ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகள்




ஜனாதிபதி தேர்தலின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்...

ஜனாதிபதித் தேர்தல்கள் வெளிப்படுத்துகின்ற உண்மைகள் என்ன?
நாடு இனரீதியாக பிரிந்திருக்கின்றது. வாக்களிப்பு அதிகம் நடந்த இடமும் தமிழ்ப்பகுதிதான் . UNP  க்கு அதிகம் வாக்களித்ததும் தமிழ் பகுதிதான். இதை நாங்கள் UNP  ற்கு வழங்கப்பட்ட வாக்கு என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. கூட்டமைப்பு கேட்டு வழங்கப்பட்ட வாக்கு என்றும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் இங்கே ஒரு கட்சி சொல்லி அதன் ஆதரவாளர்கள் அதனைக் கேட்டு வாக்களித்தது என்றில்லை.
எல்லாரிடமும் இனரீதியான ஒரு சிந்தனைதான் இருந்தது. ராஜபக்ஸக்கள் ஒருவரும் வரக்கூடாது என்பது ஒன்று. இரண்டாவது கடந்த ஐந்தாண்டுகளாக அனுபவித்த கொஞ்ச ஜனநாயக வெளியும் இல்லாமல் போகக்கூடாது என்ற ஒரு பயம். ஒருவகையில் பழிவாங்கல் வாக்கு. அல்லது பயவாக்கு. இது யாரும் சொல்லி அவர்கள் போடவில்லை. கிட்டத்தட்ட கடந்த பத்தாண்டுகளாக இந்த வாக்களிக்கும் மனோநிலை புதுப்பிக்கப்படாமலே இருக்கின்றது. கூட்டமைப்பு இதற்கு உரிமைகோர முடியாது. கூட்டமைப்பு கேட்க முதலே சனம் முடிவெடுத்து விட்டது.

போன முறையும் இப்படித்தான் செய்தது. அதற்கு முதல் முறையும் இப்படித்தான் செய்தது. கூட்டமைப்பு மட்டுமல்ல இன்று பார்த்தால் யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் வவுனியாவில் மஸ்தான் கிழக்கில் வியாழேந்திரன், பிள்ளையான், கருணா எல்லோரும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்ச்சாரம் செய்தார்கள். ஆனால்  அவர்களுடைய ஆதரவாளர்கள் அவர்கள் சொன்னதைக் கேட்கவில்லை. அவர்களுடைய ஆதரவாளர்களே இன ரீதியாக சிந்தித்து ராஜபக்ஸ எதிர் அலைக்குள் மூழ்கி வாக்களித்திருக்கின்றார்கள். இதில் குறிப்பிட்ட கட்சியின் வாக்கு வங்கியே தேய்ந்து போயிருக்கின்றது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் அப்படி இருக்காது.

ஜனாதிபதித் தேர்தல் என்பது நாடு முழுவதற்குமானது. இது ஒரு இனரீதியிலான பொது சன வாக்கெடுப்பாக பயன்படுத்தலாம் என்று நாங்கள் பொது வேட்பாளர் விடயத்தில் சொன்னது இதுதான். இதில் இனரீதியாக தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களித்திருக்கின்றார்கள். சில ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் விமர்சகர்கள் கொழும்பு பத்திரிகைகளில் கூறுகிறார்கள் இது ஒரு ஜனநாயக ஈடுபாடு (democratic engagement) என்று. அது வெளிப்படையான உண்மை. ஆனால் அது இனரீதியாக வாக்கு இல்லை, ஏனென்றால் தமிழ் மக்கள் ஒரு சிங்கள வேட்பாளருக்கே வாக்களித்தார்கள் என்று கூறுகிறார்கள். அது உண்மை இல்லை. தமிழ் மக்கள் ஒரு சிங்கள வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதுதான் சரி.

தமிழ் மக்களுக்கு இங்கே நாங்கள் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்வைத்திருக்கவில்லை. தெரிவு இருக்கவில்லை. சிவாஜிலிங்கம் ஒரு பொதுவேட்பாளராக தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. அவர் ஒரு தனி வேட்பாளராகத்தான் இருந்தவர். ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு தெரிவு இல்லாமல் போய்விட்டது. அதனால் தமிழர்கள் ஒரு சிங்கள வேட்பாளருக்கு எதிராக இன்னொரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்தார்கள என்பதுதான் சரி.

மட்டக்களப்பில் ஒருவிடயம் நடந்தது.முஸ்லீம்களுக்கு எதிராக தமிழ் உணர்வுகளைத் தூண்டி அதனை வைத்து அப்படியே தாமரை மொட்டுக்கு தமிழரின் வாக்குகளைத் திருப்பிவிடுவதற்கு முயற்சித்தார்கள். அதிலும் கூட தமிழ் மக்கள் சரியான விழிப்பாக இருந்திருக்கிறார்கள். தங்களுக்குள் இருக்கக்கூடிய சிறிய இனங்கள் தொடர்பாகவும் அவர்கள் யோசிக்கவில்லை. தமிழ் திரட்சி என்ற அடிப்படையில் அவர்கள் வாக்களித்திருக்கின்றார்கள். இதில் ஒன்று தெரிகிறது. தமிழ் மக்கள் ஒரு திரட்சியை காட்டியிருக்கின்றார்கள். தமிழ் மக்கள் திரட்சியாக இருக்கின்றார்கள். ஆனால் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தான் பிரிந்துபோய் நிற்கின்றார்கள்.

கிட்டத்தட்ட நான்குக்கு மேற்பட்ட நிலைப்பாடுகள்  ஜனாதிபதித் தேர்தலில் இருந்தன. ஜனநாயகத்தில் பல்வகைமை இருக்கின்றது. ஆனால் மக்கள் திரண்டிருக்கும் போது ஏன் இந்தக் கட்சிகள் பிரிந்திருக்கின்றன என்ற ஒரு கேள்விக்கு நாங்கள் விடை காண வேண்டும். இந்த திரட்சியை சரியான வகையில் கையாள எங்களுடைய அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. தாம் சொல்லித்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்று ஒரு கட்சி சொல்லப்பார்க்கின்றது. இன்னொரு கட்சி பகிஸ்கரிப்புக் கேட்டு அது தோல்வி. இன்னொரு கட்சி யாருக்கென்று சொல்ல முடியாது என்று சொல்லியது.

இந்த நிலையில் தமிழ் மக்கள் திரண்டிருக்கின்றார்கள். இது ஒரு முக்கியமான செய்தி. சிங்கள மக்களும் திரண்டிருக்கின்றார்கள். ஆனால் அதில் சிங்கள பௌத்த மக்கள் வாக்குகள் மட்டும் திரண்டது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சிங்கள கத்தோலிக்க வாக்குகளும் தாமரைமொட்டை நோக்கி போயிருக்கலாம். அங்கே  சிங்கள மக்கள் மத்திலும் ஒரு திரட்சி நடந்திருக்கின்றது. மகிந்த ராஜபக்ஸக்கள் பெற்ற வாக்குகளுக்கு தெற்கின் தமிழ் முஸ்லீம் மக்களின் வாக்குகளும் போயிருக்கலாம் என நம்பப்படுகின்றது. துல்லியமான புள்ளிவிபரத்தை பகுத்து பார்த்தால் தான் தெரியும். வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் அதிகபட்சம் சஜித்திற்குத்தான் போட்டிருப்பார்கள். ஆனால் தென்னிந்திலங்கையில் முஸ்லீம்கள் முழுக்க சஜித்துக்குபோட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது. அங்கே பார்த்தால் தெட்டம் தெட்டமாக தாமரை மொட்டுக்கும் விழுந்திருக்கின்றது. தென்னிலங்கை முஸ்லீம்கள் ஒரு தற்காப்பு நிலைநின்று சமயோசிதமாக யோசித்து வாக்கை பிரித்து போட்டிருக்கலாம் போல்  தெரிகிறது. முஸ்லீம் வாக்குகள் என்று தனிக்கணக்கெடுப்புச் செய்தால் தான் இதனைக் கண்டு பிடிக்கலாம்.தென்னிலங்கைப் பகுதியில் முஸ்லீம்கள் தமிழ் வாக்குகள் என் நாங்கள் திரட்சியாக கண்டு பிடிப்பது கடினம்.

மலையகத்திலும் இதே நிலைமைதான். மலையகத்தில் அந்த மக்கள் இனரீதியாகத்தான் சிந்தித்திருக்கின்றார்கள். இது ஒன்றும் புதிது அல்ல. போன தேர்தலின் போது தமிழ் மற்றும் முஸ்லீம் மலையக மக்கள் ஒரு திரட்சியாகத்தான் வாக்களித்தார்கள். அவர்களும் ஒரு திரட்சியாகத் தான் இருக்கின்றார்கள். ஒன்று திரட்டக்கூடிய ஒரு பெரும் தலைவர் இல்லை என்பதுதான் இங்கே பிரச்சனை.

மக்கள் திரட்சியை சரியானபடி ஆற்றுப்படுத்த வேண்டும். இந்த திரட்சியில் நிறைய விமர்சனத்திற்குரிய பகுதிகள் இருக்கின்றது. இது பயத்தினாலையும் பழிவாங்கலினாலையும் வந்த திரட்சி.கடந்த பத்தாண்டுகளாக இப்படித்தான் இருக்கின்றது. அதனை நாங்கள் புதுப்பிக்காமல் இருக்கின்றோம் என்பதுதான் பிரச்சனை. இதனை புதுப்பிக்க வேண்டுமென்றால் இதனை ஒரு தேசிய திரட்சியாக மாற்ற வேண்டும். அதற்கு தலைவர்கள் தேசியம் பற்றிய சரியான விழிப்போடு வேலை செய்ய வேண்டும்.

இலங்கைத்தீவில் நிலைமாறுகாலநீதி பொறிமுறை தோல்வியடைந்து விட்டது என எடுத்துக் கொள்ளலாமா?

நிலைமாறுகாலநீதி கடந்த ஐப்பசி மாத கால குழப்பத்தோடு அநாதையாகிவிட்டது. நிலைமாறுகாலநீதியை அநாதையாக்கியதற்கு ரணில் மைத்திரி அரசாங்கத்திற்கும் பங்கிருக்கின்றது.அவர்கள் தாங்கள் பெற்ற குழந்தையை தாங்களே கைவிடத் தொடங்கிவிட்டார்கள். அதிலும் மைத்திரி ஐப்பசி ஆட்சிக்குழப்பத்தில் 2015 ஆட்சி மாற்றத்தின் விளைவுகள் அனைத்தையும் கவிழ்த்துக் கொட்டிவிட அதோடு பெரும்பாலும் நிலைமாறுகால நீதி குப்பைத்தொட்டிக்குள்  போய்விட்டது. ஆனாலும் அரசிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் இடையிலான உடன்படிக்கை என்கிற  அடிப்படையில் அதனால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கின என்ற அடிப்படையில் அது குற்றுயிரோடை கிடந்தது.

இனி அதற்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டது. கோத்தப்பாய ராஜபக்ஸ மிகத் தெளிவாக சொல்லியிருந்தார். அந்த 30/1 தீர்மானத்தை தான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று. அவர் முதன் முதலாக  தன்னுடைய பரிவாரங்களோடு வந்து ஏற்பாடு செய்த அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் அதைச் சொல்லுகின்றார். அவர் சொன்னதை மேலதிகமாக ஜீ.எல் .பீரிஸ் விரித்து சொல்லுகின்றார். இந்த உடன்படிக்கை எங்களுக்கு உடன்பாடில்லை. இது முன்னைய அரசாங்கம் செய்தது. நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை என்று. அதேமாதிரி வீரகேசரிக்கு தேர்தலுக்கு சில நாட்கள் முன்னுக்கு மகிந்தராஜபக்ஸ வழங்கி ஒரு பேட்டியிலையும் அவர் ஒரு விடயம் சொல்லுகின்றார். முன்னைய அரசாங்கம் செய்த உடன்படிக்கைகளை நாங்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று.

உண்மையில் ராஜீய நடைமுறையின்படி அப்படி சொல்லமுடியாது. அரசாங்கம் தான் எப்பொழுதும் உடன்படிக்கைகள் செய்யும் என்பது உண்மைதான். அரசு அதனை செய்யாது. அரசு மாறாமல் அப்படியே இருக்கும். அரசாங்கம் தான் மாறிக்கொண்டே இருக்கும். அரசாங்கம் தான் அரசை பிரதிநிதித்துவம் செய்யும். மாறுகின்ற அரசாங்கம் தான் உலகத்தோடையும் ஏனைய நாடுகளுடனும் உடன்படிக்கை செய்யும். அது அரசிற்கும் அரசிற்குமான உடன்படிக்கையாயும் அரசிற்கும் அனைத்துலக நிறுவனத்திற்குமான உடன்படிக்கையாயும் தான் கருதப்படும். அரசாங்கம் செய்த உடன்படிக்கை என்பதால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று நாங்கள் சொல்ல முடியாது. அப்படி என்றால் உலகத்தில் ஒரு உடன்படிக்கையுமே செய்ய முடியாது.அரசுகள் மாறாதவை அரசாங்கம் மாறிக்கொண்டே இருக்கும். .

நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கு ரணில் - மைத்திரி அரசாங்கம் முழு அளவிற்கு முயற்சி செய்யவில்லை. இப்பொழுது அதனை கிழித்து எறிகின்ற நிலைமைக்கு வந்துவிட்டது. அப்படி ஒரு நிலைமை வந்தால் இன்னொரு அடிப்படைப் பிரச்சனை வரும் நிலைமாறுகாலநீதிக்கு கீழே தான் மாவீரர்நாள் அனுட்டிப்பு போன்ற நினைவு கூர்தல்கள் எல்லாமே வரப்போகின்றன.கிட்டத்தட்ட 25 ற்கு குறையாத பொறுப்புக்களை அந்த 30/1 தீர்மானத்தின்படி இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அதில் ஒரு பகுதி அரையும் குறையுமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. பிரதானமான பகுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்துலக அல்லது கலப்பு  விசாரணைப் பொறிமுறை உள்ளிட்ட நிறைய பிரதான விடயங்கள் போர்குற்றங்கள் தொடர்பான பிரதான விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகமும் கூட விமர்சனத்திற்குள்ளாகியிருக்கின்றது. நிலைமாறுகாலநீதிக்குரிய தீர்மானத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று கோதபாய ராஜபக்ஸ சொல்லுவாராக இருந்தால் தமிழ் மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் பொறுப்புக் கூறமாட்டார் என்று பொருள். நிலைமாறுகால நீதி என்பது கோட்பாட்டு ரீதியாகவும் பிரயோகத்திலும் பொறுப்புக்கூறல்தான். ஆகவே அவர் பொறுப்புக் கூறமாட்டார் என்று தெரிகிறது. அவர் யாருக்கு பொறுப்புக் கூறப் போகின்றார் என்று அடுத்த கேள்வி இருக்கின்றது. இலத்திரனியல் ஊடகத்தில் அவருக்கு கவர்ச்சியான ஒரு விளம்பரத்தில் தேசத்திற்கு பொறுப்புக் கூறும் தலைவர் என்ற வார்த்தை திரும்ப திரும்ப பயன்படுத்தப்பட்டது. தேசத்திற்கு பொறுப்புக் கூறுவது என்பது சிங்கள பௌத்த பெரும் தேசியவாதத்திற்குத் தான் பொறுப்புக் கூறப் போகின்றார். தனக்கு வாக்களித்த மக்களுக்குத்தான் பொறுப்புக் கூறப் போகின்றார். றூவன்வெலி சாயவிவில்  பதவியேற்றதும் அதைத்தான் காட்டுகின்றது. ஒரு இராணுவத் தளபதியை பாதுகாப்புச் செயலராக நியமித்ததும் அதனைத் தான் காட்டுகின்றது. அப்படி பார்க்கும் பொழுது அவர் யாருக்கு பொறுப்புக் கூறுவார் யாருக்கு பொறுப்புக் கூறமாட்டார் என்பதை தெளிவாக சொல்லிவிட்டார்.

இது ஐநா வோடு முரண்படக் கூடிய ஒரு இடம். ஆனால் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படுவதில்லை. தேர்தல் வாக்குறுதிகள் சட்டபூர்வமான ஆவணமும் அல்ல. அது வாக்குறுதி மட்டுமே. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பெரும்பாலும் ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழும் அரசியல்வாதிகள் அதை ஒரு கடமையாக எடுத்துக் கொள்வதில்லை. இது இலங்கைத் தீவிற்கும் பொருந்தும். சிங்கள பௌத்தவாக்குகளை திரட்ட வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட ஒரு வாக்குறுதியாக அது இருக்குமாக இருந்தால் ராஜபக்ஷக்கள் இதில் சுதாகரிப்புக்கு போகக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு. நினைத்தபாட்டில் இவர்களால் ஐநாவை நிராகரிக்க முடியாது. அப்படி உடன்படிக்கைகளை முறிப்பார்களாக இருந்தால் ஐநாவுடனும் மேற்கு நாடுகளுடன் முட்டுப்பட வேண்டியிருக்கும். ஐநாவால் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு கொண்டுபோய்விடும். ஆகவே அவர்கள் நினைத்தமாதிரி அந்த உடன்படிக்கையை முறிக்கவுமியலாது. அதிலிருந்து வெளியேறவும் இயலாது.

அவ்வாறாயின் பொறுப்புக்கூறலின் நிலை என்னவாகும்?

ஐநா மனிதஉரிமை அவை என்பது தன்னை ஏற்றுக்கொள்ளாத ஒரு அரசாங்கத்தின்மீது பொருளாதார தடையை விதிக்கவோ அல்லது அதற்கு எதிரான வேறுஏதாவது நடவடிக்கையை எடுக்கவோ சக்தியற்றது. இது சக்தி அற்றதாக இருந்தபடியால் தான் கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ் மக்களால் ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தது.  அழுத்தம் கொடுப்பது என்றால் ஐநா பொதுச்சபை அல்லது பாதுகாப்புச் சபையிடம் போக வேண்டும். கிட்டத்தட்ட இலங்கை தமிழர் விவகாரம் மனிதஉரிமை விவகாரமாக மனிதஉரிமைப் பேரவைக்கு பெட்டி கட்டப்பட்டு விட்டது என்ற விமர்சனத்தை நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக முன் வைக்கின்றோம்.  அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் சக்தி மனிதஉரிமை பேரவைக்கு இல்லை. திரும்ப இந்த பிரேரணையை கொண்டுவந்த சக்தி மிக்க நாடுகள் தான் அந்த அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டிவரும். அதைக்கூட பொருளாதார தடை அல்லது வேறுமாதிரியான அழுத்தங்களுக்கு ஊடாக செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அவர்கள் அதைச் செய்வார்களோ தெரியாது.

கடந்த பத்தாண்டுகளாகவும் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஐநாவில் தீர்மானங்களை கொண்டு வந்தது அதிகபட்சம் மேற்கு நாடுகளும் அமெரிக்காவும்.  ஜனாதிபதி கோத்தபாய உட்பட சரத்பொன்சேகா, பசில் ராஜபக்ஸ இவர்கள் எல்லோருமே அமெரிக்காவின் இரட்டை பிரஜைகளாக அப்பொழுது இருந்தார்கள். இந்த போர்க்குற்றங்கள்  என்ற வகையில் நடவடிக்கையில் விசுவாசமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு நாடுகள் விரும்பியிருந்தால் அந்த முயற்சியில் முதலாவதாக இரட்டை பிரஜைகளை விசாரணை செய்திருக்க வேண்டும். அவர்கள் அதனைச் செய்ய வில்லை. அந்த  இரட்டை பிரஜைகள் தொடர்பில் எதையுமே விசாரிக்காமல் ஐநாவில் ஒரு தீர்மானத்தை அவர்கள் கொண்டு வருகின்றார்கள் என்று சொன்னால் தமிழ் மக்கள் விளங்க வேண்டிய விடயங்கள் இதில் நிறைய இருக்கின்றன.

பொறுப்புக்கூறலை செயற்படுத்த தமிழர் தரப்பு என்ன மூலோபாயங்களை வகுக்க வேண்டும்?

ஏற்கனவே தமிழர்களிடம் ஒரு மூலோபாயமும் இல்லை.  பாதிக்கப்பட்ட மக்கள் 1000 நாட்களுக்கு மேலாக வீதியோரத்திலிருந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நிறைய போராட்டங்கள் மங்கிப் போய் விட்டன. காணிக்கான போராட்டம், கேப்பாபிலவு போராட்டம், முள்ளிக்குளம் போராட்டம் என்பன மங்கிப் போய்விட்டன. நிறைய போராட்டங்களை கைவிடப்பட்டுவிட்டன. இப்பொழுது காணாமலாக்கப்பட்டோர் போராட்டம் மட்டும்தான் நடைபெறுகின்றது. போராட்டங்கள் தொடர்பாக தமிழ் கட்சிகளிடம் சரியான பார்வையில்லை. இதனை அடுத்த கட்டத்துக்கு   எப்படி முடுக்கி விடுகின்றது என்பதில் எந்தவிதமான தெளிவும் தமிழ்கட்சிகளிடம் இல்லை. இவற்றை வழிநடத்தக்கூடிய அரசியல் செயற்பாட்டு இயங்கங்களும், மக்கள் இயக்கங்களும்  இல்லை. இது ஒரு துயரம்.

கோத்தபாய வருகையின் பின்னர் சர்வதேசத்தின் போக்கு எப்படி இருக்கும் என நினைக்கின்றீர்கள்?

அவர் வரமுன்னரே பிரதான ஊடகங்கள் அவர் பற்றிய பயமுறுத்தல் செய்திகளைத் தான் அதிகம் வெளியிட்டன. அவர் வரப்போகின்றார் என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. தடுக்க முடியாது என்றும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவே வந்திருப்பவரோடு எப்படி சுதாகரிக்கலாம் என்றுதான் அவர்கள் யோசிப்பார்கள். இறந்த காலத்திலிருந்து பாடம் பெற்றிருப்பார்களாக இருந்தால் ராஜபக்ஸக்களின் முதலாவது ஆட்சி போல இந்த ஆட்சி இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் போன முறை தாங்கள்விட்ட தவறுகளை உணருவார்களாக இருந்தால் அவர்கள் பெருமளவிற்கு அனைத்துலக தரப்போடு தங்களை சுதாகரித்துக் கொள்ளககூடிய வாய்ப்புக்கள்தான் அதிகம் இருக்கின்றன. அதற்கான வேலைகள் அவர்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்க முன்னரே மகிந்த ராஜபக்ஸவும் நாமலும் டில்லிக்கு போய் வந்தார்கள். இப்பொழுதும் அவர்களது முதலாவது விருந்தினராக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தான் வந்திருக்கின்றார். அவர்களுடைய முதலாவது விஜயமாகவும் இந்தியாதான் இருக்கிறது. அப்படி பார்க்கின்ற பொழுது அவர்கள் இந்தியாவோடு சுதாகரிக்கப் பார்க்கின்றார்கள். 2009 ஆம் ஆண்டு எவ்வாறு இந்தியாவையும் சீனாவையும் அவர்கள் சமமாக கையாண்டு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றார்களோ அதே அணுகு முறையில் அவர்கள் போகக்கூடிய வாய்ப்பிருக்கின்றது. அவர்கள் பிழைத்த இடம்  சீனாவை நோக்கி கூடுதலாக  சாய்ந்ததுதான். அதில் அவர்கள் ஒரு சமநிலையை கொண்டு வருவார்களாக இருந்தால்  இந்தியாவோ மேற்கு நாடுகளோ பெரியளவில் பிரச்சனைப்படாது என்பது முதலாவது.

சீனாவிடமிருந்து அவர்கள் எவ்வளவு தூரம் விலகி வரலாம் என்ற பிரச்சனையும் இருக்கின்றது. சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்கிவிட்டது இரண்டாவது. மூன்றாவது விடயம் அமெரிக்கா இந்தியாவிற்கு ஒரு பயம் இருக்கின்றது. சீனாவின் வியூகத்திற்குள் இருந்த மாலைதீவுகளை போன ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் ஒரு மாதிரி வெளியில் எடுத்துவிட்டவை. இலங்கை அந்த வியூகத்திற்குள் போய்விடுமோ என்ற பயம் வந்துவிட்டது. ஒரு நாட்டை கழட்டி எடுக்க இன்னொரு நாடு அப்பொறிக்குள் போகின்றது. இது அவர்களைப் பொறுத்தவரை பிராந்திய ரீதியான ஒரு சவால். ராஜபக்ஸக்கள் மீது இருக்கும் போர்க் குற்றச்சாட்டை அவர்கள் ஒரு பிடியாக பயன்படுத்திக்கொண்டு அவர்கள் மீது அழுத்தத்தை பயன்படுத்தக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. சோபா உடன்படிக்கை மில்லேனியம் சலஞ் இது இரண்டும் சர்ச்சையாக இருக்கின்றன. மில்லேனியம் சலஞ் ஒரு நிதி. கோத்தபாய அபிவிருத்தி மைய அரசியலைக் கதைக்கின்றார். அவருக்கு நிதி அவசியம். அதனால் அவர் நிதியை நோக்கி அமெரிக்காவிடம் போகலாம். மில்லேனியம் சலஞ் உடன்படிக்கையை ஏற்கனவே முன்னைய அரசாங்காத்தால் பரிசீலிக்கபட்டு சில கட்டங்களுக்கு நகர்ந்து வந்துவிட்டது. மைத்திரிபாலசிறிசேன அதை நிறுத்தி வைத்தவர். இவர்கள் ஒரு சில மாற்றங்களோடு அதை ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால் முதல் கட்டமாக இவர்களுக்கும் மேற்கு நாடுகளுக்குமான அந்த பதற்றம் குறையும். இரண்டாவது  சோபா உடன்படிக்கை தொடர்பிலும் ஒரு சமரசத்திற்கு போக முடியுமாக இருந்தால் இவர்கள் மேற்கோடும் தங்களை சுதாகரித்துக் கொள்வார்கள். இந்தியாவோடு ஏற்கனவே சுதாகரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால் தமிழர் கைவிடப்படும் ஆபத்தும் உண்டு.

உலகெங்கும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆளும் போக்கு அதிகரித்து வரும் போக்கு குறித்து?

சமூக வலைத்தளங்களின் பெருக்கம் காரணமாக வலதுசாரி இலட்சியங்கள் தான் முன்நோக்கி வருகின்றது. இதற்கு சமூக வலைத்தளங்களும் ஒரு காரணம். சமூக வலைத்தளங்கள் எப்பொழுதும் சாமானியர்களுக்கு அரங்கு வைத்துக் கொடுக்கும். அது நிபுணர்களைப் பின் தள்ளும்.  சாதாரண பொது மகனின் சிந்தனை என்பது இனம் சார்ந்து மதம் சார்ந்து சாதி சார்ந்து  சமூகம் சார்ந்து இப்படித்தான் இருக்கும். அவற்றை சமூக வலைத்தளங்கள் பரவலாக்குகின்றன. இதன்போது சாதாரண மக்களின் உணர்வலைகள் மேலும் பரவலாகும் நிலை ஒன்று இருக்கின்றது. இதனால் சமூகவலைத்தளங்களை வெற்றிகரமாக  கையாளுகின்ற தலைவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. டுவிட்டர் ஸ்தாபகர் கூறினார் இதனை நிறுவியதன் நோக்கம் கருத்துக்கள் சரியானபடி பரவ வேண்டும் என்று. ஆனால் இது கடைசியாக    ட்ரம்பை கொண்டு வந்து விட்டடுவிட்டது.  அதேமாதிரி மோடியை பார்த்தால் கிராம மட்டங்களில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த ஐடி துறையை சேர்ந்த இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சியின் கிளைகளுக்குள்ளாலேயே அவர்களுக்கு சம்பளத்தை வழங்கி ஒரு வலையமைப்பை வைத்திருந்தார். அதுதான் போன தடவை வெற்றிக்கு காரணம் என்று ஆய்வுகள் சொல்லுகின்றது.

இனி என்ன நாடக்கும்?

ஒரு சிறிய அமைச்சரவை வந்திருக்கின்றது. அது தனக்குரியதை செய்யும். கோத்தபாயவிடம் இராணுவத்தனம் இருக்கின்றது. முடிவுகள் அதிரடியாக இருக்கும். காரியங்கள் வேகமாக இருக்கும். வழமையான அலுவலகங்களில் இருக்கக் கூடிய தடைகள் இல்லாமல் சில விடயங்களை செய்யப் பார்ப்பார்கள். மற்றும்படி நாங்கள் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. எங்கே மாற்றம் வரப்போகின்றது என்றால் அவர் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் முன்னைய ஆட்சிக்காலத்தில் விட்ட அதே தவறுகளை இந்த முறையும் விடுவாரா இல்லையா என்பது. இரண்டாவது பொறுப்புக்கூறல் அதுவும் வெளிநாட்டுக் கொள்கையையோடு தான். பொறுப்புகூறல் தொடர்பில் என்ன முடிவை எடுக்கப்போகின்றார்கள் என்பது முக்கியம். இனப்பிரச்சனையும் அந்த பொறுப்புக்கூறலுக்குள்  தான் வரப்போகின்றது. எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்பாகத்தான் இருக்கின்றன.

சிறிய தீவை சீனமயப்படுத்தியது ராஜபக்ஸக்கள். சீனமயமாதல் என்பது போரின் விளைவு. போருக்கு உதவி செய்யப்போய்தான் சீனா அவர்களை நோக்கி நெருங்கி வந்தது. சீனமயமாதல் என்பது இலங்கைத்தீவைப் பொறுத்த வரையில் போரின் விளைவுகளில் ஒன்று. இலங்கைத் தீவு சீனமயமாகிவிட்டது. சீனமயமான இலங்கைத்தீவை சீன செல்வாக்கிலிருந்து  எப்படி குறைப்பது என்பதுதான் மேற்கு, இந்தியா இரண்டு நாடுகளினுடையதும் பிரச்சனை. ஆனால் இங்கே ஒரு சிக்கல் இருக்கின்றது.

இனப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று சொன்னால் மேற்கோடும் இந்தியாவோடையும் சுதாகரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஒரு பெரும் தமிழ்ச் சமூகம் தமிழ் நாட்டில் இருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் மேற்கு நாடுகளில் இருக்கின்றார்கள். அப்படி பார்க்கின்ற பொழுது இரண்டு சமூகத்திற்குரிய குரலும் அந்த அரசாங்கங்களுக்குள் ஏதோவொருகட்டத்தில் எதிரொலிக்கும். அந்த அரசாங்கங்கள் இந்த இரண்டு சமூகத்தையும் மீறி முடிவெடுப்பது சில வேளைகளில் பிரச்சனையாக இருக்கும். சீனாவிற்கு அது பற்றி பிரச்சனை இல்லை. சீனாவில் அப்படி பலம் வாய்ந்த தமிழ் சமூகம் இல்லை. சீனாவில் மனித உரிமைகளை  மதிப்பதுமில்லை. எனவே சீனா மனித உரிமை என்ற நிபந்தனைகளோடு உதவிகளை வழங்காது. ஆனபடியால் அவர்களுக்கு அது பிரச்சனை இல்லை. ராஜபக்சக்கள் சீனாவை நோக்கி போவதற்கான வாய்ப்புத்தான் இருக்கின்றது.

பொறுப்புக்கூறல் என்ற பிரச்சனை மேற்குக்குத் தான் இருக்கின்றது.  பொறுப்புக்கூறல் தேவை இல்லை என்றால் சீனாவை நோக்கி போகலாம். சீனாவை நோக்கி நீங்கள் போனால் திருப்பி மேற்கும் இந்தியாவும் நெருங்கும். இனப்பிரச்சனையை நீங்கள் தீர்ப்பதென்றால் பொறுப்புக் கூற வேண்டும். பொறுப்புக் கூற வேண்டின் நீங்கள் மேற்கையும் இந்தியாவையும் நோக்கித் தான் போக வேண்டிவரும். அப்பொழுது தமிழ் மக்களை கையாள அவர்கள் முற்படுவார்கள். தமிழ் மக்களை வெறுமனே   கையாளாமல்  பொறுப்புக் கூறப்போனார்கள் என்றால் பிரச்சனை இல்லை. யாருக்கு பொறுப்புக் கூறப்போகின்றார்கள் என்பதுதான் பிரச்சனை.

நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கின்றது. தமிழர் தரப்பு என்ன செய்ய வேண்டும்?

திரும்ப திரும்ப சொல்லிச் சொல்லி களைத்துப் போனோம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இணைத்து ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. அவர்கள் தனியத்தான் போவார்கள். அவர்கள் தங்களுடைய வாக்கு வங்கியை தனியாகத்தான் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றது. சிலநேரம் விக்னேஸ்வரனோடை ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் ஏனைய கட்சிகளுக்கு இருக்கலாம். மூன்று தரப்புக்கள் இருக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் தலைமையிலான ஒரு கூட்டணி, தமிழ்தேசிய மக்கள் முன்னணி இது தவிர ஏனைய தென்னிலங்கை மையக்கட்சிகள். அப்படி பார்த்தால் வாக்குச் சிதறும்.

ஜனாதிபதி தேர்தலில் 80 வீதத்திற்கும அதிகமான மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அங்கே இனரீதியான வாக்களிப்பு அலை இருந்திருக்கின்றது. அப்படி வாக்களிப்பு அலை வரும்போது பெருமளவு வாக்களிப்பு நடக்கும். பெருமளவு வாக்களிப்பு நடக்கும் போது தமிழ் மக்களின் பிரநிதித்துவம் கூடும். வாக்களிப்பு அலை  இல்லை என்றால் வாக்குகள் சிதறும். வாக்களிப்பு அலையை உருவாக்குவது என்றால் ஒரு திரட்சி வேண்டும். நீங்கள் ஐக்கியப்பட்டால் தான் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டலாம். இந்த முறை மக்கள் பயத்திலையும் பழிவாங்கலாகவும் வாக்களித்தார்கள். மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவீர்களாக இருந்தால் வாக்களிப்பு அலை வரும். வாக்களிப்பு அலைக்குள் தென்னிலங்கையை மையமாக கொண்ட கட்சிகள் வெற்றி பெற முடியாது. அவர்களுடைய வாக்குகள் இன அலைக்குள் கரைந்து போய்விடும். ஒரு வாக்களிப்பு அலையை உருவாக்குவது முக்கியமானது. தமிழ் தேசிய அலையை கிளப்ப வேண்டும் என்று சொன்னால் ஐக்கியம் அவசியம். நீங்கள் நம்பிக்கை ஊட்டும் ஐக்கியத்தைக் காட்டி நம்பிக்கை ஊட்டும் தலைமையை முன்நிறுத்தி மக்களுக்கு வாக்குறுதி அளிப்பீர்களாக இருந்தால் மக்கள் பேரலையாக மாறுவார்கள். பேரலையாக மாறும் போது 80 வீதத்திற்குமான வாக்களிப்பு நிகழும். பெருமளவுபிரதிநிதித்துவம் கிடைக்கும். 16 ஐ விட கூடுதலாக வரும். அதே நேரம் வடக்கு கிழக்கில் இருக்கக் கூடிய ஏனைய தென்னிலங்கை கட்சியின் தனிப்பட்ட வாக்கு வங்கிகள் அப்படியே அமிழ்ந்து போய்விடும்.

தொகுப்பு-ஈழவன் 
நிமிர்வு டிசம்பர்   2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.