இலங்கை ஜனாதிபதிக்கு தமிழ் மக்கள் அளிக்க வேண்டிய பதில்
ஆசிரியர் பார்வை
புதிதாக பதவியேற்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசியல் ரீதியாக தனது நிலைப்பாட்டை பல தடவைகள் அறிவித்து விட்டார். இறுதியாக கடந்த 16.12.2019 அன்று பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து உரையாடும் போதும், "சமஷ்டி, அதிகாரப்பகிர்வு என்பன சரிவராது. சமஷ்டி, அதிகாரப்பகிர்வு என்பவற்றை கொடுப்பதாக கூறி சுமார் 70 வருடங்களாக தமிழ்மக்களை ஏமாற்றிய வரலாறு உள்ளது. பெரும்பான்மை மக்கள் விரும்பாத ஒன்றை எப்படிக் கொடுப்பது? அப்படிக் கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றக் கூடாது." எனக் கூறியுள்ளார்.
அபிவிருத்தி, பொருளாதாரம் சம்பந்தமான விடயங்களில் மட்டும் தான் உதவுவதாக வெளிப்படையாகக் கூறுகிறார் கோத்தபாய. பெரும்பான்மை மக்கள் விரும்பாத ஒன்றை எப்படிக் கொடுப்பது எனப் பல தடவைகள் கூறி விட்டார். இந்தியாவில் வைத்தும் கூறினார். இங்கும் கூறுகிறார்.
இலங்கைத்தீவில் உள்ள இனங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வும் சமாதானமும் முக்கியம். அவற்றைப் புறம் தள்ளிவிட்டு சிறிலங்கா ஜனாதிபதி நினைப்பது போல இலங்கையை பொருளாதார ரீதியாக முன்னேற்றி விடலாம் என நினைப்பது பகற்கனவே. இந்த உண்மையையே பொருளாதார அபிவிருத்தியடைந்த பல நாடுகள் எமக்கு படிப்பினையாக முன்வைக்கின்றன.
இலங்கையில் தமிழ்மக்களும் சிங்கள மக்களும் முஸ்லிம்களும் ஏனைய இனத்தவரும் பொருளாதார சுபிட்சத்தை அடைவதற்கு இனங்களுக்கிடையேயான அரசியற்தீர்வு அடிப்படையானது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை உள்ள தமிழ் மக்கள் அரசியல் அதிகாரம் இல்லாமல் இருக்கும் வரை இலங்கை பொருளாதாரத்தில் முன்னேற முடியாது. ஏனெனில் சிறுபான்மை இனங்களை அடக்குவதற்கான இராணுவ அடக்குமுறை நடவடிக்கைகளிலே நாட்டின் பொருளாதாரத்தின் பெரும் பங்கு வீணடிக்கப் படும். இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் ஒரு தேக்கநிலையிலேயே இருக்கும். இது இலங்கையைச் சுரண்ட அந்நிய சக்திகளுக்கு இலகுவான வாய்ப்புக்களை வழங்கி விடுகிறது.
தமிழ் மக்கள் அரசியல் அதிகாரம் வேண்டித்தான் பல தசாப்த காலமாக போராடி வருகிறார்கள். ஏராளமான தமிழ் இளையோர் இரத்தம் சிந்திப் போராடியதும் அதற்காகத்தான். தமிழ்மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருக்கிறது. அதனைப் பெற நாம் தொடர்ந்து முயற்சிப்போம் எனக் கூறியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்.
இலங்கைத்தீவை மையப்படுத்தி வல்லரசுகளுக்கு இடையில் நடக்கின்ற பூகோளப் போட்டியில் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படக் கூடிய நிலைமை தோன்றியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் உரிமை விடயங்களை நீர்த்துப் போகாமல் தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பது தொடர்பில் கூடியளவு கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தல்களை தமிழ்மக்களின் தொலைதூர அரசியல் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும். தேர்ந்தெடுக்கப் படும் பிரதிநிதிகளினூடாக அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் அரசியற் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும். எம்மக்கள் மத்தியில் ஏற்கனவே உள்ள சிவில் சமூக அமைப்புக்கள் தம்மைப் பலப் படுத்திக் கொள்ள வேண்டும். புதிதாக சிவில் அமைப்புக்கள் உருவாக வேண்டும். இந்த சிவில் அமைப்புக்கள் அனைத்தும் அரசியற்கட்சிகள் தடம்மாறாமல் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு பலம் பெற வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்களின் அடுத்த தலைமுறையாவது அரசியல் மற்றும் பொருளாதாரத் தேக்க நிலையில் இருந்து விடுபட்டு முன்னேறக்கூடிய தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது. அதற்கான அழுத்தங்களை சிங்கள அரசின் மீது உருவாக்க அரசியற் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் பாடுபட வேண்டும்.
செ.கிரிஷாந்
நிமிர்வு டிசம்பர் 2019 இதழ்
Post a Comment