத் தெறிக்கின்றன. சிறிதுநேரத்தில் தலைநிமிர்ந்து பார்த்த போது பாடசாலைக்கு முன்பாக நின்றிருந்த புளியமரம் சரிந்து பெரும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. ஐயோ...அம்மா...இவ்வாறான பல ஓலக் குரல்கள் தொடர்ந்தும் இப்பகுதியில் ஒலித்தவாறே இருக்கின்றன.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நாங்கள் கதி கலங்கிப் போய் நின்றுகொண்டிருந்தோம். அப்போது அம்மா என்னைப் பார்த்து தம்பி...இதிலே அடி விழுந்துற்று, நாங்கள் உடனடியாக ஓடிப் பின்புறம் செல்வோமெனக் கூறினா. அவ்வாறே நாங்கள் அங்கு ஓடிச் செல்கின்ற போதும் அங்கேயும் ஒரு தாக்குதல் இடம்பெறுகிறது. அந்தத் தாக்குதலில் எனது நண்பன் பழனி இறக்கின்றான். மற்றொரு நண்பனான செல்வகுமாரின் தொடைப் பகுதியில் பாரிய காயம் ஏற்படுகிறது. இந்த வலிகளைச் சுமந்தவாறு தொடர்ந்தும் நாங்கள் ஓடுகிறோம்.

அன்றைய தினம்  விமானக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து மாணவிகள் எனது வகுப்பைச் சார்ந்தவர்கள். உமாதேவி என்ற மாணவி எனது நண்பி, என் வீட்டின் அருகில் வசித்தவர். அன்றைய தினம் கொல்லப்பட்ட எனது சக நண்பர்கள், அண்ணாக்கள், தங்கச்சிமார்களின் உடல்களைக் கூட எங்களால் பார்க்க முடியவில்லை. ஏனெனில், அன்றைய நாள் முழுவதையும் நாங்கள் அச்சத்துடன் காட்டுக்குள்ளேயே கழிக்க வேண்டியேற்பட்டது.

மேற்படி நினைவேந்தல் நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபரும், தற்போது உடுப்பிட்டி இமையாணன் அ. த. க பாடசாலையிலும் அதிபராகக் கடமையாற்றி வரும் இ. சிவசங்கர் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

நான் ஆசிரியராகவும் , அதிபராகவும் இந்தப் பாடசாலையில் கடமையாற்றியிருக்கின்றேன். இந்தப் பாடசாலையில் இடம்பெற்ற விமானக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் என்னிடம் இடைநிலைப் பிரிவில் கற்றவர்கள். இந்த மாணவர்கள் அனைவருமே மிகுந்த அறிவும், திறமையும் கைவரப் பெற்றவர்கள். இவ்வாறான 21 திறமையாளர்களை எமது பிரதேசம் இழந்து நிற்பது சொல்ல முடியாத வேதனையைத் தருகின்றது.

1993 ஆம் ஆண்டில் இந்தப் பாடசாலைக்கு நான் ஆசிரியர் நியமனம் பெற்றுவந்த போது மயிலிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களும், நாகர் கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களும் அதிகம் கல்வி கற்று வந்தனர். அப்போது கல்வி கற்ற உமாகாந்தன் என்ற மாணவன் மிகுந்த திறமை மிக்கவனாகத் திகழ்ந்தான். அந்த வகையில் கோட்ட மட்டத்தில் இடம்பெற்ற 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலாமிடம் பெற்று புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியில் இடம்பெற்ற மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்காக அந்த மாணவனை நானும், இந்தப் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிய கெளரிநாதன் சேரும் இங்கிருந்து மாறி மாறி சைக்கிளில் புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரிக்கு  அழைத்துச் சென்றோம். அந்த மாணவன் குறித்த போட்டியில் இரண்டாமிடம் பெற்று இந்தப் பாடசாலைக்குப் பெருமை தேடித் தந்தார்.

உமாகாந்தனைப் போட்டிக்கு அழைத்துச் செல்லும் வழியில் எனது வீட்டிற்கு அழைத்துச் சென்று என் தாயாரின் கைகளால் உணவு உண்ணக் கொடுத்து மாலை வேளையில் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஞாபகமுண்டு. அந்த மாணவனும் 1995 ஆம் ஆண்டு இந்தப் பாடசாலை மீது நடாத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டமை மிகுந்த மனவருத்தத்தைத் தருகிறது.

இந்தப் பாடசாலையில் நடாத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து மாணவர்களினதும் பெயர்கள் இப்போதும் எனது ஞாபகத்திலிருக்கிறது. நான் இந்தப் பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய போது கொல்லப்பட்ட மாணவர்களின் உருவப்படங்களைப் பார்த்துவிட்டுத் தான் என் அலுவலகத்துக்குச் செல்வேன். அதேபோன்று பாடசாலை முடிவடைந்த பின்னர் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் சென்ற பின்னர் மாணவர்களின் நினைவுத் தூபியடிக்குச் சென்று வணக்கம் செலுத்திவிட்டுத் தான் வீடு திரும்புவேன்.21 மாணவர்களும் இறந்துவிட்டார்கள் என என்றுமே நான் நினைத்ததில்லை. அவர்கள் இன்றும் எம்முடனேயே இருக்கிறார்கள் எனவும் கூறினார்.

செல்வநாயகம் ரவிசாந்
 நிமிர்வு நவம்பர்   2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.