செம்மண்ணில் ஆழ வேரூன்றிய செம்புலம்
உள்ளூரில் இயற்கையாகவே கிடைக்கின்ற மூலிகைகளையும் மருந்தடிக்காமல் வீட்டு தோட்டங்களில் விளையும் காய்கறிகளையும் நாங்கள் பயன்படுத்தி வருவோமாக இருந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்.  எங்கள் முன்னோரின் ஆரோக்கியத்துக்கும், ஆயுளுக்கும் இந்த இயற்கையான உணவு முறையே காரணமாக இருந்தது. இவ்வாறு கூறுகின்றார் அரசியல், சமூக செயற்பாட்டாளரும்,  இயற்கை வழி ஆர்வலரும், செம்புலம் கிராமிய அபிவிருத்தி மையத்தின் நிறுவனருமான விக்னேஸ்வரமூர்த்தி (ரகு).செம்மண் கிராமமான குப்பிளானைச் சேர்ந்த இவர் சுண்டக்காய் உற்பத்தியின் அடையாளமாக விளங்குவதோடு, பனம் பழத்தில் இருந்து செய்யப்படும் யாழ்ப்பாண சொக்லேட்டுகளை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார். அத்துடன் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருகின்றார். அவருடனான சந்திப்பின் போது பல்வேறு விடயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

செம்புலம் கிராமிய பொருளாதார அபிவிருத்தி மையத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக “எம் சூழலில் இயற்கையாகவே கிடைக்கின்ற வளங்களை உச்ச முறையில் பயன்படுத்துவோம்.” எனும் தொனிப்பொருளே காணப்படுகின்றது.ஒரு வீட்டில் குறைந்தது பத்து வகையான மூலிகைத் தாவரங்களை வளர்த்தால் ஆரோக்கியமான வாழ்வின் முதல் படியை அடைந்து விடுவீர்கள். எமது சூழலில் இயற்கையாகவே கிடைக்கும் கறிமுருங்கை இலை, குறிஞ்சா இலை, அகத்தி இலை, தவசி முருங்கை இலை, வாதநிவாரணி, முசுட்டை இலை, முடக்கொத்தான் இலை, தூதுவளை இலை, மொசுமொசுக்கை இலை போன்ற இலைகளில்  ஒன்றிரண்டு தாவர இலைகளையாவது நாளாந்தம் உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு நோய்களும் காணாமல் போய் விடும்.

வடமாகாணத்தில் 11 இலட்சம் பனை மரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், பனையில் கிடைக்கும் பலன்களை யாரும் உரிய முறையில் பெறுவதாக தெரியவில்லை.  அன்று நிலத்தில் விழுகின்ற பனம்பழங்களை ஓடி ஓடி எடுத்து பனம் விதையை கொண்டு பாத்திகளை போட்டு பனங்கிழங்குகளை பிடுங்கி உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தோம். ஆனால் இன்று பனம் விதைகளை பொறுக்கவே நேரமில்லாமல் அலைந்து திரிகிறோம்.  காசை வைத்துக் கொண்டு ஆரோக்கியமற்ற நாவுக்கு ருசி தரும் உணவுகளை வாங்கி சாப்பிடுகிறோம்.பனம்பழச்சாறை நேரடியாகவே சாப்பிடலாம். அல்லது சாறை எடுத்து பனங்காய் பணியாரம் சுடலாம். பனங்கிழங்கிலிருந்து பத்திற்கும் மேற்பட்ட உணவு வகைகளை செய்து  சாப்பிடலாம். பனங்கிழங்கை அவித்து காயவிட்ட புழுக்கொடியலை சிறுவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.  பனங்கிழங்கை பச்சையாக காயவிட்டு மாவாக்கினால் ஒடியல் கூழ் காய்ச்சலாம்.

இரத்த அழுத்தம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பனை உணவுகளுக்கு உள்ளது எனக் கூறப்படுகின்றது. எம் முன்னோர்களுக்கு வராத நோயெல்லாம் எங்கள் தலைமுறைக்கு வருகிறது என்றால் எங்களின் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்களுமே காரணமாகும்.


இன்றைய இளைய சமுதாயம் விவசாயம் செய்வதனை தரக்குறைவாக நினைக்கும் நிலையில் உள்ளனர். முந்திய காலங்களில் சந்தி மதகுகளில் இருந்து சுருட்டு, பீடி பற்றினார்கள். இன்று ஆளுக்கொரு திறன்பேசிகளோடு திரிகிறார்கள்.  எமது செம்புலம் கிராமிய பொருளாதார மையம் ஊடாக குறைந்த விலையில் சுண்டங்கத்தரி கன்றுகளை விநியோகித்து வருகின்றோம். கடந்த வருடமும் 5000 க்கும் மேற்பட்ட கன்றுகளை விநியோகித்துள்ளோம். சுண்டங்கத்தரிக்காயை பெருமளவில் பயிரிட்டு வருகிறோம். ஏனையோர்களையும் பயிர்செய்யச் சொல்லி ஊக்குவித்தும் வருகின்றோம்.

செம்புலம் நிறுவனத்தின் பிரதான தொழிலாக காய்கறிகள், இலைகளை உலரவைத்து பதப்படுத்தி விற்பனை செய்து வருகின்றோம். அதில் முக்கியமாக பாவற்காய், மோர் மிளகாய், வடகம், முருங்கை இலை, ராசவள்ளி கிழங்கு, ஒடியல், புழுக்கொடியல் மற்றும் ஏனைய மரக்கறிகள்  போன்றன அவற்றின் விளைச்சற் காலங்களில் விலை குறைந்து காணப்படும். அப்படியான நேரங்களில் அவற்றை வாங்கி காயவைத்து சந்தைப்படுத்த முடியும். உலர்த்தப்பட்ட பொருள்களுக்கு உள்ளூரிலும், வெளியூரிலும் அதிகரித்த மவுசு காணப்படுகின்றது.

 எம்மண்ணுக்கேற்ற மரமாக விளங்கும் சுண்டங்கத்தரிக்காய்

எமது வறண்ட வலயத்துக்கு மிகவும் ஏற்ற எம் மண்ணின் பயிராக சுண்டங்கத்தரி விளங்குகின்றது. வறட்சியைத் தாங்கி வளரும் பயிராகவும் காணப்படுகின்றது.   எமது பிரதேசத்தில் இயற்கையாகவே வளரும் தன்மையுடையதும் அதிக போசனைப் பெறுமானம் உடையதுமாக சுண்டங்கத்தரி விளங்குகின்றது.  இலங்கையில் பொதுவாக சுண்டங்கத்தரிக்காய் விலை கிலோவுக்கு 200 ரூபாய் வரையும் அதற்கு அதிகமாகவும் விற்பனையாகும். சில வேளைகளில் 100 ரூபாய்க்கும் வரும். அந்த நேரம் சுண்டங்காயை அவித்து  காயவைக்கலாம். 9 கிலோ சுண்டங்காயை அவித்தால் ஒரு கிலோ வற்றல் கிடைக்கும். ஒரு கிலோ சுண்டங்காய் வற்றலின் இன்றைய சந்தைப் பெறுமதி 2000 ரூபாய் ஆகும். 


கண்டங்கத்திரி இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. இரத்த சோகைக்கு சுண்டங்கத்தரிக்காய் நல்ல மருந்து. குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி தூளாக்கி  தேனுடன் கலந்து 2 வேளை கொடுக்க குணமாகும என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலிகை ரீதியான முக்கியத்துவம் அறிந்து பழங்காலத்தில் சுண்டங்கத்தரிக்காய் நாளாந்த உணவில் ஏதோ ஒரு விதத்தில் சேர்க்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், தற்போது உணவுப் பழக்கவழக்கம் மாறி வரும் சூழ்நிலையில் எம்மவர்களின் சமையலறைகளில் காணாமல் போன உணவாகவும் சுண்டங்கத்தரிக்காய் உள்ளது. ஆனால், இதன் முக்கியத்துவத்தை அறிந்து சிங்கள மக்கள் சுண்டங் கத்தரிக்காயை இன்றும் பெருமளவில் தங்களது நாளாந்த  உணவில் சேர்த்து வருகின்றனர். தென்மராட்சியின் சில பிரேதேசங்களிலும் வன்னிப் பகுதிகளிலும் பல ஏக்கர்களில் சுண்டங் கத்தரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால், அம்முயற்சிகள் தென்னிலங்கை சந்தையைக் குறிவைத்தவையாகவே காணப்படுகின்றன. 

                                                                           தொடர்புகளுக்கு - 0772281820

துருவன் 
நிமிர்வு ஜனவரி   2020 இதழ்  


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.