பயிர் நலம் காப்போம் - உயிர் நலம் காப்போம்




இயற்கை வழி இயக்கத்தின் ஏற்பாட்டில் தை மாதம் 8 - 14 வரையிலான காலப்பகுதியில்  இயற்கை விவசாய வாரம் கொண்டாடப்பட்டது. இக்காலப்பகுதியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.  இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரனின் ஊரெழுவில் உள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழாவுடன் இயற்கை விவசாய வார நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து அளவெட்டியில் உள்ள ஓய்வுபெற்ற விவசாய அதிகாரி சிவநேசன் ஐயாவின் வீட்டில் மண்புழு வளர்ப்பு பயில்களம்  இடம்பெற்றது. அதில் மண்புழு வளர்ப்பின் நுட்பங்களையும், இயற்கை எரிவாயு உற்பத்தி, இயல்பான சூழலில் மரக்கறிகள் பயிரிடல், அசோலா வளர்ப்பு போன்றவற்றை அறியக் கூடியதாக இருந்தது. விவசாயத்தில் நீண்ட அனுபவம் உள்ளவரான அவரிடம் பல்வேறு அனுபவங்களையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

 சுன்னாகத்தில் உள்ள இளம் விவசாய போதனாசிரியர் மகிழனின் வீட்டில்  காளான் வளர்ப்பு பயில்களம் இடம்பெற்றது. அவர் காளான் வளர்ப்பு நுட்பங்களையும் சவால்களையும் எடுத்துக் கூறினார். இயற்கை விவசாயத்துக்கு தேவையான நூற்றுக்கும் மேற்பட்ட  பயிர் வளர்ச்சி ஊக்கி கரைசல்கள், பூச்சி விரட்டிகள் உள்ளடங்கிய  விபரங்கள் தொகுக்கப்பட்ட ஏர்முனை சஞ்சிகை சிறப்பிதழ் அறிமுக நிகழ்வும் வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றன. 

இயற்கை விவசாய வாரத்தை முன்னிட்டு வேறு பல பண்ணைகளிலும், பாடசாலைகளிலும் இயற்கை விவசாய வார விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ந்து அல்லை விவசாயி கிரிசனின் ஆரோக்கிய உணவகத்தில் இலைக்கஞ்சியுடன் ஒரு மாலைப்பொழுது நிகழ்வு இடம்பெற்றது. அதில் பங்கேற்று இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளர்  மருத்துவர் பிரபு பல்வேறு விடயங்களையும் எடுத்துக் கூறினார்.

2020 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயத்திற்கான நிறுவனத்தால் பயிர்நலத்தின் சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இது முக்கியமான ஒரு விடயமாக இருக்கின்றது. பயிர்நலக் காப்பு அதனோடு சேர்ந்த உயிர்நலக் காப்பு என்பது முக்கியமான விடயமாக இருக்கின்றது. விவசாயத்துறையில் கல்வி கற்றவர்கள் நீண்டகாலமாக பயிர் உற்பத்தி (crop production)என்ற பெயரில் படித்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அந்த பயிர் உற்பத்தி என்ற பெயரில் நாங்கள் செய்த பல வேலைகள் இன்று எங்களுடைய உயிர் பல்வகைமையை அழித்துவிட்டிருக்கிறது. அதே நேரம் நன்மை தருகின்ற பூச்சிகளை அழித்து சூழலியல்  சமநிலையைக் குழப்பி எங்களுடைய விவசாயத்தை ஆபத்தான நிலைக்கு கொண்டுபோய் விட்டிருக்கின்றது. இதனை நாங்கள் இப்போது அனுபவ ரீதியாக உணர்ந்து வருகின்றோம்.

இயற்கை விவசாயத்தில் நன்மை தருகின்ற பூச்சிகள் தான் ஏராளம். கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் விசிறிய இராசயனங்களால் 80 வீதமான உயிர் பல்வகைமை இழக்கப்பட்டிருக்கின்றது.இன்னும் இரசாயன உரத்தை உற்பத்தி செய்கின்ற பெருநிறுவனங்கள் தங்களுடைய உரத்தை விற்பதற்காக “உலக சனத்தொகை அதிகரித்துக் கொண்டு வருகின்றது, அதனால் எங்களுக்கு  உணவு உற்பத்தி அதிகம் தேவையாக இருக்கின்றது” என்று சொல்கின்றன. ஆகவே நாங்கள் இதிலிருந்து ஒரு மாற்று வழிக்கு போக முடியாது என்ற நிலைப்பாட்டை தான் எல்லா இடத்திலும் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். அதை நாங்கள் வெற்றி கொண்டு இயற்கை விவசாயத்தை முன்நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றால்  புத்தாக்கம், வித்தியாசமான சிந்தனைகள் எங்களுக்கு தேவையாக இருக்கின்றன.

மரபு வழி விவசாயத்தில் உள்ள பல நுட்பங்கள் வாய்மொழியாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்தன. இன்று அவை விலக்கப்படக் கூடிய சூழலில் தான் நாங்கள் இருக்கின்றோம். அவற்றை ஆவணப்படுத்தி எங்களுடைய நெல் விவசாயம் பற்றி போன வருடம் பல செயற்பாடுகளை செய்திருந்தோம். இதன் விளைவாக இந்த வருடம் பல இடங்களில் மொட்டைக் கருப்பன், பச்சைப் பெருமாள் உட்பட பல்வேறு பாரம்பரிய இனங்கள் விளைவிக்கப்படுகின்றன.

அல்லைப்பிட்டியை சேர்ந்த இயற்கை விவசாயியான கிரிசன் 5 வகையான வித்தியாசமான பாரம்பரிய நெல் இனங்களை செய்கின்றார். பாரம்பரிய இனங்களை பயிரிடுகின்ற பலபேர் இருக்கின்றார்கள். எங்களுடைய பாரம்பரிய அறிவை  நாங்கள் மீட்டெடுக்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. புதிய ஆய்வுகளுடன் பல்கலைக்கழங்கள் எங்களுடைய விவசாயிகளுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய தேவைகள் இருக்கின்றன. இதை ஒரு அமைப்பாக சிறிய ஒரு வட்டத்திற்குள் நாங்கள் செய்ய முடியாது. சமூகமட்டத்தில் இருக்கின்ற எல்லா அமைப்புக்களும் துறைசார்ந்த அறிஞர்களும் இதில் ஈடுபட்டிருக்கின்ற விவசாயிகள் அனைவரும் கைகோர்த்தாற் தான் செய்யலாம்.

இயற்கை விவசாய வாரத்தில் பயிர்நலம் பற்றி நாங்கள் பேச ஆரம்பித்திருப்பது ஒரு முதல் படி. இதனைத் தொடர்ந்து எப்படி பாடசாலை மட்டத்தில் விவசாய கழகங்கள் விவசாய ஆசிரியர்கள் பல்கலைக்கழகங்கள் மட்டத்தில் விவசாயதுறை சார்ந்தவர்கள் ஆய்வு ரீதியில் இதை எப்படி கொண்டு போகப்போகின்றோம் என்பதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் விரைவாக ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் இயற்கைவழி விவசாயம் தான் பயிர்நலத்தையும் உயிர் நலத்தையும் ஒருங்கே காக்கக் கூடியது. இரசாயனப் பாவனை தேனீயில் தொடங்கி சிலந்தியில் தொடங்கி எல்லாவிதமான உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவித்து கடைசியாக உணவுச்சங்கிலியில் மனிதனுக்குக் கூட மிக ஆபத்தாக மாறி இருக்கின்றது. இயற்கை விவசாயம் தான் எங்களுடைய வழி என்று நாம் கைக்கொள்ள வேண்டும்.

கடந்த வருடத்தில் இயற்கைவழி இயக்கத்தின் செயற்பாடு ஓரளவிற்கு பரவலாக்கப்பட்டிருக்கின்றது. கிளைமத்தோன் யாழ்ப்பாணம் காலநிலை மாற்றம் சம்பந்தமான ஒரு நிகழ்வை முக்கியத்துவப்படுத்தி அதில் நிறைய புத்தாக்கங்களை இளைஞர்கள், இளம் விவசாயிகள் கழகங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டு வந்து சமர்ப்பிக்கின்ற ஒரு வேலையை செய்திருந்தோம். அதனுடைய வெற்றியாக சில பெறுபேறுகள் இன்று கண்ணுக்கு தெரிகின்றன. கிளை மதோன் யாழ்ப்பாணம் நிகழ்வில் முதலாவதாக வந்த காரைநகர் ஓர்கானிக் தீவு (organic island)என்ற செயற்திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு அவர்கள் விரைவில் இயற்கையில் விளைந்த நெல்லை அறுவடை செய்து அதனை தங்களுடைய உணவுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கின்றார்கள். இது ஏற்றுமதிக்கானதோ அல்லது சந்தையை நோக்கியதாகவோ இல்லை. தங்களுக்கு ஆரோக்கியமான உணவைக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் அதனுடைய அடிப்படை நோக்கமாகும்.

கொள்கை வகுப்பிலையும் நாங்கள் அதற்கான படிமுறைகள் பற்றி சிந்திக்க வேண்டும். எங்களுடைய சமூகமட்ட அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அடுத்துவருகின்ற மாகாணசபை உள்ளூராட்சி மன்றங்களில் இது பேசப்பட்டு இயற்கை விவசாயத்திற்கான தனித்துவமான இடம் அல்லது அதற்கு தனித்துவமான ஒரு புள்ளி உருவாக்கப்பட வேண்டும். சந்தையில் அதற்கான வாய்ப்புக்கள் கொடுக்க வேண்டும். கிளிநொச்சியில் அது ஒரு முக்கியமான மாற்றமாக ஆரம்பித்திருக்கின்றது. கரைச்சி பிரதேச சபை இயற்கை விவசாய உற்பத்திகளை விற்பதற்கு சந்தைக்குள்ளேயே அதற்கான மையத்தை ஆரம்பித்திருக்கின்றது. அந்த மாற்றம் ஒவ்வொரு இடங்களிலும் கொண்டு செல்லப்பட வேண்டும். கொள்கை மட்ட முடிவுகளிலும் மாற்றங்கள் வந்தாற் தான் முழுமையான மாற்றங்களை எய்த முடியும். அதனைவிட இந்தச் செயற்பாடுகளில் எல்லோரையும் பயணிப்பதற்கான முயற்சிகள் செய்யவேண்டும். ஆரம்ப கல்வி மாணவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அதன்மூலம் தான் இருபது முப்பது ஆண்டுகளில் முழுமையான ஆரோக்கியமான சமூகமாக வருவோம் என்ற நம்பிக்கையை நாங்கள் கொண்டு செல்லலாம். இது முதலாவது கட்டம். பயிர்நலம் சார்ந்த விடயங்களை எப்படி கொண்டு செல்வது என்பதனைப்பற்றி தொடர்ந்தும் பேசுவோம்.

நிமிர்வு ஜனவரி   2020 இதழ்  


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.