ஆவணப்படுத்தலில் தோற்றுக் கொண்டிருக்கிறோம்

Add caption


காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டம் இடையிடையே தொய்வடைந்தாலும் 1000 நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் தொய்வுக்கு போராட்டங்களின் மீது ஊடகங்களின் பார்வை அவ்வப்போதுதான் திரும்பியமையும்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்குலகின் செல்லப்பிள்ளையான மைத்திரி - ரணில் அரசைத் தத்தெடுத்துக் கொண்டு அந்த அரசைப் பாதுகாக்கும் அரசியலை செய்தமையும் சில காரணங்கள்  எனலாம். தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் ராஜ்குமார் நிமிர்வுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார்.   

ஆனால் இன்று கோத்தபய ராஜபக்ச பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அவர் பெரும்பான்மை மக்களை மட்டுமே திருப்திப்படுத்தும் சிங்களப் பெரும் தேசியவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் முனைப்புக் கொண்டிருக்கிறார். தமிழ் மக்களுக்கோ "போராடினால் தான் உண்டு வாழ்வு" எனும் தக்கனப் பிழைக்கும் சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் போராட்டங்கள் மீண்டும் வலுப்பெறும் நிலைமையே உருவாகி இருக்கிறது.

 ஆட்சிமாற்றத்தின் பின் பிராந்திய சர்வதேச கவனங்களை இப்போராட்டம் ஈர்த்து வருகின்றது. வவுனியா மாவட்ட போராட்டச் சங்கத் தலைவி திருமதி ஜெயவனிதாவை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைத்து "இனியும் நாட்டுக்குள் இந்தப் பிரச்சினையை தொடர விட முடியாது. முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம்" என்று அரச இயந்திரத்தின் ஒரு அலகு கூறியுள்ளது. இந்தப் போராட்டங்கள் கோத்தாபய அரசுக்கு எந்தளவுக்கு நெருக்கடியை உண்டு பண்ணியுள்ளன என்பதை இதன் மூலம் அளவிட முடியும்.

"காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் இறந்து விட்டனர்" என்று கோத்தபய கூறியிருக்கிறார். அவர்கள் எந்த நீதி பரிபாலனத்தில் முன்னிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்கள்? எந்த நீதிபதிகள் குழு அதைச் செய்தது? நாட்டின் எந்தச் சட்ட சரத்துகளின் கீழ் அவர்களுக்குத் மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது? அவர்களது உடல்களுக்கு என்ன நடந்தது? இப்படித் தொடர் கேள்விகளுக்கு வலிந்து பொறுப்புக்கூறும் கடமைப்பாடு உடையவராகி இருக்கிறார் கோத்தபாய. மறுவளமாக குறித்த கூற்றின் மூலம் அவர் இலங்கையின் நீதித்துறை சுயாதீனத்தன்மை அற்றது. அதற்குள் அரசினது மட்டுமல்ல  இராணுவத்தினரதும் தலையீடுகள் உண்டு என்பதை ஏற்றுக் கொண்டு விட்டார். ஆகவே "ஓநாய்களிடம் இருந்து கோழிகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்" என்று நம்புவதற்கு தமிழர்கள் ஒருபோதும் தயாராக இல்லை.

இதனையே  நாங்கள் திரும்பத் திரும்ப தமிழ் அரசியல் தலைமைகள், புத்திசீவிகளிடம் தொடர்ந்தும் ஒரு கோரிக்கையாக விடுத்து வருகிறோம். கடைசி வரைக்கும் இலங்கைக்குள் இந்தப் பிரச்சினையை தீர்த்து விட முடியாது. அறிவார்ந்த ஒரு பொறிமுறையை அறிவற்ற ஒரு நாடு எப்படிக் கையாளும்? சந்திரிகா, ரணில், மைத்திரி, மகிந்த, கோத்தாபய, விமல் வீரவன்ச என்று ஆளும் அரச அதிகார மையத்தின் அறிக்கைகள் இதைத்தானே எமக்கு எடுத்தியம்புகின்றன. ஆகவே அதற்கான யோக்கியமோ, அறிவோ, ஆளுமையோ இலங்கைக்கு கிடையவே கிடையாது. எங்களுக்குத் தேவை நிலைமாறு காலகட்ட நீதியல்ல, பரிகார நீதியே எங்களுக்கு இப்போது தேவையாக உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது தமிழ் மக்களின் வாழ்வுரிமையுடன் தொடர்புபட்டது. இந்த வாழ்வுரிமை பிரச்சினை தேசிய இனப்பிரச்சினைக்குள் அடங்குகிறது.  

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக்கூறல், அரசியல் கைதிகளின் விடுதலை,  ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்து மீள்குடியேற்றத்துக்கு வழிவகை செய்தல் இப்படி தமிழ் மக்களின் அத்தியாவசிய எந்தப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் மூளையின் அளவு இந்தச் சின்னஞ் சிறிய தீவுக்குப் போதாது என்றே கூறலாம். இந்த மூளைக் குறைபாடே 20 ஆம் நூற்றாண்டில் மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நடத்தி முடித்திருக்கிறது.   

தமிழர்களுக்கு அபிவிருத்தியை மட்டும் செய்வோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் ஜனாதிபதி கோத்தபய கூறுகிறார். ஆனால் தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி என்பது பெயர்ப் பலகைகளில் மட்டுமே தொங்கிக் கொண்டிருக்கிறது. மாபெரும் இனப்படுகொலையில் முடிந்த இனப்பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடி தவறாக புரிந்து வைத்திருக்கிறார். தமிழ் மக்களின் விடுதலை அரசியலை வெறும் அபிவிருத்தி (சலுகை) அரசியலால் இட்டுக்கட்டி சரி செய்து விடலாம் என்று தவறாக கணக்குப் போடுகிறார். போரின் விளைவை பார்க்கும் அவர் போருக்கான காரணத்தை தேடிக்கண்டறிய தவறுகிறார்.

2009 க்குப் பின்னர் தமிழ் மக்கள் திட்டமிட்டு பொருளாதார ரீதியாகவும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதுவும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நுண்நிதிக் கடன்கள் என்கிற பெயரில் பல்வேறு நிதி நிறுவனங்கள் வகை தொகையின்றி தமிழர் தாயகத்தில் கடை விரித்தன. இவற்றின் ஒரே இலக்கு பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தான். இதனால் குடும்ப கடன் சுமைகள் அழுத்தி தற்கொலைகள் அதிகரித்தன. இந்தக் கடன்களை தள்ளுபடி செய்ய பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாகவும், பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகவும் ஐ.நாவில் சாட்சியங்கள் பதிவாகியுள்ளன. போதாக்குறைக்கு தமிழ் மக்களின் வளம் கொழிக்கும் விவசாய விளைநிலங்களையும், மேய்ச்சல் தரவைகளையும் இராணுவம் கையகப்படுத்திக் கொண்டு பாரிய பண்ணைகளை நடத்திக் கொண்டிருப்பது மட்டுமல்ல, உள்ளூர் சந்தை வாய்ப்புகளையும் கைப்பற்றிக் கொண்டு விட்டனர். தென்னிலங்கையிலிருந்து சிங்கள மீனவர்கள் அழைத்து வரப்பட்டு இராணுவ பாதுகாப்போடு வாடிகள் அமைத்து வருடக்கணக்காக தங்கி நின்று முத்துக் குளித்தல், கடலட்டைப் பிடித்தல், ஆழ்கடல் மீன்பிடி என்று வடக்கு கிழக்கு தமிழர்களின் கடல் வளம் முழுவதுமாக கொள்ளையடிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள், தொழில் இயந்திரங்கள், உபகரணங்களை பாவிப்பதற்கு அவர்கள் அரசால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழர்களுக்கு வருமானம் ஈட்டித்தரும் விவசாயம் - கடல் இரண்டு பெரும் தொழில் துறைகளும் இராணுவமயப்பட்டோ, பௌத்தமயமாக்கப்பட்டோ கிடக்கின்றன. இதனால் தமிழர்களின் பொருளாதாரம் அடிமட்ட நிலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. 2015 க்குப் பின்னர் வடக்கு கிழக்கின் மொத்த தேசிய உற்பத்தியும் தொடர்ந்தும் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பசி பட்டினி வறுமை தலைவிரித்தாடுகிறது. இதன் அகப்புற தாக்கங்களினால் கல்வித்துறையில் கூடியளவு அடைவுமட்டத்தை தமிழர்கள் வெளிப்படுத்த முடியவில்லை.

இத்தகைய பொருளாதார அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், திறந்து விடப்பட்டுள்ள கட்டுப்பாடற்ற போதைப்பொருள்கள் பாவனை, கட்டமைக்கப்பட்ட கலாசார திணிப்புகள் போன்ற அழிப்புக்களுக்கு மத்தியிலும் தான், ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளது போராட்டமும் கூர்ப்படைந்திருக்கிறது.


தமிழ் அரசியல் கட்சிகள் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களுக்கு பங்களிப்புச் செய்கின்றனவா?

எல்லாத் தமிழ் தேசியக் கட்சிகளும் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஒரு எல்லைக்கு மேலே ஆதரவளிக்கவில்லை. அவர்கள் அரசையும் பகைத்துக் கொள்ளாமல், பாதிக்கப்பட்ட மக்களையும் பகைத்துக் கொள்ளாமல் தமது அரசியலை முன்னெடுக்கவே விரும்புகிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொண்டால் தேர்தலில் வாக்குகளை இழக்க நேரிடும். அரசின் விருப்புக்கு மாறாக நடந்து கொண்டால் விசேட சலுகைகளையும் ஒதுக்கீடுகளையும் கவனிப்புகளையும் பெற முடியாது போகும். இதன் பொருள் யாதெனில், வெறும் உதட்டு ஆலாபனைகளால் மட்டும் இருதரப்பையும் மனம் குளிரச் செய்கிறார்கள்.

மற்றுமொரு காரணமும் உண்டு. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு நாடாளுமன்றில் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். தமிழர் தரப்பு அரசியல் தீர்வு ஏற்பாடுகளுக்காக 70 ஆண்டுகளும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காக 10 ஆண்டுகளும் காத்திருக்கிறார்கள். இதனை  யோசனை செய்து தான் பாருங்களேன். தமிழர்கள் எவரும் சிங்கள அரசாங்கத்தை, எந்தவொரு அரசியல் தீர்மானத்திற்கும் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோரை  கண்டுபிடிப்பதற்கும்  நம்பக்கூடாது என்றே நாம் சொல்லி வைக்க விரும்புகிறோம்.  

உலகின் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் உதாரணங்களையும், இறுதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஈடுபாட்டையும் பின்பற்றுவதே எமக்கு இப்போதுள்ள ஒரே வழி. ஏனைய நாடுகளில் இனப்படுகொலை மற்றும் இனத்துவேசங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது  சுதந்திரமாக இருக்கின்றனர். மற்றும் அவர்களின் முன்னாள் அடக்குமுறை எதிரிகளிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும்  நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளையும்  கொண்டுள்ளனர். கிழக்கு திமோர், தெற்கு சூடான், போஸ்னியா, கொசோவோ போன்ற நாடுகளை மேற்கூறிய  உதாரணங்களுக்காக நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

கொசோவோவின்   விசயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: 1998 முதல் 1999 வரையான மோதலில் கொசோவோவை  சேர்ந்த 13,000 க்கும் அதிகமானோர் உயிரை இழந்தனர். 20 ஆண்டுகளில், கொசோவோவில் நடந்த ஆயுத மோதல்கள் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஐ.சி.ஆர்.சி திரட்டிய தகவலில் 6,057 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 1,647 பேருக்கு என்ன நடந்தது என்று இன்னும் கணக்கிடப்படவில்லை. அதாவது கொசோவோ செர்பியாவிலிருந்து பிரிந்த பிறகு, 27 வீதம் பேர் மட்டுமே இன்னும் இனம் காணப்படவில்லை. 

போஸ்னியா விசயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: அங்கு காணாமல் போன மக்கள் தொகை  32,000 க்கும் மேற்பட்டது. இதுவரை 25,500 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 7000 க்கும் மேற்பட்டோர் இன்னும் இனம் காணப்படவில்லை. ஆகவே போஸ்னியா செர்பியாவிலிருந்து பிரிந்த பின்னர், இன்னும் 18 வீதம் பேர்  மட்டுமே இனம் காணப்படவில்லை. 

இலங்கையின் விசயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: அம்னஸ்டி இன்டர்நேஷனல்,  இந்த "காணாமல் ஆக்கப்பட்ட" மக்களில் குறைந்தது 60,000 பேர் இருக்கலாம், ஒருவேளை 100,000 பேர் வரை கூட இருக்கலாம் என்று மதிப்பிடுகிறது. அவர்கள் அரச படைகளால் கொல்லப்பட்டார்களா, அல்லது சித்திரவதைக் கூடங்களில்  அடைக்கப்பட்டார்களா என்பது அவர்களின் குடும்பங்களுக்குத் தெரியாது. காணாமல் ஆக்கப்பட்ட போது அதில் பலர் இளைஞர்கள் யுவதிகள் இருந்தனர்.

கொசோவா மற்றும் போஸ்னியா இன மாகாணங்கள் தங்கள் அடக்குமுறை ஆட்சியாளரான செர்பியாவிலிருந்து பிரிக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற பிற மேற்கத்தேய உறுப்பினர்களின் உதவியுடன் சமஸ்டி ஆட்சியுடன் தனி நாடுகளாக அவை பிரிந்து போக அமெரிக்கா முன்னோடி உதவியாக இருந்தது.

புதிதாக உருவான இந்த நாடுகளுக்கு இறையாண்மை இருந்தது. அதனுடன், காணாமல் போன தங்கள் சொந்த மக்களுக்கு என்ன ஆனது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. சில நாடுகளில் 80 வீதம் பேருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவர்களில் சிலருக்கு நல்ல செய்திகளும், சிலருக்கு மோசமான செய்திகளும் கிடைத்தன.  மொத்தத்தில் தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதனூடாக அவர்கள் ஆறுதலைத் தேடிக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

இதைத்தான் நாங்களும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்கிறோம். இவர்களுக்கு தார்மீக பொறுப்புகள் உள்ளன. இவர்கள் போரின்போது இலங்கைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளனர். இனப்பிரச்சினை காரணமாக மூண்ட யுத்தம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாமல் இனப்படுகொலையுடன் முடிந்தது. மேலும் இது பல தமிழர்களைக் காணாமல் ஆக்கியது . இந்த போரின் போது, அமெரிக்கா இலங்கை சார்பு  பக்கத்தை எடுத்துக் கொண்டது.

காணாமல் ஆக்கப்பட்ட  எங்கள் தமிழ் மக்களைக் கண்டுபிடித்து தருமாறு  இலங்கை அரசை கேட்பதை முதலில் நிறுத்துங்கள். அவர்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். இதுவே அவர்களின் போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் உலகத்திற்கு அம்பலப்படுத்தும். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டம் ஆகும். இது தேசிய  இனப்பிரச்சினைக்குள் அடங்கும். 

காணாமல் ஆக்கப்பட்டோரை  கண்டுபிடிக்க எங்களுக்கு உதவுமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை நாங்கள் கேட்க வேண்டும். தமிழ் மக்களுக்கு அதிகாரம் அல்லது இறையாண்மை இருந்தால், காணாமல் ஆக்கப்பட்ட  தமிழர்களை நாங்களே கண்டறிய முடியும். தம்மால் காணாமல் ஆக்கப்பட்டோர்  தொடர்பான சகல  விவரங்களையும், ஆவணங்களையும் கொடுக்க கொழும்பை கட்டாயப்படுத்த எங்கள் இறையாண்மை எங்களுக்கு ஒரு சட்ட கருவியை வழங்கும். இந்த விசயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், ஐ.நா.பாதுகாப்புக் குழுவும் தமிழர்களுக்கு உதவும்.

அன்பான எங்கள் தமிழ் நண்பர்களே, உணர்வாளர்களே,  தயவுசெய்து "காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைக் கண்டுபிடிக்க எங்களுக்கு சர்வதேச ஆதரவு தேவை" என்ற பொதுவான வார்த்தையுடன் அழைக்க வேண்டாம். "அமெரிக்கா  வேண்டும்” என்று கேளுங்கள். "ஐரோப்பிய ஒன்றியம் வேண்டும்” என்று கேளுங்கள். உதாரணத்துக்கு, சர்வதேச சமூகங்களின் ஒரு பகுதியாக, ஆசிய நாடுகளைச் சேர்ந்த  பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, கம்போடியா போன்றவை  அல்லது ஆப்பிரிக்க நாடுகளான  சூடான், சோமாலியா, கொங்கோ, லைபீரியா, சாட், நைஜீரியா போன்றவை,  இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட  தமிழ் மக்களைக் கண்டுபிடிக்க வருகின்றன. இந்த ஊழல் நிறைந்த நாடுகள் அனைத்தும் மில்லியன் கணக்கான டொலர்களைப் இலங்கையிடமிருந்து பெற்றுக் கொண்டு இலங்கைக்கு சாதகமான ஒரு அறிக்கையை எழுத முற்படும்.

எனவே, எங்களுக்கு உதவுமாறு அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் நாங்கள் வலியுறுத்த வேண்டும். ஈழத்தமிழர்கள் நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்துவிடுவோம். ஒன்றுபட்ட குரலுடன், தெளிவான மற்றும் உரத்த குரலுடன், நாம் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்ட  எங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உதவிக்கு வருமாறு  அழைப்பு விடுப்போம். 

இது எங்களுக்கு சுதந்திரத்துடன் நிரந்தரமான, அமைதியான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்திற்கு வழிவகுக்கும். இதேவேளை தமிழர்களுக்கு அரசியல் தீர்வை கட்டாயப்படுத்தும் இந்திய முயற்சியையும் நாங்கள் வரவேற்க விரும்புகிறோம். தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சுய ஆட்சி மற்றும் நிரந்தர பாதுகாப்பு கேட்கும் இந்தியாவின் அரசியல் தீர்வு என்பது ஒரு வரவேற்கத்தக்க செய்தி.

இந்தியா தனது இந்தோ பசுபிக் பிராந்திய சூழல் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

கடந்து போன மைத்திரி - ரணில் கூட்டரசுக் காலத்தை நீங்கள் நோக்கிப் பாருங்கள்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  புதுடெல்லிக்குச் செல்ல விரும்பவில்லை. ஏனெனில் இந்த நடவடிக்கை கொழும்பு அரசின் பார்வையைச் சேதப்படுத்தும் என்றும், சங்கடங்களை கொடுக்கும் என்றும் வழக்கறிஞர்கள் கூட்டம் ஒன்றின் போது யாழ்ப்பாணத்தில் வைத்து சுமந்திரன் எம்.பி ஏறத்தாள 2 வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். தமிழர்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக, இந்தியாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  எந்தவிதமான உதவியும் கேட்க விரும்பவில்லை. 

தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் கொழும்பு அரசை பாதுகாப்பதில் தான் ஆர்வமாக இருந்தார்கள். பல தமிழ் தேசிய அரசியற் கட்சித் தலைவர்களின் உறைவிடங்களும் கொழும்பில் தான் அமைந்துள்ளன. அவர்கள் கொழும்பு அதிகார மையத்தை திருப்திபடுத்துவதிலேயே தமது கவனத்தை குவிக்கிறார்கள். அதைப் பற்றியே அதிகம்  சிந்திக்கிறார்கள். அதைச் சுற்றியே வருகிறார்கள்.

ஈழத்தில் தொய்வுறாமல் போராடிக் கொண்டிருக்கும் உறவுகள் இறந்து கொண்டிருக்கும் அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபோதாதென்று சாட்சியங்களை ஆவணப்படுத்தாத ஒரு துயரமும் நீளுகிறதே?

பொஸ்னியாவிலும், தென்சூடானிலும் முறையே 8000, 13000 பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டு இனப்படுகொலை அரங்கேறியது. அங்கு ஐநா தலையிட்டு நீதியை பெற்றுக் கொடுத்தது. போர்க்குற்ற விசாரணை இடம்பெற்று அந்த நாடுகள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் 145,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு 22,000 பேருக்கு மேலானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ள இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை, "இனப்படுகொலையாக" அங்கே பார்க்கப்படவில்லை.  அதற்கு போதியளவு ஆதாரங்கள் இருந்தும் நாம் சரியான வகையில் திரட்சியாக அவற்றை முன்வைக்காமையே காரணம் ஆகும். அங்கேயெல்லாம் இனப்படுகொலை நடந்த போது ஒளிப்பட ஆதாரங்கள் கூட இல்லாமல் இருந்தன. ஆனால், தமிழினப் படுகொலை நடந்த போது சனல் 4 ஊடகத்தின் வலுவான ஆதாரங்கள் வெளியாகின. அதில் போருக்கென்று உள்ள அறத்தை மீறி படைகளை வழிநடத்திய சிறீலங்கா அரசின் இராணுவத் தளபதிகளே சாட்சிகளாக மாறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தனர். இறுதிநேரத்தில் போராளிக் கலைஞர்களால் பதிவு செய்யப்பட்ட பல காணொளிக் காட்சிகள் கூட இணையங்களில் வெளியாகி கொட்டிக் கிடக்கின்றன. சாட்சியங்கள் நீதிக்காகப் போராடிப் போராடியே களைப்படைந்து போய் விட்டார்கள். ஆணைக்குழுக்கள், விசாரணைக்குழுக்கள என்று அரசால் காலத்துக்கு காலம் இழுத்தடிக்கப்பட்டு சோர்வடையச் செய்யப்படுகிறார்கள். முதுமைக் கால நோய்கள், உடல் உபாதைகள் வேறு அவர்களை வாட்டி வதைக்கிறது. மரணமும் அவர்களை கொன்று தின்று விடுகிறது.

இந்த விடயத்தில் உங்கள் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில், பிறப்பால் நாங்கள் "இலங்கைத் தமிழர்" என்று குறித்து சொல்லப்பட்டிருக்கின்ற அனைவரும் குற்றவாளிகளாகவே இருக்கின்றோம். ஒரு இனமாக திரண்டு சாட்சியங்களை ஆவணப்படுத்த தவறியதற்காக, உலகத்தின் ஏனைய இன மக்களுக்கு முன்னால் தோற்றுப்போனவர்களாக, அவமானத்துக்கும் பரிதாபத்துக்கும் உரியவர்களாகவே நாங்கள் இருக்கிறோம். நடைபெற்று முடிந்த போரில் ஒருமுறை தானே தோற்றுள்ளோம். ஆனால், சாட்சியங்களை ஆவணப்படுத்தி நடைபெற்றது இனப்படுகொலை தான் என்று நிறுவுவதில் மறுபடியும் மறுபடியும் தோற்றுக் கொண்டிருக்கிறோமே. நாங்கள் வாழும் காலத்தில் செய்த மிகப்பெரும் தவறாகவும் இது இருக்கப் போகின்றது. ஈழத்தமிழர்களின் மிகப்பெரிய குறைபாடுகளில் இதுவுமொன்று. சாட்சியங்களை ஆவணப்படுத்த தவறியதற்காக நாங்கள் எல்லோரும் பெருத்த குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் கூனிக்குறுகி வாழ்ந்து விட்டே செத்துப் போகப்போகிறோம்.

இந்த பழிச்சொல் ஈழத்தமிழர்கள் எவருக்குமே வேண்டாம். யாரும் யார் மீதும் சுட்டு விரல் நீட்டி குற்றம் சாட்டாமல் எல்லோரும் இந்த குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டு, இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டாலே போதும். ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோரின் தொடர் போராட்டங்கள் மூலமாவது இந்தக் குறைபாட்டை நாங்கள் ஓரளவுக்கு பதிவு செய்து நிவர்த்தி செய்திருக்கிறோம். சர்வதேச ஊடகங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தாய்மாரின் குரல் பதிவுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் இது முழுமைப்படுத்தப்பட்ட, திருப்திகரமான ஆவணப்படுத்தல் என்று சொல்லிவிட முடியாது. இது ஒரு கஸ்டமான நிதிச் செலவுகளைக் கொண்ட பணியும் கூட. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவைப் போன்ற களச்செயற்பாட்டு தளத்தில் உள்ள, நிதி வரத்துகள் அற்ற, சிவில் சமுக மனித உரிமை அமைப்புகள் இதைச் செய்வதில் அதிக இடர்நிலைகள் உண்டு. வாகனப் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, பணியாட்கள் தொகுதி, தொழில்நுட்ப உபகரணங்கள், காகிதாதிகள், அச்சகப் பிரதிகள் என்று இன்னபிற செலவீனங்களை குறிப்பிடலாம்.

இந்த விடயத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதயசுத்தியோடு செயற்பட்டிருந்தால், அவர்கள் மாவட்டங்கள் தோறும் தமது  அலுவலகங்களை நடத்த அரசு கொடுக்கும் நிதியிலேயே இந்தப் பணியையும் திறம்பட செய்து முடித்திருக்கலாம். தங்களது மாவட்ட அலுவலகங்களிலேயே மாவட்ட வாரியாக சாட்சிகளைத் திரட்டி முழுமையான ஒரு ஆவணப்படுத்தலை செய்திருக்கலாம். இதற்கென்று  புலம்பெயர் நாடுகளிலிருந்தோ தமது சட்டைப் பைகளுக்குள்ளிருந்தோ விசேட நிதி ஒதுக்கீடுகளையோ, நிதி வரத்துகளையோ எதிர்பார்த்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. இந்த விடுதலை அரசியலை செய்வதை விட்டு விட்டு அவர்கள் தேர்தல் அரசியலிலேயே தமது அக்கறையை காட்டுகிறார்கள்.

வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு, பௌத்த விகாரைகள் நிர்மாணம், போரில் கடும் காயமுற்றோர், சட்ட விரோத குடியேற்றங்களுக்கான காடழிப்பு, தடுப்பில் உள்ள அரசியல் கைதிகள், விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இப்படி எந்த விவரத்தை நீங்கள் கேட்டாலும் இவர்களிடம் முழுமையான தகவல் திரட்டு கிடையவே கிடையாது. வெறும் பத்திரிகை ஊடக அறிக்கைகளில் மட்டுமே தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது நாளும் எதுவும் செய்யவில்லை. இனியும் இவர்கள் செய்யப் போவதுமில்லை. எனவே புலம்பெயர் உறவுகள் ஆண்டுதோறும் தமிழீழ தேசிய மாவீரர் நாளை ஒவ்வொரு துயிலுமில்லங்களாகப் பொறுப்பெடுத்து நடாத்துவதைப் போல மாவட்ட ரீதியாக பொறுப்பெடுத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆவணப்படுத்தல்களுக்கும் உதவினால், நாங்கள் சாட்சியங்களை திரட்டி இங்கு நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று மெய்ப்பிக்க முடியும்.


 இசைப்பிரியன்-

மாசி 2020 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.