தேசியவாதம் - பொருளாதாரம்
தேசிய இனமொன்று சுயாட்சி கோருவதாயின் தனக்கென கட்டமைக்கப்பட்ட அரசியல், சமூகம், பொருளாதாரம், தாயகம் என்பவற்றுக்கு உரித்துடையதாக இருக்க வேண்டும். கடந்த இதழ்களில் அரசியல், சமூகம் பற்றி பார்த்தோம். இந்த இதழில் பொருளாதாரத்தை பார்ப்போம்.
ஓர் இனத்தின் வளர்ச்சியிலும் - அழிவிலும் பொருளாதாரத்தின் தாக்கம் மிக அதீதமானது. நாட்டின் முதுகெலும்பாக மட்டுமின்றி ஓர் இனத்தின் முதுகெலும்பாகவும் விளங்குவது பொருளாதாரமே.
ஈழத் தமிழினம் தொடர்ச்சியாகத் தனக்கென பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. அது காலத்துக்குக் காலம் தன்னைத் தகவமைத்து வலுப்படுத்தியது. பொதுவாக தமிழரின் பொருளாதாரம் விவசாயப் பொருளாதாரமாகவே காணப்பட்டது - இன்றும் காணப்படுகின்றது.
ஐரோப்பிய ஆட்சியாளர்களின் குறிப்பாக பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் சேவைத் துறையில் தமிழர்கள் அதிகளவில் ஈடுபட்டனர். ஆங்கிலத்தைக் கற்று அரச சேவையில் அமர்ந்தார்கள். அக்காலத்தில் அரச பணிகளை அதிகம் வகித்தோர் தமிழர்களே. சுதந்திரத்தின் பின்னரும் குறிப்பாக 1960 களிலும் இதே நிலையே நீடித்தது. 1956 இல் 'சிங்களம் மட்டும்’ சட்ட ஏற்பாட்டைத் தொடர்ந்து மேலோங்கிய பேரினவாத சிந்தனையால் தமிழர்களின் அரசுப் பணி கனவு தகர்ந்தது. உயர் பதவிகளில் திறமை உடையோருக்கும் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன.
இக்கால கட்டங்களில், வடக்கு - கிழக்கில் சில தொழிற்சாலைகள் எழுந்தன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, மட்டக்களப்பு கடதாசித் தொழிற்சாலை, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை எனக் கைத்தொழில் வளர்ச்சியடைந்தது. இதனால், இளைஞர், யுவதிகளுக்கு அதிக வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன. இதுதவிர பல தொழில் முயற்சியாளர்களும் வடக்கு - கிழக்கில் இருந்தனர்.
ஆனால், பின்னாளில் 1972 இல் அமைந்த சிறீமாவோ பண்டாரநாயக்கவின் அரசு தமிழர்களின் அத்திபாரத்திலேயே கை வைத்தது. பல்கலைக்கழக அனுமதியில் இனப்பாகுபாடு ரீதியிலான தரப்படுத்தலை நடைமுறைப்படுத்தியது. இன ரீதியிலான தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை நோக்கித் திரும்பினர்.
இவ்வாறு யுத்த வழிக்கு இளைஞர்கள் திரும்பிய அதேவேளை ஒருபகுதியினர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய, அமெரிக்கா, அவுஸ்ரேலிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். சுமார் நான்கு தசாப்தங்கள் நீடித்த போரால் பல இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் உறவுகளுக்காக பணம் அனுப்பத் தொடங்கினர். ஏக காலத்தில் தொழில் வாய்ப்புக்களைப் பலர் இழந்தனர். அதேவேளை அவர்களால் வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபடவும் முடியவில்லை. காலப்போக்கில் ஈழத் தமிழினம் தங்கியிருப்பு பொருளாதாரத்தில் சிக்கியது.
போர்க் காலத்திலும் - போர் முடிவுற்ற காலத்திலும் புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிய பணத்தில்தான் தாயக உறவுகள் உயிர்வாழ்ந்தன. இதனால் அரசுக்கும் கணிசமான அந்நியச் செலாவணி கிடைத்தது. ஆனாலும் இந்தத் தங்கியிருப்பு பொருளாதாரத்தில் இருந்து தமிழ் மக்கள் இன்னமும் மீளவில்லை. இந்நிலையில் புலம்பெயர் உறவுகளின் உதவி என்பது படிப்படியாகக் குறைந்து வருகிறது. காலப்போக்கில் - இன்னமும் 10 ஆண்டுகளில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் உதவி பெருமளவு நின்றுபோய்விடும். ஆனால், இதை எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் எமது பொருளாதாரக் கட்டமைப்புகள் இல்லை என்பதே கசப்பைத் தருகிறது.
தங்கியிருப்பு பொருளாதாரத்தில் தமிழர்கள் சிக்கியிருந்தாலும் அவர்கள் தமது உடலுழைப்பைக் கைவிடவில்லை. ஆனால், அது இனத்தின் பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கக்கூடியது இல்லை. மேலும், விவசாயத்தை முன்னெடுக்கவும் தமிழினத்தால் முடியாது போனது. தமிழர் தாயகத்தில் முகாம்கள் அமைத்து நிலைகொண்டுள்ள இராணுவம் விவசாய நிலங்களையே அதிகளவில் ஆக்கிரமித்து நிற்கிறது. நிலத்தின் உடைமையாளர்கள் குந்த ஓர் நிலமின்றி அலைகையில், இராணுவம் விவசாய உற்பத்திகளில் ஈடுபட்டு அவற்றை உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்து தமிழரின் மூலாதாரத்தையே அசைத்தது - இன்றும் அசைக்கிறது.
ஒருபுறம் இராணுவம் உள்ளூர் சந்தைகளை ஆக்கிரமித்து நிற்க, இதுபோதாது என்று தம்புள்ளவில் இருந்து மரக்கறி கொண்டு வரும் தென்னிலங்கை வியாபாரிகளும் வடக்கின் பணத்தை கொண்டு செல்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, அடிக்கடி படையெடுக்கும் தென்னிலங்கை வியாபாரிகள், தமிழர் கடல் பரப்பில் வலைபோடும் தென்னிலங்கை மீனவர்கள், தமிழரின் வாடிகளை ஆக்கிரமித்து கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் தென்னிலங்கையர்கள் எனப் பலரும் வடக்கில் சுற்றோட்டத்துக்கு வரவேண்டிய பணத்தைக் கொண்டு சென்று விடுகிறார்கள். இது வடக்கின் பொருளாதாரத்தைப் பதம் பார்த்து விடுகிறது.
இதேபோலவே மீன்பிடித்துறைமுகங்கள் மற்றும் சில முக்கிய மீன்பிடிப் பகுதிகள் முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. மீன்பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் சில இன்றும் தொடர்கின்றன. சிறு படகுகள், வள்ளங்கள் மூலம் மீன்பிடித் தொழில் இடம்பெற்று வரும் நிலையில், தமிழரின் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள், தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி வருகின்றனர். வாரக்கணக்கில் கடலில் தங்கி நின்று மீன்பிடிக்கும் வசதி வாய்ப்புகளுடன் வரும் இவர்கள் தடை செய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி தமிழரின் மீன் வளங்களை அள்ளிச் செல்கின்றனர். இது தமிழரின் பொருளாதாரத்தை அழிப்பதுடன், இலங்கையின் வளத்தையும் அழிக்கிறது.
இலங்கையின் பணப் பயிர் தேயிலை என்றால் தமிழர்களின் பணப் பயிர் புகையிலைதான். போதைப் பொருளை ஒழிக்கிறேன் எனக் கிளம்பிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020 இல் புகையிலைப் பயிரை ஒழிக்க திடசங்கற்பம் பூண்டிருந்தார். இது சாத்தியமா என்றசர்ச்சை ஒருபுறம் தொடர்ந்தாலும், நம் நாட்டுப் பணத்தை அந்நிய நாட்டுக்கு கொண்டு சென்று சேர்க்கும் சிகரெட்டுக்கு தடை விதிக்காமல் நமக்கு, அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் புகையிலைக்கு விதிக்கப்படும் தடை தமிழரின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளிவிடும். இதேபோலவே, பனங்கள் மீதான தடைகளும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலம் தமிழரின் பொருளாதாரத்தை ஒரு ஆட்டு ஆட்டுவிப்பதிலேயே கடந்து போனது. புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ இந்தத் தடைகள் குறித்து கவனமெடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும், தென்னிலங்கை வியாபாரிகளின் அத்துமீறலால் வடக்கு - கிழக்கு வியாபாரிகளின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்புக்களை - வீழ்ச்சியை சந்தித்து நிற்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பிரதேச சபைகளுக்கு உள்ள போதும் அவை, பொறுப்பற்று நடக்கின்றன.
இதுதவிர, உள்ளூர் தொழில் உற்பத்திகளிலும் தென்னிலங்கைப் பெருநிறுவனங்கள் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. உள்ளூர் உற்பத்திகளின் தரம் குறித்து மக்களால் குறைகள் முன்வைக்கப்பட்டாலும் அதிக முதலீடுகளை செய்ய முடியாத நிலையிலேயே இந்த முதலீட்டாளர்கள் உள்ளனர். போரால் பாதிக்கப்பட்டு பண இழப்பை சந்தித்து நிற்கும் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு விசேட உதவித் திட்டங்களோ அல்லது தரமான உற்பத்திகளுக்கான பயிற்சிகளோ போதியளவில் கிடைக்கவில்லை. அவர்களுக்கான வங்கிக் கடன் வசதிகள் குறைந்த வட்டி வீதங்களில் வழங்கப்பட்டாலும்கூட அவற்றைப் பெற்று மீளக் கட்டும் நிலையில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் இல்லை.
இதைவிட, வடக்கு - கிழக்கில் சுற்றுலாத்துறை முன்னேற்றம் கண்டு வருகின்ற போதிலும், தென்னிலங்கை பெருநிறுவனங்களே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்நிறுவனங்களுக்கே முன்னுரிமை - சலுகைகள் வழங்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு போதிய அதிகாரங்கள் இல்லை என்பதுடன் அந்த மாகாணங்களுக்கு அதிகாரங்களும் இல்லை என்பதால், தென்னிலங்கை நிறுவனங்கள் மத்திய அரசின் - அமைச்சர்களின் ஆசியுடன் பல பெரும் தொழில்களில் ஈடுபடுகின்றன. தமிழருக்குச் சொந்தமான இயற்கை வளங்களை அள்ளிச் செல்கின்றன. இவற்றால் தமிழர்களுக்கு பொருளாதார இழப்புக்கள் மட்டும் ஏற்படவில்லை. வள சுரண்டல்களும் அழிவுகளும் இடம்பெற்று வருகின்றன. இது எதிர்காலத்தில் தமிழரின் பொருளாதாரத்தில் மட்டுமின்றி, இலங்கையின் பொருளாதாரத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தாகும்.
ஏற்கனவே யுத்தத்தால் தமிழரின் பொருளாதாரம் பெரும் பங்கு அழிவடைந்த நிலையில், இப்போது மீளத் தனது பொருளாதாரத்தை கட்டமைத்து வரும் நிலையில், அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் புறக்கணிப்பு - வேலை வாய்ப்பில் தமிழ் இளைஞர், யுவதிகள் புறமொதுக்கப்படல் - தொழில் முயற்சிகளில் பாதிக்கப்பட்டோருக்குப் போதிய உதவித் திட்டங்கள், பயிற்சி நெறிகள் கிடைக்காமை - விவசாய நிலங்கள், கடற்பரப்புக்கள் முப்படைகளின் கட்டுப்பாட்டில் இருத்தல் - விவசாய உற்பத்திப் பொருட்களில் தென்னிலங்கை, இராணுவத்தினரின் போட்டிகள் - சுற்றுலாத்துறையில் பெருநிறுவனங்களின் போட்டி, அவற்றுக்குக் கிடைக்கும் மத்திய அரசின் ஆசி - தமிழர்களின் பணப் பயிர் மற்றும் பனங்கள் மீதான கட்டுப்பாடுகள் தென்னிலங்கை, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள், தென்னிலங்கை நிறுவனங்களின் வளச் சுரண்டல்கள் போன்றவற்றால் தமிழர் பொருளாதாரம் மேலும் சரிவைச் சந்தித்து வருகின்றது.
தமிழரின் பொருளதாரம் மீளக் கட்டமைக்கப்பட வேண்டுமானால், தமிழரின் பொருளாதார உற்பத்திகள் மீதான கட்டுப்பாடுகள் விலக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகளுக்குப் பதிலாக நவீன தொழில்நுட்ப நிறுவனங்களை வடக்கு - கிழக்கில் அரசு ஏற்படுத்த வேண்டும். விவசாய உற்பத்திகளில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும். தென்னிலங்கை மீனவர்களுக்கு நிகராக தமிழர் பிரதேசங்களிலும் உதவித் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும், தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதிகள், பயிற்சிகளை வழங்க முன்வர வேண்டும். முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய நிலங்கள், மீன்பிடித் தளங்கள் விடுவிக்கப்பட வேண்டும். தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வளச்சுரண்டல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்து நிற்கும் வடக்கு, கிழக்கு மாகாணத்தை முன்னேற்ற விசேட செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இனவிரோத சக்திகள் மிகுந்துள்ள இந்த ஆட்சிக் காலத்தில் இவை சாத்தியமா? தமிழரின் - வடக்கு, கிழக்கின் பொருளாதாரம் மீளக் கட்டியெழுப்பப்படுமா?
ஐங்கரன்
நிமிர்வு டிசம்பர் 2019 இதழ்
Post a Comment