அன்பான தமிழ் ஆண்களே!


தர்சிகா தனது கணவனுடன் 

தமிழ்ச் சமூகத்தில் விரவிக் கிடக்கும் ஆண்மைத்தனம் பல தமிழ் உயிர்களை அநியாயமாகப் பலி எடுத்திருக்கிறது. எடுத்துக் கொண்டும் இருக்கிறது.  தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைத் தேடும் அதே வேளை எமது சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும்.  அவ்வாறு செய்யாவிடின் அரசியல் விடுதலை கிடைத்தும் பொருளாதார முன்னேற்றம் கிடைத்தும் அவற்றை அனுபவிக்க ஒரு ஆரோக்கியமான சமூகம் இருக்காது. சமாதானத்துக்கான எமது நீண்டகாலப் போராட்டத்தில் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய மும்முனைகளிலும் எமது கவனத்தைச் செலுத்த வேண்டியது அவசியம்.

அந்த வகையில் கனடாவில் தமிழ் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த கிரிஷாந் தினேஷ்குமார் மற்றும் ஞானுசன் கிருஸ்ணபிள்ளை ஆகிய இரு இளைஞர்கள் எடுத்திருக்கும் முயற்சி முக்கியமானது.  அவர்கள் இருவரும் உலகெங்கும் உள்ள தமிழ் ஆண்களை விழித்து வெளியிட்ட அறிக்கையை இங்கே பிரசுரிக்கின்றோம்.

கனடாவில் தர்ஷிகா ஜெகநாதன் அவரது முன்னாள் துணைவனாற் கொலைசெய்யப்பட்டது தமிழ்ச் சமூகத்தில்பலரது இதயங்களைக் கனக்கச் செய்துள்ளது. அவரது உயிர் வன்முறையாகப் பறிக்கப்பட்டதற்கும், பாலினம் சார்ந்த வன்முறையாற் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படும், மற்றும் அதிலிருந்து தப்பிப்பிழைத்த பல தமிழ்ப் பெண்களிற்கும் நாம் எமது ஆழ்ந்த வருத்தத்தினையும், கவலையினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

2017 ஆம் ஆண்டு கனடாவிற் தனது அப்போதைய கணவனுடன் இணைந்த சில வாரங்களின் பின், அவனாற் தன் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை தொடர்பில் முறையிடுவதற்காகத் தர்ஷிகா பொலிசாரிடம் சென்றார். அதன் பின் அவரது கணவனிற்குத் தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன் பின் வந்த வருடங்களில், அவன் அத்தடை உத்தரவைப் பல தடவைகள் மீறியுள்ளான். இறுதியாகச் செப்டம்பர் 11 ஆம் திகதி அவன் அதை மீறியபோது, தர்ஷிகாவின்உயிர் அவனாற் பறிக்கப்பட்டது.

பெண் வெறுப்பு, நச்சு ஆண்மைத்தனம், தற்பாலினர் வெறுப்பு, திருநர்கள் மீதான வெறுப்பு மற்றும் பாலினம் சார்ந்த வன்முறை என்பன உலகளாவிய நோய்கள் என்ற போதிலும், அவை தமிழ்ச் சமூகத்தினுள் வலுவாக வெளிப்படுகின்றமை நிரூபிக்கப்பட்டுள்ளது.  துயர் நிறைந்த மரணங்களிற்கு வழிவகுத்த இவை அனைத்திற்கும் நாம் தீர்வுகாண வேண்டும். பாலினம் சார்ந்த வன்முறையானது தமிழ்ச் சமூகத்தினுள் நிலவும் ஓர் நெருக்கடியாகும். அதற்குத் துடிப்புடன் தீர்வுகாணத் தமிழ் ஆண்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

 கட்டாய இடம்பெயர்வு, இனப்படுகொலை, வன்முறை மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட இனவாதம் என்பவற்றின் காயங்கள் உள்ளிட்ட அமைப்புசார் பிரச்சினைகள் எமது சமூகத்தில் ஆழப் பரவியுள்ளன என்பதையும், அவை உள ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கின்றன என்பதையும் நாம் அறிந்துள்ளோம். ஆனால் தமிழ்ப் பெண்கள் அனுபவிக்கும் பாலினம் சார்ந்த வன்முறையின் வேர், பெண்கள் மீதான தமிழ் ஆண்களின் வெறுப்பாகும். இவ்வன்முறை அதிகரிப்பதற்கு எமது மௌனம் உதவியுள்ளது. நாம் இதற்கு உடந்தையாக இருப்பதனால், எம்மால் இது தொடர்பிற் செயற்பட முடியாது என்று அர்த்தமில்லை. எம்முள்ளேயும், எமது நட்பு வட்டங்களிடையேயும் உள்ள நச்சு ஆண்மைத்தனம் மற்றும் பெண் வெறுப்பு தொடர்பான நடத்தைகளை இனங்கண்டு, அவற்றை எம்மிலிருந்து நீக்குவதை நாம் எமது கடமையாகக் கொண்டு செயற்பட வேண்டும்.

பெரும்பாலும், பாலினவாதம் தொடர்பான கலந்துரையாடல்களை அடக்கவும், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களை வலுவற்றதாக்கவும், எமது தேசியப் போராட்டத்தையும், விடுதலை இயக்கத்தையும், "தமிழர் பண்பாட்டையும்” தமிழ் ஆண்கள் குறிப்பிடுகின்றனர், தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளின் வீரத்தையும், அச்சமின்மையையும் போற்றிப் பாராட்டும் அதே ஆண்களிடமிருந்து, ஆழ வேரூன்றிய பெண் வெறுப்பினைத் தமிழ்ப் பெண்கள் தொடர்ந்தும் எதிர்கொள்வது ஓர் முரண்நகையாகும். சாதி மற்றும் பாலினம் தொடர்பிற் சமத்துவத்தை வளர்த்தெடுப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப்பெரிய பாய்ச்சல்களை நிகழ்த்தியிருந்தாலும், இவ் எண்ணக்கருக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது நடமுறைப்படுத்தப்படவோ இல்லை. இன்று தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற நிறைந்துள்ள பெண் வெறுப்பு, நச்சுத்தன்மை, மற்றும் பாலினம் சார்ந்த வன்முறை என்பவை இதற்குச் சான்று பகரும்.

மேலும், எதேச்சையான பெண் வெறுப்பிற்கும், பாலினம் சார்ந்த வன்முறைக்கும் நேரடித் தொடர்பிருப்பதாக நாம் நம்புகிறோம். தமிழ்த் திரைப்படங்கள் முதல் பிரபலமான சமூக ஊடகக் கணக்குகள் வரை விரவிக் கிடக்கும், ஆண் திமிரை மேலுயர்த்தும், பெண்களின் ஆடை அல்லது நடத்தை குறித்த பண்பற்ற “பகடிகள்” பெண்களிற்கெதிரான தந்தைவழி மரபிலான வன்முறைகளைத் தக்கவைக்கின்றன. இவை சவாலிற்குட்படுத்தப்பட வேண்டும்.

எனவே, இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

தர்ஷிகாவின் கொலையானது நீண்ட காலமாக நிகழவேண்டியிருந்த ஓர் திருப்புமுனையின் தொடக்கப் புள்ளியாக அமையவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஏதாவதொன்று தீங்கானது, பாலினவாத ரீதியானது அல்லது நச்சுத்தன்மையானது என்று தமிழ்ப் பெண்கள் கூறும்போது, அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கும், அவர்களை நம்புவதற்கும் தமிழ் ஆண்கள் மேலும் முயலவேண்டும். எமது நடத்தை தீங்கு விளைவிப்பதாக அமையக்கூடிய வழிகளையும், அவ்வாறான நடத்தையின் மூலம் எம்மை நாமே காயப்படுத்திக்கொள்ளும் வழிகளையும் இளந் தமிழ் ஆண்கள் புரிந்துகொள்வதற்காக, அவை தொடர்பான வளங்கள் மற்றும் அறிவைக் கிடைக்கச் செய்வதலிருந்து நாம் அதனைத் தொடங்க விரும்புகிறோம்.

நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டிய முக்கிய பிரச்சினைகள்

நடத்தை கெட்டவளென அவமானப்படுத்துதல்; வரைவின்றிப் பாலுறவு வைத்துக்கொள்வதாகவோ, அல்லது பாலியல் ரீதியிற் தூண்டுவதாகவோ மதிப்பிடப்படும் நடத்தையில் ஈடுபடுவதற்காக ஒரு பெண்ணைக் களங்கப்படுத்துதல். இது தமிழ் ஆண்களிற்கு ஒருபோதும் நடப்பதில்லை.

கலாச்சாரக் காவல்: சுயமாக வரையறுக்கப்பட்ட, பெரும்பாலும் தொன்மையான (வழக்கொழிந்த) மற்றும் தந்தைவழி மரபில் வந்த, தமிழ்ப் பண்பாட்டின் அம்சங்களை வலிந்து நடமுறைப்படுத்துதல். இது தமிழ் ஆண்களிற்கு ஒருபோதும் நடப்பதில்லை.

பாதிக்கப்பட்டவர் மீது பழிசுமத்துதல்: ஓர் குற்றத்தினால் அல்லது ஏதாவது தவறான செயலினாற் பாதிக்கப்பட்டவர், அவரிற்கு ஏற்பட்ட தீங்கிற்கு அவரே முழுமையாக அல்லது பகுதியாக் காரணம் என்று பழிசுமத்தப்படுதல்.

சம்மதம்: ஓர் நபர், மற்றொருவரின் முன்மொழிவு அல்லது விருப்பத்திற்குச் சுய விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் இணக்கம் தெரிவித்தல்.

மேலும், தமிழ் ஆண்கள் ஆண்மைத்தனம் மற்றும் பெண்வெறுப்பு என்பவற்றை விலக்குவதாக தமது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையிற் பின்பற்றுவதாக உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கென ஒரு பட்டயம் அல்லது வழிகாட்டல்களை உருவாக்கவும், அவற்றை அவ்வப்போது புதுப்பிக்கவும் நாம் விரும்புகிறோம். இப்பட்டயம் தனிநபர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், அரசியற் குழுக்கள், செயற்பாட்டாளர் அமைப்புகள், விளையாட்டுக் குழுக்கள் மற்றும் மதக் குழுக்கள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளில் நிறுவனமயமாக்கப்பட வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம்.

இவ்வறிக்கையும், எமது செயற்றிட்டமும், தொடர்ச்சியான செயற்பாடொன்றில், நீண்டகாலமாகத் தேவையாகவிருந்த நடவடிக்கைகளின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்பதை நாம் அறிந்துள்ளோம். இப்பிரச்சினைகள் தொடர்பான உரையாடலை ஊக்குவிக்கவும், அவை தொடர்பிற் தமிழ் ஆண்களைப் பேசவைக்கவும், செயற்பட வைக்கவும் எம்மால் முடியும் என்று நாம் நம்புகிறோம். எல்லாத் தீர்வுகளும் எம்மிடம் இப்போது உள்ளதாக நாம் கூறவில்லை. இதற்கு நேரமும், தமிழ் ஆண்களும், சமூகத்திலுள்ள ஏனையவர்களும் இது தொடர்பில் உறுதியாக நிற்பதும் அவசியம் என்பதை நாம் அறிவோம். இன்னும் நிறையச் செய்யவேண்டியுள்ளது. அதற்கு ஆண்களும் இச்செயற்பாட்டில் பங்கெடுத்து, தமிழ்ப் பெண்களின் பல தசாப்த கால உழைப்பின் வழி அமைக்கப்பட்ட பாதையைப் பின்பற்றி முன்செல்ல வேண்டும்.

நிமிர்வு டிசம்பர்   2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.