கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே?

ஆசிரியர் பார்வை


இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் என்று ஜனாதிபதி கோத்தபாய அண்மையில் ஐ.நா. பிரதிநிதிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது யுத்த களத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்  ஒரு புறம், பின் புலிகளின் பகுதியில் இருந்து வெளியேறி இராணுவத்திடம் சரணடையும் போது புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களையயும் சரணடையுமாறு கோரப்பட்டது. இந்நிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளையும்,மனைவிமார் கணவர்களையும் இராணுவ அதிகாரிகளிடம் நேரடியாக கையளித்து இருந்தார்கள். இன்று அந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதே பெரும் கேள்வியாகும். காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் இறந்து விட்டனர். மரணச் சான்றிதழ் கொடுக்க தயாராக இருப்பதாக அறிவித்து இதனைச் சாதாரணமாக கடந்து போக முயல்கிறார் கோத்தபாய.  இறந்து விட்டார்கள் என்று சொல்பவர் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதையும் தெரிவிக்க கடமைப்பட்டவர்.

தான் இலங்கை அரசின் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில்  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஜனாதிபதியாகிய பின் இப்போது கொல்லப்பட்டு விட்டார்கள் என்று கூறியிருக்கிறார். சரி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்றால், அதற்கான விசாரணையை படை அதிகாரிகளிடம் எப்போது நடத்தியிருந்தார் என்பதனையும் கோத்தபாய தெரிவிக்க வேண்டும்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவியான ஜெயவனிதா அண்மையில் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இவருடைய மகள் காணாமல் போன நிலையில் மைத்திரிபாலவுடன் ஒரு புகைப்படத்தில் நின்றிருந்தார். பயங்கர வாத தடுப்பு பிரிவில் சிங்கள சிறுமி ஒருவரை காட்டி இவர் தான் உங்கள் மகளா என கேட்டுள்ளனர். அவரும் இல்லை என மறுத்த்திருக்கிறார். அப்போது போராட்டங்களை உடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.  இனியும் இதனை தொடர அனுமதிக்க முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்.       அப்போது  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை இந்த அரசாங்கம் கூற வேண்டும் என அவர் கூறியிருக்கிறார். 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே, எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதனையும் கோத்தபாய தமிழ்மக்களுக்கு கூற வேண்டும். துப்பாக்கியால் சுட்டா அல்லது உயிரோடு புதைத்தா கொல்லப்பட்டார்கள்? இராணுவ அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே என்பது தான் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.  அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதியாக கோத்தபாய இருந்தால் இந்த பொறுப்புக்கூறலை சரியாக செய்ய வேண்டும்.   

செ .கிரிசாந்
நிமிர்வு ஜனவரி   2020 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.