பெண்களுக்கான முன்னேற்றப்பாதையில் விடிவெள்ளி


யாழ்ப்பாணம் வடமராட்சியில் உதயமாகிய விடிவெள்ளி பனைசார் உற்பத்தியாளர் சங்கம்தனது ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. 

பெயருக்கேற்றால் போல் கணவனை இழந்த பெண்கள், வாழ்வாதாரத்தை இழந்த பெண்களுக்கான விடிவெள்ளியாக இந்த அமைப்பு செயற்பட்டு வருகிறது. பனைசார் தொழிலாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் மத்திய நிலையமாகவும், புதிய முயற்சியாளர்களுக்கு பன்னவேலைப் பயிற்சிகளை வழங்கும் மையமாகவும் செயல்படுகிறது.  முற்றிலும் பெண்களைத் தலைமையாகவும், அங்கத்தவர்களாகவும் கொண்டியங்கும் அமைப்பாக உள்ளது.



2019 மாசி மாதம் 8 ஆம் திகதி இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. விடிவெள்ளி பனைசார் உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாகிகளிடம் பேசிய போது, அங்கத்தவர்களிடம் இருந்து வந்த சந்தாக்காசுலேயே இந்த நிலையத்தின் திறப்பு விழாவைக் கூட நிகழ்த்தினோம் என்று பெருமையாகத் தெரிவித்தார்கள்.

உடுப்பிட்டி இமையானன் மேற்கு (J - 359) கிராமசேவையாளர் சுதர்சனின் எண்ணக்கருவில் தான் இந்த அமைப்பு உதயமாகியது.  இப்போது சங்கத்தில் 60 பேர் வரையிலான பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் 20 பெண்களுக்கு மேல் பனைசார் பொருள்களை உற்பத்தி செய்து எமக்கு தருகிறார்கள்.  மாதத்துக்கு ஒருமுறை கூட்டம் வைத்து அங்கத்தவர்களின் கருத்துக்களை கேட்டறிவோம். ஆலோசனைகளையும் வழங்குவோம்.



உடுப்பிட்டி இமையானன் பிரதேசத்தில் இயங்கிவரும் இச்சங்கத்தில் இமையானன் மேற்கு கிராம அலுவலர் பிரிவு , கரணவாய் மேற்கு கிராம அலுவலர் பிரிவு (J - 345), இமையானன் (J - 358) பிரிவுகளில் வசிக்கும் பெண்கள் இந்த சங்கத்தில் அங்கத்தவர்களாக உள்ளனர். குறித்த கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள கிராமசேவையாளர்களும் எங்களது சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர். தலைவராக குணசிங்கம் நதிராணி, செயலாளராக இராசரத்தினம் விஜயகலா, பொருளாளராக சபாரத்தினம் சுலோசனா ஆகியோர் சேவையாற்றி வருகின்றோம். 

காலை 9 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரையும் பிற்பகல் 3 மணியில் இருந்து 6 மணிவரையும் சங்கத்தின் விற்பனைக்கூடம் திறந்திருக்கும். இந்நேரத்தில் பனைசார்ந்த பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். இச்சங்கத்தின் அங்கத்தவர்கள் பலரும் தங்கள் வீடுகளில் இருந்தே பனைசார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து சங்கத்தில் விற்பனைக்காக கொடுக்கின்றனர். அவர்கள் குறித்த பொருட்களுக்காக நிர்ணயிக்கும் விலையில் இருந்து சிறு தொகையினை சங்கத்தின் வளர்ச்சிக்காகப் பெற்றுக் கொள்கிறோம். சங்கம் ஆரம்பித்த காலங்களில் எமது அங்கத்தவர்களிடம் இருந்து பொருட்களைப் பெற்று விற்பனை செய்ததன் பின்னர் தான் பணத்தை வழங்குவோம். ஆனால் இப்போது பொருட்களுக்குரிய பணத்தை வழங்கித்தான் உற்பத்திகளைப் பெற்றுக் கொள்கிறோம்.



எமது பனைசார்ந்த உற்பத்திகளை எம்மவர்களும், வெளிநாட்டவர்களும், சிங்கள மக்களும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதால் எமக்கு விற்பனை என்பதே பிரச்சினையாக இல்லை. எங்களுக்கு பனை அபிவிருத்திச் சபையினரும் ஒத்துழைப்பாக இருந்து வருகின்றனர். எமது சங்கம் பனை அபிவிருத்திச் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கணக்காய்வுக்காக, களஆய்வுக்காக பனை அபிவிருத்திச்சபை உத்தியோகத்தர்கள் வந்து பார்வையிடுவார்கள். இதையும் விட கரவெட்டிப் பிரதேசசெயலகத்தில் இருந்து மாதத்துக்கு மூன்று தடவைகள் உத்தியோகத்தர்கள் கண்காணிப்புக்காக வருவார்கள்.

கரவெட்டிப் பிரதேச செயலகத்தால் எமது சங்க உறுப்பினர்கள் 20 பேருக்கு சிரட்டைகளில் இருந்து பல்வேறு கைவினைப் பொருட்களை செய்யும் பயிற்சியினை 20 நாட்கள் வழங்கினார்கள். நிறுவனம் ஒன்றும் 3 நாட்கள் பயிற்சியினை வழங்கி உபகரணங்களையும் 15 பேருக்கு வழங்கினர்.  இப்போது பயிற்சியின் பின்னர் எம் அங்கத்தவர்கள் செய்த பல்வேறு சிரட்டைகளிலான அழகிய கைவினைப் பொருட்கள் எமது நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை விற்பனைக்காக கொழும்புக்கும் செல்கின்றன.    வெளிநாடுகளுக்கும் செல்கின்றன. அவற்றுக்கு நல்ல கிராக்கி உள்ளது.



பனை அபிவிருத்திச் சபையின் கண்காட்சி, சிறுகைத்தொழில் முயற்சிப் பிரிவின் கண்காட்சி மற்றும் இங்கு இடம்பெறுகின்ற பல்வேறு கண்காட்சிகளில் எமது அங்கத்தவர்களின் உற்பத்திகளை காட்சிப்படுத்தி இருக்கின்றோம்.  இதனால் புதிய சந்தை வாய்ப்புக்கள், புதிய புதிய வாடிக்கையாளர்களினதும் தொடர்புகளும் எங்களுக்குக் கிடைக்கின்றன.

பனை அபிவிருத்திச் சபையில் இருந்து உற்பத்திகளை கொள்வனவு செய்ய மாதத்துக்கு இரண்டு தடவைகள் வருவார்கள். அதேபோல் கொழும்பிலிருந்து வரும் தனியார் நிறுவனத்தினரும் உடன் பணத்தினை தந்து கொள்வனவு செய்து வருகின்றனர்.  மழைகாலங்களான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் தான் எமக்கு விற்பனை வாய்ப்புக்கள் குறைவாக இருக்கும்.

எங்களுக்கு உள்ளூரில் நீத்துப் பெட்டி, தட்டுப் பெட்டி போன்ற பொருள்கள் தான் அதிகம் விற்பனையாகின்றன. ஆனால், வெளியிடங்களில் இருந்து பெரும்பாலும் அழகிய கூடைகள், அழகிய பனை சார்ந்த பொருட்களுக்கே கொள்வனவு ஆணைகள் வருகின்றன.



பனம் பொருட்களை  உருவாக்கும் மூலப்பொருளான சார்புஓலை எடுப்பதில் சிக்கல் உள்ளது.  இப்போது ஒரு சார்பு ஓலையின் விலையும் 40 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பனைமட்டைக்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது.  எமது பிரதேசங்களில் பனைமரங்கள் வகைதொகையின்றி தறிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பனைசார்ந்த தொழில்கள் எதிர்காலத்தில் என்னவாகுமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பொருட்களைச் சுமந்து செல்லும் கூடைகள் போன்ற நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த பனையுற்பத்திப் பொருட்களை நாங்கள் நான்கு பேர் தான் உருவாக்கி வருகின்றோம். அதற்கு சிங்கள மக்கள் மத்தியிலும் நல்லவரவேற்பு உள்ளது.

இப்பொழுது மாலை 3 மணியில் இருந்து 5.30 மணிவரை பன்னவேலை (ஓலை இழைக்கும்)  பயிற்சி வழங்கி வருகின்றோம். மிகக்குறைந்த வசதிகளுடன் தான் நாங்கள் கடந்த ஒரு வருடமாக செயற்பட்டு வருகின்றோம். ஆரம்பத்தில் வாங்கிய மூன்று கதிரைகள் தான் இப்போதும் உள்ளன. எங்களுக்கு கதிரைகளும், சாயம்காய்ச்சுகின்ற பெரிய பாத்திரங்களும் தேவையாக உள்ளன. பொருட்களை தூசிகள் படாமல் காட்சிப்படுத்துவதற்கான கண்ணாடி அலுமாரிகளும் தேவையாக உள்ளன. 

இப்பொழுது வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்கி வருகின்றோம். சங்கத்துக்கென்று சொந்தக்காணி வாங்கி ஒரு சிறிய கட்டிடம் கட்டும் முயற்சியில் இப்போது ஈடுபட்டு வருகின்றோம்.  கட்டிடம் கட்டுவதற்கான உதவிகளை அரசாங்கம் செய்ய முன்வந்தாலும் இன்னமும் காணியை வாங்காத சூழலில் கட்டிடம் அமைவதும் பின்தள்ளிச் சென்று கொண்டிருக்கின்றது.  இந்தத் தொழில்முயற்சிகள் கைவிடப்படாமல் தொடர்ந்தும் நிலைக்க வேண்டும்.  இனிவரும் சந்ததிகள் பனைசார்ந்த உற்பத்திகளை நவீனமுறையில் செய்வதற்குப் பயிற்சிகளைப் பெற வேண்டியுள்ளது.

எமது சங்கத்துக்கு நிரந்தர கட்டிடம் அமையும் பட்சத்தில் மேலும் பல முன்னேற்றங்களை நோக்கி நகர முடியும்.   பனை தமிழர்களின் அடையாளம். பண்டைய காலத்திலும், போர்க் காலத்திலும், பொருளாதாரத் தடை அமுலில் இருந்த காலங்களிலும் எம்மக்களை ஆரோக்கியமாக வைத்திருந்ததில் பனைக்கு பெரும்பங்குண்டு.

முன்னைய காலங்களில் உடுப்பிட்டி போன்ற எம் பிரதேசங்களில் வீதிக்கு வீதி பனைசார்ந்த குடிசைக்கைத்தொழில்கள் பெருகி இருந்தன. ஒடியல், புழுக்கொடியல், பனாட்டு, பனங்கட்டி, பன்ன வேலைகள் என எல்லாமே சிறு கைத்தொழில்களாக வளர்ச்சி பெற்றிருந்தன. இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் பனை சார்ந்த உற்பத்திகளை மேலும் அழிவிலிருந்து காப்பாற்றி வளர்க்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

தொடர்புக்கு - 0775396749


துருவன்- 

நிமிர்வு மாசி 2020 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.