அரசியல் தீர்மானமெடுத்து அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்
தமிழ் அரசியல் கைதிகள் 95 பேர் இன்னமும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்த பின்பும் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் இருப்பதால் அவர்களின் குடும்பங்கள் நிம்மதியான வாழ்க்கையை இழந்துள்ளன. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையும் உள்ளது.
ஜனாதிபதி கோத்தபாயவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று அரசியல் கைதிகளின் விடுதலையாகும். ஆனால் அண்மையில் கிறிஸ்தவ மதகுருமார்களைச் சந்தித்த கோத்தபாய நீதிமன்ற நடைமுறைகளின் படி தான் அவர்களை விடுவிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல்கருத்து தெரிவித்துள்ளார்.அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் அந்தக் கோரிக்கையை இதுவரைக்கும் தெற்கின் பெரும்பாலான சிங்கள சமூகம் ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழ்நிலையே இருக்கிறது. ஆனால், தற்போது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஞானசார தேரர் கூறியுள்ளார்.மேலும் அவர்களின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனை ஞானசார தேரருக்கு வந்தது வரவேற்கதக்க விடயமாகும். இந்த சிந்தனை அனைத்து தெற்கு சமூகத்தினரிடமும் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.இது ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய அரசியல் சார்ந்த பிரச்சினையாகும். இந்த அரசியல் சார்ந்த பிரச்சினையை அரசியல் ரீதியாகவே நோக்க வேண்டும். இதனை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பார்க்கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கையாக இருக்கின்றது.
எனினும் ஆணைக்குழுக்கள் நியமிப்பது ஒரு கண்துடைப்பு செயலாகும். கடந்த காலங்களில் எத்தனையோ ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் எந்த அரசாங்கத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாகத்தான் நாங்கள் கருதுகின்றோம்.
போர் முடிவுக்கு வந்த பிற்பாடு ஆயிரக்கணக்கான போராளிகளை புனர்வாழ்வளித்து விடுவித்தோம் என மார்தட்டுகிறது ராஜபக்ச அரசு. அரசியல் தீர்மானமொன்றினை எடுத்து கூடிய விரைவில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடாகும்.
நிமிர்வு டிசம்பர் 2019 இதழ்
Post a Comment