உணவு எதனை உண்பது? எதனை தவிர்ப்பது?
நாம் உண்ணும் உணவு எமது நலமான வாழ்விற்கு ஆதாரமாக இருக்கின்றதா? இந்தக் கேள்வி இப்பொழுது உலகிலே வாழுகின்ற மக்களில் பெரும்பான்மையானவரிடத்தில் எழுந்துள்ளது. பொருளாதார மற்றும் அறிவியல் ரீதியில், உயர் வளர்ச்சியடைந்த அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நாட்டினரிடையேயும் இந்த தடுமாற்றம் நிலவுகின்றது.
உலகெங்கும் மிகத்தீவிரமாகப் பரவி வரும் தொற்றா நோய்க்கூறுகளான நீரிழிவு, இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு வகையான புற்று நோய்கள், இன்னும் மேலதிக பாரிய பிரச்சினையாக வளர்ந்து வரும் அதிகரித்த உடல் எடை, உடற்பருமன் இவையெல்லாம் உலகையே உலுக்கும் பெரும் அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன.
பள்ளி மாணவர்களின் புவியல் பாடத்திற்கு ஒரு வழிகாட்டியாக அமைகின்ற புவியியல் வரைபடம் இன்றைக்கு பூகோளத்தில் தொற்றா நோய்களும் உடற்பருமனும் அதிகரித்த எடையும் எந்த தேசத்தில் எத்தனை கோடிமக்களிடையே எத்தனை வீதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை துல்லியமாக வெளிப்படுத்தும் கருவியாகவும் உருவமைக்கப்பட்டுள்ளது.
2016 ம் ஆண்டில் உலகின் மொத்த இறப்பின் எண்ணிக்கை 56.9 மில்லியன்கள் இதில் இறப்பைத் தவிர்க்கக்கூடிய தொற்றா நோய்காரணமாக நிகழ்ந்த இறப்புக்கள் மொத்தம் 40.5 மில்லியன். இது 71% வீதமாகும். இறந்தோர்களின் தொகையில் 17 வீதத்தினர் இன்னும் 70 – 74 வயது வரை வாழ்க்கையை வாழ்ந்து அனுபவிக்க வேண்டியவர்கள். இவர்களது உயிர் தொற்றா நோய்களால் 40 – 50 வயதிற்கு இடைப்பட்ட காலத்திலேயே காவு கொள்ளப்படுகிறது.
இலங்கையும் இறப்பைத் தவிர்க்கக் கூடிய தொற்றா நோய்களில் முன்னிலையிலுள்ள நீரிழிவு நோயின் பிடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை. இங்கு 1.16 மில்லியன் மக்கள், சனத்தொகையில் 8.5 வீதத்தினர் (12 நபருக்கு ஒருவர்) என்ற விகிதத்தில் நீரிழிவு நோயினால் அவதியுறுகிறார்கள்.
உலகின் பல கோடி மக்கள் தொற்றா நோய் கூறுகளின் பிடியில் சிக்கித் தவிப்பதற்கு மிக மோசமான உணவுக் கலாச்சாரம் முதன்மைக் காரணிகளில் ஒன்று என்பதனை இன்றைய விஞ்ஞான ரீதியிலான ஆய்வு முடிவுகள் தெட்டத் தெளிவாக வரையறுக்கின்றன. தேசமெங்கும் உணவு முறைமைகளும் உணவுக் கலாச்சாரமும் மிகவும் தாழ் நிலையை நோக்கிச் சரிகின்றது. ஆயினும் மிகுந்த விசனத்திற்குரிய விடயம், உலகிலேயே மிக மோசமான உணவுக்கலாச்சாரமென்றால் அது அமெரிக்காவில் நிலவுவதுதானென அமெரிக்க உணவு ஆராய்ச்சியாளர்களாலேயே அறிக்கையிடப்படுகின்றமை தான்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளின் போசணைப் பெறுமானங்கள் பற்றிய ஆய்வு முடிவுகள் அவைபற்றிய தர்க்கரீதியான விவாதங்கள் பத்திரிக்கைகள், விஞ்ஞான சஞ்சிகைகள், இணையத் தளங்கள், தொலைக்காட்சி விவரணங்களில் அதிகளவு இடத்தைப் பிடித்துள்ளன.
அமெரிக்காவில் பிரசுரமாகி பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிய இரண்டு அமெரிக்கர்களது புத்தகங்கள், ஒருவர் இதய நோய் நிபுணர் Dr.William Davis மற்றவர் சமூக விஞ்ஞானி Michael Pollan, இங்கே கவனத்திற்குரியவை. இதய நோய் நிபுணர் தனது நீண்ட கால இதய நோய் மருத்துவ சேவையில் பெற்ற அனுபவ அறிவை ஆதாரமாகக் கொண்டு அவரது ‘’’Wheat Belly ’’என்னும் நூலில் ‘’கோதுமை நுகர்விலிருந்து விடுபட்டால் எல்லா விதமான உடலியல் சிக்கல்களிலிருந்தும் விடுபடலாம்’’ (Eliminating wheat can transform our lives) என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மைக்கேல் பொலன் பல நூல்களை எழுதியுள்ளார். அவை அத்தனையிலும் அமெரிக்க மக்களது உணவுக் கலாச்சாரத்தையும் அமெரிக்க அரசின் உணவுக் கொள்கைகளையும் நார் நாராக கிழித்து தொங்க விடுகின்றார் என பரவலாக விமர்சிக்கப்படுகிறது. அமெரிக்காவின் பிரபல வர்த்தக நாமங்களை பொறித்துள்ள KFC, McDONALDS, Pizza Hut, Subway ஆகிய துரித உணவுகள் தனித்து உடலை ஊதிப்பெருக்க வைக்கின்ற உணவுகள் என்கின்றார். கொழுப்பு, உப்பு, சீனி, தீட்டிய தானியங்களின் மாவகைகளிலுள்ள கலோரியைத் தவிர அத்தியாவசியமான புரதம், ஊட்டச்சத்துக்கள், கனிமங்கள், நார்ச் சத்து எதுவுமேயற்ற குப்பை உணவுகள் என அவற்றை வர்ணிக்கின்றார். இவற்றை உணவு விஞ்ஞானிகள் Junk Foods என வரைவிலக்கணப் படுத்தியுள்ளார்கள். Junk Foods இற்கான தமிழ் மொழியாக்கம் என்ன என்று கூகுளைக் கேட்டால் ‘’குப்பை உணவுகள்’’ என்று பதிலிடுகின்றது.
இவற்றில் அடங்கியுள்ள அதிகரித்த மட்டங்களிலுள்ள உப்பு, சீனி, கொழுப்பு கலோரிகள் உடலை ஊதிப் பெருக்க வைக்கும் நிச்சயமான காரணிகள் என ஆய்வு அறிக்கைகள் வலியுறுத்துகின்றன. அமெரிக்க மக்கள் தொகையில் 36.2 வீதத்தினர் உடற் பருமன் அதிகரித்த நிலையை கொண்டிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் யப்பான் நாட்டில் 4.3 வீதத்தினர் உடல் பருமன் அதிகரித்த நிலையிலுள்ளார்கள். இரு நாடுகளிலும் நிலவும் வேறுபாடுகள் எவை எனவும் அவற்றுக்கான தீர்மான காரணிகளையும் அறிந்து கொள்வதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. அமெரிக்காவில் 65 வீதத்தினர் அதிக எடையுடன் காணப்படுகின்றார்கள். இதற்கான மருத்துவச் செலவாக ஆண்டுக்கு 4600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்படுகின்றது. இந்தப் போக்கு வருடந் தோறும் அதிகரித்துக் கொண்டேயிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றார்கள்.
உலகளவில் தடுக்கக்கூடிய நோயினால் இறப்பதில் உடற்பருமன் முதல் இடம் வகிக்கின்றது. உடல் எடைச் சுட்டெண் உயர் நிலையிலிருப்பவர்களுக்கு இறப்பு விகிதம் அதிகமுள்ளது என்பது ஆய்வு ரீதியான முடிவு. நாமும் அதாவது இலங்கையும் ஆபத்தான இந்தத் தடத்தில் கால் பதித்திருப்பது அண்மைக்கால ஆராய்ச்சிகளின் தரவுகள் மூலம் அறியக்கூடியாத உள்ளது. 6.6 வீதத்தினர் உடற்பருமன் பாதிப்பிற்குட்பட்டிருப்பது ஆய்வுகளில் வெளிப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு இலங்கையின் மொத்த சனத்தொகை இரண்டு கோடி ஏழு இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரம் (207 98 000) அதே ஆண்டு இலங்கையில் தொற்றா நோய் காரணமான இறப்பு ஒரு இலட்சத்து நாற்பத்து மூவாயிரம் (143 000). இறப்பைத் தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையை பொய்யாக்கி விட்டு இன்று அகால மரணம் போல நிகழும் இந்த மரணப் பீதிதான் எல்லோரையும் அச்சுறுத்துகின்றது. இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்ப்பட்டுள்ள தொற்றா நோய் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒழுங்கற்ற உடல் ஆரோக்கியத்தினை கருத்திலெடுக்காத உணவு நுகர்வு முறைமைகள், சீனி, உப்பு, எண்ணெய் ஆகியவற்றின் அளவுக்கதிகமான நுகர்வு என்பவற்றினாலேயே இன்று கட்டுப்பாடற்ற நிலையில் தொற்றா நோய் வளர்ந்து கொண்டே போகின்றது.
இலங்கையில் தமிழ் மக்கள் மட்டுமல்ல எல்லா இனத்தவரும் குப்பை உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் முறைக்கு மாற வேண்டும். ஏற்கனவே கடன் தொல்லையிலும் வறுமையிலும் சிக்கியிருக்கும் இலங்கை குப்பை உணவுகளால் நோய்வாய்ப்படும் தனது குடிமக்களைக் காப்பாற்ற வைத்தியத்துறைக்கு மேலும் பணம் ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்படும். இது மொத்த நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதாளத்துக்குத் தள்ளி விடும். இதனைத் தவிர்ப்பதற்கு நாம் எல்லோரும் இணைந்து முயற்சி எடுக்க வேண்டிய தருணம் இது.
சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன்
இயற்கை ஆர்வலர்
நிமிர்வு ஜனவரி 2020 இதழ்
Post a Comment