இளம் விவசாயி கிரிசனின் இயற்கை விவசாயமும் ஆரோக்கிய இலைக்கஞ்சியும்
யாழ்ப்பாணம்அல்லைப்பிட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இயற்கை விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மகேஸ்வரநாதன் கிரிசன். எழுபதுக்கும் மேற்பட்ட விழிப்புணர்வுக் கண்காட்சிகளில் பங்கேற்று இயற்கை விவசாயம், வாழ்வியல் சார்ந்த விடயங்களை மக்கள் மத்தியில்தெளிவுபடுத்தியும் வருகிறார். இளம் விவசாயியான இவர் தான் சார்ந்த சூழல் குறித்து மிகவும் கரிசனை நிரம்பியவராக இருக்கின்றார். இங்குள்ள ஏனைய இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றார்.

இரண்டு வருடங்களுக்குமுன் யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் அல்லை விவசாயி இயற்கை விவசாய விற்பனை நிலையம் என்கிற பெயரில் சிறிய இயற்கை அங்காடியை ஆரம்பித்திருந்தார். அந்நிலையத்தை இலக்கம் 384, கஸ்தூரியார் வீதி (கஸ்தூரியார் வீதியும் நாவலர் வீதியும் சந்திக்கும் சந்தியில் இருந்து 50 மீற்றர் தூரத்தில்) என்கிற முகவரிக்கு தற்போது மாற்றியுள்ளார். அங்கு இயற்கையில் விளைந்த நஞ்சில்லாத மரக்கறிகள், உள்ளூர் உற்பத்திப் பொருள்கள் போன்றவற்றை விற்பனை செய்வதோடு, இலைக்கஞ்சி, மூலிகைத்தேநீர்  விற்பனை செய்யும்ஆரோக்கியமான உணவகமாகவும் மாற்றியுள்ளார். இந்த ஆரோக்கிய உணவகத்தில் நிறைபோசனையுடைய உணவான இலைக்கஞ்சியை பெற்றுக் கொள்ள முடியும்.

கிரிசனின் ஆரோக்கிய முயற்சிகள் குறித்து இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளர் வைத்திய கலாநிதி பிரபு நடராசா விளக்குகிறார், 

"கடந்த பத்து, இருபது ஆண்டுகளில் எங்கள் வாழ்க்கை முறைபல்வேறு மாற்றங்களைச் சந்தித்து இருக்கின்றது. அதுவும் 2009 க்குப் பின்னர் எங்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகவும் விரைவானதாக இருக்கின்றன.  அதிலும் எங்களது உணவுப் பாரம்பரியத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் தான் குறிப்பிடத்தக்கது. முன்பு கூட்டுக் குடும்பமாகஉறவுகள் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்தோம். வீடுகளில் சமைக்கப்படும் உணவும் மிகுந்தஆரோக்கியமானதாகவும் குழந்தைகளுக்கும் வயோதிபர்களுக்கும்   உகந்ததாகவும் இருந்தது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உணவுகள் உடலுக்கு ஆபத்தானவை. 

வடமாகாணத்தில் சிறுவர்களின் போசணைக் குறைபாடு 30 வீதத்துக்கு மேல் இருப்பதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. வளரிளம் பெண்கள், கர்ப்பிணித்தாய்மார்களில் இரும்புச் சத்துக் குறைபாடுஅதிகளவில் காணப்படுகின்றது. வயோதிபர்களும் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  எங்களது வாழ்வியல்முறையில் ஆரோக்கியத்திற்கு முக்கியமான இடம் இருந்தது. அதனை நாங்கள் இன்று தொலைத்திருக்கின்றோம். இந்த ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?  இதற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பானத்தையோ மேலைத்ததேய சத்து மா வகைகளையோ நம்பியிருக்கத் தேவையில்லை.

எம் ஊரிலேயே உடலுக்குத் தேவையான சத்துக்களையும் கனியுப்புக்களையும் கொண்ட இலை வகைகள் கிடைக்கின்றன. அதிலே இருந்து நாங்கள் பல்வேறுபட்ட ஆரோக்கிய உணவு வகைகளை உற்பத்தி செய்யக் கூடியதாக இருக்கும்.  ஆனால், அவ்வாறான உணவுகளை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்பது தான் எம் முன்னுள்ள கேள்வி. ஏனெனில் கூட்டுக் குடும்ப சூழல் இல்லாத சூழலில் இப்படியான ஆரோக்கிய உணவுகளை வீட்டில் தயாரிப்பதிலும் சவால்கள் உள்ளன. அத்தகைய ஒரு சூழலில் தான் இப்படியான ஒரு நல்வாழ்வுக்கான முயற்சியை கிரிசன் ஆரம்பித்து இருக்கிறார். 

முழுமையாக இயற்கை வழியில் விளைந்த எங்கள்பாரம்பரிய மொட்டைக் கறுப்பன் அரிசியையும் எமது சூழலில் கிடைக்கும் 10 ற்கும் மேற்பட்ட இலைவகைகளையும் பயன்படுத்தி தயாரித்து வருகிறார்.  எமது இளையோருக்கும் வருங்கால சந்ததியினருக்கும் ஆரோக்கியமான உணவை அறிமுகப்படுத்தும் ஆரம்ப முயற்சியே இதுவாகும். இந்த முயற்சியால் நிச்சயம்ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்." 

இலைக்கஞ்சிக்கு தேவையான மொட்டைக்கறுப்பன் அரிசியையும் அல்லைப்பிட்டியில் உள்ள தனது வயலில் இயற்கை முறையைப்பயன்படுத்தி உற்பத்தி செய்கிறார். வல்லாரை, பொன்னாங்காணி, கங்குன், தூதுவளை, அகத்தி, பசளி, முசுட்டை, முடக்கொத்தான், முருங்கை இலை என எமது சூழலில் கிடைக்கும் மூலிகை சார்ந்த இலைகளையும் பயன்படுத்தி இலைக்கஞ்சியை தயாரித்து வருகிறார். மொட்டைக் கறுப்பன் அரிசி, பத்துக்கும் மேற்பட்ட இலைவகைகள், தேங்காய்ப்பால், பயறும் சேர்க்கப்பட்டு மண்சட்டியில் இலைக்கஞ்சி தயாரிக்கப்படுகின்றமை இன்னும் சிறப்பானது.

சிறியவர் முதல் பெரியோர் வரை இதனைஅருந்தலாம். குறிப்பாக கர்ப்பிணித் தாய்மாருக்கு இது மிகச் சிறந்த உணவாகும். ஏனெனில் குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு தேவையான இரும்பு, கல்சியம் போன்ற பல போசனைப் பொருள்கள் இந்த இலைக்கஞ்சியில் உள்ளன. தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மிகச்சிறந்த உணவுகளில் ஒன்று இந்த இலைக்கஞ்சி என மருத்துவர்களே பரிந்துரைத்துள்ளனர்.

இலைக்கஞ்சி தொடர்பிலான விழிப்புணர்வு சமூகத்தில் அதிகரித்து வருவதால் யாழ்நகரத்தில் இருந்து மட்டுமல்ல,தூர இடங்களில் இருந்தும் வந்தும் இலைக்கஞ்சியைவாங்கிச் செல்கின்றனர். இலைக்கஞ்சியை எம் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்த பல்வேறு சவால்களையும் கிரிசன் எதிர்கொள்கிறார். கண்காட்சிகளில் இலைக்கஞ்சி பற்றியவிழிப்புணர்வு செய்வதால் ஓரளவு மக்கள் இலைக்கஞ்சியை நாடி வரும் சூழல் உள்ளது. இதனையும் விட நேரடியாக கொண்டு சென்று மக்களிடத்தில் சேர்ப்பித்து வருகிறார். அத்தோடு யாழ்நகர பகுதிகளில் பல ஊழியர்கள் வேலை செய்யும் வர்த்தக நிறுவனங்கள்,வங்கிகளுக்கும் நேரில் சென்று இலைக்கஞ்சியை விநியோகித்து வருகின்றார். ஆரம்பத்தில் இவரின் முயற்சிகளை ஏளனமாக பார்த்தவர்கள் கூட இப்போது வியப்புடன் பார்க்கின்றனர்.

கிரிசனுடன் மக்களுடனான அனுபவங்கள் குறித்து கேட்ட போது,

அண்மையில் இடம்பெற்ற எண்டர்பிரைஸ் சிறீலங்கா கண்காட்சியிலும் இலைக்கஞ்சியை மக்கள் விழிப்புணர்வுக்காக வைத்திருந்தேன். கண்காட்சி நடந்த நாட்களில் 200 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் எமது கூடத்திற்கு வருகை தந்தனர். ஆனால், ஒருவர் கூட இலைக்கஞ்சியை ஆரோக்கியமானது என சொல்லி கொடுத்தும் குடிக்கவில்லை. பின்னால் அவர்களது கணவர்மார்கள் மேற்கத்தைய குளிர்பான போத்தல்களுடன் நின்றிருந்தார்கள்.  இலைக்கஞ்சி குறித்த அறியாமையே அதற்கு காரணமாகும்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு கண்காட்சிகளிலும் இலைக்கஞ்சியை விநியோகித்த போது எமது தமிழ் பிள்ளைகள் ஒரு கப்பை வாங்கி மூன்று பேர் பங்கிட்டு குடித்தனர். ஆனால், பல சிங்கள பிள்ளைகள் ஆர்வமாக கேட்டு  வாங்கி குடித்தனர். பலர் மூன்று கப் வரை வாங்கி குடித்தனர். சிங்கள பிரதேசங்களில் இலைக்கஞ்சி குறித்த போதிய விழிப்புணர்வும் தமிழ் பகுதிகளில் விழிப்புணர்வு பெரிதாக இல்லை என்பதனை அனுபவ ரீதியாக அறிந்து கொண்டேன். இதன் பின் மக்களிடம் நேரடியாக வீடுவீடாக, நிறுவனங்கள், கடைகளுக்கு நேரடியாக கொண்டு சென்று விநியோகிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்தேன். 

எனது இலைக்கஞ்சியை தொடர்ந்து 2 வார காலம் அருந்தியவர்கள் தங்கள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதனை    என்னிடம் நேரே சொல்லியிருக்கிறார்கள். சந்தோசமாக உள்ளது. மேற்கத்தைய குளிர்பானம், தேநீர் போன்றவற்றை அடிக்கடி அருந்தியவர்கள்அதனை குறைத்து இலைக்கஞ்சியை அருந்தும் போது இரத்தத்தில் சீனியின்  அளவு குறைந்திருப்பதனை அனுபவமூடாக சொல்கின்றனர்.

வயதான பாட்டி ஒருவருக்கு நேரில் சென்று வீட்டில் இலைக்கஞ்சியை விநியோகித்து வந்தேன். அவர் இப்போது தனக்கு மூட்டு வலிகள் குறைவாக இருப்பதாக கூறுகிறார். இலைக்கஞ்சியில் முடக்கொத்தான் உட்படபல ஆரோக்கிய இலைகள் சேர்ப்பதால் மூட்டு வலிகள் குறைய வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் மக்களை தேடி சென்று தான் குடிக்க கொடுக்கிறேன். இப்போது எனது அல்லை விவசாயி ஆரோக்கிய உணவகத்துக்கு 15 கிலோமீற்றர் தூரத்தில்இருந்தும் தேடி வருகின்றார்கள்.

ஆரோக்கிய உணவான இலைக்கஞ்சியை மக்களிடம் கொண்டு சென்று மீண்டும் எமது பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்களை மக்கள் மத்தியில் பரப்புவதே என் நோக்கமாகும். என்றார்.

துரித உணவுக்கலாச்சாரம் எமது இளையோர்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் இன்றைய நிலையில் ஆரோக்கிய இலைக்கஞ்சியையும் அதன் மகத்துவத்தையும் இளையோரிடையே பரப்பி வரும் கிரிசனின் தற்சார்பு முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். அல்லை இளம் விவசாயியான கிரிசனின் தளராத இயற்கை வாழ்வியலை நோக்கியதான முயற்சிகள் நிச்சயம் எம் சமூகத்தில் பாரிய மாற்றத்தை கொண்டு வரும்.


துருவன்
நிமிர்வு டிசம்பர்   2019 இதழ்  


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.