விக்கினேஸ்வரனின் கூட்டு கொள்கை கூட்டு அல்ல தேர்தல் கூட்டுநாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதற்கு முன்பாகவே தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு கூட்டுக்குள் வரவேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்களில் ஒருவர் அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம். அவர் அண்மையில் உருவான விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டு குறித்தும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.   புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் நீண்டகாலம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.  அந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் தான் அவர்கள் அந்தக் கூட்டை உருவாக்கி இருக்கின்றார்கள்.  இதன் ஆரம்ப செயற்பாடுகளில் நாங்களும் பங்கு பற்றி இருக்கின்றோம். 

பொதுவாக ஐக்கிய முன்னணியை உருவாக்கும் போது இரண்டு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். கொள்கை ரீதியான ஐக்கிய முன்னணிக்கான நிபந்தனைகள் என்ன என்பது முதலாவது விடயம். ஐக்கிய முன்னணி தொடர்பில் எங்களுடைய வரலாற்று அனுபவம் என்ன என்பது இரண்டாவது விடயம். இந்த இரண்டையும் கவனத்தில் எடுத்து தான் புதிய ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்.

முதலாவதாக கொள்கை ரீதியான ஐக்கிய முன்னணிக்கான நிபந்தனைகள் என்ன என்பதைப் பார்ப்போம். ஐக்கிய முன்னணி அவசியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஏனெனில் தேசிய இனப்பிரச்சினை என்பது புறத்தே இருந்து வருகின்ற ஒடுக்குமுறையால் ஏற்படுகின்றது. அந்த ஒடுக்குமுறைக்கு முகம் கொடுப்பதென்றால் சகல தரப்பும் இணைந்து தான் அதற்கு முகம் கொடுக்க வேண்டும். தமிழ்த் தேசியத் தரப்புக்களில் கூட பல்வேறு கருத்து நிலைகள் இருக்கலாம். ஆனால், அவர்கள் எல்லோரையும் ஒரே பொதுக்கருத்தின் கீழ் ஐக்கிய முன்னணியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உண்மையில் அவசியமான ஒன்று தான்.

தேசிய இனப்பிரச்சினை என்பதே ஐக்கிய முன்னணி தான். அதனால் ஐக்கிய முன்னணி அவசியம். ஐக்கிய முன்னணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் மூன்று விடயங்கள் முக்கியமானவை.

* கொள்கை நிலைப்பாடும் அந்த கொள்கை நிலைப்பாட்டில் உறுதிப்பாடும்.

* சம பங்காளிகள் என்கிற தகுதிநிலை.

* இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வலுவான அமைப்பு பொறிமுறை

இந்த மூன்றும் இருந்தால் தான் ஒரு ஐக்கிய முன்னணி வெற்றியடையும்.

விக்கினேஸ்வரன் தலைமையிலான ஐக்கிய முன்னணி உருவாக்க முயற்சிகள் நடந்து கொண்டிருந்த போது, அதன் முதலாவது ஆவணம் தயாரிப்பில் நாங்களும்  பங்குபற்றி இருந்தோம். அதில் சமபங்காளிகள் எனும் நிலை இருக்க வேண்டும் என்கிற கருத்தையே நாம்  முன்வைத்திருந்தோம். சமபங்காளிகள் என்கிற விடயத்தை விக்கினேஸ்வரனின் கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை.  தங்கள் கட்சிக்கு அறுதி பெரும்பான்மை வேண்டும் என்கிற விடயத்தில் தான் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இந்தக் கூட்டில் 50 வீதம் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டுக்கு மீதி 50 வீதம் ஏனைய கட்சிகள் எல்லாவற்றுக்கும். இப்படியான ஐக்கிய முன்னணி என்பது வெறும் தேர்தல் கூட்டாக இருக்க முடியுமே தவிர கொள்கைக் கூட்டாக இருக்க முடியாது.  

இன்று ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கிய கூட்டு,  சிறீலங்கா பொதுஜன முன்னணி உருவாக்கிய கூட்டு, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கிய கூட்டுக்கள் எல்லாம் கொள்கைக் கூட்டுக்கள் அல்ல. அவை எல்லாம் வெறும் தேர்தல் கூட்டுக்களே ஆகும். எங்களுக்கு தேவை தேர்தல் கூட்டு அல்ல. இனப்பிரச்சினை தீரும்வரை எங்களுக்கு கொள்கை கூட்டு தான் தேவை.

இரண்டாவதாக ஐக்கிய முன்னணி தொடர்பில் எங்களுடைய வரலாற்று அனுபவம் என்ன என்பதைப் பார்ப்போம். ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றில் ஐக்கிய முன்னணி முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. எம் போராட்டங்கள் பின்னடைவை சந்தித்தமைக்கு ஐக்கிய முன்னணி தோல்விகளும் ஒரு காரணம்.  எங்களிடம் முதலாவதாக தொடங்கிய ஐக்கிய முன்னணி தான் தமிழர் விடுதலைக் கூட்டணி.  அது தோல்வி. அதுக்கு பிறகு இயக்கங்கள் மூலம் உருவாக்கப்பட்ட முன்னணி தான்  ஈழத்தேசிய விடுதலை முன்னணி. அதுவும் தோல்வி. அதற்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதுவும் தோல்வி.  தமிழ்மக்கள் பேரவை உருவாக்கப்பட்டு அதுவும் தோல்வி.

இந்த தோல்விகளுக்கெல்லாம் பிரதான காரணம் சம பங்காளிகள் என்கிற தகுதிநிலை சேர்க்கப்படாமை தான்.  அதனை கொள்கையிலும் செயற்பாட்டிலும் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தாமை தான் உண்மையில் காரணம். ஆகவே அப்படியான ஒரு நிலைமை தான் இங்கேயும் வரும். தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் சொல்லும் பிரதான காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் இருக்கிறது என்பது.   ஏனையவர்களுக்கு அங்கே எந்தப் பங்கும் இல்லை. தீர்மானங்கள் எடுப்பதிலும் பங்கில்லை. இதனால் தான் கூட்டமைப்பில் இருந்து ஒவ்வொரு கட்சிகளாக விலகிப் போயினர்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்ற கட்டமைப்பு மாதிரி தான் தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி கட்டமைப்பையும் உருவாக்கி இருக்கின்றார்கள்.  ஆகவே இங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் இன்னொரு கூட்டாக வந்திருக்கின்றதே ஒழிய மாற்றாக   சொல்ல முடியாது. ஆகவே, இந்தக் கூட்டு பெரியளவில் பயனுடையதாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.

இன்று இருக்கின்ற அரசியல் சூழலில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று உளநாட்டு அரசியல் விவகாரம். இன்று தென்னிலங்கையில் ஆட்சியில் இருப்பது பெருந்தேசியவாதத்தின் இனவாத முகம்.   எதிர்க்கட்சியிலும் அதே நிலைமை தான் உள்ளது.   ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் இனவாத முகங்களுடனேயே உள்ளன.   இவை இரண்டும் சேர்ந்து தென்னிலங்கையை இனவாத பாசிசத்துக்கு கொண்டு சென்றுள்ளன.  ஆகவே இந்த யதார்த்தத்துக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டும்.

இரண்டாவது சர்வதேச அரசியல் நிலவரம். இலங்கைத்தீவு இன்று சர்வதேச நிகழ்ச்சி நிரலோடு வலுவாக இணைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் அரசியலும் சர்வதேச நிகழ்ச்சி நிரல் போகும் இடமெல்லாம் போக வேண்டி இருக்கிறது. ஆகவே சர்வதேச அரசியலை தமிழ் தரப்பு கையாள வேண்டும். நாங்கள் இப்படி துண்டு துண்டாக இருந்து கொண்டு யாரையும் கையாள முடியாது. ஆகவே இன்று எங்களுக்கு தேவை மாற்று அரசியல் அல்ல. ஒன்றிணைந்த அரசியலே தேவை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியல் செய்து கொண்டிருந்தவரை எங்களுக்கு ஒரு மாற்று அரசியல் தேவையாக இருந்தது.  தமிழ்த் தேசியத்தை கூட்டமைப்பினர் நீக்கம் செய்த போது ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை தமிழர் அரசியலுக்கு இருந்தது.  அந்த மாற்று அரசியலை கஜேந்திரகுமார் தொடக்கி வைத்தார். விக்கினேஸ்வரன் அதனை வளர்த்தெடுத்தார் என்பது உண்மை. இன்று திரட்சியாக உருவெடுத்திருக்கும் பேரினவாத முகம் தமிழர் தரப்பிலுள்ள எல்லோரையும் ஒரு மூலையில் தள்ளி விட்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பினால் கூட இணக்க அரசியலுக்கு அரசாங்கம் தயாரில்லை.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒட்டி உறவாடுவதற்கு ரணிலும் மேல் நிலையில் இல்லை.   தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள், மக்கள் சக்திகள், கல்வியலாளர்கள்,  மதத் தலைவர்கள் என எல்லாரையும் ஒரு குடைக்கு கீழ் கொண்டு வந்து ஒண்றிணைந்த அரசியல் தான் இன்று தேவையாக உள்ளது.

நாங்கள் ஒரு சிறிய தேசிய இனம். இங்கு நாங்கள் மட்டும் ஒன்றாக இருந்தால் போதாது. உலக தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் என எல்லோரையும் ஒன்றாக இணைத்து உலகெங்குமுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் இணைத்து பெரும் தேசிய பேரியக்கமாக நாங்கள் உருவாகினால் தான் வருகின்ற சவால்களுக்கு எங்களால் முகம் கொடுக்க முடியும்.

சம தகுதிநிலையின்மையைக் காரணம் காட்டி தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி விலகியது. இப்போது சம தகுதிநிலை கொடுக்காத விக்கினேஸ்வரனுடன் கூட்டு எப்படி சாத்தியமானது?

சுரேசுக்கு சம தகுதியைக் கொடுப்பதற்கு விக்கினேஸ்வரனுக்கு விருப்பமில்லை. ஐங்கரநேசனுக்கு சம தகுதியைக் கொடுப்பதற்கு சுரேசுக்கு விருப்பமில்லை. அனந்திக்கு சம தகுதியைக் கொடுப்பதற்கு ஐங்கரநேசனுக்கு விருப்பமில்லை. இது தான் உண்மையில் இருந்த யதார்த்த நிலை. மேலே உள்ளவர்களிடம் சம தகுதி கேட்பவர்கள் கீழே உள்ளவர்களை சமமாக மதிக்கத் தயாராக இல்லை. இது எங்களின் அரசியலில் பெரிய நோய்.  கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எடுப்பதற்கு அறுதிப்பெரும்பான்மை தேவை என்று போது விக்கினேஸ்வரன் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. ஆனால் பெரும்பான்மையினரே கொள்கை ரீதியான தவறை விடும்போது அதனைக் கையாள்வதற்கான கட்டமைப்பு அங்கு இருப்பதாக தெரியவில்லை.  

இதற்கு எம்மால் முன்வைக்கப்பட்ட தீர்வு இது தான். எல்லோரையும் சம பங்காளிகளாக ஏற்றுக் கொள்ளுங்கள்.  எல்லோரும் ஏக மனதாகத் தீர்மானத்தை எடுங்கள். அப்படி முடியவில்லை என்றால், மதததலைவர்கள், வெகுசன அமைப்புக்கள், கல்விமான்களைக் கொண்ட ஆலோசனைக்குழுவை உருவாக்குங்கள். அந்த ஆலோசனைக்குழுவிடம் இப்படியான கொள்கை சார்ந்த பொறுப்புக்களை விடுங்கள். அவர்கள் என்ன முடிவை எடுக்கின்றார்களோ எல்லோரும் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பொறுப்பையும் ஆலோசனைக் குழுவிடம் விடுங்கள். கட்சிகள் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம்.

விக்கினேஸ்வரன் ஐயாவின் கருத்து என்னவென்றால் “நான் தான் மாற்று எல்லோரும் என்னோடு வந்து சேருங்கோ. இங்கே சமத்துவம் எல்லாம் பார்க்க முடியாது.” இது ஆரோக்கியமான ஐக்கிய முன்னணிக்கு ஒரு போதும் உதவப் போவதில்லை. ஐக்கிய முன்னணி என்றால் என்ன. நானும் சமன் நீயும் சமன். நானும் வெற்றியடைய வேண்டும். நீயும் வெற்றியடைய வேண்டும். என்கிற நிலை வந்தாற்தான் ஐக்கிய முன்னணி வெற்றியடையும்.

தேர்தலில் வெற்றியடைந்த பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுவது குறித்து விக்கினேஸ்வரன் ஐயா கூறியிருந்தார். அது பற்றி உங்கள் கருத்து என்ன? 

அப்படி இணைந்து செயல்படுவது என்றால் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கொள்கை ரீதியாக உறுதியாக இருக்கிறது என்று தானே அர்த்தம்.  அப்படியென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் நிற்கலாம் தானே?  ஏன் தனித்து நிற்க வேண்டும்? தனித்து நிற்பதன் காரணமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் அரசியலை சரியான தடத்தில் கொண்டு போகவில்லை என்பது தான்.  அன்று அப்படியான குற்றச் சாட்டால் விலகி விட்டு இன்று இப்படியான கருத்தை முன்வைக்க முடியாது.

ஒரு பொது அமைப்பு எல்லோரையும் ஒரு பொதுக் கொள்கையின் கீழ் கொண்டு வந்து வழிநடத்துகின்ற மாதிரியான ஒரு நிலையை நாங்கள் உருவாக்குவது பற்றித் தான் யோசிக்க வேண்டும். ஒப்பீட்டளவில் அது இலகுவாக இருக்கும். ஏனென்றால், இங்குள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாமே பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைத்த போது உருவாக்கிய 13 அம்சத் திட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள்.   ஆகவே அந்த 13 அம்ச திட்டத்தை அடிப்படையாக வைத்து எல்லோரையும் ஒரு அணிக்கு கீழ் கொண்டு வருவது இலகுவானது.  அந்த அணியில் இருந்து யாராவது தவறிழைப்பர்களாக இருந்தால் அதற்குரிய கொள்கைத் திட்டத்தினையும் கட்டமைப்பினையும்   யாப்பு வடிவத்தினையும் ஒழுங்காக வரையறுத்து செயற்பட்டால் முன்னோக்கி நகரலாம். அப்படி இறுக்கமான கட்டமைப்பு இருந்தாற் தான் நாம் வருகின்ற சவால்களுக்கு இலகுவாக முகம்கொடுக்க முடியும். தமிழ்மக்களுக்கு நீண்டதொரு  ஆயுதப் போராட்ட வரலாறு இருந்தும்  இங்கு வலுவான சனநாயக அரசியல் இயக்கம் உருவாகாமைக்கு என்ன காரணம்? எங்கே குறைபாடு உள்ளது?

எங்களது அரசியல் மரபில் பெரும் குறைபாடு உள்ளது. அதாவது மக்கள் பங்கேற்பு அரசியல் நடைமுறையில் இல்லாத குறைபாடு. மக்கள் பங்கேற்பு அரசியல் என்றால் மக்களை அரசியல் மயப்படுத்தி  அமைப்பாக்குவது தான். இது எங்கள் மரபில் இருக்கவில்லை. தமிழரசு காலத்தில் தொண்டர்கள் பங்கேற்றார்கள். மக்கள் தேர்தலில் மாத்திரம் வாக்களித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்கள். புலிகளின் காலத்தில் போராளிகள் பங்கேற்றார்கள். மக்கள் பணத்தையும் நகையையும் கொடுத்துவிட்டு வெளியில் நின்றார்கள். மக்கள் பங்கேற்கவில்லை. மக்கள் பங்கேற்காததால் ஒரு வலுவான சனநாயக அரசியல் இயக்கம் ஒன்றை உருவாக்க முடியவில்லை. வலுவான சனநாயக அரசியல் இயக்கம் உருவாகாத காரணத்தினால் வலுவான வெகுசன அமைப்புக்கள் கூட உருவாகவில்லை.  வலுவான வெகுசன அமைப்புக்கள் உருவாகி இருந்தால் இந்த அரசியல் கட்சிகளில் கூட ஏதோவொரு  கட்டுப்பாடு செலுத்தக் கூடியதாக இருந்திருக்கும்.

தமிழ் மக்கள் பேரவை உருவான போது இருந்த பிரதானமான கருத்து என்னவென்றால் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தலைத் தான் இலக்காக கொண்டு செயற்படுவார்கள். ஆகவே தமிழ்த் தேசிய அரசியல் வேலைத்திட்டத்தினை வலுவாக முன்னெடுக்கும் நோக்கில் தான் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.  இன்றைக்கு எங்களுக்கு தேவை தேர்தலில் கூட்டமைக்கும் அரசியல் கட்சிகள் அல்ல.     மாறாக தமிழ் மக்களுடைய அனைத்து விவகாரங்களையும் உலகம் தழுவிய வகையில் கையாளக் கூடிய ஒரு பெரும் தேசிய அரசியல் இயக்கம். ஆகவே, தமிழ் மக்கள் பேரவையினை ஒரு பெரும் தேசிய  அரசியல் இயக்கமாக வடிவமைக்க வேண்டும் எனும் கருத்தை நான் முன்வைத்தேன். தேசிய அரசியல் இயக்கம் என்றால் அதில் உள்ள அரசியல் கட்சிகளும்,  பொது அமைப்புக்களும்  ஒரு ஐக்கிய முன்னணிக்குள் வர வேண்டும்.  தேர்தற் காலத்தில்  அரசியற் கட்சிகளுக்குள் கட்சியரசியல் வேற்றுமைகள் கூடுதலாக வர வாய்ப்பு  இருப்பதால் பொது அமைப்புக்களின் மேலாதிக்கம்  அதில் இருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவையில் நடந்தது என்னவென்றால், பொது அமைப்புக்கள் பெரிய அளவில் வரவில்லை. பொது அமைப்புக்களின் ஐக்கிய முன்னணி என்பது உருவாக்கப்படவில்லை. உருவாக்கப்பட்டது அரசியல் கட்சிகளின் ஐக்கிய முன்னணி தான்.    அரசியல் கட்சிகளுக்குள் தேர்தல் வந்ததும் முரண்பாடும் வந்துவிடும்.  முரண்பாடு வந்தவுடன் பேரவை பலவீனமடையும் சூழல் உருவாகியது. தமிழ் மக்கள் பேரவையை சிதைத்ததில் பெரும் பங்கு கட்சிகள் எல்லாவற்றுக்கும் இருக்கின்றது. தமிழ் மக்கள் பேரவையின் சிதைவினால் ஏற்படுகின்ற மிகப்பெரிய நட்டம் என்னவென்றால், இன்று மக்களுக்கு மாற்று என்றாலே  கோபம் வருகிறது. மாற்று என்று வெளிக்கிட்டவர்கள் எல்லாம் தங்களுக்குள் அடிபட்டு நிலைமையை மோசமாக்கி இருக்கின்றார்கள். 

விக்கினேஸ்வரனின் கூட்டுக்குப் பின்னால் இந்தியாவின் நிகழ்ச்சிநிரல் இருப்பதாக பொதுமக்கள், அரசியல் அவதானிகள் மத்தியில் பேசப்படுகிறது பற்றி உங்கள் கருத்து என்ன?

விக்கினேஸ்வரன் உருவாக்கிய இந்தக் கூட்டுக்குப் பின்னால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் இருப்பதாக பொதுவாக பலராலும் பேசப்படுகிறது. இருக்கலாம். அப்படி இருப்பதற்கான வாய்ப்புக்களும் இருக்கும். இந்தியா அதற்கான முயற்சிகளை செய்யும். ஏனென்றால் இந்தியாவுக்கு தன்னுடைய பாதுகாப்பின் வாசல்படியில் இருக்கின்ற  பிரதேசமாக இருப்பதானால் தனக்குச் சார்பான நிகழ்ச்சிநிரலை நகர்த்துவதில் அது முயற்சி செய்யும் தான். நாங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் எப்படி எங்களுடைய நலன்களை கொண்டு போய் புகுத்துவது என்பதை திட்டமிடுவது. இந்தியாவை எப்படி நாங்கள் கையாள்வது என்பதில் தான் நாங்கள் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, இந்தியா அப்படி செய்கிறது, இப்படி செய்கிறது என்று சொல்லி நாங்கள் அங்கலாய்ப்பதில் பெரிய பயனெதுவும் கிடைக்கப் போவதில்லை.

இந்தியாவை நீங்கள் எதிரியாக்கவும் வேண்டாம். எடுபிடியாக இருக்கவும் வேண்டாம். எங்களுக்கு இருக்கின்ற அரசியல் தலைவர்கள் ஒன்றில் எடுபிடிகள் அல்லது கிறுக்கன்மார்களாக இருக்கிறார்கள். இந்தியா இந்தப் பிராந்தியத்தினுடைய முக்கியமான வல்லரசு. அதற்கு இலங்கை தொடர்பிலான நலன்கள் உண்டு. வெறுமனே கேந்திர நலன்கள் மட்டுமல்ல. தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளும் உண்டு. ஆகவே அது தலையிடும். ஆகவே இதில் நாங்கள் எப்படி தந்திரோபாயமாக நடந்து கொள்ளப் போகிறோம் என்பதில் தான் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.

இம்முறை தமிழ் பரப்பில் நாடாளுமன்றத் தேர்தல் எப்படி இருக்கும்?

இம்முறை இடம்பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் முத்தரப்பு போட்டியொன்று வரப் போகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி,   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பவைதான் இந்த முத்தரப்புக்கள்.

ஆகவே தமிழ்த்தேசியப்பரப்பில் உள்ள வாக்குகள் சிதறப்போகின்றன. இப்படி சிதறுவதால் ஐந்து அல்லது ஆறு ஆசனங்களை வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியப் பரப்பு இழக்க நேரிடும். மக்களும் ஒரு சிதறிய நிலையில் தான் வாக்களிப்பை மேற்கொள்வார்கள். இந்தமுறை ஒரு வாக்களிப்பு அலையைக் கிளப்ப முடியாதிருக்கும். ஒவ்வொரு முறை தேர்தலிலும் ஒரு அலை கிளப்பப்படும். இம்முறை அது சாத்தியமில்லை. மக்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.   கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்து கொண்ட விதம்.  எந்தவொரு பெறுமதியான அடைவுகளையும் பெற முடியாத நிலைமை. தமிழ்த் தேசிய அரசியலை செங்குத்தாக கீழிறக்கிய நிலைமை. இவையெல்லாம் சேர்ந்து தமிழ்மக்களுக்கு அதிருப்தி தான் மிஞ்சியுள்ளது. அந்தநேரத்தில் தான் மாற்று வேண்டும் என்ற கோஷம் வரும் போது தமிழ்மக்கள் பேரவையும் விக்கினேஸ்வரனும் வரும் போது மக்கள் சந்தோசமாக இருந்தனர். இவர்களும் உடைந்து கொட்டிய பின் மக்களுக்கு அதிருப்தியும் வெறுப்பும் கூடி விட்டது.  தீவிரமான தேசிய சக்திகள் வாக்களிக்கப் போகாமலும் விடலாம். அடிநிலை மக்கள் தமக்கு நிவாரணம் கொடுக்கும் ஆட்களுக்கு வாக்களிக்கும் நிலை உருவாகும்.  வாக்களிப்பு வீதமும் குறையும். விழுகின்ற வாக்குகளும் சிதறுகின்ற நிலைமை உருவாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த்தேசிய கொள்கை உறுதிப்பாட்டில் வலுவாக இருந்தாலும் தமிழ் மக்களின் பெரும் தேசிய இயக்கமாக மேலெழாமைக்கு என்ன காரணம்?

இன்று தமிழ் தேசிய பரப்பில் கொள்கை உறுதிப்பாட்டில்  வலுவாக செயற்பட்டு வருகின்ற கட்சி   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.  அவர்களிடம் உள்ள பிரதான குறைபாடு என்னவென்றால் மூலோபாயத்தில் கவனம் செலுத்துகிறார்களே ஒழிய தந்திரோபாயத்தில் கவனம் செலுத்துகிறார்கள் இல்லை.  அதுதான் அவர்களின் மிகப்பெரிய குறைபாடு.

இன்றைக்கு தேவையானது ஒரு வலுவான ஐக்கிய முன்னணி. ஐக்கிய முன்னணி என்று வரும்போது எல்லாத் தரப்பும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை வரும். எல்லாத்தரப்பும் பலனை எடுக்க வேண்டிய தேவை இருக்கும். அப்படியான ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்குவதற்கு அவர்கள் தயாரில்லாத நிலைமை தான் உண்மையில் காணப்படுகின்றது.

அவர்களின் இன்னொரு தவறு, தூய்மைவாதம். எல்லாவற்றையும் தூய்மையாக பார்க்கின்ற நிலைமை. தேசியப் பரப்பில் எல்லாவற்றையும் தூய்மையாக பார்த்துக் கொண்டு முன்னேறிச் செல்வது என்பது முடியாத காரியம். விடுதலைப் புலிகள் இருந்தமாதிரியே தாங்களும் இருக்கவேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். விடுதலைப் புலிகள் காலத்து அரசியல் சூழல் அல்ல இன்று இருப்பது. இன்று இருப்பது வித்தியாசமான அரசியல் சூழல். இந்த வித்தியாசமான அரசியல் சூழலுக்கு ஏற்ப ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவது தான் ஆரோக்கியமாக இருக்கும். அந்த விடயத்தில் அவர்கள் கவனம் செலுத்துவது மிகவும் குறைவாக உள்ளது.

மற்றையது அவர்களின் நிர்வாகக் குறைபாடு. தேர்தல் என்று வருகின்ற போது வாக்குகளை இழுக்கக் கூடிய ஆட்களை உருவாக்க வேண்டும்.  அதற்கு வலுவான உள்ளூர்த் தலைவர்கள் இருக்க வேண்டும். வலுவான உள்ளூர் தலைவர்களை உருவாக்க இவர்கள் தவறி விட்டார்கள்.  உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு பிறகு இவர்களுக்கு நல்ல சந்தர்ப்பம் இருந்தது. இவர்கள் அதில் பெரியளவுக்கு முன்னேறவில்லை. வலுவான நிர்வாக கட்டமைப்பு இல்லை.  ஒன்றில் சனநாயக நிர்வாக கட்டமைப்பு இருக்க வேண்டும். அல்லது இராணுவ நிர்வாக கட்டமைப்பு இருக்க வேண்டும்.   இரண்டும் இல்லாத ஒரு சூழ்நிலை தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.


மாசி 2020 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.