பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு தற்கொலை நிரந்தர தீர்வாகுமா?
தமிழர் தாயகத்திலும் தற்கொலைகள் அதிகரித்துள்ளமை கவலையளிக்கிறது. உலகெங்கும் நாற்பது செக்கன்களுக்கு ஒருவர் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்கிறார்கள் என்கிறது கடந்த ஆண்டு வெளியான ஐ.நாவின் அறிக்கை ஒன்று. புரட்டாதி 10 ஆம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினமாகவும், ஐப்பசி மாதம் 10 ஆம் திகதி  உலக மனநல தினமாகவும் உலகெங்கும் அனுட்டிக்கப்படுகின்றன.

தற்கொலைகள் பற்றி பொதுவாக பார்க்கின்ற போது ஒரே காரணத்தினால் நிகழ்வது போல தோன்றினாலும், உண்மை அதுவல்ல. ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் உள்ளன. மன அழுத்தம் தான் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளது.

இன்றைய நவீன தொழிநுட்ப உலகில் கைபேசிகளும், கணணிகளுமே வாழ்வின் முக்கிய அங்கமாகி விட்டன.  மகிழ்ச்சியான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் நாம், நம்முடைய துக்கங்களையும், ஏமாற்றங்களையும் எங்காவது பகிர்கிறோமா? தன் குழந்தைகளுக்கு இல்லை என்ற சொல்லே இருக்கக் கூடாது என்று பார்த்து, பார்த்து வளர்க்கும் பெற்றோர், அவர்களுக்கு எதிர்காலத்தில் சமூகத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவத்தை பழக்க மறந்து விடுகிறார்கள். தகாத உறவுநிலைகள், போதைப் பழக்கம், வேலையின்மை என சமூகத்தை அச்சுறுத்தும் எல்லா விஷயங்களும் தற்கொலைகளுக்கான காரணங்களாக இருக்கின்றன. உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் ஒன்றோடு ஒன்று இணையும் போது, ஒரு நபர் தற்கொலை முயற்சி செய்வதற்கான பேராபத்து உயர்வடைகின்றது.


15 க்கும், 29 வயதுக்கும் உட்பட்ட இளையோர் மத்தியில் இடம்பெறும் பொதுவான இறப்புக்களில் தற்கொலை முக்கிய காரணமாகிறது."கைகொடுக்கும் நண்பர்கள் அமைப்பு" எனும் தற்கொலை தடுப்பு அமைப்பை யாழ்ப்பாணத்தில் நடாத்தி வரும் மாவை நித்தியானந்தன் அவர்களிடம் பேசிய போது அவர் முக்கியமாக இரண்டு விடயங்களை பகிர்ந்து கொண்டார். ஒன்று தற்கொலைகள் ஏன் நடக்கின்றன? இரண்டாவது தற்கொலை செய்யப் போகின்றவரை எப்படி அடையாளம் காணுவது? என்பவைதான் அவை.

எத்தனையோ காரணங்களால் தற்கொலைகள் நடக்கலாம். அதில் ஒன்று பிரதியிடல். அவரும் போய்ட்டார் நானும் போய்விடலாம் தானே என எண்ணும் மனோநிலை. தற்கொலை செய்பவரின் நோக்கம் என்னவெனில் தன்னுடைய பிரச்சினையில் இருந்து நிரந்தரமாக விடுபடல் என்பதாகும்.  அதிலிருந்து எப்படித் தப்பலாம் என நினைத்து தற்கொலையை ஒரு வழியாக பாவித்தல். பழிவாங்கும் தற்கொலைகளும் இருக்கின்றன. வறுமை, காதலில் தோல்வி, உறவுச் சிக்கல்கள், பரீட்சையில் தோல்வி இப்படி  எத்தனையோ விடயங்களை சொல்லலாம். ஆனால், அடிப்படைக் காரணம் இதுவல்ல. தற்கொலை மனநிலையில் இருக்கும் ஒருவருக்கு பிரச்சினைகளைத் தாங்கும் சக்தி போதாமல் இருப்பது தான்முக்கிய காரணம். இது ஆளுக்காள் வேறுபடும்.

உதாரணமாக பரீட்சையில் தோல்வியடைந்த ஒரு மாணவர் தற்கொலை செய்கிறார். ஆனால், இப்படி தோல்வியடைந்த பல மாணவர்கள் தற்கொலை செய்யவில்லை.  காதலில் தோல்வியுற்ற ஒருவர் தற்கொலை செய்கிறார் மற்றவர்கள் தற்கொலை செய்யவில்லை. ஏன்? தற்கொலை செய்பவருக்கு தாங்கும் சக்தி குறைவாக இருக்கிறது. மற்றவர்களுக்கு தாங்கும் சக்தி அதிகமாக இருக்கிறது.


நாங்கள் செய்யவேண்டிய பணி என்னவெனில் தாங்கும் சக்தி குறைந்தவர்களுக்கு அந்தச் சக்தியை  அதிகரிக்க வேண்டும். போதைப்பொருள் பாவித்தல், மனச்சோர்வு இவையும் தற்கொலைக்கான அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. தற்கொலை திடீரென நடப்பதில்லை. பெரும்பாலான தற்கொலைகள் நீண்டகாலம் திட்டமிட்டுத்தான் நடக்கின்றன.

நூற்றுக்கு நூறு வீதம் தற்கொலைகளைத் தடுக்கலாம். அவ்வாறு சொல்லும்போது தற்கொலை செய்யப் போகின்ற ஒருவரைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்வி வருகின்றது. இது பற்றிய அறிவு எமது சமூகத்துக்கு இருக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தற்கொலை செய்யப் போகின்றவரை கண்டுபிடிக்க முடியும். தற்கொலை முனைப்புள்ள ஒருவர் பெரும்பாலும் யாரோடும் பழகாமல் தனித்து இருப்பார். ஒரு பிரச்சினையை பற்றி அடிக்கடி பேசி அதனையே சிந்தித்து அதிலேயே ஊறிப் போய் இருப்பார். தற்கொலை முனைப்புள்ள ஒருவர் தான் ஒரு பெறுமதியில்லாதவர் எனத் தன்னை கருதுவார. இருந்தென்ன பிரயோசனம்? என்னால் யாருக்கு நன்மை? இந்த உலகில் நான் எதற்கு இருப்பான் என சிந்தித்து கொண்டிருப்பார். இப்படி யாராவது கதைப்பார்களாக இருந்தால் நாங்கள் அவர்கள் மீது கூடிய அக்கறை எடுத்துப் பழக வேண்டும்.

தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ள ஒருவர் தன்னுடைய பெறுமதியான பொருள்களை மற்றவர்களுக்கு கொடுக்கத் தொடங்குவார்.   திடீரென்று ஒருவர் வந்து தன்னுடைய பெறுமதியான சங்கிலியை உனக்கு தருகிறேன் என்று சொன்னால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். சிலர் எல்லாக் கடன்களையும் அடைத்து முடித்துவிட்டு தற்கொலைக்குத் தயாராகுவார்கள். இந்த மாதிரியான விடயங்கள் நடக்கின்ற பொழுது நாங்கள் அவற்றை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் அச்சிந்தனையிலிருந்து விடுபடக்கூடிய வகையில் செயலாற்ற வேண்டும்.

தற்கொலை செய்யப்போகும் ஒருவர் ஒரு செம்மையான திட்டம் ஒன்றை வைத்திருப்பார்.  தற்கொலை முனைப்புள்ளவர்களை நாங்கள் இனங்கண்டு அவர்களை தனிமையில் இருக்க விடாமல் வைத்திருக்க வேண்டும். அவர்களோடு நன்றாகப் பேச வேண்டும். அவர்களோடு நட்புறவோடு பழக வேண்டும். தொடர்ச்சியாக அவர்களது நடவடிக்கைகளை கவனித்துவர வேண்டும். ஆனால், நாங்கள் துப்பு துலக்குபவர்கள் போலும் நடந்து கொள்ள முடியாது. இப்படியான உளவியல் பிரச்சினைகள் இருப்பவரை இனங் கண்டால் அவர்களுடன் நடப்புணர்வோடு பழகி தற்கொலை முனைப்பில் இருந்து நாங்கள் வெளியே எடுக்க வேண்டும்.

தற்கொலை செய்துகொள்ள விரும்புவதாக ஒருவர் உங்களிடம் சொல்லும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? “நன்கு செவிகொடுத்துக் கேட்பவராக இருங்கள்” என U.S நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (U.S. Centers for Disease Control and Prevention [CDC]) கூறுகிறது. அவருடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த அனுமதியுங்கள். ஆனால், பலருடைய விஷயத்தில், தற்கொலை செய்ய விரும்புகிறவர் சமுதாயத்தோடு ஒட்டோ உறவோ இல்லாமல் ஒதுங்கியே வாழ்கிறார், எதையும் வாய்விட்டு சொல்வதில்லை. அவருடைய நம்பிக்கையிழந்த உணர்ச்சிகளும் வேதனைகளும் நிஜமானவை என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். அவருடைய நடத்தையில் நீங்கள் கவனித்த குறிப்பிட்ட மாற்றங்கள் சிலவற்றை சாந்தமாக சொன்னால், அவர் மனம் திறந்து உங்களிடம் பேசுவதற்கு தூண்டப்படலாம்.செவிகொடுத்துக் கேட்கும்போது அனுதாபம் காட்டுங்கள். “உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அந்த நபருடைய உயிர் முக்கியமானது என்பதை வலியுறுத்துவது முக்கியம்” என CDC சொல்கிறது. அவருடைய மரணம் உங்களையும் மற்றவர்களையும் உடைந்துபோகப் பண்ணும் என்பதை அவருக்கு தெரியப்படுத்துங்கள்.

இப்படிப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக கைகொடுக்கும் நண்பர்கள் என்கிற அமைப்பு யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகிறது.   அதன் தொடர்பு இலக்கம் - 0779008776 (தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை) யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் அல்லது வவுனியாவில் இருப்பவர்கள் கைகொடுக்கும் நண்பர்கள் அமைப்போடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்சொன்ன உளவியல் ரீதியான அறிகுறிகளுடன் சந்தேகத்துடன் இருப்பவர்களை தொடர்புபடுத்தி விட்டால்,   நூற்றுக்கு நூறு வீதம் நாங்கள் இவர்களை காப்பாற்றுவோம். கைகொடுக்கும் நண்பர்கள் அமைப்பில் உள்ள சேவையாளர்கள் நூறு வீதம் ரகசியம் பேணுவார்கள். அத்துடன் உளவியல் நெருக்கடிக்கு உள்ளவர்களிடம் நல்ல விதத்திலே பழகி அவர்கள் சொல்லும் எல்லாக் கதைகளை நேரத்தைப் பொருட்படுத்தாமல் மணித்தியாலக் கணக்காக கூட கேட்டு இப்படி பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் அணுகுகிறார்கள்.   இதுதான் மிகச் சிறந்த வழி என்று நான் சொல்ல முடியும்.

இலங்கையின் ஏனைய பாகங்களிலும் இலங்கை தேசிய மனநல நிறுவனமான சுமித்ரயோ (https://sumithrayo.org/) இன் கிளைகளும் உள்ளன. குறித்த அமைப்பை 011 222 269 6666, 1926 ஆகிய தொலைபேசி எண்கள் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.  சர்வதேச ரீதியில் befrienders worldwide (https://www.befrienders.org/) போன்ற தற்கொலை தடுப்பு அமைப்புக்களும் உள்ளன. அண்மையில் உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியான பின்  சுமித்ரயோவின் ஒரு சமூக வலைத்தள விளம்பரமொன்றில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. "உங்கள் பரீட்சை முடிவுகள் உங்கள் வாழ்வின் எல்லாவற்றையும் தீர்மானிப்பதில்லை" மிகவும் நிதர்சனமான விடயம் இதுவாகும். 


தொகுப்பு இசைப்பிரியன் 
நிமிர்வு ஜனவரி   2020 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.