சிரிப்பு பாரம்பரியத்தை தொலைத்து விட்டோமா? 

 


எங்களுடைய பாடசாலைப்புத்தகத்தில் ஒரு பாடம் இருந்தது. சிரிக்கத் தெரிந்த அராபியர்கள் என்று. அனேகமாக எங்களுடைய வயதினர் அந்த பாடத்தை கற்று வந்திருக்கின்றோம். அது நஸ்ருதீன் முல்லாவைப் பற்றிய நகைச்சுவைக் கதை. ஒரு சமூகம் சிரிக்கத் தெரிந்ததா? இல்லையா என்பதனை அளவிடுவதற்கு முல்லாவின் கதைகளை எங்களுடைய பாடப்புத்தகத்தில் ஒரு அளவீடாக பயன்படுத்தியிருந்தார்கள். அராபியப் பண்பாட்டை பொறுத்த வரை முல்லா, இந்தியப் பண்பாட்டை பொறுத்த வரையிலும் அக்பர், பீர்பால், தெனாலிராமன் என்போர் இருக்கிறார்கள். எங்களிடம் யார் இருக்கின்றார்கள்?  நாங்கள் சிரிப்பதற்கு பயன்படுத்தும் பல விடயங்கள் தென்னிந்தியாவிற்கு உரியது. ஈழத்தமிழர்களுக்கு அப்படி ஒரு சிரிப்பு பாரம்பரியம் இருக்கின்றதா? நாங்கள் சிரிக்க மாட்டமா? உர் என்று முகத்தை வைத்திருப்போமா? இல்லை நாங்கள் சிரிப்போம். நகைச்சுவை காட்சிகள் சினிமாவில் வரும் பொழுது வயிறு வெடிக்க சிரிக்கின்றோம். மண்டபம் அதிர சிரிக்கின்றோம்.  இவ்வாறு கடந்த 22.12.2019 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம்பெற்ற "ச.செல்வனின் காலவரை கார்டூன்கள்" நூல் அறிமுகவிழாவில் அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் உரை ஆற்றினார். 

அதில் மேலும் முக்கியமாக தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு, எங்களிடம் ஒரு சிரிப்புப் பாரம்பரியம் இருந்தது. எங்களுக்கு செழிப்பான சிரிப்பு நரம்பு இருந்தது. நாங்கள் சிரித்த மக்கள். எங்களிடம் அண்ணை ரைட்  மணியண்ணை இருந்தவர். டிங்கிரி சிவகுரு இருந்தது. சிரித்திரன் சுந்தர் இருந்தவர். அதற்கு முன்னுக்கு பின்னுக்கு சிரிப்பதற்கு சினிமா இருந்தது. ஆனால் நாங்கள் சிரிப்பதற்கு என்று வைத்திருக்கும் பெரும்பாலான விடயங்கள் தென்னிந்திய மரபினூடாக எங்களிடம் வருகின்றன. இதில் அண்ணை ரைட் மற்றையது டிங்கிரி சிவகுரு போன்ற சில தான் எங்களுடைய சொந்த வேரில் இருந்து வருகின்றன. 

ஆனால் கொடிய யுத்தம் எங்களை சிரிக்க விடவில்லை. சிரிக்க முடியாத அளவிற்கு நாங்கள் பயங்கரமான யுத்தத்திற்குள் சிக்கினோம். நாங்கள் ஒரு சிறிய மக்கள் கூட்டம். எங்களுடைய கொள்ளவை மீறி தியாகம் செய்தோம். எங்களுடைய கொள்ளவை மீறி போரிட்டோம். அதனால் அதிகம் சீரியஸ் ஆன மக்களாக மாறினோம். எங்களால் சிரிக்க முடியவில்லை. சிரிப்பதற்கு நேரம் இல்லை. சிரிக்க முடியாத ஒரு அந்தரகதி வாழ்க்கை எங்களுக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எங்களில் பலர் சிரிப்பை மறந்தார்கள். கொடுப்பிற்குள் சிரித்தார்கள். எங்களால் மனம் விட்டு வெடித்துச் சிரிக்க முடியவில்லை. சிரிக்க முடியாத ஒரு வாழ்க்கைதான் எமக்கு இருந்தது. ஆனால் இந்த யுத்தத்தின் விளைவாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு போன பலரையும் நான் கண்டிருக்கின்றேன்.  

முதல் முதலாக நான் நோர்வேயில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக நகைச்சுவை நாடகங்களை போட்டார்கள். என்னுடைய சிறுபாராயத்தில் நான் கடந்து வந்த அண்ணை ரைட்டையும் டிங்கிரி சிவகுருவையும் அங்கே கண்டேன். அவர்கள் அந்தச் சிரிப்பை மீள உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். மன்மதன் பாஸ்கி உட்பட எங்களுக்கு கிடைக்கின்ற Youtube  காட்சிகள் பலவற்றிலும் புலம்பெயர் தமிழர்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள். சிரிக்கக் கூடியளவிற்கு அவர்களிடம் நாடகம் இருக்கின்றது. ஒளிப்பேழைகள் இருக்கின்றன. 

இங்கே யுத்தம் உக்கிரமாக இருந்த காலகட்டத்தின் முன்பின்னாக புலம்பெயர்ந்த தமிழர்கள்  எங்களை நோக்கி அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒப்பீட்டளவில் ஒரு ரிலாக்ஸ் ஆன வாழ்க்கை அவர்களுக்கு இருந்தது. எனவே அதற்குள் அவர்கள் சிரிக்கக் கூடிய நாடகங்களையும் ஒளிப்பேழைகளையும் உருவாக்கினார்கள். நாங்கள் சிரிக்கும் மக்கள் என்பதற்கு அவர்கள் ஒரு சிறந்த உதாரணம். இன்றும் சினிமா நகைச்சுவை காட்சிகள் வரும் பொழுது சிரிக்கின்றோம். மண்டபம் அதிரச் சிரிக்கின்றோம். தென்கச்சி சுவாமிநாதனைக் கேட்கும் பொழுது சிரிக்கின்றோம். நாங்கள் அப்படியெல்லாம் சிரிக்காத மக்கள் அல்ல. எங்களுக்கு சிரிக்கத் தெரியும். 

இன்று எங்களுக்கு நித்தியானந்தா கிடைத்திருக்கின்றார். “மீனாட்சி மீனாட்சி என்னாச்சு என்னாச்சு…” என்று அவர் எங்களை சிரிக்க வைக்கின்றார். சிரிக்க  வைப்பதன் மூலம் அவர் தன்னிலே இருக்கக் கூடிய விமர்சனங்கள் அத்தனையும் அவர் எதிர் கொள்கின்றார். அதற்குள் ஒரு கார்ட்டூன் இருக்கின்றது. ஆனால் அந்த கார்ட்டூன் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்ற மதத்தையும் அந்த செழிப்பான ஆன்மீக மரபையும் அவமரியாதை செய்கிறது என்பது ஒரு விடயம். ஒரு சாமியார் வடிவேலு நிலையில் இறங்கி இப்படி சிரிக்க வைப்பதும் சிரிப்பதும் அந்த ஞான மனதை அவமதிக்கின்றது என்பது ஒரு விடயம். ஆனால் அந்த சிரிப்புக்குள் நாங்கள் கதைக்க வந்த ஒரு விடயம் இருக்கின்றது. அதில் ஒரு முரண் இருக்கின்றது. தனக்கெதிரான வழக்குகளையும் தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களையும் நித்தியானந்தா சிரித்துக் கடக்கின்றார். உங்களையும் சிரித்துக் கடக்க செய்கின்றார். சர்ச்சைக்குரிய விடயத்தை காமாட்சியின் தலையில் போட்டுவிட்டு மீனாட்சி மீனாட்சி என்னாச்சு என்னாச்சு என்று தன்னை கடவுளாக்குகின்றார். அதில் சிரிப்பும் இருக்கின்றது. அதே நேரம் நாங்கள் இப்பொழுது கதைக்க வரும் விடயமும் இருக்கின்றது. அது என்னவென்றால் சொல்லக்கடினமான விடயங்களையும், சொன்னாற் தலைபோகும் விடயங்களையும், சர்ச்சைக்குரிய விடயங்களையும் சிரித்துச் சிரித்து சொல்லுவது.

கார்ட்டூன் மரபு என்பது இங்கிருந்துதான் தொடங்குகின்றது. நவீன கார்ட்டூன்கள் ஆங்கில மரபிலிருந்து தொடங்கியிருக்கலாம். ஆனால் கார்ட்டூன் மரபு என்பது அரச சபை விபூசனர்களிடம் இருந்து வந்தது. விகடகவி விபூசனன் என்ன செய்வான் என்றால், அரசனுக்கு நக்கலடிக்க வேண்டும் ஆனால் கொஞ்சம் பிசகினாலும் தலைபோய்விடும். வெட்டிப் போடுவார்கள். அரசனை நக்கலடிக்கவும் வேண்டும், விமர்சனம் செய்யவும் வேண்டும். அதே நேரம் தலைபோகாமலும் சொல்ல வேண்டும். அதற்கு அவன் எடுத்துக் கொண்ட விடயம் தான் சிரிப்பு. சிரிப்பதுபோல அவன் அரசனுக்கு தட்டிவிட்டு போய் விடுவான்.  சில இடங்களில் அரசசபை விபூசனர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். தலைபோன இடங்களும் இருக்கின்றன. 

கார்ட்டூன் என்பது ஒரு கலை வெளிப்பாடு. முதலாவதாக அது ஒரு ஓவியம். இரண்டாவதாக அது ஒரு அரசியல் விமர்சனம். கருத்து மட்டும் வரமுடியாது. கருத்து சிரிக்கத்தக்க வகையில் சொல்லப்பட வேண்டும். கார்ட்டூனிஸ்ட்டை எடிட்ரோரியல் ஆட்டிஸ்ட்  என்று சொல்லுவார்கள். எப்பொழுதும் எடிட்ரோரியல் கொலத்திற்கு பக்கத்தில் தான் கார்ட்டூனைப் போடும் மரபு ஆங்கில பத்திரிகைகளில் உண்டு. பத்திரிகை நடத்துகின்றவரின் அரசியலைக் கூட அது பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறும் கருத்து மட்டும் தந்தால் அதை கார்ட்டூன் எனச் சொல்ல முடியாது. இந்த அடிப்படையில் சிந்தித்தால் முதலாவதாக அது ஓர் ஓவியமாக இருக்க வேண்டும். ஒரு கலைவெளிப்பாடாக இருக்க வேண்டும். இதனால் தான் செல்வன் கார்ட்டூனிஸ்ட் ஆக வர முடிந்தது. இரண்டாவதாக கார்ட்டூன் ஒரு அரசியல் விமர்சனம். அவர் ஒரு அரசியல் சிந்தனையாளராக இருந்தால் தான் ஒரு கார்ட்டூனிஸ்ட் ஆக இருக்கலாம். இந்த இரண்டு அம்சங்களும் முக்கியம். 

இப்படிப் பார்த்தால் கார்ட்டூனுக்குள் விகடமும் இருக்கின்றது. விமர்சனமும் இருக்கின்றது. எனவே அதனை வெறும் கருத்தோவியம் என்று சொல்ல முடியாது. கேலிச்சித்திரம் என்றும் சுருக்க இயலாது. கேலி கருத்து இரண்டும் இணைந்த ஓர் கலைப்படைப்பு. அங்கே விகடம் இருக்கின்றது விமர்சனமும் இருக்கின்றது. அதனை நாங்கள் விகட விமர்சன ஓவியம் என்று தான் அழைக்கலாம். கார்ட்டூனுக்கு நிகரான தமிழ்ச் சொல் இல்லை. கார்ட்டூன் மேற்கத்தேய மரபிலிருந்துதான் கிடைக்கின்றது. ஆனால் அவர்கள் அந்த கலைகளின் வேர்களை அரசசபையின் விபூசனர்களிடமிருந்து கண்டு பிடிக்கின்றார்கள்.

ஒரு பிரஞ்சு பழமொழி இருக்கின்றது. எங்களுடைய ஊரில் அரசியல் என்று ஒன்று இல்லை என்றால் சிரிக்கவே விடயம் இல்லை. ஒப்பீட்டளவில் கடந்த பத்தாண்டுகாலம் கூட சிரித்திருக்கின்றோம். கடந்த பத்தாண்டு காலமாக தமிழ் தலைவர்களை முகநூலில் மிகவும் மோசமாக கிழிச்சு எடுத்திருக்கின்றோம். இதற்கு முன்னர் தமிழ் தலைவர்களை இப்படி கிழிச்சு எடுத்ததில்லை. இருக்கின்ற எல்லா மிருகத்தின் தலைகளையும் பூட்டி தமிழ் தலைவர்களை மிக மோசமாக அவமானப்படுத்தியிருக்கின்றோம். ஆனால் அதற்கு முன்னர் அப்படி விமர்சனங்கள் இருந்ததில்லை. 

அந்தக் காலகட்டத்தில் தான் நான் கார்ட்டூனிஸ்ற் ஆக இருந்தேன். குறிப்பாக திசை பத்திரிகை காலத்தில் நான் கார்ட்டூன்களை வரைந்தேன். அப்பொழுது எதை வரையலாம். யாரை வரையலாம் என்பதில் எங்களுக்கென்று சுய தணிக்கைகள் இருந்தன. நாங்கள் யாரை வரையக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். விருப்பத்தின் பெயரிலும் அப்படி இருந்தோம். நிர்ப்பந்தத்தின் பெயரிலும் அப்படி இருந்தோம்.இந்திய அமைதிப்படையின்  காலகட்டத்திலும்  வரைந்தேன். அக்காலகட்டத்தில் வெவ்வேறு பெயர்களில் கார்ட்டூன்களை வரைந்தேன். வெவ்வேறு பெயர்களில் வரைய வேண்டிய தேவை இருந்தது. பிறகு ஈழநாதத்திலும் கொஞ்சக் காலம் வரைந்தேன். பிறகு விட்டுவிட்டேன். ஏனென்றால் அது வரையறுக்கப்பட்ட ஒரு பிரதேசம். ஒரு கட்டத்திற்கு மேல் நாங்கள் எல்லோரையும் எல்லாத்தையும் சொல்ல முடியாது.பெரும்பாலும் சொல்வார்கள் கார்ட்டூன் என்றவுடன் இணைந்த ஒரு வார்த்தை வரும் caricature என்று. அது மிக முக்கியமான ஒரு வார்த்தை. caricature என்பது நாங்கள் வரைய எடுத்துக் கொண்ட நபரை அல்லது ஒரு பாத்திரத்தை கேலி தரும் விதத்தில் விகாரப்படுத்தலாம் சிதைக்கலாம் பிரிக்கலாம் என்னவும் செய்யலாம். 

எல்லாத் தலைவர்களுக்கும் ஏதாவது ஒரு அம்சம் அல்லது பல அம்சங்கள் அவர்களின் முகங்களில் இருக்கும். கார்ட்டூனிஸ்ட்டுகள் அந்த அம்சங்களை கண்டு பிடிப்பார்கள். அது சாமுத்திரிய லட்சணமாகவும் இருக்கலாம். ஆனால் அந்த லட்சணம் கார்ட்டூனிஸ்ட் இடம் சிக்கும் போது வேறொரு விதமாக வரும். உதாரணமாக ஜெயவர்த்தனாவிற்கு கொழுக்கட்டை மூக்கு இருக்கிறது. மொட்டை தலை இருக்கின்றது. பிரேமதாஸாவிற்கு சப்பை வாய் சப்பை மூக்கு இருக்கின்றது. விக்னேஸ்வரனுக்கு தாடி இருக்கின்றது. மொட்டை இருக்கின்றது. திருநீறு இருக்கின்றது. ஒவ்வொரு தலைவருக்கும் ஏதோ ஒரு அம்சம்  இருக்கிறது. கார்ட்டூனிஸ்ட்கள் அதை caricature ஆக்குவார்கள். இப்படி caricature ஆக்கும் போதுதான் கார்ட்டூன் எங்களை சிரிக்க வைக்கின்றது. ஈழத்தமிழர் கார்ட்டூன் மரபில் caricature ஆக்குவது மிகக் குறைவு. அதில் தயா, அஸ்வின்  அவர்களுக்குப் பின் வந்திருக்கக்கூடிய பலரையும் கடந்து செல்வனிடம் caricature ஆக்கும் பண்பு இருக்கின்றது. எமது பலவீனமான கார்ட்டூன் மரபில் செல்வன் தான் எடுத்துக் கொண்ட அரசியல் தலைவர்களை caricature ஆக்குகின்றார். அதற்கு பிறகு விஜயசோமாவின் மிரண்டு நிற்கும் சிங்களப் பொதுமகன். தமிழ் பொது மகன் அல்ல. தமிழ் பொது மகனைக் கீறும் பொழுது திருநீறு கீறுவார். 

விஜயசோமா சிறந்த கார்ட்டூனிஸ்ட். ஆனால் இனவாதி. அவரோடு ஒப்பிடுகையில் இன்று வந்திருக்கும் அடுத்த தலைமுறை சிங்கள கார்ட்டூனிஸ்ட்கள் இனவாதிகள் அல்ல.கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னாலிகொடவும் இனவாதி அல்ல. அவர்களுடைய ஓவியங்களை youtube  இலும் கூகுளிலும் தேடிப்பாருங்கள்.  இனவாதம் இல்லாத நிறைய கார்ட்டூனிஸ்ட்கள் சிங்களத்தில் வந்துவிட்டார்கள். ஆனால்  விஜயசோமாவிடம் கைநயம் அதிகம் இருக்கின்றது. அவரது ஒவ்வொரு கோடும் நகைச்சுவை உணர்வு மிக்கதாக இருக்கின்றது. ஆனால் அதே அளவு அல்லது அதைவிட மேலாக இனவாதமும் அவரிடம் இருந்தது. எங்களுடைய கார்ட்டூன் மரபில் அவ்வளவு பலமான கோட்டோடு காரட்டூனிஸ்ட்கள்  இல்லை. 

ஆனால் தமிழக மரபில் இந்திய மரபில் உண்டு. ஆர்.கே.இலட்சுமணன் தொடங்கி மதன் வரை பலமான கார்ட்டூன் மரபு அவர்களிடம் உண்டு.மதன் கீறினால் கார்ட்டூனை பார்த்து வாய்விட்டு எங்களை அறியாமல் சிரிப்போம். ஆனால் கார்ட்டூன் மரபில் அப்படி எத்தனை கார்ட்டூன்கள் எங்களை சிரிக்க வைக்கின்றன. கருத்து இருக்கின்றது. விமர்சனம் இருக்கின்றது. கொடுப்புக்குள் ஒரு சிரிப்பு வரும். ஆனால் தனிய இருக்கும் போது என்னை அறியாமல் வாய்விட்டு சிரிக்கின்ற அளவிற்கு எங்களிடம் கார்ட்டூன்கள் வரவில்லை. வரவேண்டும். ஏன் அப்படி ஒரு பலவீனமான சிரிக்க முடியாத மரபு எங்களுக்கு வந்தது? 

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் எங்களிடம் நகைச்சுவை உணர்வு வரவில்லை. ஒரு கொடிய போர் இருந்த பொழுது எங்களின் கொள்ளளவை மீறிய போராட்டத்தை நடத்திய மக்கள் என்ற வகையில் சிரிக்க முடியாமல் இருந்திருக்கலாம். சிரிக்க எங்களிடம் நேரம் இருக்கவில்லை. சிரிக்கின்ற அந்த மரபு இருக்கவில்லை. சிரிக்கக் கூடிய வாழ்க்கை இருக்கவில்லை.ஆனால் அடுத்த பத்தாண்டுகளாகவும் நாங்கள் சிரிக்க முடியாமல் இருக்கின்றோமா? பிரச்சனை என்வென்றால் ஈழப்போர் எங்களை சீரியஸ் ஆக்கிவிட்டது. நாங்கள் குறிப்பிட்ட ஒரு தசாப்தங்களுக்கு அதிகம் சீரியஸான மக்களாக மாறிவிட்டோம். எங்களுடைய கதைகளும் கவிதைகளும் நாங்களும் சீரியஸ் ஆகிவிட்டோம். உர் என்று முகத்தை வைத்துக்கொண்டு போவோம். யுத்த களத்தில் சீரியஸாகத்தான் இருக்க முடிந்தது. பகிடிவிட்டு வாழ முடியாத வாழ்க்கை முறையில் நாங்கள் அதிகம் சீரியஸ் ஆக மாறினோம். சீரியஸ் ஆக மாற மாற சிரிக்கின்ற பண்பு குறைந்துவிட்டது. மறுதலையாக எங்களை சிரிக்க வைக்கக் கூடிய பறை சொல்லிகளும் பாடகர்களும் கார்ட்டூனிஸ்க்களும் எங்களிடம் குறைவாகவே தோன்றினார்கள். எங்களை சிரிக்க வைக்கக் கூடியவர்கள் வந்திருந்தால் நாங்கள் சிரித்திருப்போம். 

இப்பொழுதும் நிலைமை அப்படித்தான். நாங்கள் சிரிக்கக் கூடிய மக்கள் தான். ஏனென்றால் தென்னிந்திய சினிமாவைப் பார்த்தது சிரிக்கின்றோமே அது எப்படி. எங்களிடம் சிரிக்க வைக்கும் கார்ட்டூனிஸ்ட்கள் மேலும் மேலும் வரவேண்டும். எங்களுக்கு கருத்தை மட்டும் தராத அந்தக் கருத்தை ஒரு எள்ளலோடு தருகின்ற கார்ட்டூனிஸ்ட்கள் தேவை.இந்த இடத்தில் தான் நாங்கள் சுந்தரை நினைவு கூறலாம். சிரித்திரன் சுந்தர் சிரிப்புக்கு என்றே ஒரு சஞ்சிகை நடத்தினார். தமிழில் அது முக்கியமான ஒரு விடயம். சிரிக்கின்றதுக்கு என்று ஒரு சஞ்சிகை. அந்த சிரித்திரனில் அவர் பெருமளவிற்கு அரசியல் விமர்சனங்களை விடவும் சமூக விமர்சனங்களைத் தான் முன் வைத்தார். அவருடைய காலமும் அதுதான். 

அரசியல் விமர்சனம் பிறகுதான் வரத்தொடங்குகின்றது. தன் சமூகத்தை அவர் போதிய மட்டும் விமர்சித்தார். அவர் சமூகத்தை விமர்சிப்பதற்கு பொதுக் குறியீடுகளாக வைப்பதற்கு மனிதர்களை கண்டுபிடித்தார். மிஸ்ரர் டாமோதிரன் மிஸ்சிஸ் டாமோதிரன் இப்படி நிறையப் பேரை கண்டுபிடித்தார். கண்டுபிடிக்கப்பட்ட அந்த குறியீட்டு மனிதர்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஊடாக சுந்தர் சமூக விமர்சனங்களை முன் வைத்தார். ஆனால் அவர் வரைந்த பெரும்பாலான கார்ட்டூன் மாந்தர்கள் பொது மனிதர்கள். இன்ன அரசியல்வாதி இன்ன தலைவர் என்று சொல்லக் கூடிய பாத்திரங்களை அவர் வரைந்தது குறைவு. அவருடைய காலத்தில் அவர் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்று கிட்டத்தட்ட  பத்தாண்டுகளாக எல்லாமே திறந்துவிடப்பட்டிருக்கிறது முகநூலில் ஒரு போலி அடையாளம் (fake id) இருக்கும் என்றால் போட்டோசொப் தெரியுமென்றால் தலைவர்களை வேண்டியமட்டும் விமர்சிக்கலாம் என்ற ஒரு நிலை வந்துவிட்டது. 

இன்று கார்ட்டூனிஸ்ட்கள் பலர் போலி அடையாளங்களுடன்தான்பெருமளவு வரைந்து கொண்டிருக்கின்றார்கள். இன்று அப்படி ஒரு கட்டம் வந்துவிட்டது. ஆனாலும் எமது கார்ட்டூன் மரபு எனப்படுவது விகடம் விமர்சனம் இரண்டும் இணைந்த உலக மரபோடு ஒட்டியதாக இன்னும் செழிப்புற வேண்டியிருக்கின்றது. ஒரு புத்திசாலித்தனமான கருத்தை சொல்லித்தான் சிரிக்க வைக்க வேண்டும் என்றில்லை. ஒரு சின்ன செயலை போதும் எங்களை சிரிக்க வைத்துவிடும். ஆர்.கே.லக்ஸ்மன் அதைச் செய்தார். மதன் அதை செய்தார். விஜயசோமா  அதைச் செய்தார். ஒரு குட்டி இழுவையிலே உடனே சிரிப்பு வரும். கார்ட்டூனில் பாத்திரங்கள் கதைக்கின்ற உரையாடல் முக்கியமே இல்லை. ஓவியம் பேசுமென்றால் உரையாடலுக்கு முக்கியத்துவம் குறைவு. ஆனால் சிரித்திரம் சுந்தரிடம் எப்பொழுதும் ஓவியத்தைவிட உரையாடலுக்கே முக்கியத்துவம் கூட. இந்த மரபு இன்று வரை எங்களிடம் இருக்கின்றது. கார்ட்டூனிஸ்ட் ஓவியராக முழு வெற்றி பெற வேண்டும். அவர் ஓவியத்துக்குள்ளாளேயே பேசத் தொடங்க வேண்டும். இது மிக முக்கியம். நாங்கள் பயங்கரமான யுத்த காலத்தைக் கடந்துவிட்டோம். யுத்தம் எம்மை அதிகம் சீரியஸ் ஆகவே ஆக்கிவிட்டிருந்தது. அது எல்லா இடங்களிலும் சுயதணிக்கைகளையும் வெளித்தணிக்கைகளையும் பெற்றிருந்தது. எனவே தலைவர்களை விமர்சிப்பதில் சித்தரிப்பதில் எங்களுக்கு வரையறைகள் இருந்தன. 

இப்படி ஒரு காலத்தில் தான் பிரகீத் எக்கலியகொட காணாமல் ஆக்கப்பட்டார். அவர் வரைந்த கார்ட்டூனுக்காக அவர் காணமால் ஆக்கப்பட்டதாக தகவல் இல்லை. அவருடைய அரசியல் நிலைப்பாட்டிற்காகத்தான் அவர் தூக்கப்பட்டார். அவர் ஆதரித்த அரசியல்வாதிக்கு எதிரானவர்களால் அவர் காணாமலாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.  ஆனாலும் கார்ட்டூனிஸ்ட் கொடுக்க கூடிய மிகப்பெரிய விலையை பிரகீத் கொடுத்திருக்கின்றார். தன் அரசியல் நிலைப்பாட்டிற்காக ஒரு கார்ட்டூனிஸ் காணாமல் ஆக்கப்படலாம் என்ற ஒரு கெட்ட முன்னுதாரணத்தை இந்த நாடு சொல்லியிருக்கின்றது. இப்படி ஒரு பின்னணிக்குள் கீறும் பொழுது ஒரு பயம் வரும். கீறியதை ஒருக்கால் பார்த்துவிட்டு கசக்கி எறிய வேண்டி இருக்கும். அல்லது மறைத்து வைக்க வேண்டி வரும். கீறிய எல்லாவற்றையும் வெளியில் விட முடியாது. திரும்பவும் அந்த காலம் தொடங்கிவிட்டதோ எனக்கு தெரியாது. ஆனால் பிரச்சனை என்வென்றால் வெளித்தணிக்கையும் சுயதணிக்கையும் இருக்கும் வரை கார்ட்டூனிஸ்ட்டிற்கு வரையறை உண்டு. 

ஆனாலும் இந்த வரையறைக்குள்ளாலையும் மிளிர்வதுதான் கார்ட்டூனிஸ்ட். அந்த அரசியலை வெளிக்கொண்டு வருவதில்தான் கார்ட்டூனிஸ்ட்டின் வெற்றி தங்கியிருக்கின்றது.கடந்த பத்தாண்டுகளில் ஈழத்தமிழர்கள் கார்ட்டூனில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கின்றார்கள்? தமிழக சஞ்சிகைகளோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.  புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் கூட  பெரும்பாலான கார்ட்டூன்களில் இந்த நிலைமைதான் இருக்கின்றது. கார்ட்டூன் பாத்திரங்களில் கார்ட்டூன் வசனங்கள் கூட கதைக்கவில்லை. அந்த கார்ட்டூன் பாத்திரங்களை கரிக்கேச்சராக்கி எங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடிய கார்ட்டூன்கள் குறைவாக இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு பலவீனமான கார்ட்டூன் மரபில்தான் செல்வனும் எழுச்சி பெற்று வந்தான். 

ஒரு புறம் ஊடகத்துறை தத்துக்கள் நிறைந்த துறை. திரும்பவும் தத்துக்கள் வரக்கூடும் என்ற ஒரு நிலைமை வந்திருக்கின்றது. இன்னொரு புறம் பிச்சை சம்பளம் வாங்கும் துறை. வெளிஉலகிலே எது ஒன்றுக்கு கடினமாக உழைக்கின்றார்களோ அதற்குத்தான் அதிக சம்பளம். ஆனால் தமிழ்மரபில் தத்துக்கள் நிறைந்த ஊடகத்துறையில் தான் மிக பிச்சைக்காரத்தனமான சம்பளங்கள் வழங்கப்படுகின்றன. கௌரவமான சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஆனால் சரிக்கும் பிழைக்கும் அப்பால் சிங்கள மக்கள் மத்தியில் அதற்கொரு வளர்ச்சி இருக்கின்றது. கேட்டால் சொல்லுவார்கள் சேற்றுக்குள் செங்கூடை என்று. அதற்கு ஒரு பண்பாடு வேண்டும். அதற்கொரு அரசியல் அடித்தளம் வேண்டும். நகைச்சுவை கதைகளை வைத்து அவர்களை சிரிக்க தெரிந்த மக்கள் என்று சொல்வது போல கார்ட்டூன் மரபுகளை வைத்து ஒரு ஜனநாயக சமூகத்தின் இதயத்தை கண்டுபிடிக்கலாம். கார்ட்டூனை வைத்து ஒரு ஊடக செழிப்பைக் கண்டுபிடிக்கலாம்.நாங்கள் இப்பொழுதும் அரசியல் கட்டுரை எழுதுபவர்களுக்கும் கார்ட்டூன்ஸ்ட்டுகளுக்கும் அற்ப காசைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.  ஆனால் ஆனந்த விகடனில் அப்படி அல்ல. இந்திய சஞ்சிகைகளில் அப்படி அல்ல. சிங்கள சஞ்சிகைகளிலும் அப்படி அல்ல. சிங்கள ஊடகங்களில் ஊடக எழுத்தாளர்களுக்கும் கார்ட்டூனிட்டுளுக்கும் மிகச் செழிப்பாக சம்பளம் வழங்கப்படுகின்றது. நாட்டைவிட்டு ஓடும் பொழுது இக்பால்அத்தாசிற்கு நல்ல பெறுமதியான சம்பளம் வழங்கப்பட்டது. 

தனக்கு சம்பளமும் குறைவு அதேநேரம் ஆபத்தும் அதிகம் என்றிருக்கும் பொழுது அரசியல் கட்டுரை எழுதுபவர்வளும் கார்ட்டூனிஸ்ட்களும் எப்படிப் பெருகுவார்கள்? பெருகமாட்டார்கள். இது ஒரு அடிப்படை சிக்கல். இந்த சவால்களால் தான் நான் கொஞ்சக்காலம் வரைவதை கைவிட்டேன். செல்வன் தொடர்ந்தும் வரைந்து கொண்டிருக்கின்றார். இந்த சவால்களை எல்லாம் தாண்டி உலகத் தரத்திற்கு ஏற்ப கார்ட்டூன் எனப்படுவது முதலாவதாக கலைப்படைப்பு இரண்டாவதாக அது ஓர் அரசியல் விமர்சனம் என்பதை நிரூபிக்கும் விதத்தில் நாங்கள் எங்கள் உச்சங்களை அடைய வேண்டும். வடிவேலுவின் நகைச்சுவையை பார்க்கும் பொழுது எங்களை அறியாமலே வாய்விட்டு சிரிப்பதை போல ஒரு கார்டூனை பார்க்கும் பொழுது நாங்கள் வாய்விட்டு சிரிக்கும் வளர்ச்சிக்கு நாங்கள் போக வேண்டும். அப்படி வளர்ச்சிக்கு போகும்பொழுது இன்னொரு பக்கமாகப் பார்த்தால் எமது அரசியல் ஜனநாயக செழிப்பையும் நிரூபிப்பதாக அமையும்.

தொகுப்பு: ஆதிரன்- 

மாசி 2020 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.