தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சிங்கள நிகழ்ச்சி நிரலில் நின்று பார்க்காமல் தமிழ் தேசிய நலனில் நின்று கொண்டு நாங்கள் இந்தத் தேர்தலை கையாளுவதற்கு முயற்சிக்க வேண்டும். அந்த அடிப்படையில் பார்க்கின்ற பொழுது தமிழ் மக்கள் தாங்கள் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவதுதான் உண்மையில் பொருத்தமானதாக இருக்கும்.

அந்த பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் நாங்கள் ஒரு தேசமாக இருக்கின்றோம் என்பதை வெளிப்படையாகக் காட்டுவதற்கு முன்வரக் கூடியதாக இருக்கும் என்பது முதலாவது விடயம். இரண்டாவது தமிழ் மக்களுடைய அபிலாசைகள் எது என்பதை உறுதிப்படுத்துவதற்கு உதவி புரிவதாக இருக்கும். மூன்றாவது தமிழ் அரசியல் இன்று சிங்கள நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குப்பட்டு உள்ளது. சிக்குப்பட்ட தமிழ் அரசியலை சிங்கள நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியே கொண்டு வரவேண்டும். வெளியே கொண்டு வருவதற்கும் இந்த தமிழ் பொதுவேட்பாளர் உதவியாக இருக்கும். நான்காவது விடயம் தமிழ் தலைமைகளுடைய போருக்கு பின்னராக நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்களுக்கான சர்வதேச வெளி மூடப்பட்டிருக்கின்றது. இந்த சர்வதேச வெளியை நாங்கள் திறந்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் பேராசிரியர் சிவத்தம்பி அடிக்கடி சொல்லுவார் ஒரு தேசிய போராட்டம் தேசிய அரசியலினால் தான் உருவாகும். ஒரு தேசியப் போராட்டம் தேசிய அரசியலினால் வளர்ச்சியடையும். ஆனால் ஒரு தேசியப்  போராட்டத்தின் வெற்றியை சர்வதேச அரசியல் தான் தீர்மானிக்கும். தமிழ் மக்களும் சர்வதேச அரசியலை நடாத்தியாக வேண்டும்.

இன்றைக்கு இலங்கைத்தீவு சர்வதேச அரசியலோடு முழுமையாக பிணைக்கப்பட்ட ஒரு நிலையில் சர்வதேச அரசியலை நகர்த்தாமல் தமிழ் மக்களால் முன்னே செல்ல முடியாது. ஆகவே நாங்கள் சர்வதேச வெளியை திறப்பதன் ஊடாகத்தான் இந்த சர்வதேச அரசியலை நடாத்த முடியும். அந்த வகையிலும் பொது வேட்பாளர் தான் அதற்கு கை கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

இதனைவிட இலங்கைத் தீவை வழி நடத்துவது என்பது இலங்கைத்தீவை மையமாக வைத்த பூகோள அரசியல் தான். விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது என்பதற்கும் காரணம் புவிசார் அரசியல் தான். மகிந்த தோற்கடிக்கப்பட்டதற்கும் காரணம் புவிசார் அரசியல் தான். இன்று கோத்தபாய மேலெழும்புவதற்கும் காரணம் புவிசார் அரசியல் தான். புவிசார் அரசியலை மையமாக வைத்துத்தான் இங்கே எல்லாம் நடைபெறுகின்றது. புவிசார் அரசியலில் கௌரவமான பங்காளிகளாக தமிழ் மக்கள் மாற வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் இருக்கும் வரை கௌரவமான பங்கிருந்தது. தமிழ் மக்களின் விவகாரத்தை விட்டு விட்டு வல்லரசுகளால் எந்த ஒரு நகர்வுமே மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்று தமிழ் தலைமைகளை தங்களுடைய சட்டைப்பைகளுக்குள் வைத்துக் கொண்டு வல்லரசுகள் தங்களுடைய நலனை மாத்திரம் பார்க்கின்ற நிலைமை தான் இருக்கின்றது. இந்த நிலைமையை மாற்றி ஒரு கௌரவமான பங்கை தமிழ் மக்களுக்கு வழங்கக்கூடிய புவிசார் அரசியலை எடுக்க வேண்டும். அப்படியாயின் பொதுவேட்பாளராக இருப்பதனூடாகத் தான் நாங்கள் அதனை சாத்தியமாக்க முடியும்.


இதனை விட தமிழ் மக்கள் ஒருசின்ன தேசிய இனம். ஒரு சின்ன தேசிய இனம் தன்னுடைய அக ஆற்றலை மாத்திரம் நம்பியிருக்க இயலாது. புற ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தமிழ் மக்களுடைய அடிப்படை சக்திகளாக இருக்கின்றவர்கள் தாயகத்தில் வாழுகின்ற மக்களும் அதனுடைய நீட்சியாக புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற மக்களும். அவர்களை நாங்கள் வலுவாக அணிதிரட்ட வேண்டும். இரண்டாவது விடயம் தமிழ் மக்களின் சிறந்த சேமிப்பு சக்திகளாக இருப்பவர்கள் மலையகத் தமிழ் மக்கள், தமிழக தமிழ் மக்கள் உட்பட உலகெங்கும் வாழுகின்ற தமிழக வம்சாவளித் தமிழ் மக்கள். ஆகவே அவர்களை நாங்கள் எங்களுக்குள் அணிதிரட்ட வேண்டும். அதற்காக நாம் உலகத் தமிழ் தேசிய வாதம் என்கின்ற சிந்தனையைக் கூட முன்கொண்டு செல்லலாமா என்று நாங்கள் யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகெங்கிலும் வாழுகின்ற ஜனநாயக சக்திகள் தமிழ் மக்களின் நல்ல நட்பு சக்திகள். ஆகவே நாங்கள் நல்ல நட்பு சக்திகளையும் திரட்ட வேண்டும். அடிப்படைச் சக்திகளையும் சேமிப்பு சக்திகளையும் நட்பு சக்திகளையும் எங்களுடைய அரசியலுக்குப் பின்னால் அணி திரட்டுவதனூடாகத் தான் நாங்கள் ஒரு பலமான தேசிய இனமாக இருக்க முடியும். இதனைக் கொண்டு வர வேண்டுமென்றால் நிலத்திற்கும் புலத்திற்கும் தமிழகத்திற்கும் ஒன்றிணைந்த வேலைத்திட்டம் ஒன்று தேவை. இந்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை கொண்டு வருவதற்கு  பொதுவேட்பாளரின் நிலைமை நிறைய உதவிக்கரமாக இருக்கும்.

தமிழ் மக்கள் மரபுரீதியாக வெற்றுக்காசோலை கலாசாரத்திற்கு  பழக்கப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய தேசியக்கட்சி எதுவுமே செய்யமாட்டார்கள் ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கின்ற தன்மை. இந்த நிலைமையை நாங்கள் மாற்றியாக வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியினர் என்ன நினைக்கின்றார்கள் என்றால்  தமிழ் மக்களுக்கு வேறு தெரிவில்லை. ஆகவே தமிழ் மக்கள் தங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று. இந்த நிலைமையை மாற்றி நாங்கள் ஒரு பேரம் பேசுகின்ற அரசியலை முன்னெடுக்க வேண்டும். பொதுவேட்பாளர் என்பதை முன்நிறுத்திக் கொண்டு நாங்கள் போவோமாக இருந்தால் அங்கே கடும் போட்டி நிலவுகின்ற போது ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் தெற்கு தேசியவாதம் பலமாக இருக்கின்ற நிலையில் சிங்கள வாக்குகள் அவர்களுக்கு குறைவு. அவர்கள் ஏனைய இனங்களின் வாக்குகளைத் தான் நம்பியிருக்கின்றார்கள். நாங்கள் இதில் இறுக்கமாக  நிற்போமாக இருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பேரம் பேசலுக்கு வரும். பேரம் பேசலுக்கு வருகின்ற பொழுது நாம் முதலாவது விருப்பு வாக்கை ஒரு தேசமாக இருக்கின்றோம் என்பதை வெளிக்காட்டுவதற்கும், அவர்கள் பேரம் பேச வந்தால் இரண்டாவது விருப்பு வாக்கை பேரம் பேசல் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கலாம் என்ற ஒரு சூழலை நாங்கள் உருவாக்கலாம்.பொதுவேட்பாளரை கொண்டு வருதனூடாகத் தான் நாங்கள் அதனை உருவாக்கலாம். எனவே இந்த ஜனாதிபதித் தேர்தலை எப்படி பேரம் பேசும்  அரசியலாக மாற்ற வேண்டும் என்பதையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். துரதிஷ்டவசமாக பொதுவேட்பாளர் என்ற சிந்தனை தமிழ் மக்கள் மத்தியில் பெரியளவிற்கு பேசுபொருளாக்கப்படவில்லை. அது பேசுபொருளாக்கப்படாததால் தமிழ் அரசியல் சக்திகளும் குழம்பியிருக்கின்றார்கள். முன்னேறிய பிரிவினரும் குழம்பியிருக்கின்றார்கள். மக்களும் குழம்பியிருக்கின்றார்கள். இந்த நிலைமையை மாற்றி சரியான தெளிவூட்டலை கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன்.

இன்று இருக்கின்ற மிகப்பெரிய கவலையான விடயம் என்னவென்றால் எமது அரசியல் சக்திகள் பின்னுக்குத்தான் இருக்கின்றன. அவர்கள் இந்த தேசிய செயற்பாட்டில் முன்னணி வகிப்பவர்களாக இன்று இல்லை. அதனால் தான் மக்கள் தாங்கள் தாங்களாகவே போராட்டத்தை நடாத்த வெளிக்கிடுகின்றார்கள். பொதுவாக அரசியலில் சொல்லப்படுவது தலைவர்கள் முன்னே மக்கள் பின்னே என்று. இன்று மாறி நடைபெறுகிறது மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே என்ற நிலைமை தான் இருக்கின்றது. இந்த நிலைமையிலே நாங்கள் மக்களுடைய போராட்டத்தை கையிலே எடுத்துக்கொண்டு இந்த அரசியற் கட்சிகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய நிலையை நோக்கி முன்னேற வேண்டிய தேவையும் இருக்கின்றது. ஆகவே இந்த விதமான நகர்வுகளை நடத்துவதனூடாகத்தான் அந்த விடயத்தில் நாங்கள் முன்னேறிச் செல்லலாம் என்று நான் நினைக்கின்றேன். ஆகவே பொதுவேட்பாளர் என்பது மிகவும் முக்கியமான விடயம்.

தமிழ் மக்கள் பேரவை இது தொடர்பாக ஆராய்வதற்காக இது தொடர்பாக பொதுக் கருத்தை உருவாக்குவதற்காகவும் ஒரு சுயாதீனக்குழுவை சிபார்சு செய்திருந்தது. அந்த சுயாதீனக்குழு பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக எல்லா அரசியல் கட்சிகளுடனும் கதைத்தது. ஆனால் அரசியல் கட்சிகள் போதியளவிற்கு ஒத்துழைக்கவில்லை. ஒத்தழைக்காத ஒரு சூழலில் பொது வேட்பாளர் என்ற முயற்சி என்பதை ஒரு முன்னேற்றத்திற்கு கொண்டுபோக முடியவில்லை.

இந்த நிலையில் தான் சிவாஜிலிங்கம் தன்னை ஒரு பொதுவேட்பாளராக நிறுத்தியிருக்கின்றார். சிவாஜிலிங்கம் தொடர்பாக நிறைய விமர்சனங்கள் இருக்கின்றது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். சிவாஜிலிங்கம் தொடர்பாக குருநாகலில்  தேர்தலில் போட்டியிட்டார். அவர் கிலாரி கிளின்டனின் வெற்றி வேண்டி நல்லூரில் தேங்காய் அடித்து கோமாளித்தனமாக நடந்து கொண்டார் என்ற விமர்சனங்களும் இருக்கின்றது. இது அவருடைய ஒரு பக்கம்.

அவருக்கு மறுபக்கமும் இருக்கின்றது என்பதை நாங்கள் மறுக்கக் கூடாது. சிவாஜிலிங்கம் வலுவான ஒரு தேசிய செயற்பாட்டாளர் என்ற ஒரு மறுபக்கமும் இருக்கின்றது. தலைவர் பிரபாகரனுடைய தாயார் மரணப்படுக்கையில் இருந்த பொழுது அவரை பராமரித்ததுடன் அவருடைய இறுதிச் சடங்கை முழுமையாக செய்து முடித்தவர். முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடக்கின்ற பொழுது அந்த ஒரு வாரகாலமாக எங்கேயெல்லாம் அழிவு நடந்ததோ அங்கேயெல்லாம் வாழைக்குற்றியை தன்னுடைய ஓட்டோவில் ஏற்றிக்கொண்டுபோய் வைத்து அஞ்சலி செலுத்துவார். இது அவருடைய தேசிய உணர்வைக் காட்டுகின்றது. விக்னேஸ்வரனுக்கு  எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்த பொழுது கடுமையாக எதிர்த்து அந்த நம்பிக்கையில்லாப்பிரேரணையை தடுத்ததில் சிவாஜிலிங்கத்திற்கு சரியான பாத்திரம் இருக்கின்றது. மாகாண சபையில் இனஅழிப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கு சிவாஜிலிங்கம் பிரதான காரணமாக இருந்தார்.  சிவகுமாரின் நினைவு தினத்தை கொண்டாட எல்லா கட்சிகளும் பயந்திருந்த வேளையில் சிவாஜிலிங்கம் முன் வந்து அந்த நிகழ்வை நடத்தினார். இவ்வாறான பக்கமும் சிவாஜிலிங்கத்திற்கு உண்டு.

ஒரு அரசியற் தலைமை வலுவாக இல்லாத நிலைமையில்  இப்படியான தீவிர செயற்பாட்ளர்கள் தனித்துத்தான் ஓடுவார்கள். இதனை தடுக்க முடியாது. வலுவான அரசியல் தலைமை வரும்போதுதான் நாங்கள் அவரை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். தனித்து ஓடும் போது நிறையத் தவறுகள் வரும். ஒரு குழுவாகச் செயற்படும் பொழுது தவறுகள் குறைவாக இருக்கும்.  அந்த வகையில் அவர் நிறையத் தவறுகள் விட்டிருக்கலாம். ஆனபடியால் அதனை பெரிதுபடுத்துவது இன்றைக்கு உகந்தது என்று சொல்லிவிட முடியாது.

அதைவிட தேர்தலைப் பொறுத்த வரையில் சிவாஜிலிங்கம் ஓரு குறியீடு மட்டும் தான். சிவாஜிலிங்கத்தை ஒரு குறியீடாக வைத்துக்கொண்டு தமிழ் தேசிய அரசியல் நியாயப்பாடுகளை எப்படி முன்நின்று செய்ய வேண்டும் என்பதைப் பற்றித் தான் நாங்கள் இங்கே யோசிக்க வேண்டும். இதில் தான் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

எல்லோரும் சொல்லுகிறார்கள் சிவாஜிலிங்கம் 2015 ஆம் ஆண்டிலும் கேட்டார் 2010 ஆம் ஆண்டிலும் கேட்டார் என்று. 2010 ஆம் ஆண்டு கேட்ட நிலைமைக்கும் இன்று கேட்கின்ற நிலைக்கும் இடையில் வித்தியாசம் இருக்கின்றது. அன்று பொதுவேட்பாளர் என்ற கருத்து  வளர்ச்சி அடையாத ஒரு காலம். போர் முடிந்திருந்த காலம். எல்லோரும் பயந்த நிலையில் இருந்த ஒரு காலகட்டம். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

இன்று சிவாஜிலிங்கம் ஒரு தமிழ் வேட்பாளராக இருக்கின்ற பொழுது அவர் பலவீனம் அடைவார் என்றால் தமிழ் தேசியமும் பலவீனமடையக் கூடிய சூழ்நிலைதான் வரும். வரும் தேர்தலில் சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குகளைவிட சஜித் பிரேமதாஸவிற்கும் கோத்தபாயவிற்கும் வாக்குகள் அதிகமாக இருந்தால் பலவீனப்படப்போவது சிவாஜிலிங்கம் அல்ல. பலவீனப்படப் போவது தமிழ் தேசிய அரசியல் தான்.

ஆகவே இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து நாங்கள் இதில் முன் மாதிரியாக நடந்து கொள்ள வேண்டிய தேவை ஒன்று இருக்கின்றது. மிக கவலையான விடயம் என்னவென்றால் இது தொடர்பாக அரசியல் தலைவர்களிடமும் புலமையாளர்களிடமும் ஒரு குழப்ப நிலைதான் இருக்கின்றது. அவர்கள் இந்த குழப்ப நிலைக்கு முடிவு கண்டு நாங்கள் முன்நோக்கிச் செல்வதற்கான மூலோபாயங்களை வகுத்து செயற்பட வேண்டியது அவசியமானது.

சிவாஜிலிங்கம் என்கின்ற பொதுவேட்பாளரை ஆதரிப்பதன் மூலம்  கோத்தபாயவை கொண்டு வரப்போகின்றனர் என்ற விமர்சனம் முன் வைக்கப்படுகின்றது. உண்மையில் கோத்தபாயவைவரவிடாமல் தடுக்க சஜித்துக்கு வாக்களிக்க நினைப்பதே தமிழ் அரசியலின் பலவீனம் என்று தான் சொல்ல வேண்டும். இன்று தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸாக்கு வாக்களித்தும் கோத்தபாய வெற்றியடைந்தால் என்ன செய்வது? கோத்தபாய வெற்றியடைந்தாலும் அதற்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் அரசியல் தயாராக வேண்டும். சிங்கள அரசியலில் அடிக்கடி இப்படி மாற்றங்கள் நடந்திருக்கின்றன. சிங்கள அரசியலுக்கு ஏற்ற மாதிரி நாங்கள் அரசியல் செய்ய முடியாது. சிங்கள அரசியலை எவ்வாறு கையாள்வது என்பதில் தான் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கோத்தபாய ஜனாதிபதயாக வந்து கட்டுக்கடங்காமல் அராஜகம் செய்வதற்கு இலங்கைத்தீவு உலகத்தைவிட்டு தனித்தீவாகவா இருக்கிறது. இலங்கைத்தீவு உலகத்தில் தான் இருக்கின்றது. உலகத்தினுடைய ஜனநாயக செயற்பாடுகளுக்கு இலங்கைத்தீவும் கட்டுப்படுத்தான் ஆக வேண்டும். இன்று வெள்ளை வான் வருவதற்கு இங்கு ஆயுதப்போராட்டமா நடைபெறுகின்றது. அரசியல் ரீதியாக ஜனநாயக ரீதியாகத் தான் நாங்கள் போராட்டங்களை நடத்துகின்றோம். அப்படி நாங்கள் நடத்துகின்ற போது  இப்பொழுது நடைபெறுகின்ற நிகழ்வுகள் தான் எதிர்வரும் காலத்திலும் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. தமிழ் மக்களின் ஆதரவோடு இருக்கின்ற நல்லாட்சி அரசாங்கம்தான் கன்னியாவிலையும் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோயிலடியிலையும் இவ்வளவு அராஜகங்களையும் நடத்தியது. அராஜகங்கள் தொடரலாம் தான். அப்படித் தொடருகின்றபோது அதற்கு முகங்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக வேண்டும்.

இதைவிட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைவிடவா இவர்கள் பெரிதாக அநியாயங்களைச்செய்து விடப் போகிறார்கள்? சிங்கள தேசத்தினுடைய அரசியல் என்பதே இன அழிப்புத்தான். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பது அவர்களுக்கு பிரச்சனை. அந்த அழிப்பு நடவடிக்கை அவர்கள் தொடர்ந்து செய்வார்கள் தான். அது எந்த அரசாங்கம் வந்தாலும் செய்யும். ஏனென்றால் அது சிங்கள அரசாங்கத்தின் முடிவில்லை. அது சிங்கள அரசின் தீர்மானம். சிங்கள அரசின் தீர்மானமாக இருப்பதால் எந்த அரசாங்கம் வந்தாலும் அதை செய்யும். அவர்கள் எங்களின் நிலத்தைப் பறிப்பார்கள், மொழியை அழிப்பார்கள், பொருளாதாரத்தை அழிப்பார்கள், கலாச்சாரத்தை அழிப்பார்கள், அங்கே ஒரு போராட்டத்தை நடத்தினால் அதை அழிப்பார்கள். இதற்கு எப்படி முகம் கொடுப்பது என்பதற்றாக தமிழ் மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரைக்கும் இன்றைக்கு அவர்களுக்கு சாதகமான காலகட்டம். இந்த பூகோள அரசியல் தொடர்ந்தும் தொழில்படத்தான் போகின்றது. அந்த பூகோள அரசியலில் சீன அணிக்கும் அமெரிக்க இந்திய மேற்குலகத்திற்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்து வரத்தான் போகின்றது. அந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் முக்கிய பங்காளிகளாக வரக் கூடியதான வாய்ப்புக்களும் சூழலும் இருக்கின்றது. ஆகவே இதைக் கையாள்வதன் மூலம் தமிழ் மக்கள் முன்னேறிச் செல்லவதற்கான ஒரு மார்க்கத்தை அவர்கள் கண்டுபிடித்து செயற்பட வேண்டும் என்று நினைக்கின்றேன்.

இந்த இடத்தில் குர்திஸ் மக்களின் போராட்டம் எங்களுக்கு நல்ல முன்னுதாரணம். ஈராக்கினுடைய நெருக்கடியை சமாளிப்பதற்காக அவர்கள் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து போரிலே அவர்களும் பங்குபற்றினார்கள். இன்று அமெரிக்க கைவிட்ட நிலையில் அவர்கள் சிரியா ஊடாக ரஷ்யாவுடன் உறவுகளைப் பேணுகின்றார்கள். உறவுகளைப் பேணி தங்களை தக்க வைக்கின்றார்கள். காலத்திற்கு ஏற்றவாறு உபாயங்களை வகுத்து அவர்கள் கையாளுகின்றார்கள். அதனூடாக தங்களுடைய குர்திஸ் தேசிய அரசியலை தக்கவைக்கின்றார்கள்.

எங்களுக்கிருக்கும் கேள்வி தமிழ்த் தேசிய அரசியலை எப்படி தக்க வைப்பது எப்படி என்பதுதான். அதை அழித்துவிட்டு போக முடியாது. இவ்வளவு காலமும் நடந்தது ஒரு அழிப்பு நடவடிக்கை. தமிழ் தேசிய நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசியலை முன் கொண்டு செல்வதற்கான ஒரு நடவடிக்கையைத்தான் இவ்வளவு காலமும் தமிழ் அரசியல் தலைமைகள் செய்திருக்கின்றன. இந்த நிலைமையை நாங்கள் மாற்ற வேண்டும். இன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வராவிட்டாலும் அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்காவிட்டாலும் எதிர்காலத்திலாவது தீர்வு கிடைப்பதற்கு தமிழ் தேசிய அரசியலை தக்க வைக்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். சுவரில்லாமல் எப்படி சித்திரம் வரைய முடியும்? தமிழ் தேசிய அரசியல் இல்லாமல் எதிர்காலத்தில் எப்படி தீர்வினைப் பெற முடியும்? தமிழ் தேசியத்தை சிதைத்துவிட்டு எப்படி தீர்வு பெற முடியும்? தமிழ் தேசிய அரசியலை தக்க வைக்கின்ற உபாயங்களை நோக்கி நகர்வது தான் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

சி.எஅ .யோதிலிங்கம்
 நிமிர்வு நவம்பர்   2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.