ஆசிரியர் தலையங்கம் முடமாக்கப்பட்ட நிலையில் அரசியல் தீர்வு

நிமிர்வு தனது பயணத்தில் நான்காவது ஆண்டை ஆரம்பித்துள்ளது.  இம்மாதாந்த சஞ்சிகை தொடங்கப்பட்ட நாளிலிருந்து தமிழர் அரசியலில் பெரும் மாற்றங்கள் நடந்து விட்டன. இனப்பிரச்சனையைத் தீர்க்கவென கூட்டமைப்பினர் கடந்த அரசுடன் சேர்ந்து புதிய யாப்பை தயாரிக்க முற்பட்டனர். அதன் எதிர்விளைவாக சில தமிழ்க்கட்சிகளும் வெகுசன அமைப்புக்களும் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கினர். 

இன்று தமிழ் மக்கள் பேரவையில் இருந்த கட்சிகள் ஆளுக்கு ஆள் ஒவ்வொரு திசையில் பிரிந்து நிற்கின்றனர். இதனைப் பார்த்து வெகுசன அமைப்பினர் விரக்தியடைந்து நிற்கின்றனர்.  கூட்டமைப்பினரோ மீண்டும் ஏமாற்று அரசியலுக்குத் தயாராகி வருகின்றனர்.  இவ்வாறான நிலமையில் தமிழ்த் தேசத்தின் நலன்களை இக்கட்சிகள் தமது சுயநலத்துக்காக தாரைவார்த்துக் கொடுப்பதை தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.  அதற்கு வெகுசன அமைப்புகளுடன் சேர்ந்து தொடர்ந்தும் குரல் கொடுக்க நிமிர்வு சுயசங்கற்பம் பூண்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வைக்காண வேண்டும் என்கிற விடயம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. அத்தீர்வுக்காக அகிம்சை வழியிலும் ஆயுதப்போராட்ட வழியிலும் தமிழ்த் தரப்பினர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த சனாதிபதித்தேர்தல் தமிழ்த்தரப்பினர் தீர்வு கோரி இனிமேலும் சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா என்ற பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.  சிறுபான்மையினரின் ஆதரவு இன்றி பெரும்பான்மையினரின் வாக்குகளை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கையில் ஆட்சி அமைக்கலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு வேண்டியது கட்டற்ற பேரினவாதம் மட்டுமே என்பதும் பறைசாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இனி என்னவாகும் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தமிழருக்கு அரசியல் தீர்வு என்ற ஒன்று தேவையில்லை, வெறுமனே பொருளாதார நலம் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களை மட்டும் செய்தால் போதுமானது என்று பல இடங்களில் தெளிவாகவே கூறிவிட்டார் சனாதிபதி கோத்தபாய ராஜபக்ச. பௌத்த பெருந்தேசியவாத சிந்தனைப் போக்கின் ஒட்டுமொத்த குறியீடாக இன்று கோத்தபாய திகழ்கிறார். அவரின் செயற்பாடுகளும் அவ்வாறே உள்ளன.

நல்லாட்சி அரசின் காலத்தில் தொடங்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை திரும்பவும் ஆரம்பிக்க வேண்டும் என தமிழ்க்கட்சிகள் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. அந்த அழுத்தங்களை வழங்குவதற்கு புதிய வடிவங்களை நாம் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.  பாராளுமன்ற அரசியலினூடாக அந்த அழுத்தங்களை வழங்க முடியும் என்று நினைப்பது பேதமை என்று மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.  ஆயினும் தமிழ்த்தரப்பினர் தேர்தல்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.  அதனாலேயே சனாதிபதித் தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளர் தேவை என்ற எம் மக்களின் கோரிக்கைக்கு நிமிர்வு ஆதரவாக இருந்தது.

சிங்கள அரசு இன்று ஜெனீவா தீர்மானத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறது. இதனை ஜெனீவாவில் உள்ள மனித உரிமைக் கவுன்சிலுக்கு நேரடியாக செல்லும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அங்கு தெரிவிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. மேற்குலகம் அரசுமீது அழுத்தம் கொடுப்பதற்கு ஒரு வழியாக ஜெனீவாத் தீர்மானத்தை இதுவரை பயன்படுத்தியது. அந்த வழி மூடப்படுமானால் மேற்குலகம் தனது நலன்களுக்காக வேறு வழிகளை திறக்க முற்படும். அந்தச் சந்தர்ப்பத்தை நாம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கு அடிப்படையாக வேண்டப் படுவது தமிழரின் ஐக்கிய முன்னணி.  அது இல்லையாயின் மேற்குலகம் தமது நலன்களை மட்டும் முன்னெடுக்க பிரிந்து கிடக்கும் தமிழ்க் கட்சிகளை இலகுவாகப் பயன்படுத்திக் கொள்ளும்.குறைந்தபட்சம் தமிழ் தேசத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை வைத்தாவது எமது அரசியல் கட்சிகள் ஒன்று படவேண்டும் என நிமிர்வு கோரிக்கை வைக்கிறது.

மாசி 2020 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.