நிலைபேறான உணவு




இயற்கை வழி இயக்கத்தினரின் ஏற்பாட்டில் பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்ற  நிலைபேறான உணவு உற்பத்தியில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்  தொடர்பான (நிலைபேறான யாழ்ப்பாணம் – climathon jaffna) சர்வதேச நிகழ்வுகள் 2019 ஐப்பசி மாதம் 24,25,26 ஆகிய தினங்களில் இடம்பெற்றன.

சர்வதேசம் எங்கும் கிளைமதோன் நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கையில் முதன்முறையாக அதுவும் யாழ்ப்பாணத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றமை சிறப்புக்குரியதாகும். பாடசாலை மட்டத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த‘சிறகுகள்’ அமையமானது கட்டுரை, சித்திரம் மற்றும் விவாதம் போட்டிகளை கிளைமத்தோன் நிகழ்வை முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்தார்கள். இதனால் இம்முயற்சி இளையோர் மட்டத்தில் பரவலாக அறியப்பட்டது.

சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பணிகளை முன்னெடுத்துவரும் பசுமைச் நிழல்கள், பசுமைச் சுவடுகள், ஒளடதம், பூவன் மீடியா, Zero Plastic Forum, வல்லமை ஆகிய அமைப்புகள் இம்முயற்சியை மக்கள் மட்டத்தில் எடுத்துச் செல்லக் கைகொடுத்ததன் மூலம் இம்முயற்சி கிராமங்கள் வரை எடுத்துச் செல்லப்பட்டது.

இது தொடர்பில் காரைநகர் இளம் விவசாயிகள் கழக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நிரோஜன் அவர்களிடம் கேட்ட போது, யாழ்ப்பாணத்தில் குறிப்பாக நெற்செய்கையில் கூடுதலான இரசாயனங்கள் பாவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அன்று தொட்டு காரைநகரில் நெற்செய்கையில் இரசாயனப்பாவனை குறைவாகவே இருந்து வருகின்றது. ஏனெனில் இன்றும் 75 வீதத்துக்கும் அதிகமானோர் மொட்டைக்கறுப்பன் என்கிற பாரம்பரிய நெல் இனத்தைத்தான் பயிரிட்டு வருகின்றனர். குறித்த பாரம்பரிய இனத்துக்கு இயற்கை பசளைகளே போதுமானது.      தற்போது காரைநகரில் 30 ஏக்கரில் இயற்கை வழியில் நெல் பயிரிடப்பட்டு வருகின்றது. அதனை நாங்கள் 2028 இல் 420 ஹெக்டேயர் (கிட்டத்தட்ட 1000 ஏக்கர்) ஆக உயர்த்த வேண்டும் எனும் கருதுகோளோடு இயங்கி வருகின்றோம்.

இங்கு நெல்லை பயிரிடும் விவசாயிகள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலில் தான் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.விவசாயிகளுக்கு தொழிநுட்ப ஆலோசனைகளையும்,  வசதிப்படுத்தல்களையும் செய்து கொடுக்கும் நோக்கோடு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக் கிழமைகளில் பல்வேறு  விழிப்புணர்வு செயற்றிட்டங்களையும் துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்கேற்போடு நடாத்தி வருகின்றோம்என்று தெரிவித்தார்.

 காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையின் கரையோர மற்றும் விவசாய மூலவளங்களில் ஏற்படும் சேதம், இந்த நூற்றாண்டின் இறுதியளவில் நாட்டின் பொருளாதாரத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியாவுக்கான காலநிலை மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள் இன்னமும் விவசாயம், கால்நடை உற்பத்தி, உள்நாட்டு மீன்பிடி போன்ற மழைவீழ்ச்சியை நம்பிய வருமான மூலங்களில் தங்கியிருக்கிறார்கள் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின், அறிவு முகாமைத்துவம் மற்றும் நீடித்த அபிவிருத்திக்கான துணைத் தலைவர் பிந்து லொஹானி தெரிவித்துள்ளார்.ஆகவே, கடுமையான காற்றின் அதிகரிப்பு, வறட்சி மற்றும் மழைவீழ்ச்சி முறைகளில் ஏற்படும் மாற்றம் ஆகியவை அவர்களது உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தெற்காசியாவில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் அதனை தகவமைத்துக்கொள்ளுதலை மதிப்பிடல் என்ற தலைப்பிலான அந்த அறிக்கை, வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய 6 நாடுகளின் பொருளாதாரம் 2050 இல் 2 வீதத்தால் பாதிக்கப்பட்டு, 2100 இல் அது 9 வீதமாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

தற்போதைய பூகோள போக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால், 2050 இல் இலங்கை தனது வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 வீதம் வீழ்ச்சியை காணும் என்றும் நூற்றாண்டின் இறுதியில் அது 6.5 வீதமாக அதிகரித்துவிடும் என்றும், ஆனால், உரிய தகவமைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டால், அதனை 1.4 வீதமாக குறைத்துவிடலாம் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

இந்த நூற்றாண்டின் இறுதியில் இலங்கையின் வெப்பநிலை 3 வீதத்தால் அதிகரிப்பதுடன், நெற்பயிர்ச்செய்கை வறட்சியால் பாதிக்கப்படும் நிலைமை அதிகரிக்கும்.2080 அளவில் தாழ்நாட்டு உலர்வலயங்களில் விளைச்சல் மூன்றில் ஒரு பங்கினால் வீழ்ச்சி அடையும்.அந்த நாட்டின் பரந்துபட்ட கரையோரப் பிரதேசத்தில், மீன்பிடிக்கு கணிசமான பாதிப்பு ஏற்படுவதுடன், கடுமையான அலைகள், நீர் மட்டம் உயர்தல் ஆகியவற்றால் கரையோர உயிர் தொகுதியும் பாதிக்கப்படும்.

உயிர் காவிகள் மூலம் பரவுகின்ற டெங்கு போன்ற நோய்கள் அண்மைக்காலமாக இலங்கையில் அதிகரித்துக் காணப்படுகின்றன. 2090 ஆம் ஆண்டளவில் அந்த நோயாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 353000 வரை அதிகரிக்கும். இரண்டாயிரம் பேர்வரை இறப்பார்கள். என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிமிர்வு டிசம்பர்   2019 இதழ்  


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.