ஜெனீவாவையும் தாண்டி நாங்கள் நகர வேண்டும்



ஜெனீவாவில் ஏற்கனவே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு கால நீடிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தக்கால நீட்டிப்புக்களின் மூலம் கடந்த அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்பது தொடர்பில் வாய்மூல அறிக்கையையோ எழுத்துமூல அறிக்கையோ அரசாங்கம் சமர்ப்பித்தல் வேண்டும் என்பது ஒவ்வொரு ஜெனீவாவிலும் இருக்கிறது. அப்படி ஏற்கனவே நிரல்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரல் இருக்கும் போது புதிதாகப் போய் எனக்கு இது வேண்டாம் என்று சிறிலங்கா அரசு சொல்ல நினைக்கிறது. இது ஒரு வழமைக்கு மாறான விடயம். இவ்வாறாக நிமிர்வுக்கு வழங்கிய பேட்டியில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். 

 இவர்கள் அப்படி ஒரு கோரிக்கையை வைப்பார்களாக இருந்தால் அதனை எப்படி ஜெனீவா எதிர்கொள்ளும் என்று பார்க்க வேண்டும். கிட்டத்தட்ட அப்படி ஒரு கோரிக்கையை இலங்கை வைக்கக்கூடும் எனக் கருதியதாற் தான் சவேந்திரசில்வா விவகாரத்தை அமெரிக்கா முன் நகர்த்துகிறது. அதாவது ஜெனீவாவுக்கு இவர்களை கீழ்ப்படிவுள்ளவர்களாக ஆக்குவது என்பது தான் அவர்கள் நோக்கம். ஆனால் இவர்களோ ஜெனீவாவை எதிர்க்கப்போகிறோம் என்று சொல்கிறார்கள். மில்லேனியம் சலஞ் உட்பட அமெரிக்கா கேட்கும் மூன்று உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கான அழுத்தமாகவும் இதனை நாங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஜெனீவாவை இவர்கள் குழப்பலாமா இல்லையா என்பது சந்தேகம். 

துறைசார் நிபுணர்களின் கருத்துப்படி தை மாதம் நடுப்பகுதியளவில் அதற்கான வேண்டுகோள் விடுக்கப்படுதல் வேண்டும். அப்படியான நேரத்தில் தான் அந்த வேண்டுகோளை நிகழ்ச்சிநிரலில் சேர்த்துக் கொள்வதா இல்லையா என்கிற முடிவை எடுப்பார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் தான் ஜெனீவாத் தீர்மானங்களில் இருந்து விலகுவதாக சிறிலங்கா அறிவித்துள்ளது. ஆனால், அதனை உள்ளூரில் ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிப்பது வேறு. அதனை ஜெனீவாவில் சமர்ப்பிப்பது வேறு. ஜெனீவா யதார்த்தம் வேறு. ராஜபக்சக்கள் இன்று வெளிப்படையாக செய்வதையே ரணில் அன்று நரித்தனமாக மறைத்துச்செய்தார். ஜெனீவாவோடு நின்று கொண்டே பொய்க்கு கட்டமைப்புக்களை உருவாக்கினார். அவர் ஒன்றையுமே பாதிக்கப்பட்ட மக்களின் நோக்கு நிலையில் இருந்து முன்னெடுக்கவில்லை. 

ஐக்கியதேசியக் கட்சியின் பிரமுகரான மங்கள சமரவீர 'நாங்கள் உங்களை ஜெனீவா மின்சாரக்கதிரையில் இருந்து பாதுகாத்தோம்'. என்று சொல்கிறார். ஆகவே யுத்தக்குற்றச்ச்சாட்டு தொடர்பிலான விசாரணையை இல்லாமல் செய்ததில் தங்களுக்கு பங்கு இருப்பதாக மறைமுகமாக சொல்ல வருகிறார்கள். முன்னைய அரசாங்கமும் அதைத்தான் செய்திருக்கிறது. இந்த அரசாங்கமும் அதைத்தான் செய்கிறது. ஆனால் இவர்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள். ஆனால் ஜெனீவாவே எங்களுக்கு கட்டப்பட்ட பெட்டி. ஜெனீவாவுக்குள் மட்டும் நாங்கள் நிற்க முடியாது. அது இனப்பிரச்சினையை ஒரு மனித உரிமை மீறலாகத்தான் பார்க்கிறது. நிலைமாறுகால நீதியை தமிழ்மக்கள் கேட்கவில்லை. அவர்கள் இனப்படுகொலைக்கு எதிராக பரிகாரநீதியையே கேட்டார்கள். உலகம் தான் எங்களுக்கு நிலைமாறுகால நீதியை தந்தது. அந்தநிலைமாறுகாலநீதியைக் கூட கடந்த அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றவில்லை. அதுவும் பொய்க்கு செய்யப்பட்டது தான். ஜெனீவாவுக்குள் பெட்டி கட்டப்பட்டிருக்கும் எங்கள் பிரச்சினை ஜெனீவாவையும் தாண்டி நகர வேண்டும். 

நாங்கள் ஜெனீவாவை தாண்டி பாதுகாப்புச்சபைக்கோ பொதுச்சபைக்கோ போக வேண்டும். ஜெனீவாத் தீர்மானங்களால் எங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஜெனீவா எங்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்துள்ளதா என கடந்த பத்தாண்டு அனுபவங்களை தொகுத்துப் பார்க்க வேண்டும். ஆகவே நிலைமாறுகால நீதியை நோக்கி அரசாங்கத்தை தள்ளுவதற்கும், அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பதற்கும்தான் அவர்கள் சவேந்திரசில்வா விடயத்தைக் கையில் எடுக்கின்றார்கள் என்று சொன்னால், திருப்பி அடுத்த ஐந்தாண்டுகள் ஜெனீவாவில் பெட்டி கட்டப்படப் போகிறோமா? இந்த நேரம் ராஜபக்சக்கள் ஜெனீவாவைவிட்டு வெளியில் வந்தால் சில நேரம் எங்களுக்கு நல்லது தான்.இவ்வாறு சொல்லி முடித்தார் நிலாந்தன். 

 சிறிலங்காவையும் பகைக்காமலும் சர்வதேச முற்போக்கு சனநாயக சக்திகள் தமது முகத்திரையைக் கிழிக்காமல் பார்த்துக் கொள்வதற்கும் மேற்குலகம் ஆடிய ஆடிக் கொண்டிருக்கும் நாடகமே ஜெனீவா என்று நிமிர்வில் பலமுறை சொல்லப் பட்டிருக்கிறது. ஜெனீவாவில்மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் நிற்கும் அதே நேரம் இங்கு நடந்த இனப்படுகொலையை சர்வதேசத்தின் கவனத்தில் தொடர்ந்து வைத்திருக்கவும்,சர்வதேச முற்போக்கு சனநாயக சக்திகளுடன் ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டி நாம் ஒரு ‘பலமையமாக’ உருவாகுவதற்கான முயற்சிகளுக்கும் ஜெனீவாவில் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். எமது விடுதலைக்காக எமது சொந்தக் கால்களில் நிற்பது ஒன்றே வழி. 

 மாசி 2020

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.